தேடலை ஆரம்பிக்கலாமா ?
எந்த ஒரு விஷயத்திற்கும் அடிப்படை தெரிந்து கொண்டால் வேகமாக அதைப்பற்றி ஆராய்ந்து உணர்ந்து ,மேலும், மேலும் வளர்த்துக் கொள்ளலாம். பள்ளிக்குச் செல்கிறோம். பள்ளியில் குழந்தைகளுக்கு அ, ஆ, வோ, A, B, C, D யோ சொல்லிக் கொடுக்கிறோம். பின்பு படிப்படியாக வார்த்தைகள், வாக்கியங்கள், History, Geography, Maths, Science, Computer என்று தெரிந்து கொள்கின்றனர். இந்த அடிப்படையை கற்றுத் தெரிந்து கொண்டு, பின்பு அதை ஆராய்ந்து, தேடல் என்ற ஆர்வம் உள்ளவர்களால் மாத்திரம் தான் ,ஒரு சாதனை செய்ய முடிகின்றது.
தேடல் என்றால் ஒன்றைப் பற்றி அறிந்து கொள்வதில், அடிப்படை உணர்வு இருப்பதுதான். பலர் இந்தத் தேடலுடன் யாரிடம் இதைப் பற்றிக் கேட்பது ? இதைத் தெரிந்து கொள்ள வேண்டுமே? என்று தினம், தினம் யோசித்து ,யாராவது கிடைப்பார்களா என்று ,அதைத் தெரிந்தவர்களிடம் சென்று அறிந்து கொள்கிறார்கள், பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான தேடல் உண்டு .அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அவர்களுடைய விருப்பம் தான். தேடல் என்பதை நாமாக உண்டாக்க முடியாது. தானாக வருவது தான். நவீன உலகின் தேடலின் ராஜாவாக விளங்குவது கம்ப்யூட்டர் தான். பல விஷயங்களை உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டு அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உள்ளது.
ஒரு அடிப்படையை தெரிந்து கொண்டால் நம்முடைய ஆராய்ச்சியை மிக வேகமாக முடித்துக் கொள்ளலாம். நாமாக படிப்பதை விட அனுபவமிக்க ,ஒருவர் கற்றுக் கொடுத்தால் மிகவேகமாக பிடித்துக் கொள்கிறோம். அப்படித் தெரிந்து கொள்ளும்போது கற்றுக் கொடுத்தவரிடம் நம்மை அறியாமலேயே ஒரு மரியாதை ஏற்படுகிறது.
ஒரு பெரியவரைப் பற்றி பலவாறு புகழ்ந்து பேசுகிறோம் ."என்னடா இது ரெம்ப அறுக்கிறார்கள்" என்று தான் தோன்றும். ஆனால் உண்மையிலேயே ,அந்தப் பெரியவர் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அதை நாமும் கடைபிடித்தால் முன்னுக்கு வரலாம் என்றுநினைப்பவர்களுக்கு மாத்திரம் தான், அப்பெரியவரிடம் மதிப்புடன் கூடிய, சுயமுன்னேற்றமும் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. இவருடைய தேடல் அப் பெரியவரிடம் உள்ளது.
ஒருவருடைய தேடலின் பலன்தான் உணவு, உடை, இருப்பிடம், என்று பலவிதங்களில் அனுபவித்து வருகிறோம். தேடல்களில் மோசமான தேடல்களும் உண்டு. திருட்டுத் தொழிலில் ஈடுபடுபவனும் அந்தத் தேடலில் இறங்கி விடுகிறான். நல்லதிற்கும் தேடல்தான் .கெட்ட விஷயத்திற்கும் தேடல்தான்.
நல்ல காரியங்களின் தேடல் நல்ல பயனை அளிக்கின்றது. தேடல்கள் கம்ப்யூட்டரோ, சமையலோ, வீட்டைப் பெருக்கி துடைப்பதிலோ எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். கை வலிக்க நெல்குற்றுவதும், மாவாட்டுவதும், மசாலா அரைப்பதும், ,தூசி தட்டுவதும் ஒருவரை நிச்சயமாக சிந்திக்க வைத்திருக்கும் . பாவம் பெண்கள். இதைச் சுலபமாகவும் கஷ்டமில்லாமலும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் ஏதாவது செய்யவேண்டுமே! கவனம் செலுத்தி தேடலை ஆரம்பிக்கிறார்கள். விளைவு ! இன்றைய கண்டுபிடிப்புகளான கிரைண்டர், வாஷிங் மெஷின் அப்பளம் தட்டும் மிஷின் வரை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தவர்களை ஏளனம் செய்தவர்கள், வீட்டில் எல்லாம் இக் கண்டுபிடிப்புக்கள் வரிசையாக அலங்கரிக்கின்றன. தேடலில் எதுவாக இருந்தாலும் உங்கள் குழந்தைகள் அவற்றில் ,தீவிரமாக இருக்கும்பொழுது அதை உற்சாகப்படுத்துங்கள். உதவுங்கள், பின்பு பாருங்கள் உங்கள் குழந்தைகளின் அபாரத் திறமையை இந்தத் தேடல்கள் வெளிக் கொண்டு வரும்,
ஒரு தேடலை ஆரம்பிக்கும் பொழுது அதைப்பற்றி ஏற்கனவே அறிந்து வைத்துள்ள அனுபவமிக்க பெரியவர்களிடம் விஷயங்களைத் தெரிந்து கொண்டால் உங்கள் தேடல்களில் இரட்டிப்பு பலனைப் பெறலாம். தேடலை ஆரம்பிக்கலாமா ?
திருமதி குணாபாஸ்கர்ராஜா
0
Leave a Reply