25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 14, 2025

பள்ளிக்கல்வி நிறுவன வாகனங்களைமாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில்(14.05.2025) பள்ளி மாணவ, மாணவியர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (கட்டுப்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல்) சிறப்பு விதிகளின்படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து  பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து வருகிறார்கள்.அதனடிப்படையில்,  விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 46 பள்ளிகளைச் சேர்ந்த 249 வாகனங்கள், திருவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 27 பள்ளிகளைச் சேர்ந்த 78 வாகனங்கள், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 38 பள்ளிகளைச் 160 வாகனங்கள், அருப்புக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 21 பள்ளிகளைச் 167 வாகனங்கள், இராஜபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 45 பள்ளிகளைச் 165 வாகனங்கள் என மொத்தம் 177 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 819 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.அவற்றில் 569 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் 500 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி உடையவையாக உள்ளன. 69 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி இல்லாத காரணத்தினால் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வில் தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் கட்டுப்பாடு மற்றும் நடைமுறை படுத்துதல்) விதிகள் 2012-ன்; படி, தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா, உரிய மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முதலுதவி பெட்டி பொருத்தப்பட்டுள்ளதா, அவசரகால வழிகள் (Emergency Exit) அமைக்கப்பட்டுள்ளதா, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, உரிய நடத்துநர் உரிமம் பெற்ற உதவியாளர் (Attender), ஓட்டுநருக்கு உதவியாக மாணவ, மாணவியர்கள் உரிய முறையில் வாகனத்தில் ஏறி இறங்கும் பொழுது உதவி புரியும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளாரா, மாணவ, மாணவியர் வாகனத்தின் எளிதாக ஏறும் வகையில் படிக்கட்டின் முதல் படி தரையில் இருந்து 25 செ.மீ இல் இருந்து 30 செ.மீ;-க்குள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளதா, வாகன ஓட்டுநரின் இருக்கைப்பகுதி தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா, இருக்கைகள் முறையாக வாகனத்தின் தரைதளத்துடன் Bolts மூலம் பொருத்தப்பட்டுள்ளதா, புத்தகப்பைகள் வைத்திட தனியாக சுயஉமள அமைக்கப்பட்டுள்ளதா, வாகனத்தின் தரைத்தளம் முழுமையாக ஒன்றாக நல்ல தரத்துடன் பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்தின் பக்கவாட்டு ஜன்னல்கள் மாணவ, மாணவியர் கரம், சிரம் நீட்டாதவாறு, மூன்று நீளமாக கிடைமட்ட கம்பிகளால் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்தும், போதிய பராமரிப்பு உள்ளதா  போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விபத்தில்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக வாகனங்களில் அழைத்து சென்று வர வேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப.,அவர்கள் அறிவுறித்தினார்.மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  பொது மருத்துவ முகாம் மற்றும்; வாசன் கண் மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அதில், பள்ளி வாகனங்களுடைய ஓட்டுநர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மருத்துவர்கள் இலவசமாக இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள் மூலம் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தீயணைப்புத் துறை அலுவலர்கள் மூலம் அவசரகால தீ தடுக்கும் முறைகள் மற்றும் ஆபத்து ஏற்படும் போது செய்ய வேண்டியவைகள் என அனைத்தும் செயல்முறை விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.இந்த ஆய்வின் போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அசோகன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு.சந்திரசேகர், மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) திரு.சுப்புராஜ்,  துணை காவல் கண்காணிப்பாளர் திரு.யோகேஷ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.மாணிக்கம்(விருதுநகர்), திரு.சந்திரசேகர்(திருவில்லிபுத்தூர்), வேலுமணி(சிவகாசி), வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.சிவகுமார்(சாத்தூர்), திரு.கனகராஜ்(அருப்புக்கோட்டை), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு.செல்வராஜ், திருமதி செண்பகவல்லி, திருமதி பூர்ணலதா, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

May 14, 2025

விருதுநகர் மாவட்டம் “நான் முதல்வன்”; திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கம் மற்றும் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில்; இன்று(14.05.2025) நான் முதல்வன்; திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கையை 100 சதவிகிதம் உறுதி செய்யும் வகையில் கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை தெரிந்து கொள்வதற்காக, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழிகாட்டக்கூடிய பொறுப்பாசிரியர்கள் அனைவரும் உலக அளவில் இருக்கக்கூடிய சிறந்த உயர் கல்வி வாய்ப்புகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரிகள் சேர்ந்து உயர்கல்விகள் பெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்திலும் கல்லூரி கனவு என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, வாழ்க்கையின் மிக முக்கியமான அடுத்த கட்டத்திற்கு நுழைகிறீர்கள். கல்லூரி படிப்பு என்பது இன்றைக்கும் பலருக்கு ஒரு கனவாகவே இருக்கிறது.இந்திய அளவில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்வோரின்  எண்ணிக்கை சுமார் 32 விழுக்காடு ஆக இருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் ஏறத்தாழ 55 சதவீதமாக உள்ளது. நமது விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு இந்தியாவிலேயே அதிகமாக 95 சதவீதமானவர்களுக்கு மேல் உயர்கல்வியில் சேர்ந்திருக்கக்கூடிய ஒரு நிலையை எட்டி இருக்கிறோம்.இன்று பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறையாக கல்லூரிக்கு செல்கிறார்கள். கடந்த தலைமுறையினர்களில் கல்லூரி படிப்பை முடிப்பது என்பதை பெரிய கனவாக இருந்தது. அதனால் உயர்கல்விக்கு செல்லக்கூடிய வாய்ப்பு என்பது இந்த தலைமுறையினர்களுக்குதான் முதன் முதலாக கிடைத்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பது இப்பொழுது நமக்கு புரியாது.நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப எந்த இடத்தில் படிக்கவில்லை அல்லது குறைவாக படித்திருக்கிறோம் என்று எப்போது ஒரு இடத்தில் நாம் நிராகரிக்கப்படுகின்ற பொழுதுதான், படிப்பினுடைய அருமை தெரியும். அந்த நிகழ்ச்சி நடக்கின்ற பொழுது 5 முதல்  10 ஆண்டுகள் தள்ளி இருப்போம். திரும்பி பார்த்தால் மீண்டும் படிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும்.எனவே வாய்ப்புகள் என்பது இயல்பாக வருகின்ற பொழுது அதனுடைய முக்கியத்துவத்தை நாம் ஒருபோதும் உணர்வதில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்கிறோம் என்ற மிகப் பெரிய வாய்ப்பை நீங்கள் உணர்ந்து படிக்க வேண்டும்.இயல்பாக கிடைக்கக்கூடிய எந்த ஒன்றும், இயல்பாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் நமக்கு எவ்வளவு முக்கியமானது என்பது ஒருபோதும் உணர்வதில்லை. நீங்கள் அப்படி இருக்கக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில்தான் இந்த நிகழ்ச்சி.கல்லூரிக்கு செல்லக்கூடியது என்பது மிகப்பெரிய வாய்ப்பு. எல்லோரும் நிச்சயமாக உயர் கல்வி படிக்க வேண்டும். உயர் கல்வி படித்தால் நிறைய செலவு ஆகும் என்ற மனநிலை இருக்கிறது.அரசினுடைய மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவியர்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் உயர்கல்வி முடிக்கின்ற வரை மாதந்தோறும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு சமூகத்தின மாணவர்களுக்கும் அதற்குரிய கல்வி உதவி தொகை திட்டங்களும் இருக்கின்றன.நமது மாவட்டத்தில் விருதுநகர் கல்வி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையின் மூலம் எந்த உதவியும் கிடைக்க முடியாத வறுமை நிலையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறோம். இது போல நிறைய தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், உதவி மையங்கள் மாணவர்களின்  கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இயங்குகின்றனர்.இதை நீங்கள் கொஞ்சம் தேடிப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நமது மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.தற்போது உயர் கல்விக்கு இவ்வளவு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வாய்ப்புகள் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. எனவே உங்கள் காலகட்டங்களில் இருக்கும் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் இருக்கக்கூடிய பேரா மெடிக்கல் துணை மருத்துவ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மட்டுமே படிக்க வேண்டும்.நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருந்து நமக்கான வாய்ப்புகளை எவ்வாறு பெற முடியும் என்பதை யோசித்தீர்கள் என்றால் தமிழ்நாடு முழுவதும் சிறந்த வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 100 சதவிகிதம் நிச்சயமாக அனைவரும் கல்லூரியில் சேர வேண்டும். நமது மாவட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட கல்வி உதவி மையம் செயல்பட்டு வருகிறது.எனவே, மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று, தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உலகளாவிய வாய்ப்புகள், படிப்புகள், கல்லூரிகள்;, வேலை வாய்ப்புகள் குறித்து விரிவாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட அரசுக் கல்லூரியில் 650 மாணவர்கள், கலசலிங்கம் பல்கலைகழகத்தில் 550 மாணவர்களும் என பல்வேறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

May 14, 2025

விருதுநகர் மாவட்டத்தில் 15.05.2025 முதல் வருவாய்த்தீர்வாயம் (ஜமாபந்தி) துவங்க உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் 1434-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) 2025-ம் ஆண்டு மே 15-ந் தேதி முதல் மே 16-ந் தேதி வரை, மே 20-ந் தேதி முதல் மே 22-ந் தேதி வரை மற்றும் மே 27-ந் தேதி முதல் மே 28-ந் தேதி வரை உள்ள நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில்  நடத்தப்பட உள்ளது.அதன்படி, சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 15.05.2025, 16.05.2025 17.05.2025, 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட  வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும்  27.05.2025 ஆகிய 7 தினங்களும்,இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தலைமையில்15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,சாத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்களும்,அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும்  27.05.2025 ஆகிய 7 தினங்களும்,காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில்,15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 ஆகிய 6 தினங்களும்,வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், விருதுநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அவர்கள் தலைமையில்,15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 நாட்களும்,திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆணையர்(கலால்) அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 முதல் 28.05.2025 ஆகிய 8 தினங்களும்,திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்களும்,வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில், தாட்கோ மாவட்ட மேலாளர் அவர்கள் தலைமையில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்களும் நடைபெறவுள்ளது.எனவே, வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறும் தினங்களில் தொடர்புடைய கிராம நில உடைமைதாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள், பட்டா மாறுதல், நில ஒப்படை, நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் பொதுமக்கள் நேரில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 13, 2025

சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையத்தில், குழந்தைகளுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் 1098 குழந்தைகள் உதவி மையம்(Child Help Desk)

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தைகளுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் 1098 குழந்தைகள் உதவி மையத்தினை(Child Help Desk) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,  அவர்கள் இன்று(13.05.2025) திறந்து வைத்தார்.குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலமாக குழந்தைகள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் 1098 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 01.08.2023 அன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிவகாசி பேருந்து நிலையத்தில் குழந்தைகளுக்கான  உதவி மையம்  இன்று   திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த மையம் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக குழந்தைகள் உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.குழந்தை திருமணம், குழந்தைத்தொழிலாளர், பாலியல் வன்கொடுமை, பள்ளி குழந்தைகள் பள்ளி இடைநிற்றல், போதை பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள், வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக கூடிய சூழ்நிலையில் உள்ள குழந்தைகள், கல்வி உதவி தேவைப்படும் குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகள் நலம் சார்ந்த புகார்களை அல்லது உதவிகளை  குழந்தைகளுக்கான உதவி எண் 1098 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.அவ்வாறு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், இம்மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அழைப்பு வரப்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட குழந்தையை நேரில் சந்தித்து, இம்மைய பணியாளர்கள் தேவையான உதவிகளை மேற்கொள்வார்கள்.எனவே, பொதுமக்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான உதவிகளுக்கு இம்மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு.சரவணன்,  மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி மற்றும் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் திரு.லட்சம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

May 13, 2025

அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) தொழில் புரிய மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ் அரசு 2025 ஆம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC/ST)  தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் (ANNAL AMBEDKAR BUSINESS CHAMPIONS SHCEMES (AABCS)) என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் (SC/ST)  தொழில் தொடங்கும் ஆரம்ப அமைவு கட்டத்தில் எதிர்கொள்ளும் நிதிச்சுமையை தணிப்பது மற்றும் தேவையான வளங்களைப் பெறுவதை எளிதாக்குவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். மேலும் தொழில் முனைவோர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.இத்திட்டத்தில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35 சதவீத மூலதன மானியமும் 6 சதவீத வட்டி மானியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள இத்திட்டத்தில் வழிவகை இல்லை.இத்திட்டத்தில் புதிய தொழில் ஆரம்பிக்கவும் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் தொழில்களின் விரிவாக்கத்திற்கும் மானிய கடனுதவி வழங்கப்படும். வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு இயந்திரங்கள், நிலம், சோதனைக்கருவிகள், மற்றும் கணிணி சார்ந்த பொருட்கள் வாங்கவும் இத்திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். இதுவரை இத்திட்டத்தில் 69 பயனாளிகளுக்கு ரூ.458.37 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.மேற்காணும் திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கை, விலைப்பட்டியல் மற்றும் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in/aabcs  என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து பயனடையுமாறு விருதநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பொது மேலாளர் அலுவலகம் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது 89255-34036 என்ற தொலைபேசியிலோ கூடுதல் விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

May 13, 2025

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ரூ.1.71 கோடி மதிப்பிலான மோட்டார் இருசக்கர வாகன இணைப்பு சக்கரம் வழங்கியுள்ளது

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆனந்தா கார்டன் திருமண மண்டபத்தில் இன்று (13.05.2025) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர்  திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், 161 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000/- வீதம் மொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அவர்களது வாழ்வில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை, ரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுய தொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவிலான விருதுகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.அதனடிப்படையில், இன்று 161 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000- வீதம் மொத்தம் ரூ.1.71 கோடி  மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.நமது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பணிகளுக்கு செல்கிறார்கள்.  அவர்கள் பணிகளுக்கு செல்வதற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்கள் மிகவும் முக்கியான ஒன்றாக உள்ளது. 

May 13, 2025

"Coffee With Collector” என்ற 177-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (13.05.2025) சிவகாசி, செண்பக விநாயகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 32-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 177- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 177-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த சந்திப்பில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

May 13, 2025

கணினிமயமாக்கப்பட்டுள்ள நில ஆவணங்களில், பட்டா பெயர் மாற்றம் செய்ய உரிய ஆணவங்களுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https//eservices.tn.gov.in/  என்ற இணையதளத்தின் வாயிலாக பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என விருதுநகர்  மாவட்ட பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 12, 2025

புதிய அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில்  அருங்காட்சியங்கள் துறை சார்பில் புதிய அருங்காட்சியகம்  ரூ.6.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதை   மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (12.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு, பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.அருங்காட்சியகத்தின் பயனை தொலைவில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் பெற வேண்டும் என்கின்ற தமிழக அரசின் உயரிய நோக்கத்துடன் 23 மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு மாவட்டத்தின் நிலவியல், தொல்லியல், வரலாறு, கலை, பண்பாடு, கனிம வளங்கள், இயற்கை அமைப்புகள், தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் இவற்றை ஒரே இடத்தில் அறிந்து கொள்கின்ற நல்வாய்ப்பினை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்குகின்ற இடமாக மாவட்ட அருங்காட்சியகங்கள் திகழ்கின்றது.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அருங்காட்சியம் அமைத்தல் என்ற அரசின் சீரிய நோக்கத்தினை செயல்படுத்தும் விதத்தில் அருங்காட்சியகங்கள் துறை செயல்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில், அரசு அருங்காட்சியகம் 10.03.2001 அன்று தோற்றுவிக்கப்பட்டது. தற்சமயம்  விருதுநகரில் அரசு அருங்காட்சியகம்  வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இங்கு தொல்லியல், வரலாறு, புவியியல், இயற்கை வரலாறு, மானுடவியல், உயிரியல் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் புகைப்படங்கள் எனப் பல்வகை பிரிவுகளைச் சார்ந்த சுமார் 1200 அரும்பொருட்கள் காட்சிக் கூடங்களிலும் (Showcases) அருங்காட்சியக இருப்பிலும் (Reserve Collection) உள்ளன.வாடகைக் கட்டிடத்தில் இயங்கிவரும் அருங்காட்சியகத்தை சொந்தக் கட்டிடத்தில் மாற்றியமைக்கவும், இருப்பில் உள்ள அனைத்து அரும்பொருட்களையும் காட்சிப்படுத்திடவும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என அனைவரும் எளிதில் வந்து செல்லக்கூடிய முக்கியமான இடத்தில் அமைக்க வேண்டிய கோரிக்கையின் அடிப்படையில்  விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில் அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கு சுமார் 2 ஏக்கர்  நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.6.8 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த புதிய அருங்காட்சியக கட்டடத்தில் தரை தளத்தில் 6 காட்சி கூடங்கள், முகவுரை காட்சி கூடம், அரசியல் தொடர்பான காட்சி கூடம், முந்தைய வரலாற்று காட்சி கூடம், நாணயவியல் காட்சி கூடம், ஆய்தவியல் காட்சி கூடம், இசை மற்றும் கலை தொடர்பான காட்சி கூடம் மற்றும் 2 கல்வெட்டு காட்சி கூடங்களும், முதல் தளத்தில் சிறப்பு கண்காட்சி பகுதி, நிர்வாக அறை, குழு அறை,  கண்காணிப்பாளர் அறையும்,  இரண்டாம் தளத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் வைப்பு அறையும் மொத்தம் 17,409 சதுரடி பரப்பளவில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியக கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று(12.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், தற்போது விருதுநகரில் செயல்பட்டு வரும் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், அரும்பொருட்கள், அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

May 12, 2025

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 13.05.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,  அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 2 ... 87 88 89 90 91 92 93 ... 121 122

AD's



More News