தேசிய பெண் குழந்தைகள் தினம் - 2025 முன்னிட்டு நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (24.01.2025) தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகளுக்கான வளர் இளம் பருவ உளவியல் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மென்ஸ்ட்ரூபீடியா காமிக் (Menstrupedia Comics) தமிழ் புத்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வளரிளம் பருவத்தில் இருக்கக்கூடிய பதினோரு வயதிலிருந்து 17 வயது வரை பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் இருக்கக்கூடிய மாணவியர்களுக்கு வழிகாட்டுவதற்காக மருத்துவ உளவியல் மற்றும் உடல் சார்ந்த மருத்துவங்கள் பற்றி எடுத்து கூறுவதற்காக இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் இந்திய அளவில் கல்வி மற்றும் மனித வள குறியீடுகளில் நன்கு வளர்ச்சி அடைந்த மாவட்டம். உயர்கல்வி பொருத்தவரையில் இந்தியாவில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் உயர்கல்வி சேர்க்கையில் அதிகமான எண்ணிக்கை கொண்ட முதல் மாவட்டம் விருதுநகர் தான். மனிதவள குறியீடுகளிலும் மிக அதிகமாக உள்ள மாவட்டம்.இப்படி நன்கு வளர்ச்சி அடைந்த விழிப்புணர்வு பெற்ற நமது மாவட்டத்தில் கூட ஒவ்வொரு ஆண்டும் 200- 300 வரையிலான குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதுபோல நமது மாவட்டத்தில் மகப்பேறு புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் 19 வயதிற்குள் தாய்மை பேறு அடையும் சிறுமிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு சுமார் 700 முதல் 800 வரை இருக்கிறது. இது இன்னும் விழிப்புணர்வுக்கான தேவை இருப்பதை காட்டுகிறது.
குறிப்பாக மாணவிகளுக்கு பதின் பருவத்தை புரிந்து கொள்ளுதல், பதின் பருவத்தில் ஏற்படக்கூடிய உளவியல், உடல் சார்ந்த மாற்றங்களை புரிந்து கொள்ளுதல் ஆகியவையோடு அதனை அறிவியல் பூர்வமாக அணுகுதல் என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இன்றைக்கு அறிவியல் மனப்பாங்கு என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. நாம் அறிவியலை படித்து அறிவியல் தகவலை பெற்று ஒரு அறிவியல் நிபுணராகவோ அல்லது படித்த படிப்பாளியாகவோ இருப்பது வேறு, அறிவியல் மனப்பாங்கோடு இருப்பது என்பது வேறு. இரண்டிற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. எனவே நிரூபிக்கப்பட்ட அறிவியல் வழியாக, அறிவியல் மருத்துவத்தின் உடைய நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு அறிவியல் மனப்பாங்கு மிகவும் முக்கியமானது. அதனை இளம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். 19 வயதிற்குள்ளாக தாய்மை பேறு அடையும் பெண்களின் குழந்தைகள் தான் பெரும்பாலும் எடை குறைவான குழந்தைகளாகவும், குறிப்பிட்ட காலகட்டத்தில் அடைய வேண்டிய உடல், மனவளர்ச்சி அடையாத குழந்தைகளாக இருக்கிறார்கள்.
குழந்தை பிறப்பு விகிதம்(IMR) என்று சொல்லக்கூடிய பிறந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டிற்குள் இறந்து போகக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையும் இதுபோன்ற ஒரு வளரிளம் பருவத்தில் உள்ள பெண்கள் பெறக்கூடிய குழந்தைகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். எனவே, ஒரு குழந்தை பிறப்பு என்பதும், அந்த குழந்தை இறந்து போவது என்பதும் எவ்வளவு பெரிய வலியாக அந்த தாய்க்கும், அந்த குடும்பத்திற்கும் இருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.நாம் வளர்ச்சியடைந்த இந்த சூழ்நிலையிலும் கூட நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மாணவிகளுக்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வளரிளம் பருவத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களில் உளவியல் சார்ந்த மாற்றங்களுக்கு அவர்களை தங்களை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்களா என்றும் அதனுடைய நன்மை தீமைகளை அறிவியல் மனப்பான்மையுடன் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
நம்முடைய மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பிரச்சனைகளை ஆய்வு செய்து பார்த்தால், இந்த குழந்தைகளுக்கு எல்லாம் நல்ல வழிகாட்டுதலும் ஆற்றுப்படுத்துதலும் அவசியமாகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, ஒவ்வொரு பள்ளிகளிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் படிக்கக்கூடிய உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் அதற்கென்று நியமிக்கப்படக்கூடிய ஆசிரியர்கள், இது குறித்து மாணவிகளுக்கு குறைந்த பட்சம் வாரத்தில் ஒரு நாளாவது, ஒரு வகுப்பாவது அவர்கள் வாழ்க்கை முறை சார்ந்த கல்வியை, குறிப்பாக அவர்களுடைய உடல் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதற்கும், அதைவிட மிக முக்கியமானது அதற்கான தீர்வுகள் குறித்து அவர்களுக்கு தெரிந்து கொள்வது மிக முக்கியமானது.
ஒரு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அறிவியல் பூர்வமாக மருத்துவர்களை அணுகி எப்படி தீர்வு காண்பது. ஒரு உளவியல் சார்ந்த பிரச்சனைக்கு எப்படி ஒரு ஆலோசனைகளை பெறுவது. தங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை எப்படி முறையாக தீர்வுக்கு கொண்டு வருவது. இவற்றையெல்லாம் அறியாமையின் காரணமாக நமது குழந்தைகளுக்கு தெரியவில்லை. அவற்றை எல்லாம் அவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்து வட்டாரங்களில் இருந்தும் சுமார் 200 ஆசிரியர்கள் என்று இந்த நிகழ்ச்சியில் வருகை தந்திருக்கிறீர்கள்.
ஆசிரியர்களாகிய நீங்கள் ஒவ்வொரு வட்டாரங்களிலும் சென்று தொடர்ச்சியாக செயல்படக்கூடிய நிகழ்ச்சிகளில், நீங்கள் இது குறித்து அறிவியல் பூர்வமாக பேச வேண்டும். அறிவியல் பூர்வமாக இருக்கக் கூடிய தீர்வுகளுக்கு மாணவிகளை ஆற்றுப்படுத்த வேண்டும். தேவை ஏற்படக்கூடிய சூழ்நிலையில் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நீங்கள் ஆதரவோடும், பெற்றோர்களுக்கு ஆலோசனைத் தரக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மாணவிகளை உயர்கல்விக்கும், கல்வியின் வழியாக பெரிய வாய்ப்புகளை பெறுவதற்கும் இருக்க்க்கூடிய சூழ்நிலைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இன்று பெண்களுடைய முன்னேற்றம் என்பது மிகப்பெரிய சமூக முன்னேற்றம். அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பெண்கள் அதிகமாக வருகிறார்கள்.
எனவே எதிர்காலத்தில் அவர்கள் வெற்றி அடையக்கூடிய பெண்ணாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் பொருளாதாரத்தில் தலைநிமிர வேண்டும். பொருளாதாரத்தில் தலை நிமிர்ந்தால் தான் உண்மையான வெற்றி கிடைக்கும். அதை மாணவிகள் அடைவதற்கு அவர்களுடைய பதின் பருவத்தை மிக கவனமாகவும் விழிப்புணர்வோடும் ஆரோக்கியமாகவும் கடந்து, அடுத்து வாழ்க்கை தரக்கூடிய பல்வேறு வாய்ப்புகளை பெறக்கூடிய மாணவிகளாக நமது மாணவச்செல்வங்கள் உருவாக வேண்டும். அவர்களுக்கு ஆற்றுப்படுத்தக்கூடிய பணிகளை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும். எனவே இந்த நிகழ்ச்சியினை நீங்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு மாணவிகளுக்கான ஒரு ஆரோக்கியமான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் உறுதி மொழி மேற்கொண்டால் அதுதான் இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் வெற்றியாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மனநல மருத்துவர் மரு.விதுபிரபா, விருதுநகர் மருத்துவக்கல்லூரிமருத்துவமனைபேராசிரியர்(மகப்பேறு) மரு.சுதா, மாவட்ட தொற்று நோய் அலுவலர் மரு.நிஜவர்த்தன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி உட்பட மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply