தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (29.05.2025) வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்” -னை காணொளி காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் டி.மானகசேரி கிராமத்தில் நடைபெற்ற “உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்” முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கலந்து கொண்டார்.அனைத்து வட்டாரங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக் கிழமைகளில், நான்கு முகாம்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 17,116 கிராமங்களில் முகாம்கள் நடைபெறும் வகையில் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைகளை கண்டறிதல், திட்ட உதவிகள் வழங்குதல், தொழில்நுட்பங்கள் வழங்குதல், கால்நடை நலன் காத்தல், வேளாண் உற்பத்தியை பெருக்குதல், உழவர்களின் வருமானத்தை அதிகரித்தல் ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் முகாம்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாணமைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட துறைகள் இணைந்து கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து வயல் வழி பாதுகாப்பு, பரப்பு சாகுபடி, மகசூல் உள்ளிட்டவை குறித்து உரிய விளக்கம் அளிப்பார்கள்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் “உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்” முகாம்கள் நடைபெற்றது.திருவில்லிபுத்தூர் வட்டம் டி.மானகசேரி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொணடு, இம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு குதிரைவாலி செயல்விளக்கத்திடல் இடுபொருட்கள், சிறுதானிய நுண்ணுட்ட உரம், மழைதூவுவான், தென்னங்கன்று விநியோகம், உயிர் உரம் விநியோகம், கால்நடைக்கான தாதுஉப்புகள் உள்ளிட்டவைகளை வழங்கினார். இக்முகாமில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்கள், அரசு மானியத்திட்டங்கள், மானிய விலையில் இடுபொருட்கள் வழங்குதல், உயிர்ம வேளாண்மை சாகுபடி வழிகாட்டுதல், நவீன வேளாண் தொழில் நுட்பங்கள், இயந்திரங்கள், வேளாண் கருவிகள், மண்வள அட்டை, நுண்ணீர் பாசனத்திட்டம், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல், வீட்டுக்காய்கறி தோட்டம், கால்நடைகள் பராமரிப்பு, பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன்கள்; குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனைக்குழு மற்றும் சார்புத்துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை விவசாயிகள் பார்வையிட்டனர்.இந்த புதிய திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாம்கள்; மூலம் உழவர்களுக்கு வேளாண்மை விரிவாக்க சேவைகள் அவர்களின் கிராமங்களிலேயே வழங்குவதால், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இம்முகாம்கள் மூலம் பல்வேறு துறைகளின் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை பெற்று விவசாயம் செய்வதன் மூலம் வேளாண் உற்பத்தி பெருகுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, வேளாண்மைப் பொறியியல்துறை கண்காணிப்புப்பொறியாளர் திருமதி இந்திரா, விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் திரு.வேலுச்சாமி, வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி தனலட்சுமி, உதவி இயக்குநர்(கால்நடை பராமரிப்புத்துறை) மரு.முருகன், பேராசிரியர் (வேளாண் அறிவியல் நிலையம், கோவிலாங்குளம்) திரு.பாலசுப்பிரமணியம், உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில், புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை (29.05.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீ குமார் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கப்பாண்டியன் அவர்கள், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் திருமதி பவித்ரா ஷியாம் அவர்கள் மற்றும் சீர்மரபினர் வாரியத்துணைத் தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இராஜபாளையம் காந்திஜி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது.மேலும் இராஜபாளையத்தில் நிறைய நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றோம். நமது விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் நகராட்சி பெரிய நகராட்சி ஆகும். இராஜபாளையம் பகுதியில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், மருத்துவமனை கட்டடங்கள் மற்றும் நூலகம் உள்ளிட்ட அரசுத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.இராஜபாளையம் நகராட்சி பகுதியில் தென்காசி - மதுரை நெடுஞ்சாலையில் கடந்த 1969-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதியதாக பேருந்து நிலையம், கலைஞர் மேம்பாட்டு திட்டம் 2022-2023-ன் கீழ் ரூ.2.90கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு அரசாணை வழங்கப்பட்டது. அதனடிப்படையில் 1.41 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் பயனாளிகள் காத்திருப்பு அறை, 23 கடைகள், 2 உணவகங்கள், தாய்மார்கள் பாலுட்டும் அறை, பொருட்கள் வைப்பறை, நேர காப்பாளர் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி, பேருந்து நிறுத்த தளம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் 926 ச.மீ பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 28.05.2025 அன்று நள்ளிரவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, இரவுப்பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் வருகை குறித்தும், மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.பின்னர், அவசர சிகிச்சை, பச்சிளம் குழந்தை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள், நோயாளிகளை கவனிக்கும் விதம், சிகிச்சைக்கு பிறகான தற்போதைய நிலை, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், மருத்துவமனைக்கு வரும் புற மற்றும் உள் நோயாளிகளுக்கு அரசின் மருத்துவ சேவைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் ( 29/05/2025) நகர்ப்புற நல்வாழ்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குவரக்கூடிய வரக்கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவர்களின் வருகை,பணிபுரியும் செவிலியர்களின் வருகைப்பதிவேடு, வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெசீலன் , I A S, அவர்கள் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய்க்கான இயக்கம் என்ற திட்டத்தின்கீழ் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க மதிப்புக் கூட்டு தொகுப்பு மற்றும் செயல்விளக்கத்திடல் அமைத்திட இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டமானது நிலக்கடலை, சூரியகாந்தி போன்றபயிர்களுக்கானசெயல்படுத்தப்படவுள்ளது.இதில் நிலக்கடலையில் தொகுப்பு மற்றும் செயல்விளக்கத்திடல் காரியாபட்டி, ம.ரெட்டியபட்டி, நரிக்குடி, வத்திராயிருப்பு, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கடலை மதிப்புக்கூட்டு தொகுப்பின்கீழ் 500 எக்டேர் ஒரு தொகுப்பு வீதம் இரண்டு தொகுப்புகள் 1000 எக்டேர் பரப்பளவில் உருவாக்கி அதில் அடங்கியுள்ள விவசாயிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்குட்பட்ட புதிய நிலக்கடலை இரகங்கள் வழங்கப்படும்.உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிலக்கடலை விளைச்சல் அதிகரிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் நிலக்கடலைகளை வாங்கி மதிப்புக் கூடுதலாக எண்ணெய் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கடலை செயல்விளக்கத்திடலின் கீழ் 500 எக்டேர் (20 எக்டேர் ஒரு தொகுப்பு) தேர்வு செய்து அனைத்து தொழில்நுட்பங்களையும் உட்புகுத்தி நிலக்கடலை விளைச்சலை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதேபோன்று சூரியகாந்தி பயிரில் மதிப்புக்கூட்டு தொகுப்பு 200 எக்டேர் வீதம் இரண்டு தொகுப்புகள் (400 எக்டேர்) மற்றும் செயல்விளக்கத்திடல் 1200 எக்டேர் (20 எக்டேர் ஒரு தொகுப்பு) அருப்புக்கோட்டை, ம.ரெட்டியபட்டி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடைந்து எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், புதிய சமுதாயக்குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் கிராமப்புறங்களில் குடிநீர் வசதி மற்றும் நீர்ப்பாசன வசதிக்கு உதவும் சமுதாயக்குளம் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இந்தத் திட்டம் மூலம் கிராமங்களில் குளங்கள், ஏரிகள் மற்றும் பிற நீர்த்தொழில் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் புதிய சமுதாயக்குளங்கள் அமைக்கும் பணிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.19 கோடி மதிப்பிலான 154 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 143 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 11 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.19.58 கோடி மதிப்பிலான 193 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 168 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 25 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.22.33 கோடி மதிப்பிலான 127 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 114 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 13 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.11 கோடி மதிப்பிலான 129 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 104 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 25 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.12.12 கோடி மதிப்பிலான 175 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 146 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 29 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.15.49 கோடி மதிப்பிலான 167 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 116 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 51 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.10.95 கோடி மதிப்பிலான 125 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 102 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 23 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.11.55 கோடி மதிப்பிலான 191 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 161 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 30 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14.45 கோடி மதிப்பிலான 189 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 161 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 28 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.10.97 கோடி மதிப்பிலான 256 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 202 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 54 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.22.65 கோடி மதிப்பிலான 103 பணிகள் எடுக்கப்பட்டு, அதில் 95 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 8 புதிய குளங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆக மொத்தம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் ரூ.176.21 கோடி மதிப்பில் 1809 புதிய குளங்கள் அமைக்கும் பணிகளில், 1512 பணிகள் முடிக்கப்பட்டு, 297 பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சின்ன ஓடைபட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்குளம் அமைக்கப்பட்டு, குளம் தூர்வாரப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, அரசு அலுவலர்கள் மற்றும் திட்டப் பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது இன்று 28.05.2025 காலை 09.00 மணி முதல் மறுநாள் 29.05.2025 அன்று காலை 09.00 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முதல் நாளான இன்று, மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், கோட்டையூர் ஊராட்சியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தினை பார்வையிட்டு, அங்குள்ள பதிவேடுகள் மற்றும் கோப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.மேலும், மகாராஜபுரம் ஊராட்சி தானிப்பாறை லிங்கம் கோவில் அருகில் புதிதாக பாலம் கட்டப்படவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.பின்னர், இலவச வீட்டுமனை பட்டா 6 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா மாறுதல் 31 பயனாளிகளுக்கும், சமூக பாதுகாப்பு திட்டம் உதவித்தொகை 9 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப மின்னணு அட்டை 40 பயனாளிகளுக்கும், பிறப்பு சான்று பதிவு 4 பயனாளிகளுக்கும் என மொத்தம் 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் (28.05.2025) வத்திராயிருப்பு லயன்ஸ் மெட்ரிகுலேஷன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பில் பயிலும் 150 பள்ளி மாணவர்களுடனான இரண்டு குழுக்களாக நடைபெற்ற Coffee With Collector” என்ற 191 மற்றும் 192-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளித் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 191 மற்றும் 192-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 441 Rly KM:579/900-580/000 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.எனவே 31.05.2025 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபத்து மற்றும் இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், மேற்படி நபர்களை ஒன்றிய மற்றும் மாநில அரசின் காப்பீட்டு திட்டங்களில் இணைப்பது மிகவும் முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற ஏழை எளிய குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர்களின் மரணத்தால் அல்லது ஏதாவது உடல் உறுப்பு இழப்பால் நிரந்தர வருவாய் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இப்பேரிழப்பிலிருந்து காப்பீடு செய்தவர் அல்லது குடும்பத்தினர் மீளவும், தொடர்ந்து தொழில்கள் புரிந்திடவும் காப்பீடு உதவுகிறது.ஆதலால் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடையே காப்பீட்டு திட்டங்கள் மற்றும் சமுதாய பாதுகாப்பு பயன்கள் பற்றிய விவரங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு PMSBY, PMJJBY, CMCHIS, PMJAY மற்றும் APY ஆகிய காப்பீட்டு திட்டங்களில் தகுதியுள்ள அனைத்து சுய உதவிக் குழு உறுப்பினர்களும் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.மேலும், பதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மே 2025-ம் மாதத்திற்குள் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.