விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, I A S., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, திருவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம், சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 8 ஆவது கட்டமாக நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை, நேரில் சென்று பயனாளிகளின் விவரங்கள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு பசுமைத் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரும் நாற்றங்கால் நர்சரி பூங்காவினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது, திட்ட இயக்குநர் மாவட்ட (ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, I A S., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சம்மந்தபுரம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளியிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும், இராஜபாளையம் வட்டார இயக்க மேலாண்மை அலகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனையகமான மதி பல்பொருள் அங்காடியினை நேரில் சென்று பார்வையிட்டு, சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண் தொழில் முனைவோர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் தலா ஒரு இலட்சம் வீதம் 3 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது, திட்ட இயக்குனர் மாவட்ட (ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சீர்மரபினர் நலவாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, இராஜாபாளையம் வட்டாட்சியர் திரு.ராஜீவ் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயரெங்காபுரம் ஊராட்சி மேலகோதை நாச்சியார்புரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 16 குடும்பங்கள் ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது. மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மட்டுமே கடந்த ஆகஸ்ட் 2025 வரை 13,191 பயனாளிகளுக்கு இலவச இணைய வழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக வெம்பக்கோட்டை வட்டம், மேலகோதை நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 16 குடும்பங்கள் ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இந்த இடங்களுக்கான இணைய வழிபட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டாக்களை வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து 16 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்கள் நேரில் சென்று வழங்கினார்.எங்களுக்கு இந்த இடத்திற்கான ஒப்படை ஆணைகள் வழங்கப்பட்டிருந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இணைய வழியிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே எங்களைத் தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் எங்களுக்கு இந்த இடத்திற்கான அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளதால், நாங்கள் எந்த வித தயக்கமின்றி எங்களுக்கான இடங்களில் வீடுகள் கட்டி குடியேற முடியும். எங்களுடைய பலவருட பயத்தையும், பதட்டத்தையும் எங்களுக்கு இந்த பட்டாக்கள் வழங்கியதன் மூலம் தமிழ்நாடு அரசு மகிழ்ச்சியாக மாற்றியிருக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பாலாஜி, வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 23.09.2025 முதல் 29.09.2025 வரை சர்வதேச காது கேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.காது கேளாதோர் மற்றும் சைகை மொழி வாரமாக 23.09.2025 முதல் 29.09.2025 வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, சைகை மொழியின் முக்கியத்துவம் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அரசு சேவைகளை பெறுவதை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு கூட்டம், விழிப்புணர்வு பேரணி, சிறப்பு இல்லங்கள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும், 23.09.2025 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் நீல நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சைகை மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதன் தொடர்ச்சியாக சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு சைகை மொழி குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இப்பேரணியில், தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்கள், செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், செவித்திறன் குறையுடைய பள்ளிக் குழந்தைகள், செவித்திறன் குறையுடைய சங்க பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் சங்க பிரிதிநிகள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்திவிழிப்புணர்வுஏற்படுத்தினர்.இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில்வேல், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மூலம் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய மாவட்ட அளவிலான எச்.ஐ.வி. / எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (29.09.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மூலம், மாவட்டத்தில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்தில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமலும், ஒதுக்காமலும், சக மனிதர்களை போன்று அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று கரகாட்டம், பறை இசை, ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் மூலம் எச்.ஐ.வி. / எய்ட்ஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட மேலாளர்(எய்ட்ஸ் கட்டுப்பாடு), மேற்பார்வையாளர்கள், கோடாங்கி கலைக்குழு மற்றும் வெண்மணி கிராமிய கலைக்குழுவினர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தலைமையில் (29.09.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். பின்னர், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், திறன் பயிற்சி பெற்ற 36 திருநங்கையர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு ஒரு நபருக்கு ரூ.50,000 வீதம் 36 நபர்களுக்கு மொத்தம் ரூ.18 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.09.2025) உலக சுற்றுலா தினம்- 2025 முன்னிட்டு இவ்வாண்டிற்கான கருப்பொருளான "சுற்றுலாவும் நிலையான மாற்றமும்" (Tourism And Sustaintable Transformation ) என்ற கருத்துருவின் அடிப்படையில் கல்லூரி மாணவ, மாணவியரிடையே நடைபெற்ற கட்டுரை, குறும்படம்(Short flim), வினாடிவினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் வழங்கினார். சுற்றுலாத்துறையின் சார்பாக, விருதுநகர் சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர் மற்றும் வி.வி.வி. கல்லூரி மற்றும் விருதுநகர் இந்து நாடார் செந்தில்குமாரா நாடார் கல்லூரி, கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன் கோவில் மற்றும் எஸ்.எப்.ஆர்.கல்லூரி சிவகாசி வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை இணைந்து கல்லூரி மாணவ/மாணவர்களுக்கு “சுற்றுலாவும் நிலையான மாற்றமும்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் 26.09.2025 அன்று சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி மற்றும் சாத்தூர் கல்லூரியில் கட்டுரைப்போட்டி, குறும்படப் போட்டி மற்றும் வினாடி-வினாப் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும், இந்நிகழ்வின் தொடர்ச்சியாக 27.09.2025 அன்று முக்கிய சுற்றுலாத்தளமானஸ்ரீ நாச்சியார் ஆண்டாள் திருக்கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூரில் சுற்றுலாத்துறையின் சார்பில், சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.அதனைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,சுற்றுலா அலுவலர் திரு. ப.முனியப்பன்(மு.கூ.பொ), அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ / மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு தொடர்பாக, சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் 2021-2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதில் மாநில அளவிலான சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் உலக சுற்றுலாத்தினத்தன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சுற்றுலா பயண முகவர்கள், விமான நிறுவனங்கள் தங்கும் விடுதிகள் உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு 2025ம் ஆண்டிற்கான மொத்தம் 45 விருதுகள் 17 வகைப்பாடுகளில் வழங்கப்படவுள்ளது.விருது வழங்கப்படும் வகைப்பாடுகள், சிறந்த உள்வரும் பயண முகவர், சிறந்த உள்நாட்டு பயண முகவர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான நிறுவன பங்குதாரர், சிறந்த தங்கும் விடுதி, சிறந்த உணவகம், சிறந்த (Niche) சுற்றுலாத்தலம், சிறந்த சாகச சுற்றுலா மற்றும் கேம்பிங் சைட் அமைப்பாளர்கள், சிறந்த (MICE) சுற்றுலா அமைப்பாளர்கள், சிறந்த சமூக ஊடகவியலாளர் (Special Media Influencer), சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சிறந்த சுற்றுலா விளம்பரங்கள், சிறந்த சுற்றுலா மேம்பாட்டு வெளியீட்டுகள், சிறந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சார்ந்த கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட நிறுவனங்களிமிருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும், விண்ணப்பங்களை www.tntourismawardscom என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக விண்ணப்பிக்க 30.09.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் கூடுதல் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலர் (மு.கூ.பொ) விருதுநகர் அவர்களை 73977-15688 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பத்தாரர் பிற்படுத்தப்பட்டோர்/மிகப் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும் (சாதிச் சான்றிதழ்). குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (கிராமம்/நகர்ப்புறம் பாகுபாடின்றி (வருமானச் சான்றிதழ்). (மாநில அரசின் வருமானச் சான்றிதழ் வழங்கும் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். (அல்லது) வர்த்தமானி பதிவு பெற்ற அதிகாரியால் (Gazetted Officer) சான்றளிக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட ஆண்டு குடும்ப வருமானச் சான்றிதழ். விண்ணப்பதார் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகள். பிஎச்டி.முதுகலை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் முதுகலைப் படிப்புகளுக்கு, பொருத்தமான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் (SAT GMAT GRE அல்லது பாடநெறியில் சேருவதற்குப் பொருந்தக்கூடிய பிற தொடர்புடைய மதிப்பெண்கள் போன்றவை) மூலம் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும் (சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து சேர்க்கை / சலுகை கடிதத்தை பெற்றிருக்கவேண்டும்) (IELTS அல்லது TOEFL போன்ற முற்றிலும் மொழித் திறன் தேர்வை அடிப்படையாகக் கொண்டதல்ல) மேலும், ஒரு மாணவருக்கு அதிகபட்சக் கடன் வரம்பு ரூ.15,00,000/--க்கு உட்பட்ட பாடத்திட்டத்தின் செலவில் 85% புதுதில்லியின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலமும் மீதமுள்ள 15% அதாவது ரூ. 2.25 இலட்சம் தமிழ்நாடு அரசால் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.கடன் தொகையானது சேர்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம், புத்தகங்கள், எழுதுபொருட்கள் தேர்வு, ஆய்வகம் மற்றும் நூலகக் கட்டணம், உண்டி மற்றும் உறையுள் கட்டணங்கள் மற்றும் கடன் காலத்திற்கான காப்பிட்டு கட்டணங்கள் உள்ளடக்கியது.கல்வி நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் கடன் தொகை விடுவிக்கப்படும் (செமஸ்டர் அல்லது அரையாண்டு அடிப்படையில்). முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து கட்டணத் தவணைகள் விடுவிக்கப்படும். வயது வரம்பு 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வட்டி விகிதம் ஆண்டிற்கு 8%. ஆகும்.கடன்கள் வழங்கப்படும் பாடத்தின் வகை மற்றும் காலத்தைப் பொருட்படுத்தாமல் மாணவர்களிடமிருந்து மீளப்பெறுவதற்கான தடைக்காலம் 5 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடமிருந்து அதிகபட்சமாக மீட்கும் காலம் 10 ஆண்டுகள் ஆகும். அதாவது 5 வருட தடைகாலம் உட்பட, அதாவது கடன் வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தப்பட வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கிய பிறகு, எப்போது வேண்டுமானாலும் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். இதற்கான முன் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. விண்ணப்பப் படிவம் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வங்கி கோரும் ஆவண நகல்களுடன் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.எனவே விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் வே.வெ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் (25.09.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டுதல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகள், புத்தகங்களை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கான முக்கிய நோக்கம் “What we see and what we think, that we become” நாம் எதை காண்கிறமோ, எதை நினைக்கிறமோ அதுவாக மாறுகிறோம் என்ற தாரக மந்திரம் உள்ளது. அதைப்போல, போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களில் பலர் கிராமப் பகுதியைச் சேர்ந்த போட்டியாளர்களே. இவர்களில் பலருக்கு நம்மால் முடியுமா என்ற உள்ளுணர்வால் பின்னடைவு ஏற்படுகிறது. மாணவர்கள் தங்கள் கல்லூரி காலங்களிலேயே கிடைக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகலாம். என்ன படிக்கலாம், தங்களின் ஆர்வத்திற்கேற்றவாறு எதிர்காலத்தில் தங்களது கல்வியினை எவ்வாறு மேம்படுத்தி கொள்ளலாம் என்று சிந்தித்து செயல்பட வேண்டும். போட்டித் தேர்வுகள் என்பது தனி உலகம் அல்ல. அன்றாடம் தங்கள் பாடத்திட்டத்தினை எவ்வாறு படிக்கலாம் என்றும், மாணவர்கள் தங்களின் பாடத்திட்டத்தை கூர்ந்தாய்வு செய்து, நடைமுறைக்கேற்றவாறு சிந்தித்து செயல்பட்டாலும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.எதிர்காலத்தில் நினைத்ததை அடைவதற்கு மாணவர்கள் தங்களின் கல்லூரி காலங்களிலேயே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பட்சத்தில், நேரத்தை வீணடிக்காமல் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். வெற்றிக்கதைகள் கேட்பது, செய்தித்தாள்களில் குறிப்புகளை எவ்வாறு தயார் செய்வது என்பதை பற்றி சிந்தித்து செயலாற்றும் பட்சத்தில் வெற்றி பெறலாம். இவையனத்தும், மாணவர்களின் இடைவிடாத முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் மட்டுமே சாத்தியம். இவற்றையெல்லாம் நிறைவு செய்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், வெற்றி நிச்சயம் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்தி தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தற்பொழுதிலிருந்தே தயாராகி போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர்(ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், திருநெல்வேலி) திரு.கா.ஹரிபாஸ்கர் அவர்கள் வேலை வாய்ப்பிற்கு வளர்த்துக் கொள்ள கூடிய திறன்கள் குறித்தும், உதவி இயக்குநர்(தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், மதுரை) திரு.அ.கலைச்செல்வம் அவர்கள் போட்டித் தேர்வுகள் குறித்தும், பொது மேலாளர்(மாவட்ட தொழில் மையம், விருதுநகர்) திரு.தி.கண்ணன் அவர்கள் சுய வேலைவாய்ப்பு குறித்தும் சிறப்புரையாற்றினார்.