அருப்புக்கோட்டை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்து வருகின்றனர்.
அதன்படி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்ட முகாமானது 16.04.2025 காலை 9 மணி முதல் மறுநாள் 17.04.2025 அன்று காலை 9 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முதல் நாளான இன்று, மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சுக்கிலநத்தம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பில், கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், சுக்கிலநத்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், சுக்கிலநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
டி.மீனாட்சிபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.8 இலட்சம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், டி.மீனாட்சிபுரம் ஊராட்சியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், மீனாட்சிபுரம் ஊராட்சியில், தூய்மைப் பணியாளர்களிடம் அவர்களின் பணிகள், ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக கலந்துரையாடினார்.
வேலாயுதபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு, தரம், பயன்பெறும் குடும்ப அட்டைத்தாரர்கள், தராசு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
வேலாயுதபுரம் ஊராட்சியில், பல் கிராம நீரியல் திட்டத்தின் கீழ், ரூ.20.48 இலட்சம்மதிப்பீட்டில்,குடிநீர்இணைப்புகள்வழங்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply