25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 12, 2025

உலக மக்கள் தொகை தினம்-2025 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  (11.07.2025) மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மற்றும் விருதுநகர் குடும்ப நலச் செயலகம் சார்பில், உலக மக்கள்தொகை தினம்-2025 முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.உலக மக்கள்தொகை தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். உலக மக்கள்தொகை வளர்ச்சியைச் சுற்றியுள்ள முக்கிய பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி, உலக மக்கள் தொகை தினம்-2025 முன்னிட்டு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  செவிலியர் மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்த பேரணியில் கலந்து கொண்ட பயிற்சி செவிலியர்கள் தங்கள் கைகளில், “ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம் “, “உடலும் மனமும் பக்குவமடைந்து உறுதியாகும் வயது 21, அதுவே பெண்ணுக்கும், திருமணத்திற்கும், தாய்மையடைவதற்கும் உகந்த வயது” என்ற கருப்பொருளுடன், பெண்கள் நாட்டின் கண்கள், ஏற்போம், ஏற்போம் வாழ்க்கை வளம் பெற குடும்ப நலம் ஏற்போம் உள்ளிட்ட  விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த பேரணியானது அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள மகப்பேறு கட்டிடத்தில் தொடங்கி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது.பின்னர், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, கருத்தரங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது.  பேச்சு, கட்டுரை, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில்  வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், துணை இயக்குநர்கள் மரு.விமலா (குடும்ப நலம்), மரு.மாரியப்பன் (காசநோய்), மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.அரவிந்த்பாபு, அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 12, 2025

மல்லாங்கிணறு பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள்  (11.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு, உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் குறித்தும், 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி பாடங்கள் குறித்த கேள்விகளை கேட்டறிந்தும் ஆய்வு செய்தார்.

Jul 12, 2025

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் வருகின்ற 23.07.2025 அன்று ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது

 தமிழ்நாடு முதலமைச்சர் /  துணை முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மற்றும்  சிறுபான்மையினர் அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச அவர்கள் ஆய்வு கூட்டம் நடத்த வருகின்ற 23.07.2025 (புதன்கிழமை) அன்று விருதுநகர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளனர்.சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் 23.07.2025(புதன்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் மற்றும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.   அவ்வமயம் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரிதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரிதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 12, 2025

மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களின் மீன்பாசி குத்தகைக்கு மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

 விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள தாமரைக்குளம், இராஜபாளையம் வட்டத்திலுள்ள மருங்கூர் மற்றும் குறவன்குளம் ஆகிய 3-கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமையினை மூன்று ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in  என்ற இணையதள முகவரியில் காணலாம்.              தெளிவுரைகள் மற்றும் விவரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 114 B 27/1, வேல்ச்சாமி நகர், பி.ஆர்.சி.டிப்போ பின்புறம், விருதுநகர் 626 001 என்ற முகவரியில் இயங்கிவரும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.மேலும், 04562 - 244 707  என்ற தொலைபேசி எண்ணிலும், adfisheriesvnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 11, 2025

இராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில்   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,  I A S., அவர்கள் (09.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகள், சேவைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு, அப்பணிகள் முறையாகவும், அரசு விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, இராஜபாளையம் அய்யனார் கோவில் மலை அடிவாரத்தில்  வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சந்தித்து கலந்துரையாடி, அரசின் அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கிறதா என்பது குறித்தும்,  அவர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும்,  குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த மலைவாழ் குடும்பங்களுக்கு  மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.அதனைத்தொடர்ந்து,இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள்,சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள்,  மற்றும்பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர்,  குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்த திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளை  வழங்கினார்.பின்னர், இராஜபாளையத்தில் உள்ள  ஜெயந்த்  மலை வாழ் பழங்குடியினர் மாணவ, மாணவியர்  விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  பார்வையிட்டு, குடிநீர், சுகாதாரம், வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Jul 11, 2025

இராஜபாளையம் வட்டம், சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், முப்பெரும் விழா சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (10.07.2025) நடைபெற்றது.இவ்விழாவில் கடந்த கல்வியாண்டில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.குழந்தைகள் கல்வி கற்பதனால் அந்த குடும்பமே முன்னேற்றம் அடைகிறது. அதோடு நாம் படிக்கும் படிப்பு நமக்கு மட்டுமல்லாமல், அந்த ஊருக்கே பெருமையளிப்பதாக இருக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட  பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.மேலும் நல்ல ஒரு சமுதாயம் உருவாக அரசின் செயல்பாடுகளோடு, பொதுமக்கள் மற்றும் சமூகத்தை சார்ந்தவர்கள்; அனைவரின் ஒத்துழைப்போடு நாம் செயல்பட்டால் அது மிகப்பெரிய வளர்ச்சியை உருவாக்கும்.மாணவர்கள் கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல் பிற்காலத்தில் கற்றதின் பயனாக தங்களுடைய பெயர் நிலைத்திருக்கும் வகையில் எந்த துறையிலாவது சாதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 10, 2025

சிதம்பராபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 298 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சிதம்பராபுரம் கிராமத்தில்  (09.07.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் 298  பயனாளிகளுக்கு ரூ.27.63 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 53 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.22,68,133/- மதிப்பிலும், 7 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல்களும், 27 பயனாளிகளுக்கு புஞ்சை மற்றும் நஞ்சை பட்டா (முழுப்புலம்/உட்பிரிவு) மாறுதல்களும், 16 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களும், 38 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 37 பயனாளிகளுக்கு  சமூக பாதுகாப்பு திட்ட உழவர் அட்டைகளையும், 105 பயனாளிகளுக்கு நத்தம் நிலவரித்திட்ட தூய சிட்டாக்களையும், 5 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ.38,680/-மதிப்பில் சொட்டுநீர்ப்பாசன மானியம், பழச்செடி, காய்கறி விதை தொகுப்புகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5825 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டம் சார்பில் 5 பயனாளிகளுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.4,50,000/- மதிப்பிலும் என மொத்தம் 298 பயனாளிகளுக்கு ரூ.27.63 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது.இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு அரசுத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் நான்கு அல்லது ஐந்து கிராமங்களை இணைத்து ஒரு இடத்தில் 15.07.2025 முதல் 07.11.2025 வரை முகாம்கள் நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்பாக அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீடுகளாக சென்று மனுக்களை பெற்று வருகின்றனர். மக்கள் வழங்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து, உரிய  தீர்வுகள் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், விடியல் பயணத்திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட தகுதியானவர்கள், முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், விவசாயம் சார்ந்த குறைகள் உள்ளிட்டவைகள் குறித்து மனுக்கள் வழங்கும் பட்சத்தில்,  அரசிற்கு நேரடியாக சென்று இந்த பணிகள் அனைத்தும் விரைவாக செய்து முடிக்கப்படும்.இதுபோன்று அரசினுடைய பல்வேறு திட்டங்களில் செயல்படக்கூடியனவற்றை எல்லாம் நீங்கள் பெற்று கொள்ள வேண்டும். இதன் மூலமாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேன்மையடைய வேண்டும் என்பதற்காக தான் அரசு இத்தகைய திட்டங்களை எல்லாம் தீட்டி, நேரடியாக உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

Jul 10, 2025

கல்லூரிச் சந்தை நிகழ்ச்சி மூலம் நடைபெற்று வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை கல்லூரி மாணவியரிடம் சந்தைப்படுத்தும் நோக்குடன்  நடைபெற்று வரும் கல்லூரிச் சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட  ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  (09.07.2025) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து  பார்வையிட்டார்.  மேலும் 09.07.2025 முதல் 11.07.2025 வரை நடைபெறும்  இக்கண்காட்சியில்  விருதுநகர் மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய வெளி மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களான காட்டன் சேலைகள், சுடிதார் டாப்ஸ், சணல் நார் பொருட்கள், மர பொம்மைகள், செயற்கை ஆபரணங்கள், கிறிஸ்டல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பேன்ஸி பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றம் திண்பண்டங்கள் உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக,நகர்புர வாழ்வாதார இயக்கம்) திரு.ஜே.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கல்லூரி நிர்வாகிகள், துணைமுதல்வர், பேராசிரியர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கல்லூரி மாணவியர்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 10, 2025

கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் சிமெண்ட் மூட்டைகள் உரிய பயனாளிகளிடம் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், பயன்பெற்றவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் கேட்டறிந்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (09.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகள், சேவைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு, அப்பணிகள் முறையாகவும், அரசு விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியவள்ளிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்; முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை மூலம் கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும், மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்தும் ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆமணக்குநத்தம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறவுள்ள இடத்தினை பார்வையிட்டு, முன்னேற்பாடுகள் பணிகள் குறித்தும், அப்பகுதிகளில் வீடு வீடாக கோரிக்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.மேலும், ஆமணக்குநத்தம் ஊராட்சியில்  பணியாற்றும் தூய்மைக் காவலர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.பின்னர், பெரியநாயகிபுரம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ரூ.31.85 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகளின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, நடப்பு கல்வியாண்டில்  மாணவர்கள் சேர்க்கை, புதுமை பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.பின்னர்,  அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சேகரிப்பு கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்து, சிமெண்ட் மூட்டைகளின் இருப்பு குறித்தும், பயன்பெற்றோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சிமெண்ட் மூடைகள் பெற வருகை தந்த புதிய பணி நியமன ஆணை பெற்ற பயனாளிகளிடமும் விபரங்களை கேட்டறிந்து, உரிய பயனாளிகளிடம் சென்றடைகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உறுதி செய்தார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Jul 10, 2025

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில்  சேர்வது தொடர்பான நான்காம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 11.07.2025(வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் நடத்தப்பட உள்ளது.இந்நிகழ்வில், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரியில் சேர இயலாத மாணவர்கள் பங்கு பெறலாம். 2025-26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய  கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இக்குறைத்தீர் கூட்டத்தில்  கலந்து கொள்ளலாம்.  இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக  கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.எனவே உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 86 87 88 89 90 91 92 ... 138 139

AD's



More News