நல்ல விஷயத்திற்கு மனசாரப் பாராட்டுங்கள்
பாராட்டுங்கள் எந்த வயதினை உடையவராக இருப்பினும் திறமையாகச் செய்தால் ஆச்சரியமாக இருக்கும். இந்தச் சின்னக் குழந்தையா இப்படிப் பேசுகிறது என்று ' வெரிகுட் பாய்' 'கெட்டிக்காரப் பொண்ணு' என்று மனம் திறந்து பாராட்டுகிறோம். அதே மாதிரி போட்டியில் வெற்றி பெற்றாலோ, படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினாலோ, எத்தனை பேர் பாராட்டுகின்றனர்.ஒரு பெரிய சபையில் மிக நன்றாக பேச்சுத் திறமை மிக்க ஒருவர் பேசினாலோ அனைவரும் ரசிக்கிறோம். 'பிரமாதம்' என்கிறோம். ஆனால் அதைப் போய் திறம்பட பேசியவரிடம் எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்றால் 100 ல் ஒருவர் தான். சரி வீதி வீதியாகச் சென்று நல்ல விஷயங்களை மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் எடுத்துச் சொல்பவர்களை ஆயிரத்தில் ஒருவர்தான் பாராட்டுகின்றனர்.
சரி, நடந்து விட்டதையும், இப்பொழுது நடப்பதையும், இதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றியும் பேசுபவர்களை லட்சத்தில் ஒருவர்தான் புகழ்கின்றனர். மற்றவர்கள் திறனைக் கண்டு புகழ்வதுடன், பரிசினையும் கொடுப்பவர்கள் கோடியில் ஒருவர்தான். பலருக்கு பொறாமைப்படத்தான் தெரிகிறது. ஆமா, என்னமோ செஞ்சுட்டான், பேசுறான்,பரவாயில்லை இவன் பேசி என்னத்தை 'ஜனங்க கேக்கப் போறாங்க' ஏதோ நடக்குது என்று வந்தோமா, கேட்டோமா என்று அலட்சியமாக போய்க்கிட்டே இருப்பவர்கள் அதிகம் பேர்.
ஏன் பாராட்ட மனம் வரவில்லை, அது ஒரு பெரிய வேலையா ? 45 வயதிற்குப் பிறகு ஒரு துறையில் பிரகாசிப்பவர்களைப் பார்த்து 'உன்னுடைய திறமை இத்தனை நாளா, எங்கய்யா பதுக்கி வச்சுட்டே 'பிரமாதம்' ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மேலும், மேலும் 'வளரணும்' ஐயா, 'வளரணும்' என்று மனம் திறந்து பாராட்டும் பொழுது கேட்பவர்கள் தங்களுடைய திறமைகளை இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொண்டு ஜொலிப்பார்கள்.
சாதாரண சமையலை எடுத்துக் கொள்ளுங்கள் உப்பு, காரம், கூடுதலாகி விட்டால் தடால், புடால், என்று குதிக்கின்றனர். அப்படி சுத்தாமல் உப்பு, காரம், கொஞ்சம் குறைச்சா இன்னும் சூப்பரா இருக்கும். புளிப்பு கொஞ்சம் கூட்டினா ரெம்ப நல்லா இருக்கும் என்று கூறுங்கள். அப்புறம் என்ன ? சமையல் நளபாகம் தான். சமையல் சூப்பர் தான், எல்லோரும் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். ஏன் கடவுளையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரைப் பற்றிமனம் உருகிப் பாடி அவர்களுக்கு மரியாதை செய்து அவர்களுடைய பெயரை ஆயிரம் விதமாக பாராயணம் செய்து கடவுளின் சிறப்பை எடுத்துக் கூறி பாராட்டினால் கடவுளின் மனம் குளிர்ந்து அருள்பாலிப்பாள் என்ற நம்பிக்கை உண்டா ? இல்லையா ? இருக்கே !
எத்தனையோ பெயர்களின் வடிவில் பாராட்டிக் கொண்டே தான் இருக்கிறோம். அந்தந்த கடவுளுக்குப் பிடித்த வில்வமோ, துளசியோ, அருகம்புல்லோ, புஷ்பமோ தூவி இறைவனின் திருநாமங்களைக் கூறி அர்ச்சிக்கிறோம். இப்படிப் படித்தால் 'யஹ்படேத் சிவ சன்னி தௌ சிவனெ' என்று சிவன் பாராட்டைக் கேட்டு மனம் குளிர்ந்து அருள் தருவார் என்று புஸ்தகத்திலேயே இருக்கிறதல்லவா ? ஆக பாராட்டுங்கள்.
நல்ல விஷயங்களைப் பாராட்டுவதற்கு தயங்கவே கூடாது. இப்படிப் பாராட்டுவதால் நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. பாராட்டைப் பெறுபவர்களுக்கும் ஆனந்தம் பொங்குகின்றது. பணத்திற்காக பதவிக்காக பாராட்டுபவர்கள் தனி இனம், இதை அலட்சியம் செய்வதில் தவறே இல்லை.குழந்தைகளை பாராட்டுக்கள் அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வாழ்வில் சிறந்தவராவார்கள் .மனைவியை பாராட்டுக்கள் அவர் இன்னும் அன்பாக நடந்து கொள்வார். கணவனை பாராட்டுக்கள் குடும்பத்திற்காக இன்னும் அக்கறையுடன் உழைப்பார். உறவினர்களை பாராட்டுக்கள் சுற்றம் பெருகும் உதவிகள் உயரும் .நண்பர்களை பாராட்டுக்கள் உண்மையான நட்பு பெருகும். உங்களுக்காக எதையும் செய்ய முன்வருவார்கள். மாணவர்களைப்பாராட்டுங்கள்அவர்கள்இன்னும் திறமையானவர்களாக ஜொலிப்பார்கள். பாராட்டு என்பது சாதாரணமானவரையும் சாதனையாளராக்கும்.
பாராட்டுவதற்கு நல்லமனம் மட்டுமே வேண்டும், தாராளமாகப் பாராட்டுங்கள். இந்த பழக்கத்தை நம் வருங்காலக் குழந்தைகளிடமும், ஏற்படுத்த வேண்டும். இப்படிப் பாராட்டுவதால் பொறாமை என்ற கெட்ட குணம் அறவே அழிந்து விடும். எல்லோரும் பாராட்டக் கத்துக்கிடனும், எதற்கு? நல்ல விஷயத்திற்குதான் ஆக மனசாரப் பாராட்டுங்கள்.
0
Leave a Reply