சிவபெருமானை வழிபட்டு சிவலிங்கம் ஒன்றைப் பெற்றான் ராவணன். அதை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சிறுவனாக வந்த விநாயகர் தடுத்து திருக்கோகர்ணம் என்னும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார். கர்நாடகாவிலுள்ள இத்தல சிவன் மகாபலம் பொருந்தியவர் என்பதால் 'மகாபல நாதர்' எனப் பெயர் பெற்றார். இவருக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். குருக்கள் மந்திரம் மட்டும் சொல்லுவார். பூக்களால் அர்ச்சனையைநாம் செய்யலாம். சுவாமியின் திருமேனி பூவின் இதழ் போல நீண்டும், லிங்க பாணம் இல்லாமல் துளையாக இருக்கும். அதற்குள் ராவணன் கொண்டு வந்த ஆத்ம லிங்கம் உள்ளது. ஆறடி உயரம் கொண்ட இதனை 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகத்தின் போது மட்டும் தரிசிக்கலாம். சிறுவனாக வந்த விநாயகருக்கும் இங்கு கோயில் உள்ளது.
ஒரு பௌர்ணமி நாட்களில் மண் அகல் விளக்கை வாங்கி நல்லெண்ணெய் ஊற்றி குல தெய்வத்தை நினைத்து அந்த எண்ணெயில் ஒரு சொட்டு தேன், 3 மிளகு, 2 சிட்டிகை மஞ்சள் தூளை கலந்து, பஞ்சு திரி போட்டு குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். குலதெய்வத்திற்கு இனிமையான தேன் கலந்த, மங்களகரமான மஞ்சள் கலந்த, கரும் மூலிகையான மிளகு சேர்த்து தீபம் ஏற்றும் போது, நம்முடைய வீட்டில் தடைப்பட்டு வந்த மங்களகரமான காரியங்கள் நடக்கும்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சன்னிதியில் அரியும் சிவனும் இணைந்து நிற்கும் கோலம் வேறு எங்கும் பார்க்க முடியாத காட்சியாகும்.சிவன் அபிஷேகப் பிரியர், விஷ்ணு அலங்காரப் பிரியர். இருவரும் ஓருடலாய் இருப்பதால் சங்கரநாராய்ணருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது.
திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்தில் வைகாசி பௌர்ணமி, தை அமாவாசை நவராத்திரியின் கடைசி நாளான விஜய தசமி நாளில் நெய்குள தரிசன உற்சவம் நடைபெறும் இந்நாட்களில் அம்பாள் சன்னதியின் முன்பாக 15 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு வாழை இலைகளை பரப்பி, சுற்றிலும் தென்னமட்டைகளை வைத்து, தடுப்பு அமைத்து விடுவர். பதினைந்து அடிநீள பகுதி, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதல் பகுதியில் சர்க்கரைப் பொங்கல்,இரண்டாம் பகுதியில் புளியோதரை, மூன்றாம் பகுதியில் தயிர் சாதம் என நிரப்பப்படும் முதல் பகுதியான சர்க்கரைப் பொங்கலின் நடுவே பள்ளம் அமைத்து, அதில் உருக்கிய நெய் ஊற்றி குளம் போல் அமைத்து அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு திரையிடப்படும் அலங்காரங்கள் முடிந்து திரை விலக்கப்படும் போது சர்வ அலங்காரத்தில் அம்பாளின் திருமுகம் அந்த நெய்க்குளத்தில் தெரியும் இதுவே நெய்குள் தரிசனம் இந்த நெய்குள் தரிசனம் காண்பவருக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை.
திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தாடிக்கொம்பு திருத்தலம். இங்கு சவுந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.மண்டுக மகரிஷி தனது சாபம் அகல தவம் செய்த திருத்தலம் இதுவாகும். இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன.திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகம் செய்தும். தேங்காய். நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நைவேத்தியத்தை படைத்தும், ஏலக்காய் மாலை அணிவித்தும் வழிபடுவது. சிறப்பான பலனைத் தரும். சரஸ்வதி பூஜையன்று இத்தல சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பூஜை அறையில் விளக்குபிரம்ம முகூர்த்த வேளையில், கை, கால்களை கழுவி விட்டு, பூஜை அறைக்குள் வலது காலை எடுத்து வைத்து செல்ல வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி, ஊதுபத்தி மட்டும் ஏற்றி வைத்து விட்டு வந்து விட்டால் போதும். அந்த வீட்டிற்கு மகாலட்சுமி வந்து விடுவாள். எந்த ஒரு வீட்டில் பிரம்ம முகூர்த்த வேளையில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டிற்கு மகாலட்சுமி வருவாள். அதோடு மகாலட்சுமிக்கு விருப்பமான ஊதுபத்தி, பச்சை கற்பூரம் மணம், வெற்றிலை பாக்கு அங்கு இருந்தால் மன மகிழ்ச்சியுடன் வந்து, தன்னுடைய பூரண அருளை வழங்கி, இங்கேயே இருந்து விட வேண்டும் என மகாலட்சுமி விரும்புவாள் . சமையல் அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு, வீட்டின் சமையல் அறையை சுத்தம் செய்து, அடுப்பை சுத்தமாக வைக்க வேண்டும். அடுப்பு வைத்திருக்கும் மேடையில் சிறிய கோலமிட்டு விட்டு செல்லுங்கள். காலையில் எழுந்து வந்ததும், அடுப்பை தொட்டு வணங்கி விட்டு சமையல் வேலைகளை துவங்குங்கள். இப்படி தினமும் செய்பவர்களை மகாலட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். எந்த விட்டில் சமையலறை சுத்தமாக உள்ளதோ அந்த வீட்டில் மகாலட்சுமியும், அன்னபூரணியும் மகிழ்ச்சியாக வந்து தங்குவார்கள். அந்த வீட்டில் குறைவில்லாத அரிசி, தானியங்கள் பெருகிக் கொண்டே இருக்க அருள வேண்டும் என அன்னபூரணியிடம் மகாலட்சுமியே சொல்லுவாளாம்.
புரட்டாசி மாதம். கன்னிராசியின் அதிபதி புதன் பகவான். புதன் பகவான் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதனால்தான் புரட்டாசி மாதம் பெருமாளை வழிப்படுவது மிக சிறந்தது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிப்பட்டால், அனைத்து விதமான கஷ்டங்கள், துன்பங்களில் இருந்து விடுபட்டு வளமான வாழ்வைப் பெறலாம் என்பது நம்பிக்கை. வெங்கடேச பெருமாள் திருப்பதி திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தான். அம்பிகைக்கு உரித்தான நவராத்திரியும் புரட்டாசியிலேதான் வரும்.
நவம் என்றால், ஒன்பது என்று பொருள். ஒன்பது இரவுகள் அம்பிகையை,பல வடிவங்களில் பூஜை செய்து, அவளின் அருளைப் பெற்று, 10ம் நாள் வெற்றித் திருநாளாக அதாவது, விஜயதசமியாக கொண்டாடுவர். புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் எமதர்மனுடைய கோரைப் பற்கள் எனவும், ஜீவ ராசிகள் அவற்றில் கடிபடாமல் இருக்க, நவராத்திரி பூஜையைமேற்கொள்ள வேண்டும் என்று, 'அக்கினி புராணம்' கூறுகிறது.முதலில், பார்வதி தேவியாக மூன்று நாட்களும், லட்சுமி தேவியாக மூன்றுநாட்களும், சரஸ்வதி தேவியாக, மூன்று நாட்களும் வழிபட்டு, பத்தாம் நாள். அனைத்து அம்சங்களும் பொருந்திய மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகின்றனர்.பணி நிமித்தமாக, நவராத்திரி பூஜையை செய்ய முடியாத பெண்கள், ஒன்பது நாட்களில் கடைசியாக வரும், சப்தமி, அஷ்டமி, நவமி நாட்களில் பூஜை செய்து, பூரண நற்பலன்களைப் பெறலாம்.இதுவும் முடியாத செயல் என்றால், நவமி அன்று ஒருநாள், சரஸ்வதி பூஜையுடன் வழிபாடு செய்து விடலாம். இப்படிச் செய்வதால் வாழ்வில் தன வளமும், தேவி தரிசனமும் கிடைக்கும்.
சூரியன் -உடல் ஆரோகியத்தை வழங்கும். சந்திரன் -புகழ் கீர்த்தியை கொடுக்கும். செவ்வாய் -தைரியத்தையும் தன்னம்பிக்கையும் தரும். புதன் -அறிவு வளத்தை பெருக்கும். குரு -மதிப்பையும் மரியாதையும் பெருகும். சுக்ரன் -அழகையும் ஆற்றல் மிகுந்த பேச்சையும் தரும். சனி -ரோகத்தைத் தவிர்க்கும் இழப்பை ஈடுசெய்யும். ராகு- பயத்தை போக்கும். கேது -பாரம்பரியத்தை வளர்க்கும்.
ஆலய கொடி மரத்தின் அடியில் சாஷ்டாங்கமாக வழிபட்டு கொடி மரத்தின் அடியில் சற்று அமர கடன், திருமணத் தடை, புத்திர பாக்கியம், உடல் நலம் பாதிப்பு, பகை, வழக்குகள், போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெறலாம்.கொடி மரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.