கனவு மெய்ப்பட வேண்டும்
மதிப்பிற்குரிய அப்துல்கலாம் ஐயா அவர்கள்” கனவு காணுங்கள்என்று சொல்கிறார். அதைத் தவறாக எடுத்துக் கொண்டவர்கள், எத்தனை பேர்.? நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு தூங்குகிறார்கள்.” ஆனா கனவே வர மாட்டேன் என்கிறதே” பலர் வருத்தப்படுகிறார்கள்.கலாம் ஐயா, அவர்கள் சொன்ன கனவு என்ன என்று தெரியுமாவாழ்க்கையில் ஓர் லட்சியம், குறிக்கோள் வேண்டும் அதைப்பற்றிக் கனவு காண வேண்டும். எந்தக் கனவு நம்மைத் தூங்க விடாமல் செய்யுமோ, அந்த லட்சியக் கனவைக் காணும்படி கூறியிருக்கிறார். இக் கனவை நிஜமாக்கிப் பார்க்க, எதையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதில் தவறே இல்லை. அது சராசரி மனிதனுக்கு வரும் சுயநலம் சார்ந்த ஆசை. அப்படிப்பட்ட ஆசை யதார்த்தமானது. சாப்பாட்டிற்கு, குடியிருக்க வீடு, வெளியில் சென்று வருவதற்கு வாஹனம் என்று ஆசைப்பட்டு சம்பாதிப்பதில் தவறு இல்லை.
யானைக்குத் தன் பலம் தெரியாததால் யானைப் பாகன் சொல்வதையும், சர்க்கஸ் மாஸ்டர் சொல்வதையும் கேட்டு அதன்படி அடக்கமாக வேலை செய்கிறது. தன்பலம் தெரிந்தால் சும்மா விடுமா! இது எதை ஞாபகப்படுத்துகிறது லட்சியம் இல்லாத மனிதர்களின் நடைப் பயணங்கள் மாதிரி.வித்தியாசமான சிந்தனை. அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பொழுது,, அது கடவுள் குற்றமாகிவிடுமோ கடவுளுக்குச் செய்த துரோகமாக மாறி விடுமோ! என்று எல்லாவற்றையும் மதத்துடன் இணைப்பது பெருந்தவறு,” நம்ம ஜாதியிலே இந்த மாதிரி யாருமே தொழில் செய்ததில்லையே”, என்று மதம் தாண்டி சிந்திப்பதில்லை.சரி எல்லாவற்றையும் மறந்து ஒரு லட்சியத்தை குறிக்கோளை, நம்பிக்கையுடன் செயல்படுத்த நினைக்கிறோம். நம்பிக்கை என்ற சின்ன செடி வளர்கிறது. அச்செடியை ஆடுகள் மேய்ந்து விடுவதைப் போல யாராவது அந்த நம்பிக்கைக்கு ஒரு பிரேக் போட்டால் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் அது வளர்ந்து பெரியதாகி, எந்த ஆடு மேய்ந்ததோ, அதுவே அந்த மரத்தின் நிழலில் ஒதுங்கும்.
எந்த ஒரு செயலுக்கும் குடும்பத்தின் ஒத்துழைப்பு கண்டிப்பாக வேண்டும். அவரவர்கள் அவரவர்களுடைய விருப்பப்படி செய்வதற்கு ,ஆவண உதவிகள் செய்யாவிட்டாலும், உபத்ரவம் செய்யக்கூடாது. “என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டீங்களே” ! என்று அங்கலாய்ப்பதை விட்டொழித்து ,அன்பினால் அனைவரையும் கட்டிப் போட்டு விடலாம். அரவனைத்துக் கொள்ளலாம். நம்பிக்கை, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு, மூன்றாவதாக மற்றவர்களின் விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளவே கூடாது.'வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா'நம்முடைய எதிரிகள் தான் நம்மை அழிக்க வேண்டும் என்றில்லை. உங்களை உங்களவர்களே அழிக்கத் திட்டம் போடுவார்கள். அதற்கும் அஸ்திரம் தயாராக வைத்திருக்க வேண்டும்.
பணம் சம்பாதித்தாகிவிட்டது. தனக்கென்று ஒரு வீடு, வாஹனம், சாப்பாட்டிற்கு குறைவே இல்லை. தன்னுடைய லட்சியம் என்ற குறிக்கோளை அடைந்து விடுகிறான். வாழ்க்கை இனிக்கிறது. அப்பொழுது அவனுக்கு பேராசை ஏற்படுகிறது. இன்னொரு வீடு, நிலங்கள், தங்கக் கட்டிகள் என்று சேர்ந்து வைக்க ஆரம்பிக்கின்றனர். இந்தப் பேராசையினால் நிம்மதி கெடுகிறது.அதிகமாக வரும் செல்வத்தை பொதுநலம் சார்ந்த நிறுவனங்களுக்காக செலவழிக்கலாம்.நம்பிக்கை, லட்சியம், குடும்பத்தினர் ஒத்துழைப்பு, நல்ல விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது விதண்டாவிதமான விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது. பேராசையை விட்டொழிப்பது. நம் முன்னேற்றத்தில் தடைக்கற்கள் போடும் எதிரிகளை அன்பினால் வசப்படுத்துவதுபோன்றவற்றை செய்வதால் என்ன ஆகும். நம்முடைய கனவு மெய்ப்படும்.'முடிந்ததை முடிப்பவர்கள் முடிவெடுப்பவர்கள். முடியாததை முடிப்பவர்கள் முடி சூடுவார்கள்'
ஒரு பறவையை எடுத்துக் கொண்டால் தனக்கென்று ஒரு கூட்டைத் தான் கட்டிக் கொள்ளும் பறவை ஒரு நாளும்“இரண்டு மூன்று கூட்டைக் கட்டிக் கொள்வோம்” என்று நினைத்ததே இல்லை. இது இயற்கை நமக்குச் சொல்லும் பாடம்.குரங்கினை கவனித்துப் பாருங்கள். ஒரு க்ஷண நேரம் கூட சும்மா இருப்பதில்லை. அப்படியே உட்கார்ந்தாலும் தலையில் பேன் எடுத்துக் கொண்டிருக்கும். ஏன் என்றால் அதற்குள்ள சக்தியை இப்படி அலைந்து தான் வீணாக்க முடியும். குரங்கிலிருந்து வந்த மனிதர்களுக்கு அதே சக்தியைத் தான் கொடுத்திருக்கிறார். கடவுள். அதை ஒழுங்குபடுத்தும் திறமை உள்ளவர்களால் மட்டுமே தங்களுடைய லட்சியக் கனவுகளை மெய்ப்படுத்த முடியும்.
0
Leave a Reply