பாசம் எங்கே சென்றது ?
ஒரு குடும்பம் என்பது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதற்கும், அன்பைப் பொழிவதற்கும், பாசம் என்பதற்கு ஒரு கூடாரமாகவும் இருகின்றது. அம்மா, அப்பா, 2 குழந்தைகள் சந்தோஷமான குடும்பம், பெற்றோர்கள் மீது குழந்தைகளும், குழந்தைகள் மீது பெற்றோரும், 2 குழந்தைகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதும், அடுத்த நிமிடமே பாசம் பொழிவதும் ஒரே அன்பு மழைதான்.
ஆனால் இவை எத்தனை ஆண்டுகள் நீடிக்கின்றன. ஒரு குடும்பம், 2 குடும்பம், 3 குடும்பமாக மாறும் பொழுதுதான் பிரச்சனை உருவாகிறது. அவளுக்கு மட்டும் ரெம்ப விலை டிரஸ், எனக்கு கொஞ்ச விலை டிரஸ், ஏம்மா ? எனக்கு 2 லட்டு அவனுக்கு மட்டும் 3 லட்டா ? என்ற சண்டைகள் எல்லாம் சுமூகமாக தீர்ந்து நம்ம அண்ணன் தானே ? நம்ம தங்கச்சி தானே ? என்ற பாசம், கோபத்தை 'ஸ்வாஹா' செய்து விடுகிறது.
குடும்பம் பெரிதாகி அவரவர்களுடைய வீடு, தன் மனைவி, தன் கணவன், குழந்தைகள் என்று பிரியும் பொழுது இந்த சொத்து எனக்கு என்று நினைத்தேனே ? என்ற ஏமாற்றம் ,பகையுணர்ச்சியுடன் கூடிய பொறாமை வளர்ந்து ,ஜென்ம பகையாளராக மாறி, கோர்ட் கேஸ் என்று அலைகின்றனர்.
சரி பாதியாக ,எடுத்துக் கொள்ளச் சட்டம் இருப்பினும் எத்தனைபேர் ஏமாந்து விடுகின்றனர். தனக்கு சேர வேண்டியதை அண்ணனோ, தம்பியோ, தமக்கையோ, கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மண் அள்ளிப்போடுகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு எழுதி வைக்கின்றனர். நான் என்ன ஏமாளியா ? சும்மா விடமாட்டேன் என்று ஏமாற்றப்பட்ட குழந்தைகள் பெற்றோர்களிடம் முறையிட்டு வருத்தப்படும் பொழுது, வயோதிகத்தால் என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள் என்று ஆதங்கப்படத்தான் செய்கிறார்களே ஓழிய, வேறொன்னும் செய்வதற்கு இயலாமல் போய் விடுகிறது. கோபம் பெற்றோரிடம் திரும்புகிறது. அப்புறம் கோர்ட், கேஸ்தான்.
எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்த தன் சம்பாத்தியத்தை கடைசி காலத்தில் ,நம் கண்ணெதிரே உயிருக்குயிராய் நேசித்த குழந்தைகள், சண்டைபோட்டுக் கொள்வதை காணச் சகிக்குமா ? ஏன்தான் சம்பாதித்தோமோ ? பேசாமல் இருந்திருக்கலாம்.
இப்படி தாய், தந்தையர் சொத்துக்காக சண்டை போடுவதைப் பார்த்து ,பிள்ளைகளுக்கு நிச்சயமாக சம்பாதிக்கும் ஆசை போய் விடும். அப்படியே சம்பாதித்தாலும் சேர்த்து வைக்கும் பழக்கத்தை விட்டு விடுவார்கள். தங்களுக்கு மட்டும் வைத்துக் கொண்டு மீதிப் பணத்தை செலவழித்து விடுவார்கள். சிக்கனமா ? நோ சான்ஸ்!
ஐந்துதலை நாகப் பாம்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். பாம்பிற்கு உடம்பு ஒன்றுதான் இருக்கும். தலைகள் மாத்திரம் 5 இருக்கும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஐந்து குழந்தைகளும் ஒன்றுதான் .அதை உணராமல் சண்டை போட்டுக் கொள்கின்றனர் .சண்டை போடாமல் சுமூகமாகப் பேசி உங்கள் பிரச்சனைகளை கோபப்படாமல் நிறுத்தி, நிதானமாக எடுத்துரைத்து ,அவரவர்களுடைய பங்கினை சாமார்த்தியமாகப் பெறுவதே நல்ல முடிவு.
சகோதரர்களிடமோ, சகோதரிகளிடமோ, சண்டை போட்டு வாங்கும் சொத்துக்கள் நாம் இருக்கும் வரைதான் நம்முடையது .அது கூட பெண்ணோ, பையனோ, தன் பிள்ளைகள் பெயரில் எழுதி வாங்கி விடுவார்கள். எப்படியும் நம் வாரிசுகளுக்குத்தான் செல்லும், நமக்கு வர வேண்டியவை வராமல் ,ஏமாற்றப்பட்டு விட்டால் நம் வாரிசுகள் யாருக்கேனும், எந்த வழியிலாவது வந்து சேரத்தான் செய்யும். அதில் சந்தேகமே இல்லை. வாரிசுகளுக்குத்தானே மூன்றாவது தலைமுறைகளுக்கு வந்து எந்த விதத்திலாவது வந்து சேர்ந்து விடும்.
அதைத் தவிர்த்து காலமெல்லாம் கோர்ட்டிற்கு அலைவதில் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. அப்படி முடியவில்லை என்றால் பேசாமல் விட்டு விடுவது நல்லது. மேலே இருக்காரே உலக கோர்ட் ஜட்ஜ் அவர் பார்த்துப்பார். சேர வேண்டியவர்களுக்கு எந்த வழியிலாவது வரும். பாசம் உங்களிடம் இருப்பதா ? இல்லையா ? என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
0
Leave a Reply