கதவுகள் இல்லா உலகம்
கதவுகள் இல்லா உலகம் உலகத்திற்கு ஏது கதவு ? என்கிறீர்களா ! எந்த ஒரு காரியத்திற்கும் தடுப்பு என்ற கதவு இல்லாவிட்டால் என்ன ஆகும். " திறந்த வீட்டில் நாய் நுழைவது போல் கண்டபடி கெட்டு விடும் இல்லையா ?
குடிசை வீடாக இருந்தாலும் ,ஓட்டை ஒடிசலான நகரக் கதவினால் ,கயறு வைத்துக் கட்டியாவது ,கதவு என்ற தடுப்பை ஏற்படுத்துகின்றனர். இல்லாவிட்டால் கஞ்சித் தண்ணீரில் ஊற வைத்த, இத்துணூண்டு சாதத்தை நாய் நக்கி விட்டு சென்று விடுமே,அதற்கு ஒரு தகரக் கதவு.
சின்ன நூலகமாக இருந்தாலும் அதற்கு என்று சில விதிமுறைகள். கதவு போல இருந்தால் தான் அந்த நூலகத்தில் இருக்கும் புஸ்தகங்களை பாதுகாக்க முடியும். வருடத்திற்கு கட்டணம் இவ்வளவு புஸ்தகத்தை எடுத்துச் சென்றால் புஸ்தகம் கிளியாமல் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறையோ, வாரம் ஒரு முறையோ மாற்ற வேண்டும். விதிமுறைகள் (என்ற தடுப்பு) இருந்தால் தான் நூல்களை அனைவரும் படிக்க முடியும். பாதுகாக்க முடியும். அதைத் தவிர்த்து யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம், வரலாம் என்றால் என்ன ஆகும்.
நம் நாட்டில் பலருக்கு தடுப்பு என்ற கதவுகள் பிடிப்பதே இல்லை. தேசத்தைப் பாதுகாக்க அரசாங்கம் விதித்துள்ள சட்டங்களை கடைபிடிப்பதற்கு யாராலும் முடிவதில்லை. ஏன் அரசியல் வாதிகளே கடைபிடிப்பதில்லை. சாலை விதிகளையோ, வாகன விதிகளையோ, சுகாதார விதிகளையோ மதிப்பதே இல்லை. குளம், குட்டை, ஆறு போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்பதை உணர்வதே இல்லை.
எங்கு வேண்டுமானாலும் போஸ்டர் ஒட்டுவது, நடு ரோட்டில் காரித்துப்புவது. குப்பைகளை எறிவது, எரிப்பது, வாஹனங்களை வரும் வழியில் நின்று சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதும் எதைக் கூறுகின்றன. கதவுகள் இல்லாத வீட்டைப் போல, சட்டங்களை கடைபிடிக்காத மனிதர்கள், நம் நாட்டை கதவுகள் இல்லாத நாடாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்,. என்பதை சொல்லாமல் செய்கின்றனர்.
அரசியல் செய்வதற்கு நாடு, மாத்திரம் போதாது, கோட்டை, கொத்தளங்கள் வலிமையாக இருந்தால் மட்டும் ப்ரயோசனம் இல்லை. ஆயுதங்கள் குவிந்து கிடந்தாலும், ராணுவம் அதிகமாக இருந்தும் புண்ணியம் இல்லை. ஆட்சி செய்யும் அரசியலில் ஒழுங்கு,நேர்மை தவறாமல் இருந்தாக வேண்டும். அந்த அரசியலில் ஒழுங்கு இல்லாவிட்டால் அந்த நாடு கதவுகள் இல்லாத நாடாக மாறி,, ஜனங்களின் நம்பிக்கை இல்லாத அரசியல் தேசமாக, சதா குழப்பத்தில் இருக்கும் நாடாக மாறி வரும் என்பதில் ஐயமுண்டா ? ஆக எதற்கும் தடுப்பு என்ன கதவுகள் வேண்டும். "கதவுகள் இல்லா உலகம் ” வேண்டவே வேண்டாம்.
0
Leave a Reply