" செழுமை கருவூலம் - சீமைக் கருவேலமில்லா விருதுநகர்" திட்டத்தின் கீழ் பெருந்திரள் சீமைக் கருவேல மரங்கள் (Mass eradication of Prosopis juliflora) அகற்றும் பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செழுமை கருவூலம் - சீமைக் கருவேலமில்லா விருதுநகர் திட்டத்தின் கீழ் பெருந்திரள் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும்(Mass eradication of Prosopis juliflora) பணிகளை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் (15.07.2026) தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
சீமைக் கருவேலம் (Prosopis juliflora) என்பது வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனமாகும். இதன் கட்டுப்பாடற்ற பரவல் காரணமாக பூர்வீக தாவர இனங்கள் அழிவடைவதுடன், உயிரினப் பன்முகத்தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும், நிலத்தின் இயற்கை வளம் மற்றும் உற்பத்தித்திறன் குறைவதோடு, மேய்ச்சல் நிலங்கள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதுடன், நில மீட்பு மற்றும் பசுமை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் W.P.(MD) Nos. 16485 & 14699 of 2015 மற்றும் W.P. No. 3075 of 2017 ஆகிய வழக்குகளில் வழங்கியுள்ள உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கை (TNPIPER) ஆகியவற்றின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் "செழுமை கருவூலம் - சீமைக் கருவேலமில்லா விருதுநகர்" என்ற சிறப்பு முன்முயற்சியின் கீழ், அரசு நிலங்கள் மற்றும் வளாகங்களில் சீமைக் கருவேல மரங்களை வேருடன் முழுமையாக அகற்றி, பூர்வீக மர இனங்களை நடவு செய்து சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் பணிகளை பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இது அரசு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் நோக்கமாகும். எனவே, விவசாயிகள், நில உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்கள் மற்றும் வளாகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றி, அதற்குப் பதிலாக பூர்வீக மர இனங்களை நடவு செய்யும் பணிகள் (15.07.2026) மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.
மாவட்ட பெருந்திட்ட வளாகம், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத் துறை அலுவலக வளாகங்கள், மாவட்டத்தின் 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்வு செய்யப்பட்ட இடங்கள், 5 நகராட்சிகள் மற்றும் 1 மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட வார்டுகள், மாவட்டத்தின் 9 பேரூராட்சிகளிலும் தேர்வு செய்யப்பட்ட இடங்கள், நெடுஞ்சாலைத் துறையின் ஒவ்வொரு கோட்டத்திலும் தலா ஒரு இடம், பொதுப்பணித் துறை (நீர்வள ஆதார அமைப்பு) ஒவ்வொரு கோட்டத்திலும் தலா ஒரு நீர்நிலை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இம்முயற்சியில் பொதுமக்களும் தன்னார்வத்துடன் அனைவரும் பங்கேற்று பெருமளவு சீமைக் கருவேல மரங்களை அகற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிறப்பாக செயல்படுத்தப்படும் தனிநபர்கள், விவசாயிகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகள் மாவட்ட நிர்வாகத்தால் பாராட்டப்பட்டு, மாவட்ட அளவில் முன்மாதிரிகளாக எடுத்துக்காட்டப்படும்.
"செழுமை கருவூலம் - சீமைக் கருவேலமில்லா விருதுநகர்" என்ற உயரிய இலக்கை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ., அவர்கள் தெரிவித்தார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், வச்சக்காரப்பட்டியில் பெருந்திரள் தூய்மைப் பணிகளை(Mass Cleaning) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளார்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
மேலும், திடக்கழிவு மேலாண்மையில் மக்கும் திடக்கழிவுகளை பச்சை நிறத்தொட்டியிலும், மக்காத திடக்கழிவுகளை நீல நிறத்தொட்டியிலும், சுகாதார திடக்கழிவுகளை சிவப்பு நிறத்தொட்டியிலும், சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய திடக்கழிவுகளை கருப்பு நிறத்தொட்டியிலும் என நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்நிகழ்வில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply