மனமே' தொட்டால் சிணுங்கிதானே
மனதில் உறுதி வேண்டும் என்ற பாடலைக் கேட்டவுடன் நாமெல்லாம் என்ன நினைக்கிறோம் மனதை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இப்படி ஆடக்கூடாது என்று மனிதகுலத்திற்கே சவாலாக இருப்பது இந்த 'மனசு' எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நாமாக அது சரியா, இது செய்யலாம் , என்று முடிவெடுக்கும் சமயத்தில் மனசு லேசாக அப்படிச் செய்யலாமே, இல்லை இப்படிச் செய்யலாமே ,என்று குரங்கு தாண்டவம் ஆடி ஒரு வழியாக அவ்வேலை முடிந்துவிடுகிறது.
அதனுடைய பின் விளைவுகள் சுமூகமாக முடிந்தால் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம். அப்பொழுதும் மனசு இப்படிச் செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமே ,என்ற மனநிலை முடிவெடுத்த முடிவுகள் தோல்வி அடைந்தால், ஐயோ தப்பு செய்து விட்டோமே.! அவங்க சொன்னாங்க நான் கேட்காமல் போய்விட்டேன். என்று மனம் அல்லோகலப்படுகிறது. நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதே, இன்னும் என்ன ? அடுத்ததைப் பற்றி நினைக்கலாமே ? என்ற மனம் வருவதேயில்லை.
அப்பப்போ நினைத்த (அதாவது மனதைத் தொட்டு) தொட்டால் சுருங்கி செடிபோல சுருங்கி, வருந்தி பின் மறந்து மறுபடியும் வேறு ஒன்றை நினைக்க ஆரம்பிக்கிறோம். திரும்பவும் சிணுங்குவதற்கு.
பெரிய தொழிலதிபர் தன்னுடைய தொழிற்கூடத்திற்கு வந்தால் படுகறாராக கண்டிப்புடன் ஒரு சிறு தவறுகள் கூட வராமல் பார்த்துக் கொள்வார். அங்குள்ள அனைவரும் அவரைக் கண்டாலே தொடை நடுங்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட மனுஷன் வீட்டுக்கு வந்துட்டாருன்னா ,அவர் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி ஜாலியாகப் பேசுவது, மனைவிக்குப் பயந்து சொன்ன பேச்சைக் கேட்பது, என்று சந்தோஷமாக வீட்டை கலகல வென்று வைத்துக் கொள்வார்.
இதைப் பார்த்து வியந்து ஒருவர் எப்படி உன்னால் முடிகிறது என்று கேட்டார். அவரும் நான் என் மனசை தனியாக வைத்துவிடுவேன். அது எப்படி மனசை நினைக்கும் போது வச்சுக்கிறதுக்கும் வேண்டாம்னா தனியா வைக்கவும் முடியும். அது என்ன காசா, பணமா ? என்று சொன்னார். அது ஒரு மனப்பயிற்சி. அந்தந்த இடத்திற்கேற்ப நம் மனசைத் தனியாக வச்சுக்க தெரிஞ்சவங்களாலே தான் உலகத்தில் சந்தோஷமாக வாழமுடியும் என்கிறார்.
சமைக்க தேவையான காய்கறிகள், பலசரக்குகள் அனைத்துமே இருக்கிறது. ஆனால் மனசை தூக்கி வச்சுட்டேன் அதனால் சமைக்கவில்லை என்றால், பசியுடன் வரும் கணவன் தூர்வாசர் ஆகிவிடுவாரல்லவா ? எந்த நேரத்தில் மனசை தூக்க வேண்டுமோ அந்த நேரத்தில் தூக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் அப்படிச் செய்தால் சந்தோஷத்திற்கு குட்பை தான்.
யாரிடமாவது சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது யதார்த்தமாக ஒரு விஷயத்தைச் சொல்லும்பொழுது ,அது தன்னைத்தான் குறிக்கிறது என்று நினைத்த உடன், கேட்பவரின் முகம் சட்டென்று வாடிவிடுகிறது. ஒரு கூட்டத்தில் ஜாலியாக ஒரு கோஷ்டியினர் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்க்கும் மற்ற கூட்டங்கள் ,நம்மைப் பார்த்து தான் சிரிக்கிறார்கள் என்று படபடத்துக் கொள்கின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளை நாம் ‘அட என்ன சந்தோஷமாக சிரிக்கிறாங்க' 'நாமும் அவர்களுடன் சேர்ந்து கொள்வோம்' என்று நினைக்கலாம். யாரும் பேசும்பொழுது நம்மைத்தான் குறிக்கின்றனர் என்ற நினைப்பே இல்லாமல், சுமூகமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் வேண்டும். மனப்பயிற்சியினால் தான் ஆனந்தமாக எதையும் அனுபவிக்கலாம். மனசை கண்ட்ரோல் பண்ண, மனப்பறிற்சி என்ற பிரேக் வேண்டும்.எடுத்ததெற்கெல்லாம் மனசைத் தொட்டுக் கொண்டிருந்தால் ,மனசு சிணுங்கிக் கொண்டே இருக்கும். ' மனமே தொட்டால் சிணுங்கி தானே ' !
0
Leave a Reply