25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jan 30, 2025

தொழுநோய் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், தேசபந்து மைதானத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (30.01.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.முன்னதாக, அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னாரது படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும், தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.மகாத்மா காந்தி அவர்கள் தொழுநோயாளிகளுக்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தொழுநோயானது காற்றின் மூலம் மைக்ரோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியினால் பரவுகிறது. இந்த நோய் தொற்று ஏற்பட்டால் முதலில் தேமல், படை போன்ற தோல் நோய்கள் ஏற்படும். சிவந்த அல்லது வெளிறிய ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தேமல்கள் ஏற்பட்ட இடங்களில் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். எண்ணெய் தடவியது போன்று  மினு மினுப்பு,தோல், முகம் மற்றும் கண் இமைகளில் முடியில்லாது இருத்தல், காது, காதுக்கு பின்னாலும் சிறு,சிறு முடிச்சு (nodules)  போன்ற கட்டிகள் இருத்தல். கை,கால்களில் சதை குறைந்து வறண்ட உணர்ச்சியற்ற நிலை ஆகியன தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் இது தொற்றுநோய் அல்ல.இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மேற்கண்ட அறிகுறிகள் உடல்பகுதிகளில் தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி (WHO – World Health Organization)  மல்டி டிரக் தெரபி எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் மூலம் தொழுநோய் முற்றிலும் குணப்படுத்தப்படுகிறது.மேலும், பொதுமக்களின் முக்கிய நோக்கம் என்பது இந்த தொழுநோய் எப்படி வருகிறது என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். தொழுநோய் குறித்து அறிகுறிகள் எதும் தென்பட்டால், அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளலாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவு, இருந்தாலும் அதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதும், பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தார்.முன்னதாக, தொழுநோயால் பாதிக்கப்பட்டு முற்றிலும் நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்.மேலும், மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்ட தொழுநோய் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். தேசபந்து மைதானத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, நகராட்சி அலுவலகம் வரை சென்று  நிறைவடைந்தது.இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jan 29, 2025

சிவகாசி, இராஜபாளையம், வத்திராயிருப்பு, விருதுநகர், காரியாபட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இராஜபாளையம், வத்திராயிருப்பு, விருதுநகர், காரியாபட்டி ஆகிய  ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள்  (29.01.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனைக்குட்டம் ஊராட்சி, மீனாட்சிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை பார்வையிட்டு, பள்ளியில் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள், பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் முறைகள், குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.ஆனைக்குட்டம் ஊராட்சியில், 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ், ரூ.1,80,000ஃ- மதிப்பில் அங்கன்வாடி மையம் சீரமைக்கப்பட்டு வரும் பணியினையும், மேலும், ஆனைக்குட்டம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்தும், பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும்,ஆனைக்குட்டம் ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ள பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், முகவூர் நாடார் தெருவில் அமைந்துள்ள  அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதுகேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்தும்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், முகவூர் ஊராட்சியில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முகவூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய பொது நிதி - 2020-2021 -ன் கீழ், பூக்குழி மைதானத்தில் ஆண்கள் சுகாதார வளாகம் பராமரிப்பு பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், முகவூர் ஊராட்சி தெற்குத்தெரு இந்து நாடார் ஆரம்பப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் உணவருந்தினார்.முகவூர் ஊராட்சி பாரதி நகரில் கட்டப்பட்டுள்ள பழைய சமுதாயக்கூடத்தினையும் மற்றும் முகவூர் ஊராட்சியில், தூய்மைப் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைகளை சேகரித்து வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், தம்பிபட்டி ஊராட்சியில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, கட்டிடத்தின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.மேலும், தம்பிபட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதுகேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  ஆய்வு செய்தார்.பின்னர், தம்பிபட்டி ஊராட்சியில், ஊர்ப்புற நூலகத்தினை பார்வையிட்டு, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், தம்பிப்பட்டி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு, தரம், பயன்பெறும் குடும்ப அட்டைத்தாரர்கள், தராசு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.தம்பிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் தம்பிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இ-சேவை மையக் கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து  அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், வடமலைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் உணவருந்தினார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், வடமலைக்குறிச்சியில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வடமலைக்குறிச்சியில்  உள்ள மாவட்ட கிளை நூலகத்தினை பார்வையிட்டு, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கடம்பன்குளம்  ஊராட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்;டிக்கடையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.மேலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், மாங்குளம் கிராமத்தில் எஸ்.எஸ்.ஆர்.புளு மெட்டலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், குவாரியின் உரிமம், குவாரி இயங்கி வரும் முறை, தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை குறித்து நேரில் சென்று பார்வையிட்டு  ஆய்வு செய்தார்;.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்  (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 29, 2025

விருதுநகர் மாவட்டம் ஒரு கண்ணோட்டம் - ஒரு வரலாற்றுப் பயணம் (1800- 1950)

விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் (29.01.2025)  விருதுநகர் மாவட்டம் ஒரு கண்ணோட்டம் - ஒரு வரலாற்றுப் பயணம் (1800- 1950) GLIMPSES OF VIRUDHUNAGAR DISTRICT -A Historical Journey (1800 -1950)புத்தகத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்திரு.தங்கம் தென்னரசு அவர்கள்வெளியிட்டார்.நமக்கு எதிரே இருக்ககூடிய சவால்கள் குறித்த எதிர்காலம் இருக்கிறது. நாம் நீந்தக்கூடிய நிகழ்காலம் இருக்கிறது. வரலாறு என்பது முடிந்து போன ஒரு காலம். அதனை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், வரலாற்றை மறந்த ஒருவன் சுய  நினைவை இழந்தவனாக கருதப்படுபவனாவான் என ஒரு வரலாற்று பேராசிரியர் குறிப்பிடுகிறார்.கடந்த காலத்தில் நாம் என்னவாக இருந்தோம் என்பதை அறிந்தால் தான் எதிர்காலத்தில் நாம் என்னவாக இருக்கபோகிறோம் என்பதை தீர்மானிக்க முடியும். நம்முடைய முன்னோர்களுக்கு எதெல்லாம் தெரிந்திருக்கிறது. இதை நாம் அறிந்திருக்கின்றோம். என்னுடைய மொழி என்னுடைய நிலம் தொன்மை வாய்ந்தது என்பதை எல்லாம் நாம் அறியும்போது,  இவையெல்லாம்  எதிர்காலத்தில் சாதிப்பதற்கு தூண்டுகின்ற வகையில் தான் நாம் ஒவ்வொருவரும் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு கடந்த நான்கு வருடங்களிலே  பண்பாட்டு தளத்தில் தொடர்ச்சியாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.மொழியின் தொன்மை குறித்து கீழடி நமக்கு எடுத்துச் சொன்னது. இந்த குடியின் பெருமை குறித்து அதிரம்பாக்கம், பட்டறைப் பெரும்புதூர் நமக்கு நிறைய சொன்னது. இந்த தமிழ் பெருங்குடி மக்கள் பெற்று இருந்த நாகரிகம், அவர்கள் பெற்ற தொழில்நுட்ப அறிவு என்பதற்கு மயிலாடும்பாறையில் கிடைக்கக்கூடிய சான்றுகளை தாண்டி சிவகளையினுடைய முடிவுகள் இந்திய துணை கண்டத்தில் இரும்பினுடைய பயன்பாட்டை இரும்பின் தொழில்நுட்பத்தை அறிந்து அந்த தொழில்நுட்பத்தை உணர்ந்து படைக்கலன்களையோ அல்லது உழவு தொழில்களுக்கான கருவிகளையோ உருவாக்கிய ஒரு சமுதாயம் தமிழ் சமுதாயமாகத்தான் இருந்தது. அது 5000 வருடத்திற்கு முன்பாகவே நாம் அதைப் பெற்றிருக்கின்றோம்.நம் முன்னேர்கள் இதனை எல்லாம் அறிந்திருக்கிறார்கள். என்னுடைய மொழி மற்றும் நிலம் இத்தகைய தொன்மை வாய்ந்ததென நாம் அறியும் போது இவையெல்லாம் நமது எதிர்காலத்தில் சாத்திக்க தூண்டுகிறது.வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில்  பார்க்கின்ற பொழுது தான் எத்தகைய அளவிற்கு அங்கு தொழில் வளர்ச்சி அடைந்த இடமாக வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளம் இருக்கிறது.இதற்கு முன்னே இருக்கக்கூடிய மன்னர்கள் சாசனங்கள், சங்க இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வளங்கள் மூலமாக அறிந்து கொள்ளக்கூடிய செய்திகள் இருந்தாலும் கூட அவற்றை எல்லாம் எழுதி வைக்கககூடிய நிலைமை பல அரசர்களுக்கு இல்லை.அதனால் தான் நம்முடைய கல்வெட்டுகளில் இருந்தும், இலக்கியங்களில் இருந்தும், அகழாய்வுகள் மூலமும் கிடைக்கின்ற சான்றுகள்  ஆகியவைதான்இன்றைக்கு பெரிய அளவிலே  துணை புரிவதாக இருக்கிறது.ஆங்கிலர்களுடைய வருகைக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டங்களை அவர்கள் பிரிக்கின்ற பொழுதுதான் அந்த மாவட்டத்தினுடைய மொத்த விவரங்களை அறிந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.  நம்முடைய  விருதுநகர் மாவட்டத்தின் உடைய வரலாற்றை நாம் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் அன்றைக்கு நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவராக இன்றைக்கு மத்திய அரசாங்கத்தில் செயலாளராக இருக்கக்கூடிய மதிப்புக்குரிய திரு.கிருஷ்ணன் அவர்கள் மற்றும் அவர்களுடைய துணைவியார்  அவர்கள் முயற்சியோடு அறிஞர் வேதாச்சலம் போன்றவர்களால் 1998 மற்றும் 1999 அன்றைக்கு   புத்தகத்தை உருவாக்கி தந்தார்கள். அதற்குப் பிறகு விருதுநகர் மாவட்டத்தின் உடைய வரலாறு இன்னும் தொல்லியல் நோக்கில் எழுதப்பட வேண்டும் என்று பாண்டிய நாட்டு வரலாற்று  ஆய்வு மையம் அந்த புத்தகத்தை கொண்டு வந்தது. ஆனால் அதற்குப் பிறகு இருக்கக்கூடிய இந்த விவரங்களை குறிப்பாக 1800 களிலிருந்து 1950 வரை இருக்கக்கூடிய விவரங்களை எழுத வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த மாவட்டத்தினுடைய புவியியல் அமைப்பை நன்றாக உணர்ந்தவர்கள் அறிவார்கள். இந்த மாவட்டத்தினுடைய ஒரு பகுதி இராமநாதபுரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். இன்னொரு பகுதி அப்படியே திருநெல்வேலி மாவட்டத்தை பிரதிபலிப்பாக இருக்கும். இந்த மாவட்டத்தினுடைய வடக்கு பகுதி மதுரையை பிரதிபலிப்பதாகவும் இருக்கும்.  இந்த மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் நாம் புவியியல் ரீதியாக பகுதிகளை இணைத்து விருதுநகர் மாவட்டத்தை உருவாக்கி இருந்தாலும் கூட விருதுநகர் மாவட்டத்திற்கு என்று தனித்த அடையாளங்கள் இருக்கிறது. அந்த தனித்த அடையாளங்கள் புவியியல் ரீதியாக மட்டுமல்ல தொழில், இலக்கிய,  தொல்லியல், வணிக, வியாபார ரீதியாக  எடுத்துக் கொண்டு போனால் பல இடங்களில் இது நிச்சயமாக இருக்கிறது. அது குறித்த தகவல்களை தொகுத்து இந்த புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு. தண்டபாணி, மாவட்ட சுற்றுலா அலுவலர் திருமதி உமா தேவி, முன்னாள் துணை வேந்தர்,சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழகம், சாகர்.(மத்திய பிரதேசம்) முனைவர் கே.ஏ.மணிக்குமார், இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி,உதவிப் பேராசிரியர்முனைவர் போ.கந்தசாமி, விருதுநகர் நகர மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jan 29, 2025

நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Jan 29, 2025

மாவட்ட தாய்சேய் நல கண்காணிப்பு மையம் .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (29.01.2025) பொது சுகாதாரம் மற்றும் தோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்கும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட அளவில் உருவாக்கப்பட்ட மாவட்ட தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,  அவர்கள் திறந்து வைத்தார்.

Jan 28, 2025

தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இலக்கியக் கூட்டம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன

தமிழ் வளர்ச்சித்துறையின் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்போது, ” தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களின் பிறந்தநாளன்று உள்ளுர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள்  நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இவ்வறிவிப்பின்படி, 2024-25ஆம் ஆண்டில் திரு. மேலாண்மை பொன்னுசாமி,  தீபம் நா. பார்த்தசாரதி, திரு. கி. இராஜநாராயணன், திரு. கு. அழகிரிசாமி ஆகிய  இலக்கிய ஆளுமைகளின் இலக்கியப் பணி, தமிழ்த்தொண்டு, தமிழ்மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில்  விருதுநகர் மாவட்டத்தில் 13.02.2025 அன்று  விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கலைக் கல்லூரியில் இலக்கியக் கூட்டம் நடத்தப்பெற உள்ளது.  முன்னதாக இவ்விலக்கிய ஆளுமைகள் குறித்து  06.02.2025 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.  பள்ளிப் போட்டி காலையில் 09.30 மணி அளவிலும் , கல்லூரிப் போட்டி பிற்பகல் 2.00 மணி அளவிலும் விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடத்தப்பெறவுள்ளன.போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் வரவேண்டும்.மாவட்ட அளவில் பள்ளி / கல்லூரிப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல்பரிசாக ரூ.5000/-, இரண்டாம்  பரிசாக ரூ.3000/-,  மூன்றாம் பரிசாக ரூ.2000/-, என்ற வகையில் வழங்கப்படும்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 13.02.2025 அன்று விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ள இலக்கியக்கூட்டத்தில் பரிசு  மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Jan 28, 2025

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும்.  தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை துவக்கியிருத்தல் வேண்டும்.கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும்.மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்வியுற்றோர் : ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சி : ரூ.300/-       பன்னிரெண்டாம் வகுப்பு/பட்டயப்படிப்பு : ரூ.400/-பட்டப்படிப்பு : ரூ.600/-உதவித் தொகை விண்ணப்பத்தினை நேரில் இவ்வலுவலகத்தில் பெற்றோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை,குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.மேற்கண்ட உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை: கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு  மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600ஃ- மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750ஃ- பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும்ரூ.1000ஃ- வருமான உச்ச வரம்பு கிடையாது. வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம்.வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை,ஸ்மார்ட் காhடு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பத்தினை அலுவலக வேலைநாளில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துக்கொள்கிறார்.மேற்கண்ட உதவித் தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும், உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருத்தல் கூடாது.சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது. அரசிடமிருந்து வேறு எந்த வகையிலாவது உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது.  இதற்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.சுய உறுதிமொழி ஆவணம்-ஏற்கனவே இவ்வலுவலகத்தில் உதவித் தொகை விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ள பதிவுதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டம் என்பதால், ஏற்கனவே முழுமையாக உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் அளித்திருப்பின் அலுவலகம் வர தேவையில்லை.

Jan 28, 2025

இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் (28.01.2025) போக்குவரத்துத்துறை சார்பில், 36-வது சாலை பாதுகாப்பு மாதம் -2025 (01.01.2025 முதல் 31.01.2025 வரை) முன்னிட்டு, இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும்,  எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசம் வழங்கி, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் காவலர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணி மூலம் தலைக்கவசம் அணிவதன் பயன்கள், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது, அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது, இரண்டு பேரை தவிர அதிகமான நபர்களை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தொடங்கி,  முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி விருதுநகர் பழைய பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.இளங்கோ உட்பட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jan 28, 2025

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள்  (28.01.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி,  சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், தொட்டிலோவன்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.54 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.பின்னர், கஞ்சம்பட்டி ஊராட்சியில், பிரதம மந்திரி குடியிருப்பு வீடு திட்டத்தின் கீழ், புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், குமாரபுரம் ஊராட்சியில், கனிம வள நிதியின் கீழ், ரூ.16.75 இலட்சம் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும் மற்றும் குமாரபுரம் ஊராட்சியில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மதிப்பில், சமுதாய சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பணியினையும்,பின்னர், சங்கரநத்தம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.20 இலட்சம் மதிப்பில் குளம் தூர்வாரப்பட்டு கரை உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jan 28, 2025

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியின் 150-வது அமர்வு சிறப்பு நிகழ்ச்சியில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் திருமதி முத்தமிழ்ச்செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (28.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்ட 150 பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட சிறப்பு Coffee with Collector- 150- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் திருமதி முத்தமிழ்ச்செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு, மொத்தம் 149 கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.மேலும் இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, தங்களின் துறை மற்றும் பணிகள்  சார்ந்த வாய்ப்புகள், படிப்புகள் மற்றும் அதற்கான திறமைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தி, அவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.அதன்படி, இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ; எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் திருமதி முத்தமிழ்ச்செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தான் சிறுவயது முதல் தற்போது இந்த நிலைமைக்கு வந்த அனுபவங்கள், வாழ்க்கை கண்ட தோல்விகள், அதை ஒரு சவாலாக ஏற்று கொண்டு அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் குறித்தும், தனக்கு மலையேற்றத்தில் ஆர்வம் வந்தது, அதில் தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொண்டு பல சாதனைகள் புரிந்து வருவது குறித்தும் உரையாடி, மாணவ, மாணவிகளின் எண்ணற்ற கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.இந்தத் துறை மட்டுமல்லாமல் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த எந்த துறையிலும் சாதிக்க முடியும். அதற்காக தங்களது இலக்கை நீங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். அதனையே குறிக்கோளாக கொண்டு, இலக்கை அடைவதற்கான வழிகளை அறிந்து கொண்டு தொடர் முயற்சி மூலமும், தோல்விகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டும், தொடர் தோல்விகளினால் தொய்வு அடையாமல் ஒழுக்கத்துடன் தங்களது பணியை மேற்கொள்ளும் போது அந்த துறையில் நாம் சாதிக்க முடியும். இது ஒவ்வொருவராலும் முடியும் என தெரிவித்தார்இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு,  இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும்,  எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் தெளிவான விடை கொடுத்ததாகவும்,  இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., உட்பட மாணவர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

AD's



More News