திருநெல்வேலி மண்டல அளவிலான, Trade Apprenticeship Engagement Fair (TAEF) 28.01.2025 செவ்வாய்கிழமை அன்று அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், திருநெல்வேலி, பேட்டையில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.1. மத்திய அரசு தொழிற்நிறுவனங்கள்2. மாநில அரசு தொழிற்நிறுவனங்கள்3. முன்னணி தனியார் தொழிற் நிறுவனங்கள்மேற்கண்ட தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும் அரசுஃதனியார் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளான 1.Fitter 2) Machinist 3) MMV 4) Refrigeration Air Condition Technician 5)Electrician 6)Turner 7)Welder 8)Wireman 9)Surveyor 10) ஊழிய மற்றும் இதர பிரிவு தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இந்நாள்வரை தொழிற்பழகுநர் பயிற்சியில் பயிற்சி பெறாதவர்கள் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இத்தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.8000/-முதல் ரூ.15000/- வரை தொழிற்நிறுவன தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது.மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate –NAC) மற்றும் முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பும் (Placement) வழங்கப்படுகிறது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயிற்சியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S., அவர்கள் (27.01.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு இலக்கை அடைவதற்கு வாழ்க்கையில் மிக அடிப்படை என்பது நமக்கு நாமே துன்பத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ்வது, நாம் மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தாமல் வாழ்வது இது இரண்டு தத்துவங்களை எல்லா இலக்கியத்திலும் பார்க்க இயலும். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது சங்க இலக்கியத்தில் உள்ள புறநானூற்று வரிகள் மற்றும் மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்ற திருக்குறள் வரிகள் இந்த இரண்டும்; தான் இளையோருக்கான அறிவுரையை மையப்படுத்தி இருக்கிறது.ஏனென்றால் நமக்கு வரக்கூடிய நன்மைக்கும் தீமைக்கும் ஒருபோதும் பிறர் காரணமாக இருக்கவே முடிவதில்லை. அடுத்தவர்களுக்கு துன்பம் தராமல் நியாயமாக சரியாக நடக்க வேண்டும் என்று ஒருவர் தீர்மானிப்பது தான் உலகில் மிகப்பெரிய அறம்.முதலாவதாக மாணவர்களில் பலர் முழுமையாக முயற்சி செய்வதில்லை. வாழ்க்கையின் போட்டிகளில் அறைகுறை முயற்சிகளுக்கு இடமே இருப்பதில்லை. என்னால் முடிந்தவரை முயற்சிப்பது என்பது ஒன்று. எவ்வளவு தேவையோ அவ்வளவு முயற்சிப்பது என்பது தான் வெற்றிக்கானது.இரண்டாவதாக கவனச்சிதறல். நீங்கள் வரலாற்றை படித்துப் பார்த்தால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கவனச்சிதறல் என்பது காலங்காலமாக இருக்கிறது. நாம் ஒன்றே செய்ய முடியாமல் இருப்பதற்கு 100 சரியான காரணங்களை சொல்ல முடியும். ஆனால், ஒன்றை செய்து முடிப்பதற்கு நம்முடைய ஆர்வம் ஒன்று மட்டுமே முக்கியம். கவன சிதறல்கள் தவிர்க்க முடியாதது. நம்முடைய கவன சிதறல்களை வேறு ஒரு கவன திருப்புதலால் தான் மாற்ற முடியும்.மூன்றாவது நாம் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் இந்த பூமியில் இன்னும் 50 ஆண்டுகாலம் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட வேண்டும். கல்லூரியில் படிக்கக்கூடிய மூன்று ஆண்டுகளில் உங்களுடைய பாடத்திட்டத்தை படித்து, செயல்முறை தேர்வுகள் எழுதி மதிப்பெண்களை பெற்று பட்டம் பெறக்கூடிய இந்து கல்வி என்பது 10 விழுக்காடு மட்டுமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்கிறது. மற்ற 90 விழுக்காடு உங்கள் அன்றாட நிகழ்வுகளை நீங்கள் பழகக்கூடிய மனிதர்களை, நீ எதிர்கொள்ளக்கூடிய சமுதாயத்தை நீங்கள் எவ்வாறெல்லாம் கற்றுக்கொண்டு செயல்படுகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.நீங்கள் அனைவரும் எல்லாவற்றிலும் கவனத்தோடு இருக்க வேண்டும் ஒவ்வொரு தவறுகளில் இருந்தும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். தவறை தைரியமாக ஒத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும். நான் தவறு செய்து விட்டேன் என்பது ஒத்துக் கொள்வதற்கு மிகப்பெரிய தைரியமும், அறிவும் வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் இன்று உலகில் அதிகமாக கிடைக்கிறது. உங்களுடைய கல்வி வாய்ப்புகளாக இருக்கட்டும், வேலை வாய்ப்புகளாக இருக்கட்டும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்கென்று அதிகமான சட்ட வாய்ப்புகள் இருக்கிறது.தங்களுக்கான விழிப்புணர்வை அடுத்தவர்களின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள கூடியவர்களே மிகப்பெரிய துன்பம் இல்லாத வெற்றியை அடையலாம். அடுத்தவர்களின் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொண்டு அதற்கான வாழ்க்கை பாடத்தை பெற்று முன்னேறக்கூடியது துன்பம் இல்லாமல் முன்னேறுவதற்கான வழி.பெரும்பாலான குடும்பங்கள் அறியாமையில் இருந்து வருகிறது. அந்த அறியாமையை போக்குவதற்குரியது தான். நீங்கள் படித்து பட்டம் பெற்று, சிறந்த மதிப்பெண்களை பெற்று பெறக்கூடிய பட்டம் என்பது ஒருவருடைய வாழ்க்கைக்கு, வேலைக்கு, அறிவுக்கு உதவி செய்யும். ஆனால் சக மனிதர்களிடம் பழகுதல், இந்த உலகினை புரிந்து கொள்ளுதல் ஆகியவை உங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியம்.எனவே, மாணவர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எதிர்காலத்தில், பொருளாதாரத்தில்; வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். பொருளாதார தன்னம்பிக்கை தான் மிகச் சிறந்த ஒன்று.எனவே உங்களுடைய வாழ்க்கையில் புதிய மாற்றங்களை எதிர்க்கொள்ளும் போது, அறிவின் துணையோடு, அனுபத்தின் துணையோடு, சிறந்த ஆலோசனையின்; துணையோடு உங்களை தகவமைத்து கொள்ளுங்கள். எப்போதும் வாழ்க்கை மாற்றத்திற்குட்பட்டது. எல்லாவற்றையும் எதிர்கொள்வதற்கும், புதியவற்றை பெறுவதற்கும் அறிவையும், அனுபவத்தையும் தயாராக்கி கொள்ளுங்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக மாணவியர்களுக்கு “சாதிக்கலாம் வாங்க” என்ற தலைப்பில் உயர்கல்வி மற்றும் வேலைவழிகாட்டி புத்தத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், (25.01.2025) தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் திரு.இரா.விஜயாலயன் அவர்கள் விளக்கவுரை ஆற்றினார்.இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் இன்று வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.ஒரு தனி மனிதனுடைய வளர்ச்சி தொடர்பாக எந்த ஒரு தத்துவ நூலை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது உலகில் வெற்றி பெற்ற மனிதர்கள் தொடர்பான நூல்கள் அல்லது சுயசரிதைகளை எடுத்து படித்தாலும் சரி அவர்களின் வெற்றிக்கான காரணங்களாக அவர்களின் சரியான திட்டமிடல் மற்றும் கடின உழைப்பு ஆகிய இரண்டு மையக்கருத்துக்களை தான் கூறுகின்றன.“இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர் “ “உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்” ஆகிய திருக்குறளில் ஒரு விஷயத்தை அது முடியும் வரை அதற்காக காத்திருப்பது அல்லது முடியும் வரை அதற்காக முயற்சி செய்வது என்பதை எல்லோரும் செய்வதில்லை. சில நபர்கள் தான் செய்கிறார்கள். எல்லோரும் அந்த இலக்காக அடையும் வரை சென்று முயற்சி செய்வதில்லை. அதனுடைய வழியை அறிந்து முடியும் வரை வெற்றி பெறக் கூடியவர்கள் சிலர் தான் இருக்கிறார்கள் என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 முதல் 20 இலட்சம் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயார் செய்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 10 முதல் 12 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.அதுபோல, ஆண்டுதோறும் இந்திய அளவில் ஏறத்தாழ 2 இலட்சம் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஆனால் இந்த தேர்வுகளுக்கு தயார் செய்யும் சுமார் 15 இலட்சம் தமிழக இளைஞர்களில் வெற்றி பெறுபவர்களின் சதவீதம் என்பது ஒற்றை இலக்க எண்ணாக தான் இருக்கிறது. இதில் வெற்றியைத் தாண்டி, போட்டி தேர்வுக்கு உண்மையிலேயே தயார் செய்யக் கூடியவர்களுக்கு ஒரு விரிவான இந்த சமூகத்தைப் பற்றியும், நம்முடைய சூழலை பற்றியும், அரசியலைப் பற்றியும், பொருளாதாரத்தைப் பற்றியும், சுற்றுச்சூழலை பற்றியும் மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படுகிறது. அந்த விழிப்புணர்வு அவருடைய வாழ்க்கைக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும், அவர்களுடைய குழந்தைகளுக்கும் மிகப்பெரிய ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.அப்படி மிகச் சிறந்த மனித வளத்தை உருவாக்கக்கூடியதாக இந்த போட்டி தேர்வு என்பது அதற்கு தயார் செய்யக்கூடிய மாணவர்களை உருவாக்குகிறது. போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வது என்பதும், இது போன்ற அறிவு சார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பதும், ஒரு அறிவு சார்ந்த மனித வளத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதற்கு சான்றாகும்.எனவே இந்த நிகழ்ச்சிக்காக வருகை தந்திருக்க கூடிய அனைவரும் இதில் வெற்றி தோல்வி என்பதை எல்லாம் தாண்டி இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருப்பதும், ஒரு அறிவு சார்ந்த நிகழ்ச்சிக்கு உங்களை ஈடுபடுத்திக் கொள்வதும், உங்கள் எதிர்காலத்திற்கும் உங்களுடைய எதிர்காலத்தில் சிலரை ஆற்றுப்படுத்துவதற்கும், வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த வினாடி - வினா போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் வீதம் 262 குழுக்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (25.01.2025) 15-ஆவது தேசிய வாக்காளர் தினம் - 2025 -ஐ முன்னிட்டு, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம், கருமாதிமடம், அல்லம்பட்டி முக்கு, அரசு மருத்துவமனை, மாரியம்மன் கோவில், பழைய பேருந்து நிலையம், பர்மா காலனி, ஆத்துப்பாலம், சிவகாசி பாலம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.பின்னர், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் நடத்தப்பட்ட சுவர் பதாகை தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற இராஜபாளையம் அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி.ரம்யா என்பவருக்கு முதல் பரிசாக ரூ.2000/-மும், சாத்தூர் கம்ம மகாஜன டிரஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி. அட்சயா ஸ்ரீ என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1000/-மும், சாத்தூர் கம்ம மகாஜன டிரஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி.திவ்ய சரஸ்வதி என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.500/-ம்,கல்லூரி மாணவர்களுக்கான சுவர் பதாகை தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி மாணவி செல்வி. மோகன கிருத்திகா என்பவருக்கு முதல் பரிசாக ரூ.2000/-மும், இராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். பெண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவி செல்வி.விஜயலெட்சுமி என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1000/-மும், சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவி செல்வி.மகாலெட்சுமி என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.500/-ம்,மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற திருவில்லிபுத்தூர் சிவம் சக்தி சுய உதவிக்குழுவிற்கு முதல் பரிசாக ரூ.5000/-மும், திருச்சுழி மல்லிகை சுய உதவிக்குழுவிற்கு இரண்டாம் பரிசாக ரூ.4000/-மும், காரியாபட்டி சுதா காளியம்மன் சுய உதவிக்குழுவிற்கு மூன்றாம் பரிசாக ரூ.3000/-மும் என ஆக மொத்தம் ரூ.19,000/- மதிப்பிலான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் (25.01.2025) “பருத்தி திருவிழா “ என்ற தலைப்பில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் பார்வையிட்டார்.மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள், விதைகள் நவீன விவசாய கருவிகள் உள்ளிட்டவை குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் வட்டார அளவில் ஒவ்வொரு தலைப்பிலும் நடைபெற்று வருகிறது.அதன்படி, இன்று அருப்புக்கோட்டையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் பருத்தி திருவிழா என்ற தலைப்பில் நடைபெறுகிறது.இவ்வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் பயனடைந்திடும் வகையில் வேளாண் தொழில் நுட்ப விளக்கக் காட்சிகள், நவீன விவசாய தொழில் நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. வேளாண் ஆராய்ச்சி நிலைங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில் நுட்பங்கள், இடுபொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் நெல், சிறுதானியங்கள், மா, பருத்தி, மிளகாய், மக்காச்சோளம், வேளாண் இயந்திரங்கள் பயன்பாடுகள், காய்கறிகள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை பயிர்கள் தொடர்பாக அனைத்து தொழில் நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள் மற்றும் செயல் விளக்கங்களும் வழங்கப்படுகிறது.மேலும், அனைத்து வட்டார விவசாயிகளுக்கும் பயிர் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.விவசாயிகள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையிலும், புதிய நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடனும், சந்தை மதிப்புள்ள வேளாண் பொருட்களை விளைவிப்பதின் மூலமும் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.
விருதுநகர் கௌசிகா நதி பாலம் புதிய பேருந்து நிலைய அருகில் (25.01.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவு சேகரிக்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், நெகிழி பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு மாற்றாக துணிப்பைகளின் உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.தமிழக அரசு உத்தரவின்படி 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் இணைந்து நெகிலியால் ஆன பொருட்களை நீர்நிலைகள், நகர்புற பகுதிகள், கிராம பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெகிலியை அகற்றுவதற்கான மாபெரும் இயக்கம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிலியை நாம் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று நம்முடைய அரசு உறுதி கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும். பல இடங்களிலே இத்தகைய உணவுப் பொருட்களை உபயோகப்படுத்தக்கூடிய பைகள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிப்பதோடு உடல் நலக்கத்திற்கும் பெரிய அளவில் தீங்கு விளைவிப்பதாக உள்ளது.எனவே பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய நிகழ்ச்சி இன்று தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்(தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்) திரு.ஹேமந்த் ஜோசன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், (25.01.2025) தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.84,000- மதிப்பிலான பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கோகுல் மற்றும் மதன் ஆகியோரின் குழுவிற்கு முதல் பரிசாக ரூ.30,000-மும், விருதுநகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் மலைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் செல்வன் ஆகியோரின் குழுவிற்கு இரண்டாம் பரிசாக ரூ.20,000-மும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவராம் குமார் மற்றும் கணக்கனேந்தல் பகுதியைச் சேர்ந்த மணி சேகர் ஆகியோரின் குழுவிற்கு மூன்றாம் பரிசாக ரூ.10,000- மும்,கரூரைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் திருச்சியை சேர்ந்த கோகுல் பிரசாத் ஆகியோரின் குழுவிற்கு நான்காம் பரிசாக ரூ.7000- மும், திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த கபிலன் ஆகியோரின் குழுவிற்கு ஐந்தாம் பரிசாக ரூ.5000- மும், சிவகாசியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த ஜெயராமகிருஷ்ணன் குழுவிற்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அய்யப்ப தாஸ் மற்றும் பந்தன்திட்டாவை சேர்ந்த டென்சின் சைமன் ஆகியோரின் குழுவிற்கும், விருதுநகரை சேர்ந்த பாலாஜி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த மைதிலி ஆகியோரின் குழுவிற்கும், விருதுநகரை சேர்ந்த சுந்தரலிங்கம் மற்றும் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரின் குழுவிற்கும், திருச்சியைச் சேர்ந்த மணிவேல் மற்றும் சேலத்தைச் சேர்ந்த நவீன் குமார் ஆகியோரின் குழுவிற்கும், பல்லடத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த விஷ்ணுகுமார் ஆகியோரின் குழுவிற்கும் என 6 குழுவிற்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2000- மும் என மொத்தம் 11 குழுக்களுக்கு ரூ.84,000- மதிப்பிலான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்த வினாடி - வினா போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் வீதம் 262 குழுக்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் (26.01.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீ குமார் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தியாகி சங்கரலிங்கனார், தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று போராடி, உண்ணாவிரதம் மேற்கொண்டு தனது இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல் ஆவார். இவர் 1895ஆம் ஆண்டு, பெரிய கருப்பசாமி நாடார் வள்ளியம்மை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தார். 1914ஆம் ஆண்டு, பெண்கல்வி வளர்ச்சிக்கான சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்தார். 1915ஆம் ஆண்டு திருமணம் புரிந்த இவர் 1917ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1920ஆம் ஆண்டு இராஜாஜியை சந்தித்தபோது அவரது சீடரானார். இவர், “மாதர்கடமை” என்னும் நூலை எழுத்p வெளியிட்டார். கதர் இயக்கத்தில் சேர்ந்து, கதர் வளர்ச்சிப்பணியை மேற்கொண்டார்.திருச்சியில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாத சிறைத் தண்டனைப் பெற்றார். கரூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும் 5 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தேசசேவையின் காரணமாக 1944ஆம் ஆண்டு மாதம் ரூ.150/- ஊதியத்திலிருந்த வேலையை விட்டு விட்டு திருச்செங்கோட்டிலிருந்த காந்தி ஆசிரமத்தில் ரூ.30/- சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டு விருதுநகரில் உள்ள சூலக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து செயல்பட்டார்.இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்த போது, அப்பெயரை மாற்றித் தமிழ்நாடு என பெயரிட வேண்டும் எனக் கோரி 27.07.1956 நாள் முதல் 13.10.1956 முடிய 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். 10.10.1956 அன்று மதுரையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திருவாளர்கள் கு.காமராஜர், பி.கக்கன், ம.பொ.சிவஞானம், சி.என்.அண்ணாதுரை, ஜீவானந்தம் ஆகியோர் இவரைச் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரினர். ஆனால், இந்திய வரலாற்றிலேயே தாம் மேற்கொண்ட கொள்கைக்காக காந்தி வழியில் அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகச் செம்மல் தியாகி சங்கரலிங்கனார், தமிழ்நாட்டு வரலாற்றில் தியாக தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறார்.தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.77 இலட்சம் செலவில் மணிமண்டபம் 18.06.2015 அன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 26 மற்றும் நினைவு நாளான அக்டோபர் 13 - ஆம் நாளன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் (26.01.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், செயற்பொறியாளர்(பொதுப்பணித்துறை) திரு.செந்தூர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (மு.கூ.பொ) திரு.ச.தங்கவேல், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.மாதவன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டாட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (26.01.2025) நடைபெற்ற இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வருகை தந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் வரவேற்றார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காலை 8.05 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர், சிறப்பாக பணியாற்றிய 133 தலைமைக் காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பாக 2 நபர்களுக்கு தலா ரூ.25,000ஃ- மதிப்பில் வருடாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.50,000ஃ-த்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு நல்கி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வரும் 12 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சிறப்பு இனங்களில் சிறந்த ஆலை பராமரிப்பு மற்றும் தொழிலாளர் நலன் காக்கும் 4 நிறுவனங்களுக்கும், அதிகமாக பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியினை வழங்கிய 4 நிறுவனங்களுக்கும், சிறந்த உழவர் உற்பத்தியாளர் 5 நிறுவனங்களுக்கும், பொதுநலன் சார்ந்த செயல்பாடு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான பங்களிப்பு ஆற்றிய 55 நபர்களுக்கும், 3 சிறந்த தன்னார்வ நிறுவனங்களுக்கும், 2 சிறந்த குருதிக் கொடையாளர்களுக்கும், 1 சிறந்த தொண்டு நிறுவனத்திற்கும், திருநங்கைகளின் சுகாதார நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த 3 நபர்களுக்கும், சிறந்த சமூக ஆர்வலர்கள் 2 நபர்களுக்கும், 2 சிறந்த குழந்தைகள் நல காப்பகத்திற்கும், கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள் 2 நபர்களுக்கும், கரிசல் இலக்கிய படைப்புகளுக்கு உதவிய எழுத்தாளர்கள் 2 நபர்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய கடனுதவி பெற்று சுய தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய கடனுதவி பெற்று சுய தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 பெண் தொழில் முனைவோர்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மானிய கடனுதவி பெற்று சுய தொழில்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் 3 சிறந்த இளம் தொழில் முனைவோர்களுக்கும், சிறுதானிய உற்பத்தியில் சிறப்பாக செயலாற்றும் 6 விவசாயிகளுக்கும், 2 சிறந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், 1 சிறந்த அங்கன் வாடி மையத்திற்கும், அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருதல், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாத்தல் ஆகிய இனங்களுக்கு பாராட்டி சிறந்த பள்ளி, சிறந்த ஆசிரியர், சிறந்த மாணவர், சிறந்த சுற்றுச்சூழல் ஊக்கி, சிறந்த நீர் பாதுகாவலர் என 5 நபர்களுக்கும்,சிறார் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக 1 நபருக்கும், 5 சிறந்த மருத்துவர்களுக்கும், 11 சிறந்த ஊராட்சி செயலர்களுக்கும், சிறப்பாக செயல்படும் 4 பள்ளிகளுக்கும், 2 சிறந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கும், 11 சிறந்த சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்களுக்கும், சாலை பாதுகாப்பு உறுப்பினர் 1 நபருக்கும், சிறந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்) 2 நபர்களுக்கும், சிறந்த மருத்துவ ஊர்தி பணியாளர்கள் 2 நபர்களுக்கும், விருதுநகர் மாவட்ட தேசிய தகவல் மைய பணியாளர்கள் 4 நபர்களுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்திய 2 பணியாளர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைச் சார்ந்த 158 அரசு பணியாளர்களுக்கும், குடியரசு தின விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த 5 நபர்களுக்கும் என மொத்தம் 463 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., மாவட்ட அளவிலான அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி கிராமத்தில் (26.01.2025) 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2024 முதல் 31.12.2024 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சியில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில்; ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.மேலும், ஒரு கிராமத்தினுடைய உண்மையான வளர்ச்சி என்பது அந்த கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை கல்வி கற்று, நல்ல வேலை வாய்ப்பை பெறும் பொழுது, அந்த குடும்பம், கிராமம் வளர்ச்சி அடையும். எனவே, அனைவருக்கும் கல்வி என்பது மிக முக்கியமானது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நல்ல கல்வியாளராக உருவாக்க வேண்டும். கல்வி மற்றும் அதற்கு இணையாக சுகாதாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும்.கல்வி, சுகாதாரம் இரண்டும் இருந்தால் நமது குடும்ப வளர்ச்சியும், சமுதாய வளர்ச்சியும் மேன்மையடையும் என தெரிவித்தார்.இக்கிராமசபை கூட்டத்தில் போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு தொடர்பாகவும், தொழுநோய் விழிப்புணர்வு தொடர்பாகவும் உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த கிராம சபை கூட்டத்தில் மருத்துவத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.இந்த கிராம சபைக் கூட்டத்தில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.அரவிந்த், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.