விருதுநகர் மாவட்டம் “நான் முதல்வன்”; திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கம் மற்றும் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில்; இன்று(14.05.2025) நான் முதல்வன்; திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கையை 100 சதவிகிதம் உறுதி செய்யும் வகையில் கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை தெரிந்து கொள்வதற்காக, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழிகாட்டக்கூடிய பொறுப்பாசிரியர்கள் அனைவரும் உலக அளவில் இருக்கக்கூடிய சிறந்த உயர் கல்வி வாய்ப்புகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரிகள் சேர்ந்து உயர்கல்விகள் பெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்திலும் கல்லூரி கனவு என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, வாழ்க்கையின் மிக முக்கியமான அடுத்த கட்டத்திற்கு நுழைகிறீர்கள். கல்லூரி படிப்பு என்பது இன்றைக்கும் பலருக்கு ஒரு கனவாகவே இருக்கிறது.
இந்திய அளவில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை சுமார் 32 விழுக்காடு ஆக இருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் ஏறத்தாழ 55 சதவீதமாக உள்ளது. நமது விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு இந்தியாவிலேயே அதிகமாக 95 சதவீதமானவர்களுக்கு மேல் உயர்கல்வியில் சேர்ந்திருக்கக்கூடிய ஒரு நிலையை எட்டி இருக்கிறோம்.இன்று பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறையாக கல்லூரிக்கு செல்கிறார்கள். கடந்த தலைமுறையினர்களில் கல்லூரி படிப்பை முடிப்பது என்பதை பெரிய கனவாக இருந்தது. அதனால் உயர்கல்விக்கு செல்லக்கூடிய வாய்ப்பு என்பது இந்த தலைமுறையினர்களுக்குதான் முதன் முதலாக கிடைத்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பது இப்பொழுது நமக்கு புரியாது.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப எந்த இடத்தில் படிக்கவில்லை அல்லது குறைவாக படித்திருக்கிறோம் என்று எப்போது ஒரு இடத்தில் நாம் நிராகரிக்கப்படுகின்ற பொழுதுதான், படிப்பினுடைய அருமை தெரியும். அந்த நிகழ்ச்சி நடக்கின்ற பொழுது 5 முதல் 10 ஆண்டுகள் தள்ளி இருப்போம். திரும்பி பார்த்தால் மீண்டும் படிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும்.
எனவே வாய்ப்புகள் என்பது இயல்பாக வருகின்ற பொழுது அதனுடைய முக்கியத்துவத்தை நாம் ஒருபோதும் உணர்வதில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்கிறோம் என்ற மிகப் பெரிய வாய்ப்பை நீங்கள் உணர்ந்து படிக்க வேண்டும்.
இயல்பாக கிடைக்கக்கூடிய எந்த ஒன்றும், இயல்பாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் நமக்கு எவ்வளவு முக்கியமானது என்பது ஒருபோதும் உணர்வதில்லை. நீங்கள் அப்படி இருக்கக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில்தான் இந்த நிகழ்ச்சி.
கல்லூரிக்கு செல்லக்கூடியது என்பது மிகப்பெரிய வாய்ப்பு. எல்லோரும் நிச்சயமாக உயர் கல்வி படிக்க வேண்டும். உயர் கல்வி படித்தால் நிறைய செலவு ஆகும் என்ற மனநிலை இருக்கிறது.அரசினுடைய மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவியர்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் உயர்கல்வி முடிக்கின்ற வரை மாதந்தோறும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு சமூகத்தின மாணவர்களுக்கும் அதற்குரிய கல்வி உதவி தொகை திட்டங்களும் இருக்கின்றன.நமது மாவட்டத்தில் விருதுநகர் கல்வி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையின் மூலம் எந்த உதவியும் கிடைக்க முடியாத வறுமை நிலையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறோம். இது போல நிறைய தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், உதவி மையங்கள் மாணவர்களின் கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இயங்குகின்றனர்.
இதை நீங்கள் கொஞ்சம் தேடிப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நமது மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.தற்போது உயர் கல்விக்கு இவ்வளவு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வாய்ப்புகள் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. எனவே உங்கள் காலகட்டங்களில் இருக்கும் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் இருக்கக்கூடிய பேரா மெடிக்கல் துணை மருத்துவ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மட்டுமே படிக்க வேண்டும்.நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருந்து நமக்கான வாய்ப்புகளை எவ்வாறு பெற முடியும் என்பதை யோசித்தீர்கள் என்றால் தமிழ்நாடு முழுவதும் சிறந்த வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 100 சதவிகிதம் நிச்சயமாக அனைவரும் கல்லூரியில் சேர வேண்டும்.
நமது மாவட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட கல்வி உதவி மையம் செயல்பட்டு வருகிறது.எனவே, மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று, தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உலகளாவிய வாய்ப்புகள், படிப்புகள், கல்லூரிகள்;, வேலை வாய்ப்புகள் குறித்து விரிவாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட அரசுக் கல்லூரியில் 650 மாணவர்கள், கலசலிங்கம் பல்கலைகழகத்தில் 550 மாணவர்களும் என பல்வேறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply