விண்ணப்பத்தாரர் பிற்படுத்தப்பட்டோர்/மிகப் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும் (சாதிச் சான்றிதழ்). குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (கிராமம்/நகர்ப்புறம் பாகுபாடின்றி (வருமானச் சான்றிதழ்). (மாநில அரசின் வருமானச் சான்றிதழ் வழங்கும் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். (அல்லது) வர்த்தமானி பதிவு பெற்ற அதிகாரியால் (Gazetted Officer) சான்றளிக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட ஆண்டு குடும்ப வருமானச் சான்றிதழ். விண்ணப்பதார் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகள். பிஎச்டி.முதுகலை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் முதுகலைப் படிப்புகளுக்கு, பொருத்தமான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் (SAT GMAT GRE அல்லது பாடநெறியில் சேருவதற்குப் பொருந்தக்கூடிய பிற தொடர்புடைய மதிப்பெண்கள் போன்றவை) மூலம் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும் (சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து சேர்க்கை / சலுகை கடிதத்தை பெற்றிருக்கவேண்டும்) (IELTS அல்லது TOEFL போன்ற முற்றிலும் மொழித் திறன் தேர்வை அடிப்படையாகக் கொண்டதல்ல) மேலும், ஒரு மாணவருக்கு அதிகபட்சக் கடன் வரம்பு ரூ.15,00,000/--க்கு உட்பட்ட பாடத்திட்டத்தின் செலவில் 85% புதுதில்லியின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலமும் மீதமுள்ள 15% அதாவது ரூ. 2.25 இலட்சம் தமிழ்நாடு அரசால் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.கடன் தொகையானது சேர்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம், புத்தகங்கள், எழுதுபொருட்கள் தேர்வு, ஆய்வகம் மற்றும் நூலகக் கட்டணம், உண்டி மற்றும் உறையுள் கட்டணங்கள் மற்றும் கடன் காலத்திற்கான காப்பிட்டு கட்டணங்கள் உள்ளடக்கியது.கல்வி நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் கடன் தொகை விடுவிக்கப்படும் (செமஸ்டர் அல்லது அரையாண்டு அடிப்படையில்). முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து கட்டணத் தவணைகள் விடுவிக்கப்படும். வயது வரம்பு 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வட்டி விகிதம் ஆண்டிற்கு 8%. ஆகும்.கடன்கள் வழங்கப்படும் பாடத்தின் வகை மற்றும் காலத்தைப் பொருட்படுத்தாமல் மாணவர்களிடமிருந்து மீளப்பெறுவதற்கான தடைக்காலம் 5 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடமிருந்து அதிகபட்சமாக மீட்கும் காலம் 10 ஆண்டுகள் ஆகும். அதாவது 5 வருட தடைகாலம் உட்பட, அதாவது கடன் வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தப்பட வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கிய பிறகு, எப்போது வேண்டுமானாலும் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். இதற்கான முன் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. விண்ணப்பப் படிவம் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வங்கி கோரும் ஆவண நகல்களுடன் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.எனவே விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் வே.வெ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் (25.09.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டுதல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகள், புத்தகங்களை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கான முக்கிய நோக்கம் “What we see and what we think, that we become” நாம் எதை காண்கிறமோ, எதை நினைக்கிறமோ அதுவாக மாறுகிறோம் என்ற தாரக மந்திரம் உள்ளது. அதைப்போல, போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களில் பலர் கிராமப் பகுதியைச் சேர்ந்த போட்டியாளர்களே. இவர்களில் பலருக்கு நம்மால் முடியுமா என்ற உள்ளுணர்வால் பின்னடைவு ஏற்படுகிறது. மாணவர்கள் தங்கள் கல்லூரி காலங்களிலேயே கிடைக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகலாம். என்ன படிக்கலாம், தங்களின் ஆர்வத்திற்கேற்றவாறு எதிர்காலத்தில் தங்களது கல்வியினை எவ்வாறு மேம்படுத்தி கொள்ளலாம் என்று சிந்தித்து செயல்பட வேண்டும். போட்டித் தேர்வுகள் என்பது தனி உலகம் அல்ல. அன்றாடம் தங்கள் பாடத்திட்டத்தினை எவ்வாறு படிக்கலாம் என்றும், மாணவர்கள் தங்களின் பாடத்திட்டத்தை கூர்ந்தாய்வு செய்து, நடைமுறைக்கேற்றவாறு சிந்தித்து செயல்பட்டாலும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.எதிர்காலத்தில் நினைத்ததை அடைவதற்கு மாணவர்கள் தங்களின் கல்லூரி காலங்களிலேயே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பட்சத்தில், நேரத்தை வீணடிக்காமல் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். வெற்றிக்கதைகள் கேட்பது, செய்தித்தாள்களில் குறிப்புகளை எவ்வாறு தயார் செய்வது என்பதை பற்றி சிந்தித்து செயலாற்றும் பட்சத்தில் வெற்றி பெறலாம். இவையனத்தும், மாணவர்களின் இடைவிடாத முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் மட்டுமே சாத்தியம். இவற்றையெல்லாம் நிறைவு செய்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், வெற்றி நிச்சயம் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்தி தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தற்பொழுதிலிருந்தே தயாராகி போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர்(ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், திருநெல்வேலி) திரு.கா.ஹரிபாஸ்கர் அவர்கள் வேலை வாய்ப்பிற்கு வளர்த்துக் கொள்ள கூடிய திறன்கள் குறித்தும், உதவி இயக்குநர்(தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், மதுரை) திரு.அ.கலைச்செல்வம் அவர்கள் போட்டித் தேர்வுகள் குறித்தும், பொது மேலாளர்(மாவட்ட தொழில் மையம், விருதுநகர்) திரு.தி.கண்ணன் அவர்கள் சுய வேலைவாய்ப்பு குறித்தும் சிறப்புரையாற்றினார்.
விருதுநகர் தெப்பம் பஜாரில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் (26.09.2025) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ம் ஆண்டு துவக்கப்பட்டு தொடர்ந்து 90 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சிபுரம், செட்டிநாடு, சேலம், பரமக்குடி, திண்டுக்கல், அருப்புக்கோட்டை பருத்தி சேலைகள் மற்றும் கோவை கோரா பருத்தி சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக பருத்தி சட்டைகள், லினன்,பருத்தி சட்டைகள், லுங்கிகள், வேட்டிகள், துண்டுகள், மகளிருக்கான சுடிதார்இரகங்கள்,நைட்டிகள்மற்றும்குர்தீஸ்கள்கண்ணைக்கவரும்வண்ணங்களில்வாடிக்கையாளர்களுக்குவிற்பனைக்காகவைக்கப்பட்டுள்ளன. கைத்தறி ரகங்களின்விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான விருதுநகர் விற்பனை நிலையத்திற்கு ரூ.60 இலட்சமும், சிவகாசி விற்பனை நிலையத்திற்கு ரூ.55 இலட்சமும் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் விற்பனை நிலையத்திற்கு ரூ.40 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.155 இலட்சம் தீபாவளி விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.43 இலட்சம் ஆகும்.கோ ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் வாடிக்கையாளர்கள் வாங்கி பயன் பெறலாம். கோ ஆப்டெக்ஸின் மாதாந்திர சேமிப்பு திட்டத்திலும் வாடிக்கையாளர்கள் சேர்ந்து பயன்பெறுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் திரு.பி.ஸ்டாலின், விற்பனை நிலைய மேலாளர் திருமதி ஆர்.கீதா, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், டி.கடமங்குளம் ஊராட்சிகளில் (25.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அதன்படி, காரியாபட்டி வட்டம், டி.கடமங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, இம்முகாமில் பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினையும், விவசாயிகளுக்கு விதைப்பைகளையும், உணவு மற்றும் ஊட்டசத்து இயக்கத்தின் கீழ் தார்பாய்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் 2025-26-ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் (CMTC) காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணியாளராக பணி அமர்வு செய்திட தகுதியான சுய உதவிக்குழு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் 29.09.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். சமுதாய வளப் பயிற்றுநர்களுக்கான கீழ்கண்ட தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்: குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தது இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை, பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது. சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும். கைபேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும். சமுதாய வளப் பயிற்றுநராக விண்ணப்பிக்கும் போது சுய உதவிக் குழு சார்ந்த வாராக்கடன் நிலை இல்லாது இருக்க வேண்டும்.சமுதாய வளப் பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பு இருத்தல் வேண்டும். அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவராகவும், தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ (அ) பகுதி நேரமாகவோ பணிபுரிபராகவோ இருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வளப்பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி, அத்தீர்மான நகலை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். சமுதாய வளப் பயிற்றுநர் மாதிரி விண்ணப்படிவம் தொடர்புடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.மேலும், பயிற்சி நடைபெறும் போது மட்டும் பயிற்சி நடத்தியதற்கான மதிப்பூதியம் வழங்கப்படும். மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படாது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. ஒப்பந்த பணியாளராக பணியமர்வு செய்வதால் பணி நிரந்தரம் குறித்து உரிமை கோர முடியாது. மேலும் தொடர்புக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக தொலைபேசி எண் 04562-252036, உதவித் திட்ட அலுவலர் (CB), அலைபேசி எண் : 8778130177 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
2026 - ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT- ஆல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) தேர்வு 04.11.2025 அன்றும் மற்றும் செய்முறை (Practical) தேர்வு 05.11.2025 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத 22.09.2025 முதல் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 08.10.2025. அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு 2025ம் ஆண்டுக்கானது டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், இத்துறையில் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்கள் மற்றும் தேசிய புனரமைப்பு திட்டத்தின்கீழ் இத்துறையில் நடத்தப்பட்ட மின்சாரப்பணியாளர்கள் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மின் வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், அதற்கான சான்றிதழ், பணியாற்றிய உரிய நிறுவனத்திடம் அல்லது மின் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் இருந்து முன் அனுபவச் சான்று பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. இத்தேர்விற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்புகள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய இணைப்புகளுடன் ரூ.200/--க்கான தேர்வுக்கட்டணம் செலுத்திய அசல் செலானுடன் உரிய தேர்வு மையத்தினை தேர்வு செய்து அத்தேர்வு மையத்திற்கு 17.10.2025 அன்றைய தேதிக்குள் கிடைக்கும் வகையில் சமர்ப்பிக்கவும். மேலும், விபரங்களுக்கு அலுவலக வேலைநாட்களில் பின்வரும் தொலைபேசி எண்களில் 04562-252655/294382. தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றன. பொது மக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தினை புகுத்திடும் வண்ணம் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் – 2025, விருதுநகர் மாவட்டத்தில் வரும் 27.09.2025 அன்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள மொட்டைப்பத்தான் கண்மாய் இறக்கம் என்ற இடத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டிற்கான அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் 13 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 15 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 10 கி.மீ என்ற பிரிவிலும், 15 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 20 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 15 கி.மீ என்ற பிரிவிலும், 17 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 20 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 15 கி.மீ என்ற பிரிவிலும் நடத்தப்படவுள்ளன. அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பெறுவோர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பின்வரும் விவரப்படி வழங்கப்படவுள்ளன. முதல் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.5,000/, இரண்டாம் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.3,000/- மூன்றாம் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.2,000/- மற்றும் 4 முதல் 10வது இடங்களை வருபவர்களில் ஒரு நபருக்கு ரூ.250/- என பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்க தகுதியுள்ள பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் கார்டு மற்றும் வயதுச் சான்றிதழில் தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று 27.09.2025 அன்று காலை 06.00 மணிக்கு சமர்ப்பித்திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள். வெற்றி மாணவ, மாணவிகள் தங்களது வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் கார்டு நகலினை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையானது வங்கிப் பரிவர்த்தனை வழியாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எனவே, மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள்-2025 ல் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டரங்கில் 26.09.2025 அன்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்குள் பதிவு செய்திடுமாறும், மேலும், தொடர்புக்கு 04562 225947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குல்லூர் சந்தை ஊராட்சியில் (25.09.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் எஸ்.எப்.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளியில் (24.09.2025) பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை சார்பில், விருதுநகர் சமூக வனக்கோட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும் பணிகளை துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் தற்பொழுதுள்ள காடுகள் மற்றும் மரங்களின் புவியியல் பரப்பை 23.8% லிருந்து 33% -ஆக அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு பசுமை இயக்கம் என்ற மாபெரும் திட்டத்தினை, 24.09.2022 அன்று தொடங்கி வைத்தார். அதனடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்-24 ஆம் தேதியினை பசுமை இயக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல், வன உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தல், விவசாய நிலங்களில் மரங்கள் வளர்ப்தை ஊக்குவித்தல், கல்வி நிறுவனங்கள், கோவில்கள், மைதானங்கள், புனித ஸ்தலங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், கண்மாய் பகுதிகள் மற்றும் உள்ளுர் சமூகங்களை மேம்படுத்தும் பொருட்டு வேலை வாய்ப்புகள் வழங்குதல் போன்றவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் விவசாயிகளின் வருவாயினை அதிகரிக்கவும் வழிவகைகள் செய்து வருகிறது. அதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு, இந்தாண்டிற்கான கருப்பொருளாக “நாவல் மரத்தை கொண்டாடுவோம்” என்ற தலைப்பின் கீழ் நாவல் மரங்கள் (சிசிஜியம் குமினி) தேர்வு செய்யப்பட்டு சுமார் 50 நாவல் மரக்கன்றுகள் விருதுநகர் எஸ்.எப்.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளியில் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1000 வகையான மரக்கன்றுகள் இன்று நடப்பட்டுள்ளன.இந்தாண்டில் வேளாண்துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட துறைகளின் சார்பில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 இலட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்ச்சி என்பது ஒரு அடையாளமான நிகழ்ச்சி. இதுபோன்று நிறைய பெருமளவு மரக்கன்றுகள் நடுவற்கு அனைவரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.மேலும், பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு “நாவல் மரத்தை கொண்டாடுவோம்” என்ற தலைப்பின் கீழ் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அ.அம்சவேணி, வட்டாட்சியர், விருதுநகர் சமூக வனக் கோட்ட அலுவலர்கள், ஆலமரம் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.