இருஞ்சிறை கண்மாயில் நீர்வளத்துறையின் சார்பில், புனரமைக்கும் பணியினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், இருஞ்சிறை கண்மாயில் நீர்வளத்துறையின் சார்பில், ரூ.1.60 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள்துவக்கி வைத்தார்.நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவம் கூறுகிறது. வானத்திலிருந்து ஒரு சொட்டு நீர் கீழே விழுந்தால் தான் கீழே இருக்கக்கூடிய பயிர்களுக்கும், இந்த உலகத்தில் இருக்கக்கூடிய உயிர்களுக்கும் உயிர் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. எனவே தான் மழை நீர் என்பது நம்மை பொருத்தமட்டில் ஒரு உயிர் நீர் என்கின்ற வகையிலே நாம் எப்போதும் அதற்கு தலைவணங்கி மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று அதனை வணங்குகிறோம்.
அப்படி வானின்று வழங்கக்கூடிய இந்த பெருமழை நீரை தேக்கி வைக்கக்கூடிய இத்தகைய கண்மாய்கள், அதற்கான பாசன வசதிகள், அதற்கான வரத்துக் கால்வாய் என்று இந்த கட்டமைப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். நம்முடைய தொகுதி மேற்கே இருந்து கிழக்கே சாய்வாக இருக்கக்கூடிய காரணத்தினால் மழைச்சாரலில் இருந்து உருண்டு வரக்கூடிய பல இடங்களில் நீரைத்தேக்கி, அதற்கு பிறகு கடலிலே உபரி நீராக கலக்கக் கூடிய வகையில் இந்த நீர்பாசனம் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் நம்முடைய இருஞ்சிறை கண்மாய் நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் அமைந்திருக்ககூடிய மிகப்பெரிய கண்மாய்களிலேயே முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது போன்ற கண்மாய்க்கு அன்றைய முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் கண்மாய்களை சீரமைக்கக்கூடிய திட்டத்தின் அடிப்படையில் தூர்வாரக்கூடிய பணிகள், கரைகளை பலப்படுத்தக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு பிறகு இத்தகைய கண்மாய்களை எல்லாம் சீரமைக்க வேண்டும், புனரமைக்க வேண்டும் என்றும், வருங்கால சமுதாயத்திற்கு நாம் விட்டு செல்லக்கூடிய இயற்கையான கட்டமைப்புகளை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும், மதில்களை சீரமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான்; நம்முடைய மாவட்டத்தில்; இத்தகைய முயற்சிகளை பெரிய அளவில் எடுத்துக்கொண்டு, ஆங்காங்கே இருக்கக்கூடிய இந்த கண்மாய்களிலேயே புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலமாக நாம் இந்த பகுதியிலே அதிகமான மழை நீர் வருகின்ற பொழுது சேமித்து வைக்க முடியும் என்ற அடிப்படையில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருஞ்சிறை கிராமத்தில் உள்ள இருஞ்சிறை கண்மாய்க்கு கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அத்திகுளம் அணைக்கட்டின் இடது பிரதான கால்வாயின் மூலம் பாசன நீர் வழங்கப்பட்டு வருகிறது.இருஞ்சிறை கண்மாயினை புனரமைக்கும் பணிக்காக தமிழக சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு (Environment Management Agency of Tamilnadu Corporate Environment Responsibility Fund) நிதியின் கீழ், ரூ.1.60 கோடி மதிப்பில் இப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புனரமைக்கும் பணிகளில் கண்மாய் கரை 5120 மீட்டர் நீளத்திற்கு பலப்படுத்தும் பணிகளும், மொத்தம் 6 மடைகளில் 1 மடை மறுகட்டுமானம் மற்றும் 5 மடைகள் சீரமைக்கும் பணிகளும், கலுங்கு மறுகட்டுமானம் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் மூலம் 138 மில்லியன் கன அடி நீர்தேக்கப்பட்டு, சுமார் 509.05 ஹெக்டேர் (1258 ஏக்கர்) பாசனப்பரப்பு பயன்பெறும்.மேலும், கண்மாயின் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு, இருஞ்சிறை கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை தீர்வதுடன், இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன் கால்நடைகளின் தண்ணீர் தேவைகளும் பூர்த்தி செய்ய உறுதுணையாக இருக்கும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய நாள் இந்த பகுதிக்கு ஒரு மிக முக்கியமான ஒரு நாள். தமிழர்களுடைய அறிவின் அடையாளமாக இருக்கும் வள்ளுவர் பெருந்தகை
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்
என்று ஒரு திருக்குறளை எழுதி இருக்கிறார். அதனுடைய பொருள் நாம் நல்ல செயல்களை செய்து கொண்டே வேண்டும். அந்த நல்ல செயல்களை செய்வதற்கு என்னென்ன வகைகளில் எல்லாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ, அந்த முயற்சிகளையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.
நமது பகுதியில் அமைந்திருக்கக் கூடிய அனைத்து நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அதற்கு அரசினுடைய நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நிதி வந்தாலும், அது போதாமையாக இருக்க கூடிய சூழ்நிலையில், இன்னும் எந்தெந்த வகையில் எல்லாம் இதுபோன்ற நல்ல பணிகளுக்கு நிதிகளை பெற முடியும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி, இது குறித்து விவாதித்து, இருக்கக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் கண்டறிந்து, நிறுவனங்களினுடைய சமூக பொறுப்பு நிதி என்று தனியார் நிறுவனங்கள் தாங்கள் ஈட்டக்கூடிய லாபத்தில் இரண்டு சதவீதத்தை இது போன்ற பணிகளுக்கு செலவிட வேண்டும் என்று இருக்கக்கூடிய அத்தகைய சமூக பொறுப்பு நிதிகளையும் பெற்று நமது மாவட்டத்தில் பணிகளை மேற்கொள்வதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதையும் தாண்டி இன்னும் நிதி தேவைப்படுகின்ற போது, குறிப்பாக நமது வறட்சியான பகுதிகளில் இருக்கக்கூடிய கண்மாய்களை தூர்வார வேண்டும். இந்தப் பகுதியில் மட்டுமே ஏறத்தாழ 2 ஒன்றியங்களை சேர்த்து 300 க்கும் மேற்பட்ட சிறு, பெரிய கண்மாய்கள் இருக்கின்றன.
அதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்வதற்குரிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களிடத்தில் மேலும் வேண்டுகோளை வைத்த போது, அரசின் சார்பாக இயங்கக்கூடிய நிறுவனங்கள், அரசினுடைய நிதி நிறுவனங்கள், அரசினுடைய பல்வேறு பொதுத்துறை அமைப்புகள் போன்றவற்றில் சமூகப் பொறுப்பு நிதி இருக்குமா என்று தேடிப்பார்த்து, அப்படி ஒரு துறையில் இருந்து தான், இந்த இளஞ்சிறை கண்மாயை தூர்வாருவதற்கு ஏறக்குறைய ரூ.2 கோடி மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய பெரும் முயற்சியால் பெற்று, இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.இப்படி தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகள், அரசினுடைய நிதி பட்ஜெட் நிதியை தாண்டி ஒதுக்கப்படக்கூடிய நிதி திட்டங்களுக்கும் தாண்டி இன்னும் அதிகமாக பெற்று, இந்த பகுதியினுடைய வறட்சியை போக்க வேண்டும், இந்த பகுதியினுடைய விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை வளப்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யக்கூடியது தான் இது.
இந்த இளஞ்சிறை கண்மாய் மிக முக்கியமான நமது மாவட்டத்தினுடைய மூன்றாவது பெரிய கண்மாய். ஏறத்தாழ 138 மில்லியன் கன அடி அளவில் தண்ணீரை தேக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது. சுமார் 1300 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதியும், குடிநீர் வசதியும், நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கு இந்த கண்மாயின் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும்.இந்த பகுதியில் விவசாயத்தை வளப்படுத்துவதற்கும், அதுவும் குறிப்பாக கிருதுமால் நதியில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீரை பெறுவதற்கும், இதற்கு இடதுபுறம் இருக்கக்கூடிய கால்வாய் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் நீரை பெறுவதற்குரிய முயற்சிகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.
நீர்வளத்துறை அலுவலர்கள் விரைந்து இந்த திட்டத்தை முடிக்க வேண்டும். அதேபோன்று எடுத்திருக்கக்கூடிய அனைத்து தூர்வாரக் கூடிய பணிகள், பலப்படுத்தக் கூடிய பணிகள், மதகுகளை புரணமைக்க கூடிய பணிகள் எல்லாம் விரைந்து முடித்து, ஒரு காலத்தில் இந்த பகுதிகள் ஒரு 400 ஆண்டுகளுக்கு முன்பாக கூடுதலாக விவசாயம் நடைபெற்ற பகுதி, அவற்றை மீண்டும் கொண்டு வந்து இந்த பகுதியினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு நீர்வளத்துறை இயன்ற பணிகளை எல்லாம் செய்ய வேண்டும், விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply