சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையத்தில், குழந்தைகளுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் 1098 குழந்தைகள் உதவி மையம்(Child Help Desk)
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தைகளுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் 1098 குழந்தைகள் உதவி மையத்தினை(Child Help Desk) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று(13.05.2025) திறந்து வைத்தார்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலமாக குழந்தைகள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் 1098 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 01.08.2023 அன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிவகாசி பேருந்து நிலையத்தில் குழந்தைகளுக்கான உதவி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக குழந்தைகள் உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம், குழந்தைத்தொழிலாளர், பாலியல் வன்கொடுமை, பள்ளி குழந்தைகள் பள்ளி இடைநிற்றல், போதை பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள், வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக கூடிய சூழ்நிலையில் உள்ள குழந்தைகள், கல்வி உதவி தேவைப்படும் குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகள் நலம் சார்ந்த புகார்களை அல்லது உதவிகளை குழந்தைகளுக்கான உதவி எண் 1098 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
அவ்வாறு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், இம்மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அழைப்பு வரப்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட குழந்தையை நேரில் சந்தித்து, இம்மைய பணியாளர்கள் தேவையான உதவிகளை மேற்கொள்வார்கள்.
எனவே, பொதுமக்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான உதவிகளுக்கு இம்மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு.சரவணன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி மற்றும் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் திரு.லட்சம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply