25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


முதல் பக்க கட்டுரை

Apr 01, 2026

அன்பே சிவம்

அன்பு என்பது விலை மதிப்பற்ற பொக்கிஷம்.ஆத்மார்த்தமாக அன்புதான் அர்த்தமுள்ளதாக இருக்கும். புகழுக்காக 'அன்பு செய்கிறேன்.' என்று கூறிக்கொண்டு வாழ்வதில் என்ன லாபம். வாழ்க்கை வாழ்வதே ஒரு தவம் தான். நம்முடைய வாழ்க்கை  என்ற தவத்தை கடந்து வர மூன்று விஷயங்கள்  தேவை. நோக்கம், லட்சியம், அன்பு ஆகியவை. பிறந்து விட்டோம். பின்பு ஒரு நோக்கத்துடன்  லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் அன்பு  தேவை. மனிதம் தேவை.இடுப்பளவு நீரில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை, ஓர் ஏழை விவசாயிகாப்பாற்றினார். மறுநாள் அச்சிறுவனின் பணக்காரத் தந்தை, ஏழை  விவசாயியின் வீடு தேடிவந்து, பணத்தைக்  கொடுத்தால் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்  விவசாயி .விவசாயியின் மகனைப் பார்த்து,இவனை  படிக்க வைப்பது என் பொறுப்பு என்று அவனை  அழைத்துச் சென்றார் பணக்காரர்.அந்த ஏழைச்சிறுவன் நன்கு படித்து, லண்டனில் பெரிய மருத்துவனாகி, பென்சிலின் மருந்தை கண்டுபிடித்த 'சர் அலெக்சாந்தர் ஃபிளெமிங். அவனைப்  படிக்கவைத்த செல்வந்தரின் மகனுக்கு நிமோனியா  காய்ச்சல். இவருடைய கண்டுபிடிப்பால் சரி செய்யப்பட்டது.தந்தையால் ஒரு முறையும், மகனால் ஒரு முறையும் காப்பாற்றப்பட்ட அந்த செல்வந்தர் வீட்டுப்பிள்ளை வின்ஸ்டன் சர்ச்சில்.பயன் கருதாமல் விவசாயி செய்த உதவி.உதவிக்காக நன்றிக்கடன் என்ற விசுவாசத்துடன் கூடிய அன்பு, எந்த அளவுக்கு இரு தலைமுறைகளையும் நிமிரச் செய்திருக்கின்றது.விவசாயி காப்பாற்றி இருந்தாலும், அச்செல்வந்தர் அலட்சியமாக இருந்திருந்தால், இந்த இரண்டு பொக்கிஷங்களை உலகம் இழந்திருக்குமல்லவா?கிண்ணத்தில் வைத்திருந்த நாணயங்களை சிந்திவிட்டால், அதைப் பொறுக்கி மீண்டும் வைத்துவிடலாம். 'பொருளற்றார் பூப்பர் ஒரு கால்' செல்வத்தை இழந்தவர்கள் சம்பாதித்துவிடலாம். முயற்சி மீண்டும் செய்தால் பிரிந்துபோன செல்வம் திரும்பி வருதல் இயல்புதான்.அருள் அற்றார் மற்(று) ஆதல் அரிது.அன்பு, அருள் இல்லாமல் உள்ளம் மறத்துவிட்டால் அவ்வுள்ளத்தில் அன்போ, அருளோ  முளைக்கவே முளைக்காது.மானசீக பூஜைகள், மந்திரங்கள், ஆசாரங்கள் ஆகியவற்றால் கடவுளின் அருள் கிடைக்கும்.அன்பு செய்ய ,செய்ய நம்முடைய வாழ்க்கை என்ற தவம் சிவமாகின்றது. அன்பே சிவம்என்பது மறுக்க முடியாது.குணா பாஸ்கர் ராஜா.

Mar 01, 2026

கூப்பிட்டாங்களா?

யார் யாரைக் கூப்பிட்டார்கள் ? என்ற கேள்வி வருகிறது. திருமணம் சடங்கு, கிரஹப்பிரவேஷம், காது குத்து, மொட்டைக்கு என்னைக் கூப்பிடவில்லை என்று ஆதங்கப்படும் மக்கள் பலர். முக்கியமாக கல்யாணத்திற்கு ஜவுளி எடுக்கப் போகும் போது என்னைக் கூப்பிட்டார்களா? என்று பயங்கர சண்டை, கோபப்படும் மக்களும் உள்ளனர். வீட்ல விருந்துக்கு கூப்பிடவில்லை.ஏங்க அப்படிக் கூப்பிட்டால், உங்கள் கையிலிருந்து காசு செலவாகுமா இல்லையா? உங்கள் காசு, நேரம், அநாவசியமான வம்பு பேச்சு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். வெகு தூரத்தில் உள்ள ஊரில் திருமணம் என்றால் ஆபிசுக்கு, வேலை பார்க்கும் இடத்தில் லீவு போட வேண்டும். முதலாளியின் கோபத்திற்கு ஆளாவோம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் என்றால் பக்கத்து வீட்டில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அம்மா வீட்டில் விட்டு விட்டு செல்ல வேண்டும். மொய் பணம் ரெடி பண்ண வேண்டும். இப்படி எத்தனையோ இன்னல்களைக் கடந்து தான் ,ஒரு விசேஷத்திற்குச் செல்ல வேண்டும். டென்சன் தான். தலைவலி தான்.இத்தனை இன்னல்களைத் தரும் இந்த விசேஷங்களுக்கு ,அழைக்கவில்லை என்று வருத்தப்படுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நெருங்கிய சொந்தங்கள், கூடப் பிறந்தவர்கள், மகள், மகன் அழைக்கவில்லை என்று எத்தனை பேர் ராப் பகலாக அழுது கண்ணீர் சிந்தி, நொந்து நொடித்துப் போகின்றனர்.கூப்பிடவில்லையா? விட்டு விடுங்கள். அது முடியாதா? அழையாவிருந்தாளியாக சென்று விடுங்கள் .அவசியமில்லாமல் நினைத்து, நினைத்து உருகி உடம்பையும், மனதையும் கெடுத்து உங்கள் வீட்டவர்களையும் நோகடிக்க வேண்டாமே?அக்காலத்தில் ஊரும் சிறியது, கூட்டுக் குடும்பமாக இருந்தது. அனைவருமே விவசாயம் செய்து வந்தனர். விசேஷங்களை அறுவடை சமயத்தில் வைக்காமல் மற்ற காலங்களில் நடத்திவந்தனர். கூட்டுக் குடும்பம் என்பதால் அண்ணன் வீட்டுத் திருமணத்தை, தம்பி, அக்கா, சித்தப்பா, மாமா எல்லாரும் தன் வீட்டுத் திருமணம் போல் 3,4,5 நாட்கள் விழுந்து விழுந்து வேலை செய்வார்கள். அழைக்கத் தேவையில்லை.ஆனால் தற்பொழுது நிலைமையே வேறு வியாபாரம் தொழில், ஆபிஸர்கள், வேலையாட்கள் இஷ்டம் போல லீவு போட்டு வர முடியாது. ஒரு அண்ணன் ஆமதாபாத். தங்கை லண்டன், மாமா அமெரிக்கா, சித்தப்பா டெல்லி என்றால் எப்படி வரமுடியும் ஏன்? சென்னையை எடுத்துக் கொள்வோம். நடக்கிற காரியமா? வருடத்திற்கு ஒன்று என்றால் பரவாயில்லை 10 திருமணம், சடங்கு என்றால் முடியுமா? முடியாது.பணக்கார விட்டுச் சொந்தக்காரர்கள் கூப்பிட்டாலும் கஷ்டம், கூப்பிடவில்லை என்றால் வருத்தம், எப்படி?' என்ன அவங்க வீட்ல விசேஷமே' உன்னைக் கூப்பிட வில்லையா' என்று அலட்சியமாகக் கடாசும் ஒரு கூட்டத் தினால் அவமானப்படுதல் சரி. கூப்பிட்டா அவர்கள் வீட்டிற்கு நல்ல புடவை, நகை என்று தேடி, தேடி எடுத்துப் போட்டு பலிகடா மாதிரி அங்கு செல்வார்கள். இதையெல்லாம் தெரிந்தபின்னும் கூப்பிட்டாங்களா என்று வருத்தப்படுவோமா? இனி வரும் காலங்களில் என் பெண்ணிற்கோ பையனுக்கோ, திருமணம். இந்த தேதியில் திருமணமாகி விட்டது என்ற சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவு தான் உடனே போன் அடிச்சு சந்தோஷமாக பேசமாட்டோமா?'கூப்பிட்டாங்களா' வுக்கு குட்பை சொல்லும் காலம் தொலைவில் இல்லை.குணா பாஸ்கர் ராஜா.  

Feb 01, 2026

முதுமை ஒரு இனிமை பயணமாக மாற ,ஆரோக்கிய சிந்தனை !

முதுமை என்பது கொடுமை அல்ல, அனுபவம் தான், நம் கண் முன்னே விஞ்ஞான வளர்ச்சி கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இளைய தலைமுறைகள் அவர்களுடைய வேலையைப் பார்க்கவே நேரமில்லாமல் இருக்கின்றனர். இந்த மாதிரி கால கட்டத்தில் முதியவர்கள் நம்மை யாரும் கவனிக்கவில்லை என்ற சிந்தனை கூடவே கூடாது என்பது தான் உண்மை. முதுமை ஒரு இனிமை பயணமாக மாற நாம் செய்ய வேண்டியவை. முதுமையில் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் முதியவர்கள் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது .முக்கியமாக பொருளாதார நிதியிலும், உடம்பை பத்திரமாகப் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். இப்படி நம்மைத் தயார் படுத்திக் கொள்ள 40 வயதிலிருந்தே நாம் தொடங்கி விட வேண்டும். உடற்பயிற்சி செய்தல், கடைசி காலத்தில் நம்மை யாரும் கவனித்துக் கொள்ள மாட்டார்கள். நம்மை நாமே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். என்று நம் மனதை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.  அந்திம காலத்திற்கு கண்டிப்பாக சேமித்தல். நாம்  சேமிக்கும் பணம் பல மடங்கு கூட்டக் கூடியசேமிப்புத் திட்டங்களில் சேமித்தல், உணர்ச்சி வசப்படாமல் இருத்தல் வேண்டும்..சின்னதொரு வீட்டில் நிம்மதியாக மனைவியுடன் இருத்தல்.மனைவியோ, கணவனோ இறந்து விட்டால் அதற்கு நாம் தயார் ஆக வேண்டும், பிறப்பு என்பது இறப்பதற்காகத் தானே ? வீட்டு வேலைகளை தம்பதிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.தியானம், யோகா, சிரிப்பது மிகமிக முக்கியம்.  மகனுடைய வீட்டிலோ, மகளுடைய வீட்டிலோ, இருக்க வேண்டி இருந்தால், அவர்களுக்கு சின்ன, சின்ன உதவிகளைச் செய்யலாம். பேரக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுதல் ,காய்கறி வாங்கிக் கொடுத்தல், பால்காரன் வந்தால் வாங்கி, முடிந்தால்காய்ச்சிவையுங்கள்.நம்மால் முடிந்த வேலையைச் செய்யலாம், முடியா விட்டால் விட்டு விட வேண்டும். நம் குழந்தைகளுக்கு நாம் பாரமாக இருக்கக் கூடாது. பாவம் அவர்கள் என்று நினைக்க வேண்டும். பொருளாதாரத்தில் தன்னிறைவு மிகவும் அவசியம், சுய பச்சாதாபம் கூடவே கூடாது. முழங்கால் வலி வந்தால் முழங்காலைத் தட்டிக் கொடுத்து இத்தனை வருடம் என்னைச் சுமந்து சென்றாயே ! இப்பொழுது வலிக்கிறதா ? என்று தடவிக் கொடுத்து ஏற்றுக் கொள்ளவேண்டும்.  B.P கிடையாது, சுகர் கிடையாது, கொலஸ்ட்ரால் கிடையாது, பின் ஏன் எனக்கு ஹார்ட்அட்டாக் வந்தது என்று மிரண்டு விடக் கூடாது. எது வேண்டுமானாலும், எப்படியிருந்தாலும் வரும்.’It is ok’ நம் மனதை தைரியமாக ஏற்றுக் கொள்ளச் சொல்ல வேண்டும்.எதிர்பார்ப்புகளை குறைக்க வேண்டும், எந்த விஷயத்திலும் மற்றவர்கள் நம்மிடம் கேட்டால் மட்டுமே நம் அபிப்பிராயத்தைக் கூறலாம். வாயை மூடிக் கொள்வது உத்தமம். புதுசாக எதையாவது கற்றுக் கொள்ளலாம், மனதிற்குள் உள்ள எதிர்மறை சிந்தனை என்ற ஒட்டடையை அறவே ஒழித்து விட வேண்டும். மனதை காற்றோட்டமாக ஆரோக்ய சிந்தனை மட்டும் செய்யுங்கள். MENTAL HEALTH :- M-   MEDITATION(தியானம்) E - EXERCISE (உடற்பயிற்சி) N - NO சொல்லுங்கள் ( இல்லை, முடியாது என்று சொல்லிப் பழகுங்கள்) T - TALK (நன்றாக உங்கள் வயது நண்பர்களுடன் பேசுங்கள்) A- ACCEPT (எதையும் ஏற்றுக் கொள்ள பழகுங்கள்) L-  LAUGH (நன்றாகச் சிரியுங்கள்) முதுமை ஒரு இனிமைப் பயணம்.

Jan 01, 2026

 போதையில்லா தமிழத்தை உருவாக்குவோம்.

புது வருடம் பிறக்கிறது. இந்த வருடத்திலிருந்து நாம் இப்படி நடந்து கொள்ளவேண்டும். இனிமேல் நல்ல விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும். 'நாம் நம் குடும்பம் இந்நாட்டில் நன்றாக வாழ வேண்டும்' இப்படி எல்லாம் ஒரு சிந்தனை புது வருடம் பிறப்பில் அனைவருக்கும் வருவது சகஜமே !நியூ இயர் அன்று ஏன்? போதை பற்றிய கெட்ட செய்தியை கூறுகிறீர்கள் என்கிறீர்களா?. இந்த வருடம் தவற விட்டால் நம் வாரிசுகள் போதையில் மூழ்கிவிடுவார்கள். நாம் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கருத்து.நீங்கள் உங்கள் குடும்பம் மாத்திரம் நன்றாக இருந்தால் போதுமா ? உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எப்பொழுதாவது நினைத்தது உண்டா ?. நாம் நம்முடைய தலைமுறைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால், நாட்டுப் பற்று கட்டாயமாகத்தேவை இல்லையா ?.காலையில் எழுந்து நம் கடமைகளை சரியாக நாம் மட்டும் செய்தால் போதுமா ? .வெளியே என்ன நடக்கிறது, போதையில் எத்தனை பேர் ரோட்டில் சுயநினைவின்றி பிணத்தைப் போல இருக்கிறார்கள். ஏன் இவர்கள் குடிக்கும், போதை மருந்திற்கும், அடிமையாகி உள்ளனர். ஆண்கள் குடித்தார்கள் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை .பெண்களும் குடிக்கின்றார்கள் அதையும் கண்டு கொள்ளவில்லை. சிறார்கள் குடிக்கிறார்கள் அதையும் கண்டு கொள்ளவில்லை. இது இப்படியே சென்று கொண்டிருந்தால் அடுத்து மீதம் உள்ளவர்கள் யாரோ அவர்களும் பாதிப்படைவார்கள்.அரசாங்கம் டாஸ்மார்க் கடைகள் திறந்து,  நினைத்த நேரம் வாங்கும் வசதியைச் செய்துள்ளது. அதுவும் சரியான இடத்தில் மக்கள் கூடும் இடத்தில் இக் கடைகள் உள்ளன. பெரிய பதவியில் இருப்பவர்களும், சாதாரண விவசாயிகள் வரை குடிப்பதற்கு வசதியாக இக் கடைகள் .இதையெல்லாம் நாம் பார்த்து, குடிச்சே அழிந்து போவான், நமக்கு எதற்கு வம்பு, என்று அதை பெரிது படுத்தாமல் விட்டு விட்டோம்.இப்பொழுதோ  நம் தலையில் பேரிடி போல, பள்ளிகளில், கல்லூரிகளில் பரவலாக உபயோகிக்கப்படும் போதை மருந்துகள். நம் குழந்தைகளைக் குறிவைத்து வியாபாரம் செய்துகோடீஸ்வரர்கள் உருவாகின்றனர். குழந்தைகள் சாப்பிடும் போதைப் பொருள்  கலந்தசாக்லேட், ஐஸ்கிரீம்,கல்லூரிகளில் விற்கப்படும் போதைப் பொருளால், நம் தலைமுறைகள் சீரழிந்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த ரிடையர்ட் I.P.S. மகன் போதைப் பொருள் விற்பனை செய்வதை காவல்துறை கைது செய்துள்ளனர். 24 வயதே ஆன சங்கீதா என்ற பெண் திருமண வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து செய்து விட்டு, மும்பையில் உள்ள ஆண் நண்பர்களிடம், போதைப் பொருள் வாங்கி விற்பனை செய்து வசதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் பிடிபட்டுள்ளார். கஞ்சாவிற்கும் தொழிலுக்கு ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் உடந்தை.சமீபத்திய செய்தி தமிழகம் முழுதும், உயர் ரக கஞ்சா சப்ளை செய்த மற்றும் இலங்கைக்கும் கடத்திய பெண் தாதா ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். பெங்களுரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்த இவருக்கு துணையாக இருந்த ஏழு பேரும் கைதாகினர். இது தவிர பெங்களுருவில் நடத்தப்பட்ட சோதனையில் 58 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவையில் மீண்டும் போதை ஊசிகலாச்சாரம் தலை தூக்கியுள்ளது. ஒரு பள்ளி மாணவி பள்ளியின் வகுப்பறையில் குடித்ததாக செய்தி, என்னசெய்வதுபெற்றோர்களே உங்கள்குழந்தைஅப்படிஎல்லாம்செய்யமாட்டான்என்றுகனவிலும் எண்ணாதீர்கள், குழந்தைகளை சந்தேகப் பட வேண்டாம். ஆனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கவனியுங்கள். அலட்சியப் படுத்தினால் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை அதல பாதாளத்தில் தள்ளிவிடும்.இப்பொழுது போதையில்லா தமிழகம் உருவாக்க வேண்டும்,என்று பள்ளிகளின் இருபக்கங்களில் 100 மீட்டர் இடைவெளியில் போதைப் பொருள்கள் விற்கும் கடைகள் இருக்கக் கூடாது என காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களையே போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்காக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பாடசாலைகளைச் சுற்றி அடிக்கடி சோதனை நடத்தி, சட்டத்தின் கீழ் அவர்களைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.நம் நகரின் அருகில் உள்ள சேத்தூர் கிராமத்தில் இருபதாயிரம் மக்கள் தொகையினர் விவசாயத்துறையில் உள்ளனர். இந்த ஊரில் பஸ் ஸ்டாண்ட் அருகேயே டாஸ்மார்க் கடைகள் ,மக்களின் மிகுந்த எதிர்ப்பையும், மீறி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதையும் காவல்துறை கவனிக்க வேண்டுமல்லவா ?  ரஷ்யாவில் ஒரு கால கட்டத்தில் எல்லா தெருக்களிலும் மது விற்கும் கடைகள்இருந்தன. மக்களும் குளிருக்காக குடிக்கிறேன் என்று மது போதைக்கு 80% பேர் அடிமையானார்கள். இதை எப்படி தவிர்ப்பது என்று அரசாங்கம் யோசித்து, 50 km-க்கு ஒரு கடை என்று, எல்லா தெருக்களிலும் உள்ள மது விற்கும் கடைகளை அகற்றியது, ரஷ்ய அரசாங்கம். .தொலை தூரத்திற்குசென்று மது வாங்க முடியாமல் குடிப்பதை பலர் நிறுத்தியதாக அப்பொழுது கூறியதுஅரசாங்கம். எளிதாக இருந்தால் மது வாங்குவதை நிறுத்த முடியாது அல்லவா ? நம் அரசாங்கமும் இதை அமல் படுத்தினால் நல்லது தானே !  சந்தேகத்திற்குரிய போதைப் பொருள் விற்பவர்கள் தென்பட்டால், உடனடியாக நாம் விழித்துக் கொண்டு,அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ, அதை மக்களாகிய நாம் அனைவரும் சேர்ந்து செய்தால் தான், வரும் தலைமுறையினரை பாதுகாக்க முடியும். 2026 ஆம் ஆண்டு போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வுடன் நாம் புத்தாண்டை எதிர் கொள்வோம் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் நம் தலைமுறையினர் நமக்கு முன்னே போதையில் அடிபட்டு பரலோகம் சென்று விடுவார்கள், உருவாக்குவோம் போதையில்லா தமிழத்தை !

Dec 02, 2025

வயதான குழந்தைகள் .

தனியாக ஒரு ரூமில் போட்டு வேளா வேளைக்கு சாப்பாட்டை போட்டு விட்டு கதவை அடைத்து விடும் அவலம் வயதானவர்களுக்கு பல இடங்களில் உண்டு.வணக்கத்திற்குரிய வயதான பெரியவர்கள் வீட்டில்இருந்தால் பலருக்கு பாரமாக இருக்கிறது. சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையாக இருப்பினும் மதிக்க வேண்டும்.தினமும் 1மணி நேரம் அவர்களிடம் ஏதாவது ஒன்றைப் பற்றி பேசி அதைப்பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டு விட்டு உங்களுடைய நிலையும் கூறவேண்டும். காலம் இப்படி இருக்கிறது இப்படித்தான் மாற வேண்டியிருக்கு என்று கருத்துப் பறிமாற்றமோ அவர்களிடம் சின்னச்சண்டையாவது போடுங்கள். அவர்கள் மனதில் நாள் பூராவும் அசை போட்டு சந்தோஷமாக இருப்பார்கள் வெளியூரில் இருக்கிறீர்களா?. தினமும் ஒரு போன்கால் எப்படி இருக்கிறீர்கள் என்று குசலம் விசாரித்து, மருந்து சாப்பிடுங்கள் என்று கூறினால் பக்கத்தில் இருக்கத் தேவையில்லை. அன்பு அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. ஒரு விதத்தில் இவர்கள் வயதான குழந்தைகளே !கடிதத்தில் அம்மாவின் கைவண்ணத்தையும், அப்பாவின் உபதேசத்தையும் கோடிட்டு எழுதுங்கள். இந்தக் கடிதம் போதும் ஒன்றிரண்டு மாதங்களுக்கு மறுபடியும் இன்னொரு கடிதம், சின்ன  GIFT கொடுங்கள். குறைந்த விலையாக இருந்தாலும், தனக்காக தன் குழந்தைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்ற எண்ணமே,அவர்களை ஆரோக்யமாக வைத்திருக்கும்.உங்கள் குழந்தைக்கும், பாட்டி, தாத்தாவுடன் பேசவும், பழகவும் வாய்ப்பைக் கொடுங்கள். பெரியவர்கள் இல்லையா பக்கத்து வீட்டிலோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ சென்று பழக விடுங்கள். உங்கள் குழந்தைகள் உங்களை பிற்காலத்தில் நிச்சயமாக மதிப்பார்கள்.பள்ளிகளில் ஏதேதோ Project Report கேட்கிறார்கள்.முதியவர்களிடம் பேசி அதிலிருந்து அவர்கள் கிரஹித்துக் கொள் வதை எழுதச் சொல்லலாம். பெரியவர்களுக்கு பொழுது போகும், குழந்தைகளுக்கும் பழைய கால வாழ்க்கையை தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்.சமூக சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தனியாக இருக்கும் வயதானவர்களிடம் சில மணி நேரங்களைச் செலவிடுங்கள். இது பெரியதர்ம காரியம். பெரியவர்கள் மன அழுத்த நோய்களுக்கு, நாம் காரணமாகி விடக்கூடாது.பெரியவர்களை மதித்து அவர்களுடைய வாழ்க்கையில்  பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருபக்கமும் சந்தோஷமாக  வாழலாம்.அன்பிற்காக ஏங்கும் பெரியவர்களை ஒருபடி கூட மரியாதை கொடுத்து தர்மத்தையும் அவர்களுடைய நம்பிக்கையையும் காப்போம்.                                                                      திருமதி.குணா பாஸ்கர் ராஜா 

Nov 01, 2025

விட்டுக் கொடுத்தல்.

மனித உரிமை (Human Rights) என்று வாய் கிழிய பேசும் மனிதர்கள் வீட்டில் மனைவிக்கு உரிமை தருகிறாரா? இல்லை. மனைவி கணவனுக்குஉரிமைதருகிறாரா? சற்று யோசித்துப்பாருங்கள். 100க்கு 99 சதவிகிதம்பேர் 'இல்லை'என்றுதான் சொல்கிறார்கள்.கணவனுக்கு டி.வி.யில் டிஸ்கவரி, பி.பி.சி.பிடிக்கும். மனைவிக்கு சீரியல் நேரம் வந்துவிட்டால் கொஞ்ச நேரம் பார்த்துக்கிறேன் என்றால் அவருக்கு கோபம். காலையிலிருந்து மாலைவரை நான் ஆபிஸிற்கு போய்விட்டு இப்பத்தானே வந்தேன். எனக்குப் பிடித்ததைத்தான் பார்ப்பேன். உரிமை மறுக்கப்படுகின்றது. கணவனுக்குப் பிடித்த படத்தைஹாலில்மாட்டினால்மனைவிக்குப்பிடிப்பதில்லை.எனக்கு ஏ.ஸி. பக்கத்தில் படுக்க வேண்டும். மனைவியோ ஐயோ குளிரடிக்குதே!காத்தாடி வேண்டும் இது மனைவி. கணவனுக்கு கர்நாடக சங்கீதம் பிடிக்கும். மனைவிக்கு வெஸ்டர்ன் மியூசிக் வேண்டும். ஒருவருக்கு ஊர் சுற்ற பிடிக்கும். மற்றவருக்கு வீட்டைவிட்டு வெளியே வருவதே பிடிக்காது. ஒரே நேரத்தில் ஒரே ரூமில் இருவருக்கும் எப்படி இரண்டு வித மியூசிக்கை கேட்கமுடியும். இளம் தம்பதியர்கள் அவரவர்களுடைய உரிமை ,விருப்பத்தை விட்டுக் கொடுக்காமல் ,சேர்ந்து வாழ விரும்புகின்றனர். எப்படி ஒரே விட்டில் இரண்டு பேரும்சேர்ந்து வாழ்கின்றனர். பொருளாதாரத்தில் சௌகரியமாக இருக்கும், வேலைக்குப் போகும் தம்பதியர்கள் ,தனித்தனி அறைகளில் தங்களுக்கு பிடித்தமான சூழ்நிலையில் வாழவே ஆசைப்படுகின்றனர். கணவன் மனைவியாக  வாழ்வது மட்டும் தங்கள் பங்குங்கு அல்ல. அவரவர்களுடைய விருப்பு, வெறுப்புகளையும் மதிக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் தனித்தனிரூம், டி.வி, மியூசிக் டெக் என்று வைத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள் இருக்கும் இடத்திலேயே அவரவர்களுக்கு தகுந்த மாதிரி, ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்வதே ,அர்த்தமுள்ள வாழ்க்கை.கணவன் மனைவியின் சாபத்திற்கோ, மனைவி கணவனின் சாபத்திற்கோ, ஆளாகாமல்அவரவர்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்.இவர்களின் மற்ற உறவினர்களுக்கு நோ.சான்ஸ்.  அவரவர் வேலையைப் பார்த்துச் செல்வதே மேல், கௌரவம் கூட. உரிமைக்கு மதிப்பளித்து உல்லாசமாக வாழக் கற்றுக் கொள்ளளுங்கள். 

Oct 01, 2025

திருஷ்டி பூசணிக்காய்.

தவறை 'தவறு' செய்கிறோம் என்று தெரிந்தே பலர் செய்கின்றர். எதற்காக? தன்னை நல்லவன் என்றும், உயர்ந்தவன் என்றும் தான் நன்றாக வாழ வேண்டும்என்பதற்காக பல  தவறுகளை செய்து கொண்டே  இருக்கின்றனர். இவை தெரிந்து செய்யும் தவறுகள். தவறு செய்பவர்கள் அனுபவிக்கத்தான் போகிறோம் என்று தெரிந்தும் ''அப்ப பார்த்துக்கலாம்" என்று இன்னொரு காரணத்தை சொல்லி சமாளிப்பார்கள்.ஆனால் 'தவறை ' தவறே இல்லை என்று எத்தனை தவறுகள் செய்து கொண்டிருக்கிறோம் தெரியுமா? கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் தெரியும். பழகி விட்ட தவறுகளைப் பற்றி.தன் கடையில் வியாபாரம் ஓஹோ என்றிருந்தாலும், வியாபாரம் இல்லை என்றாலும் 'கண் திருஷ்டி' என்று பூசணிக்காய் மேல் சூடம் ஏற்றி சுற்றி நடுத்தெருவில் போட்டு உடைத்து விட்டு திருப்தியாகச் செல்கின்றனர். தங்களுடைய கடைக்கு ரெம்ப பக்கத்தில் உடைத்தால் மறுநாள் சுத்தப்படுத்த வேண்டும் என்று தான்.சரி திருஷ்டி சுற்றி விட்டு சாலையில் சிதறிய  பூசணிக்காயோடு தங்களுடைய கஷ்டங்களெல்லாம் தீர்ந்த விடும் என்று நினைப்பவர்களுக்கு ,அடுத்த பெரிய பாபச் செயல் (கொலைக்குச் சமமான) செய்திருக்கிறோம் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. அவ்வழியே  வேகமாக வரும் ஸ்கூட்டர், பைக் சறுக்கி பல உயிர்கள் எதிரே வரும் வாகனங்களில் அடிபட்டு மரணம்  அல்லது காயமடைந்து, படுத்த படுக்கையாகி விடுகின்றனர் என்று பல செய்திகளைப் பார்க்கிறோம். உங்கள் வாழ்க்கையை சுகமாக்க இன்னொருவர் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறீர்கள்.  இது எப்பேர்பட்ட தவறு. பாவம். உயிர்களை காவு வாங்கும் இந்த திருஷ்டி பரிகாரம் தேவையா? இந்த செய்தி வாசிக்கும் வரை யாருக்கும், தான்  செய்தது தவறு என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சரி தெரிந்த பின்பாவது அந்தத் தவறை மற்றவர்கள் செய்யாமல் இருக்கலாம் அல்லவா? 'ம்ஹீம்' நோ சான்ஸ். 'அவன் விதி', அதுக்கு நான் திருஷ்டி பூசணிக்காயை நடுரோட்டில் தான் உடைப்பேன் என்று அடம் பிடிக்கின்றனர். இதை மனிதர்களின் அறியாமை, முட்டாள்தனம் என்றும் சொல்லிவிட முடியுமா? பின்பு இவர்களை எதில் சேர்ப்பது?பழகிவிட்ட இத்தவறினை தவறு என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.நீங்கள் திருஷ்டி சுற்றும் பூசணிக்காய் உங்கள் மகனையோ, உங்களுடைய சொந்தங்களையோ காவு வாங்கினால் என்ன செய்வீர்கள்?இவை எல்லாம் மற்றவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சல் தரும் என்பதை கொஞ்சமாவது சிந்திக்கவேண்டாமா? பழகிவிட்ட தவறினை, இனிவரும்  சமுதாயத்தினருக்காவது தவறு ,என்று புரிய வைப்பது நமது கடமையாகும்.திருமதி. குணா பாஸ்கர் ராஜா

Sep 01, 2025

அன்பே பிரதானம், சகோதர அன்பே பிரதானம்!

ஒரே தாய் வயிற்றில் பிறந்து அக்கா,தம்பி, தங்கை, அண்ணன் என்று பாசத்துடன், ஒரு வித வித்யாசமும் இன்றி பெற்றோர்களிடம் வளர்ந்து வருகிறோம். ஒரு வீட்டில்இரண்டாவதாக குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையைப் பார்க்கவருபவர்கள் பெரிய குழந்தையிடம் உன் தம்பிப் பாப்பாவை நான் தூக்கிக் கொண்டுபோகிறேன் ,என்று சொன்னால் அக்குழந்தை கோபமாக நம்மைப் பார்த்து. தன் தம்பியைஅணைத்துக் கொள்ளும். ஏன்? தன் தம்பி தன்னை விட்டுப் பிரிந்துசென்றுவிடுவானே? என்ற பயம் கலந்த வருத்தம்.கேவலம் நிலம், காசு, பணத்திற்காக, நெஞ்சில் ஈவு இரக்கமின்றி, அதே தம்பியை இழக்கத் தயாராகிறார்கள். சகோதர, சகோதரிகளே, உங்களுக்குள்ளே எத்தனையோ பிரச்சனைகள் இருக்கலாம். அதை உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளலாம். அதைத்தவிர்த்து மூன்றாம் மனிதரை பிரச்சனை தீர்ப்பதற்கு அணுகுகின்றோம் என்றால்கதை கந்தல் தான். பூனைகளின் அப்பம் பிரச்சனைக்கு குரங்கு தீர்ப்பு சொன்னகதை தான். உங்கள் பிரச்சனையை தீர்க்க கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷன் என்றுஅலையாமல் உங்களிடையே பேசித் தீர்த்துக் கொள்வது உத்தமமான விஷயம்.ஹர்ஷ வர்த்தனர் காலத்தில் நாட்டு நலத்திற்காக கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல்' என்ற சட்டம் இருந்தது. கையால் பொருளைத் திருடினானா? வெட்டு கையை கண்ணால் ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தானா? சிரித்தானா? கண்ணைத் தோண்டு! பல்லைத்தட்டு! என்று கடுமையான தண்டனையுடன் நாட்டைச் செம்மையாக ஆண்டு வந்தான். ஆனால் இந்த முறையை குடும்பபாசத்திற்கு நடுவே கொண்டு வருவார்கள் என்று அம்மன்னன் நினைத்திருக்கமாட்டார்.சொத்தை மொத்தமும் விற்று கோர்ட், கேஸ் என்று அலைவேனே தவிர பைசா தரமாட்டேன் உடன்பிறப்பிற்கு என்று சொல்லும் அளவிற்கு, கொடூரம் கூடிக் கொண்டு விடுகிறது.இந்த தகராறில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெற்றோர்கள். தன் குழந்தைகள் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசிற்காக, சண்டை போடுகிறார்களே? இதற்காகவா இந்த சொத்தை அரும்பாடு பட்டு சம்பாதித்தோம் என்று ஆதங்கப்படுகின்றனர்.பூர்வீகச் சொத்தோ, உங்களுக்கு சேரவேண்டிய சொத்துக்களோ ,ஏமாற்றப்பட்டு அநியாயமாக உங்கள் கைவிட்டுச் சென்றால், உங்கள் வாரிசுகளுக்கு எந்த விதத்திலாவது வந்து சேரும் என்பதில் சந்தேகமில்லை. யாருக்கு சொத்துக்கள் சேர வேண்டுமோ, அவர்களைச் சென்றடையும். சொத்துக்களுக்கு உண்மையான எஜமானரிடம் போய்ச் சேர வேண்டும் என்ற பாசம் இருக்குமாம், இது கதையல்ல நிஜம். இரண்டு தலை முறைக்குமுந்தியவர்கள் இதை அடிக்கடி கூறுவார்கள்.இந்த அற்பகுணத்தை விட்டொழித்து அன்பு, அன்பு என்று அனைத்தையும் மன்னித்து, மறந்து, விட்டுக் கொடுத்து, "அன்பே பிரதானம், சகோதர அன்பே பிரதானம்" என்ற நல்லெண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடரலாம். 

Aug 01, 2025

ஒன்றே குலம் ஒருவனே தேவன் .

நாம் எந்த மண்ணில் பிறக்கிறோமோ ,அந்த சூழ்நிலைக்கும், பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு நடத்தும் மதத்துடனும், கலாச்சாரத்துடனும் ஒன்றுபட்டு ஏற்றுக்கொண்டு வாழ்கின்றோம்."நாம் நம்முடைய பண்பு, கலாச்சாரங்கள், உணவுப்பழக்கங்கள் தான் மிக உயர்ந்தது என்றும், சரியானது என்றும் நினைக்கிறோம். இதுதான் சரி மற்ற மதங்கள் மற்றவர்களுடைய கருத்துக்கள் இவற்றை ஏளனமாகவும், அலட்சியமாகவும் எடைபோடுகின்றோம். இதிலிருந்தே தெரிகின்றது. அவரவர்களுடைய மதங்களைப் பற்றி தெளிவாகத் தெரியாமலேயே அலட்சியப்படுத்துகிறோம் என்று.எல்லோரும் ஒன்றுதான். அவர்களுடைய சௌகரியப்படி கோவில், மாஸ்க், சர்ச், புத்த, ஜைன போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவது அவர்களுடைய சொந்த விஷயம். அதில் தலையிடுவதில் நமக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது. கலாச்சாரம், உணவு, உடை விஷயத்தில் நம்மைப் போலவே இருக்க வேண்டும் என்று சொல்வதும் சரியாக இருக்காது. நாம் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்தான். நமக்கு ஒரே தெய்வம் தான். அவரவர்களுடைய சூழ்நிலைக்கும் மனநிலைக்கும் ஏற்ப வெவ்வேறு விதங்களில் கடவுளை வழிபடுகின்றனர்.  எந்த முறையில் வழிபாடு செய்தாலும் கடைசியில் நாடுவது, நம்முடைய வயிற்றுப் பசியையும், நம்மையும் காப்பாற்றும் நமக்கும் அப்பாற்பட்ட ஒரு தெய்வசக்தியைத் தான்.ஏரியின் அருகே உள்ளவர்கள் மீனை சைவ உணவாக ஏற்றுக்கொள்கின்றனர். தைவான் நாட்டுக்காரர்கள், சீனர்கள் கடல் பாசத்தையும், பாம்பையும் சுவைபட சாப்பிடுவார்கள். நமக்கு முகம் கோணலாகிறது என்றால் ,அவர்கள் நம்முடைய சாப்பாட்டைக் கண்டு முகத்தை சுழித்துக் கொள்கின்றனர்.பாய்வீட்டுப் பிரியாணி, ஐயர்வீட்டு வெண்பொங்கல், உழவர் வீட்டுக் கூழ், டேவிட் பேக்கரி கேக், செட்டிநாடு வெள்ளையப்பம் இவற்றை சாப்பிடும்பொழுது நம்முடைய நாக்கு ஜாதி, மதம் பார்த்ததுண்டா? வித்தியாசங்களால் பார்ப்பது நம் மனம் தானே !.அவரவர்களுடைய வேலையைச் செய்து  கொண்டு, நமக்கு நம்முடையது, சரியானது, அவர்களுக்கு அவர்களுடையது சரியானது என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்தால் ஜாதிச் சண்டை எங்கே? மதக் கலவரம் எங்கே?நம்மாளுப்பா! என்று அனைவரையும் நினைப்பதே பரந்த மனப்பான்மை. மனிதனுக்கு மனிதன் வேற்றுமை பாராட்டாமல் உதவுவது அன்பானதொரு சமுதாயத்தை உருவாக்கும்.குணா பாஸ்கர் ராஜா, 

Jul 01, 2025

சின்ன விஷயம் .

 சின்னக் குழந்தைகள் சண்டை போடுகின்றனர். ரஜினி, ஜாக்கி, செராப் ஸ்டைலில் சண்டை போடுகிறார்கள். ரசிக்கின்றனர், பல பெரியவர்கள், 'சண்டை போடுகிறான் பாரு', 'சூப்பரா போடுகிறான்' என்று ரசித்து சந்தோஷப் படுகின்றனர். பெற்றோர்கள் ஊக்குவித்ததால் அக்குழந்தை மனதில் பயமின்மையால் அதே சண்டையை பள்ளியில் பெஞ்ச் மீது தாவிக் குதித்து தன் மண்டையை உடைத்துக் கொண்டு 'கோமா' நிலையடைந்து படுக்கையில் இருக்கிறான். சின்ன விஷயந்தானே என்று அலட்சியப் படுத்தியதின் பின் விளைவு எப்படி இருக்குய்யா! காலில் துருப்பிடித்த இரும்புக் கம்பிகுத்திவிட்டது. சின்ன காயம் தானே போகட்டும். துடைச்சி மண்ணை தெளித்து ஒட்டிக்கொள் என்று விட்டு விடுகின்றனர். அந்தக் குழந்தையின் காலில் புரை ஏறி விட்டது. தாங்க முடியாத வலியுடன் டாக்டரிடம் செல்கின்றனர். டாக்டர் பார்க்கிறார். ஏய்யா! நீ படிச்சவன் தானே? புண் வந்து 2 மாசமாக இருக்கு இப்போ சொல்றியே! முன்னமே வர வேண்டியது தானே! இன்னும் ஒரு வாரம் ஆகியிருந்தால் காலையே எடுக்க வேண்டியிருக்கும். 'இப்பவாவது வந்து தொலைஞ்சியே' என்று ஏசும் டாக்டர்களைப் பார்த்திருக்கிறோம். சின்ன விஷயம் தானே என்று அலட்சியப் படுத்தியதின் பின் விளைவுகளைப் பார்த்தீங்களா? எப்பேற்பட்ட விபத்தினைக் கொண்டு வருகிறது. வேறு சில சின்ன விஷயங்கள் எத்தனை நன்மைகளை உண்டாக்குகிறது என்று பார்க்கலாமா? ஆலமரவிதை சின்னதாக ரவை சைஸ்ஸீக்குத் தான் இருக்கும். அதை ஊன்றி வைத்தால் மெதுவாக குச்சி மாதிரி வளர்ந்து சின்ன கிளைவிட்டு அதிலிருந்து மற்றொரு கிளைவிட்டு அப்படி, இப்படி வளர்ந்து விழுதுகளுடன் கூடிய மரமாக மாறி கம்பீரமாக நிற்கிறது. அப்பொழுது கொஞ்சம் சிந்தித்தோமானால் அந்த இத்துணூண்டு விதையை விதைத்து தண்ணீர் விட்டதின் பின்விளைவைப் பார்த்தால் ரெம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். அம்மரங்கள் பறவைகளின் சரணாலயமாகவும், குரங்குகளின் இருப்பிடமாகவும் திகழும். அதைவிட ஒருபடி மேல் சென்று கல்யாணச் சமையலும், கல்யாணமும் அம்மர நிழலில் அமோகமாக நடைபெறுவதை நாம் கண்கூடாக கிராமங்களில் பார்க்கிறோம். அந்தச் சின்ன விதை எத்தனை - பேருக்கு இருப்பிடமாகவும், நிழல் தருவதாகவும் இருக்கிறது. ஒரு பெரியவர் வெளியூருக்குச் செல்ல எந்த பஸ்ஸில் ஏறுவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் 26 வயது மதிக்கத்தக்க வாலிபன் அப்பெரியவரிடம் ஐயா எங்கே போகணும் என்று கேட்டு, அவர் செல்ல வேண்டிய பஸ்ஸில் ஏற்றி பஸ்ஸில் உட்கார வைத்து விட்டு வெளியில் செல்கிறான். அந்த 10 நிமிட உதவி அப்பெரியவருக்கு எவ்வளவோ சந்தோஷத்தைக் - கொடுத்து 'மஹாராசா' 'நீ நல்லாயிருக்கணும்' என்று வாழ்த்துகிறார். அந்தச் சின்ன உதவி (தர்மம்) சொர்க்கத்தை விட மேலானதாகிறது. நன்றாகப் படிக்கும் ஊமைப் பையனுக்கு பெரிய படிப்பு படிப்பதற்கு வசதியில்லை. யாரிடம் கேட்பது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான். ஒருவர் தன்னால் முடியாது என்று தெரிந்தும் தனக்குத் தெரிந்த தனவான்களிடம் எடுத்துரைத்து அக்குழந்தை மேலும் படிப்பைத் தொடர்வதற்கான பண உதவியைச் சேர்த்துக் கொடுக்கிறார். தன்னிடம் இல்லை. இன்னொருத்தரிடம் சொல்வது சின்ன விஷயம் தான். அதனுடைய பின் விளைவு, அச்சிறுவனுக்கு மிகப் பெரிய கல்வி செல்வம் கிடைப்பதற்கு முக்கிய காரண கர்த்தாவாகிறார்.சின்ன விஷயம் தானே என்று அலட்சியப் படுத்தாமல் கவனித்துச் செய்யலாமே!  இதைப்படிப்பது சின்ன விஷயம் தான். ஆனால் எத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கிறது இல்லையா! 

1 2 3 4

AD's



More News