வருமுன் காக்க
நம் நாட்டில் உள்ள மனித உயிர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்றால் பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது. மனித உயிர்களை பாதுகாப்பதில் அரசாங்கமும், பொதுமக்களும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.
"கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் " என்பது தொடர் கதையாகி விட்டது. ஒரு தொழிற்சாலை சினிமா தியேட்டர், திருமண மண்டபம், போக்குவரத்து சாலைகள், கல்வி நிறுவனங்கள், இவற்றை எல்லாம் எதற்காக உருவாக்கி இருக்கிறார்கள். மனிதர்கள் நலமாக வாழத்தானே ? அதுவே எமலோகப் பாதையாக இருந்தால் எப்படி ?
தொழிற்சாலைகளில் உற்பத்தி, தரம் மாத்திரம் பார்த்தால் போதுமா ? அங்கு வேலை செய்யும் தொழிலாளரின் உயிருக்கு பாதுகாப்பு உள்ளதா ? என்பதை யாராவது யோசித்திருப்பார்களா ? இதுவரை இல்லை . இப்பொழுது கொஞ்சம், கொஞ்சமாக சிந்திக்க தொடங்கி உள்ளனர். சினிமா தியேட்டரும், அப்படித்தான். மக்களிடையே ரசிகர் மன்றத் தகராறு, ஈவ்டீசிங் ,கைகலப்பு, சிகரெட் பிடித்து அமர்த்தாமல் எரிவது, படம் போட்ட பிறகு, இருட்டாக இருக்கும் பொழுது தவறுதலாக கீழே விழுவது, தீ பிடித்தல், கெட்டுப்போன உணவு, போன்ற பிரச்சனைகள் வராமல் காப்பது, தியேட்டர் உரிமையாளரின் கடமை.
திருமணமண்டபத்தில் ஹோமம் செய்யும் பொழுது ,மேலே கூரை இருப்பது எல்லாம் எப்பேற்பட்ட ஆபத்தில் சென்று முடிந்திருக்கிறது என்று ,யாரும் கூறத் தேவையில்லை. கண்கூடாகப் பார்த்திருக்கிறோமே ! வீடியோ வயரில் தட்டி விழுவது, மண்டபம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று ஓவர் ஆக பாலீஸ் போடுவது, போன்றவை சறுக்கி விழ வாய்ப்புகள் உண்டல்லவா ? இவற்றை மண்டபத்தார் கவனிக்க வேண்டும்.
போக்குவரத்து சாலை விதிகளை பின்பற்றாமல், நம் கண்முன்னே எவ்வளவு அசம்பாவிதங்கள் விபத்துக்கள் நடக்கின்றன. வேகமாக ஒடும் மணல், குப்பை, நீளமாக கம்பிகள் நீட்டி உள்ள லாரிகள், டிராக்டர்களின் அசுர வேகத்தில் மண் பறக்கும் போது 2 வீலரில் வரும் பலருடைய உயிருக்கு, உலை வைத்து விடுகின்றது. விலை மதிப்பற்ற உயிருக்கு 300, 400, அதிகப்படியான காசு பார்க்கும் வாஹன உரிமையாளர்களை எப்படி மாற்றுவது, யோசிக்க வேண்டும். லாரி, டிராக்டர், பஸ், கார், டிரைவர்கள் கண்மூடித்தனமாக வேகம், படக்,படக்கென்று திரும்புவது, ஓவர்டேக் செய்வது,ஓவர்லோட் ஏற்றுவது, இவையெல்லாம் சாலை விபத்துக்களை கைநீட்டி வரவேற்கின்றன.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சாலைகளில் பத்திரமாக வரவேண்டும் என்ற திகிலுடன், பள்ளிக் கூடம் அனுப்பும் பெற்றோர்களுக்கு, தீப்பிடிக்காமல் இருக்க வேண்டுமே என்றபுதிய திகில் சேர்ந்து கொண்டது. கும்பகோணத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு காரணம் என்ன ? பின் விளைவுகளை கவனிப்பது இல்லை.
ஆபத்துக்கள் எப்படி எல்லாம் வரும் என்பதை ஆராய்ந்து ,அதைத் தவிர்ப்பதற்கான எல்லா அணுகுமுறைகளையும், கவனமாகச் செய்ய வேண்டும். நம் யோசனைக்கும் அப்பாற்பட்டு ஏற்படும் விபத்தினை, இனி வராமல் காப்பாற்றும் வழி முறையை பின்பற்ற வேண்டும். அவந்தலைவிதி போய்விட்டான் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
விலைமதிப்பற்ற மனித உயிர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் .வெளிநாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் ,தொழிலாளர்களின் பாதுகாப்புதான் முக்கியம் .அதன் பின்பு தான் தரம். நாமும் "வருமுன் காக்க" வேண்டியது நம் கடமையாகும்.
0
Leave a Reply