தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தினை, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் காடு மற்றும் மரங்களின் பரப்பை 2030-31 ஆம் ஆண்டிற்குள் அதன் புவியியல் பரப்பில் 23.8 சதவிதம் லிருந்து 33 சதவிதம் ஆக உயர்த்தும் நோக்கத்துடன் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பூர்வீக மரங்கள் நடப்பட வேண்டும். நகர்ப்புறங்கள், விவசாய நிலங்கள், கல்வி நிறுவனங்கள். பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்று, பல பங்குதாரர்களை உள்ளடக்கி மக்கள் இயக்கமாக மாறுவதை உறுதி செய்வதாகும்.2030-2031 ஆம் ஆண்டிற்குள் காடு மற்றும் மரங்களின் பரப்பில் 50-60 மில்லியன் டன் கூடுதல் கார்பன் சிங்க்கை உருவாக்க மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை அபாயங்களை விரைவாகக் கட்டுப்படுத்த அதிக மரங்களை நடுவது ஆகியன இத்திட்டத்தின் நன்மைகள் ஆகும்.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலமும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பசுமை விருதுநகர் இயக்கம் மூலமும் பல்வேறு கட்டங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, 05.06.2025 அன்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, 11 வட்டாரங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 16.8 சதவிதம் இருக்கும் பசுமை பரப்பினை 33 சதவிதம் ஆக அதிகரிக்க மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் படி பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஜீன்-5 உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, ஜீன் மாதத்தில் 1 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, துறைகள் உள்ளிட்ட துறைகளில் உள்ள அரசு அலுவலகங்க கட்டிடங்கள், பஞ்சாயத்து நிலங்கள் நகராட்சி பூங்காக்கள், அரசு மருத்துவமனைகள், விவசாய நிலங்கள், முதலிய பல்வேறு இடங்களில் அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.இது போன்று தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த சீரிய முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து இந்த பூமியை அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்விடமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சுதந்திர தின விழாவின் போது, தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது 2025 வழங்கப்பட உள்ளது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50,000/- ரொக்கப்பரிசு (ம) சான்றிதழும், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000/- ரொக்கப்பரிசு (ம) சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விதிமுறைகள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில், தொடர்ந்து பணியாற்றும் சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதியுடைய சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் இருப்பின் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக 12.06.2025-க்குள் விண்ணப்பித்து, அதன் விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 18.06.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம்,மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். அலைபேசி எண்.04562-252701 என்ற முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசினால் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் 2023 ம் ஆண்டு “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்னும் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகை தமிழில் சட்டப்படி அமைக்கப்படுவதை 100 சதவிதம் உறுதி செய்ய மாவட்ட குழு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆய்வுகள் மேற்கோள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட மாவட்டகுழுவானது அமைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 09.04.2025 அன்று நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்தில் 15.05.2025-க்குள் அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவிதம் தமிழில் பெயர் பலகைகள் அமைக்க மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது.மாவட்டகுழுவின் இரண்டாவது கூட்டமானது 03.06.2025 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வைத்து நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் இரண்டு வாரத்திற்குள் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகை தமிழில் சட்டப்படி அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரால் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இரண்டு வாரத்திற்குள் தமிழில் பெயர் பலகைகள் அமைக்காத நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது.மேலும் அனைத்து கடைகள் நிறுவனங்கள்,உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களும் “அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளை தினம் ஒரு குறள் என்ற அடிப்படையில் பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் அனைத்து தொழிலாளர்களும் அறியும் வண்ணம் காட்சிப்படுத்திட வேண்டும்“ எனவும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது.தமிழில் பெயர் பலகைகள் வைத்தல் மற்றும் திருக்குறளை பொருள் விளக்கத்துடன் காட்சிப்படுத்தும் நிறுவனங்களுக்கு தமிழ் ஆர்வலர்கள் விருதினை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது. எனவே மேற்படி கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்வாறும் கீழ்க்கண்ட சட்டங்களை பின்பற்றியும் தமிழில் பெயர் பலகை அமைக்குமாறு அனைத்து கடைகள் நிறுவனங்கள்,உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவிதம் தமிழில் பெயர் பலகைகள் அமைக்க அனைத்து கடைகள் உணவு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்க்க உதவுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்தான விதிகள் கீழ்க்கண்டவாறுதமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்து “தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதிகள் விதி 15, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்ட விதி 42B மற்றும் தொழிற்சாலைகள் சட்ட விதிகள் 113 ஆகியவற்றில் அனைத்து கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகைகள் “தமிழ் மொழியில் முதன்மையாகவும், பிரதானமாகவும் அமைக்க வேண்டும். பிற மொழிகளிலும் எழுத வேண்டும் எனில் தமிழ் மொழிக்கு கீழ் ஆங்கிலத்தில் இரண்டாவது இடத்திலும், இதர மொழிகளில் மூன்றாவது இடத்தில் அதற்கு கீழேயும் எழுதப்பட வேண்டும் என வரையறை “ செய்யப்பட்டுள்ளது.அரசாணை எண்.55 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நாள்.02.07.2024ன்படி தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதமானது ரூ.50-லிருந்து ரூ.2000- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, சட்டப்படியும் தமிழ் உணர்வுடனும் அனைவரும் தமது நிறுவனங்களில் மேற்கூறியவாறு தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசால் விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நலத்துறையில் மாணவ / மாணவியர்களுக்கென கீழ்கண்டவாறு மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.பள்ளி விடுதிகளில் 24 மாணவர்களுக்கானது மற்றும் 18 மாணவியர்களுக்கானது. கல்லூரி விடுதிகளில் 3 மாணவர்களுக்கானது மற்றும் 2 மாணவியர்களுக்கானது என மொத்தம் 47 இடம் உள்ளது.பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ / மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலு மாணவ / மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ / மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.1. அனைத்து விடுதி மாணவ / மாணவியருக்கு மூன்று வேலை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.2. 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.3. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET/JEE நுழைவுத் தேர்வுக்கான வினாவங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினாவங்கி நூல்கள் வழங்கப்படும்.4. கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப பயிலும் மாணவ/மாணவியருக்கு ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியருக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும்.5. பள்ளி/கல்லூா விடுதிகளில் தங்கிப்பயிலும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.1. இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.தகுதியுடைய மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 18.06.2025-க்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிகாப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 15.07.2025-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ / மாணவியர்கள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனவே மாணவ/மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து (03.06.2025) உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வலையொளி (YOUTUBE) வாயிலாக உரையாற்றினார்.விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டின் தொடக்கத்தில் உங்கள் அனைவரிடமும் இணைய வழியில் உரையாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி ஒரு அழியாத செல்வம்.“வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது, வேந்தராலும் கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது” என்று கல்வியின் உடைய பெருமையை நம் தமிழ் சமூகம் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயர்வாகவே கூறுகிறது. ஏன் இந்த கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை தருகிறார்கள், ஏன் எல்லோரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்கிறார்கள் என்றால், கல்வியில் அவர்கள் கற்றுக்கொள்வதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் நிறைய இருக்கின்றது.இந்த கல்வியாண்டில் தொடக்கத்தில் குறிப்பாக இன்று இந்த இணைய வழியில் இருக்கக்கூடிய 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் நீங்கள் கல்வியின் உடைய மிக முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறீர்கள். யார் சிறந்த அறிவாளிகள் என்று கேள்விக்கும் நிறைய பதில்கள் இருக்கிறது. ஆனால், அடுத்தவர்களுக்கான அனுபவங்களிலிருந்து தங்களுக்கான பாடத்தை கற்றுக் கொள்பவர்கள் தான் சிறந்த அறிவாளிகள் ஆவர். சிறப்பான மதிப்பெண் எடுப்பது என்பது மிகவும் முக்கியம். ஆனால் அதை விட மிகவும் முக்கியம் அவர்களுக்கு எதிர்காலத்தில் உயர்கல்வியில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு தான்.தேர்வு என்பது வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டே தான் இருக்கும். அது தவிர்க்க முடியாதது.இந்த தேர்வில்; எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும். ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்து இன்னும் சிறிது முயற்சி செய்திருந்தால் இன்னும் மதிப்பெண்கள் அதிகமாக கிடைத்திருக்குமே என்று நினைத்துப் பார்த்தால் அது திரும்ப கிடைக்க முடியாத ஒன்று.எதிர்காலத்தில் இப்படி ஒரு நாட்களை வீணடித்து விட்டோமே அல்லது அந்த நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருந்தால் இன்று நான்; மகிழ்ச்சியாக இருந்திருப்பேனே என்றும், வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று யோசித்தால் நிச்சயமாக அந்த வாய்ப்புகள் பெரும்பாலும் திரும்ப வரப்போவதில்லை.பணியின் மூலமாகவும், கல்வின் மூலமாகவும் நீங்கள் உழைக்க கூடிய உழைப்பு என்பது 17 வயது முதல் மருத்துவத்துறையிலே அல்லது சட்டக்கல்லூரியிலோ, இந்தியாவிலே தலைசிறந்த கல்லூரியில் நீங்கள் உழைக்க கூடிய உழைப்பு அடுத்து அவர்கள் வாழக்கூடிய 80 ஆண்டுகளுக்கும் மேலாக பலன் கிடைக்கும், அதனால் உழைப்பையும், பலனையும் கணக்கிட்டால் வாழ்க்கையில் எப்போதுமே கிடைக்க கூடிய பலனாகும்.பள்ளி கல்லூரி மற்றும் கல்லூரி கல்வியாக இருக்கட்டும் அல்லது வேலையாக இருக்கட்டும், குறைவான முயற்சியில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்ககூடிய 10 வகுப்பு 11,12 வகுப்பில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதற்கான படிப்பிற்கான வாய்ப்பாக மட்டுமே இருக்கும்.எனவே, கனவுகளை அடைவதற்குரிய சாத்தியக்கூறுகள், புரிதலும், வழிகாட்டுதலும், கிடைக்கும் கல்வியினை எவ்வாறு தேர்ந்தெடுத்து கல்வி பயணத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். JEE, NET மற்றும் பொறியியல் தேர்வுகளில் நாம் பெறும் Cutoff மதிப்பெண்களை பெறுவதால் மருத்துவத்துறையில் மூலம் என்ன படிக்கலாம் என்பதை நமக்கு தேர்ந்தெடுக்க ஒரு தூண்டுகோளாகும்.இந்தியாவினுடைய ஒரு தலைசிறந்த கல்வி நிறுவனத்தின் மூலம் மெட்ரிக், சி.பி.எஸ், ஸ்டேட்போர்டு ஆகிய கல்வி நிறுவனங்களில் எந்த வகையான வினா எழுதுவதற்கும் அல்லது ஒரு வரியில் வினா அளிப்பதற்கும் ஏற்றவாறு தன்னுடைய கல்வி அறிவினை உபயோகிக்க வேண்டும்.தொடர்ச்சியாக இருக்கும் வாய்ப்புகள் தான் வெற்றிக்கு அடிப்படை, ஒரு மணி நேரம் கல்விக்காக இருக்கும் நேரம் தான் தன்னுடைய வாழ்நாள் வெற்றிக்கு வழி வகுக்கும், மதிப்பெண் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்கும் வாழ்நாள் நேரத்தினை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S,அவர்கள் (03.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சி, சூரநாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் பண்ணைகள் அமைப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை முன்னாள் இராணுவத்தினர் முன்னேற்ற நலச்சங்க அலுவலகக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை சூரிய மின் சக்தி (Solar Energy) அமைப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.முன்னதாக, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் குந்தலம்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.இரா.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்,உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அளவுக்கு அதிகமான சத்தம் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதில், விதிகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகளில் ஏற்படும் சத்தங்கள், அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் விழாக்காலங்களில் ஒலி பெருக்கிகள் மூலமாக ஒலி ஏழுப்புதல் ஆகியவைகள் ஒலி மாசு ஏற்பட முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. விருதுநகர் மாவட்டத்தில், இது போன்ற அளவுக்கு அதிகமான சத்தங்களால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக பத்திரிக்கைச் செய்திகள் மற்றும் புகார்கள் வந்துள்ளன.பொதுவாக, தொழிற்சாலைகள் ஒலி மாசினைக் குறைக்க ஒலி மாசு தடுப்பு சாதனங்களை நிறுவி ஒலி மாசினைக் குறைக்கின்றன. இது போன்று, வாகனப்போக்குவரத்தை நெறிபடுத்துவதன் மூலமும் ஒலி மாசினைக் குறைக்க இயலும். ஆனால் பொது சுகாதாரச் சட்டத்தில் உள்ள வழிமுறைகளை மீறி அரசியல் கட்சி நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் தனி நபரால் நடத்தப்படும் விழா மற்றும் கொண்டாட்டங்களில் முறையற்ற வகையில் ஒலி பெருக்கிகளை குறிப்பாக தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை உபயோகிப்பதனால் வெளி வரும் அதிக சத்தமான ஒலி மாசினால்,பொது மக்களுக்கும், முதியோர்களுக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் எண்ணற்ற இன்னல்கள் ஏற்படுகின்றன.எனவே, மேற்கூறிய நிகழ்வுகளுக்கு ஒலி பெருக்கியை நிறுவி பயன்படுத்தும் முன் காவல் துறையிடம் முறையாக முன்அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட பகுதி மற்றும் நேரங்களில் மட்டுமே குறைந்த அளவு ஒலியுடன் ஒலி பெருக்கியினை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் எந்த நேர்வுகளிலும் இரவு நேரங்களில் (இரவு 10.00 மணி முதல் காலை 6.00மணி வரை) ஒலி பெருக்கினை பயன்படுத்தக்கூடாது என்றும், குறிப்பாக தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரிக்கப்படுகிறது. காவல்துறை அனுமதியின்றி ஒலி பெருக்கியினை நிறுவி பயன்படுத்துவோர்கள் மீதும், இரவு நேரங்களில் ஒலி பெருக்கியை பயன்படுத்துவோர் மீதும் மற்றும் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கியினை பயன்படுத்துவோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளும் மற்றும் ஒலி பெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்யவும் பொது சுகாதாரச் சட்டம், காற்று மாசுபாடு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் குறிப்பாக சவுண்ட் சிஸ்டம் வைத்திருக்கும் உரிமையாளர்கள் இதில் கவனமுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸானது தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டுள்ளதால், உணவு வணிகர்கள் அதனைத் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், அந்த வகையான மையோனைஸை நுகர்வோர்களும் தவிர்த்து, கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.“கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதினால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்களின் பொது சுகாதார நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்குத் தடை செய்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இத்தடையாணையானது 08.04.2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.எனவே, உணவு வணிகர்கள் எவரும் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிக்கவோ, அவ்வாறு தயாரித்த மையோனைஸை இருப்பு வைக்கவோ, போக்குவரத்து செய்யவோ, விநியோகம் அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள். அரசு உத்திரவினை மீறி கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், மேற்படி மையோனைஸானது பறிமுதல் செய்யப்பட்டு, உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்யப்பட்டு, பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.மேலும், உணவு பாதுகாப்புத் துறையினரின் தள ஆய்வின் போதே கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்குப் பின்னர், உணவு பாதுகாப்பு உரிமம் இடைநீக்கம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. மேலும், உடல்நலனை பேணிகாக்க ஏதுவாக, நுகர்வோர்களும் தடைசெய்யப்பட்டுள்ள கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.எனினும், மையோனைஸ் பிரியர்களுக்கு மாற்றுத் தேர்வாக, கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் சந்தையில் தொடர்ந்து கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அவற்றை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ வணிகர்களுக்குத் தடையேதுமில்லை. கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் ஆகியவற்றை நுகர்வோர்கள் தத்தமது உடல்நிலைக்கு ஏற்றவாறு சரிவிகித உணவின் அளவிற்குள் சாப்பிடலாம். உணவு வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களின் வசதிக்காக கீழ்கண்டவாறு தெளிவுரைகள் வழங்கப்படுகின்றது.எது தடைசெய்யப்பட்ட மையோனைஸ்? உணவக உரிமையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸை தடைசெய்யப்பட்டதாகும். உணவக உரிமையாளர்கள், தமது உணவகங்களில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கக்கூடாது. உணவக உரிமையாளர்கள் தமது நுகர்வோர்களுக்காக, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று, தயாரிக்கப்பட்டு, பொட்டலிமிடப்பட்டு, லேபிள் விபரங்களுடன் சந்தையில் கிடைக்கும் கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் பொட்டலங்களை மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்தலாம்.எது அனுமதிக்கப்பட்ட மையோனைஸ்? கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அனுமதிக்கப்பட்டதாகும்.முட்டை கலக்காத சைவ மையோனைஸ் அனுமதிக்கப்பட்டதாகும். இவை இரண்டும், பொட்டலமிடப்பட்டு, லேபிள் விபங்களுடன் விற்பனை செய்யப்பட வேண்டும்.அனுமதிக்கப்பட்ட மையோனைஸ் தயாரித்து விற்பனை செய்ய உணவு வணிகர்கள் என்ன செய்ய வேண்டும்? கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் “சொந்தத் தயாரிப்பு உணவுப் பொருளாக” (Proprietary Food) உள்ளதால், அதனைத் தயாரித்து விற்பனை செய்ய, மத்திய உணவு பாதுகாப்பு உரிமத்தினை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, ரூ.7,500- கட்டணம் செலுத்தி பெற்றபின்னரே தயாரித்து, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதிகளுக்குட்பட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறினால், மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 63-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.நுகர்வோர் மையோனைஸ் குறித்து ஏதேனும் புகார் அளிக்க விரும்பினால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கோ அல்லது TNFSD App-ன் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியம் பாதுகாக்கப்படும். அதேவேளையில், உணவு வணிகர்கள் தடைசெய்யப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட மையோனைஸ் குறித்து மேலும் தகவல் அறிய விரும்பினால், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலகத்தை அணுகி, உரிய தகவல் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
2025 -ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கான மத்திய அரசின் ‘ஜீவன் ரக்ஷா தொடர் விருது 2025” வழங்கப்பட உள்ளது. கீழ்காணும் விதிமுறைகளை பின்பற்றி தகுதியுடைய நபர்கள் 25.07.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.தகுதிகள் :ஜீவன் ரக்ஷா தொடர் விருது : இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் (01.10.2023 ஆம் தேதிக்கு பிறகு) ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் மூன்று பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. வயது வரம்பின்றி இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 1. சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.2. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.3. ஜீவன் ரக்ஷா பதக்கம் - தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரை காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.மேலும் தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். அலைபேசி எண்.04562-252701 என்ற முகவரியினை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
2025 -ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழாவின் போது, தமிழக முதல்வர் அவர்களால், ஏதவாது ஒரு துறையில் துணிவு மற்றும் வீர தீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கான ‘கல்பனா சாவ்லா விருது 2025” வழங்கப்பட உள்ளது. விருதுகளுடன் ரூ.5,00,000/- ரொக்கப்பரிசு (ம) சான்றிதழும் வழங்கப்படுகிறது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விதிமுறைகள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.ஏதவாது ஓரு துறையில் துணிவு மற்றும் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். இவ்விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன் விவரக் குறிப்பு மற்றும் ஆவணங்களுடன் (https://awards.tn.gov.in) என்ற இணைதள முகவரியில் 16.06.2025 -ற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேற்காணும் விண்ணப்ப விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 20.06.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். 04562-252701 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.