HAPPY NEW YEAR பேட்டரி ரீசார்ஜ்
என்ன பேட்டரி ரீசார்ஜ் ? புரியவில்லையா ? எல்லாம் நம் சந்தோஷத்திற்குத் தான். நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் நம்முடைய சக்தி நஷ்டமடைகின்றது. அது மட்டுமா ! உலகத்திலேயே இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று கேட்டு, பார்த்து அதிசயப்பட்டு, நமக்கு இப்படி எல்லாம் நடக்கிறதா ? என்று வருத்தப்பட்டு ஓய்ந்து, பலவீனமடைகிறோம். சரி,இந்த மாதிரி சமயத்தில் நமக்கு தேவை மாற்றம் என்ற பேட்டரி சார்ஜ்.
பேட்டரியை புதிதாகப் போடலாம். இல்லாவிட்டால் ரீசார்ஜ் செய்யலாம். நாம் ஓய்ந்து விட்டோம் என்று மூளையில் படுக்க முடியுமா ? நம்மை நாமாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நமக்கு பிடித்த விஷயங்களை செய்தால், நம் மனம் சந்தோஷப்படும். நன்றாக சிரிக்கும் கும்பலுடன் சேர்ந்து வாய்விட்டு சிரித்து நம் மனதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
வித்தியாசமாக ஒரு சின்ன மரக்கன்றை வாங்கி நாமே சின்ன குழி தோண்டி ,அக்கன்றினை வைத்து திருப்பி மணலை மூடி,வட்டமாகப் பள்ளம் தோண்டி வரப்பு கட்டலாம். பின்பு அதற்கு வேலியாக கம்புகளை ஊன்றி கட்டி, ஆடு, மாடு மேய்க்காமல் பாதுகாப்பு செய்து ,அதன் பின் அம்மரத்திற்கு தண்ணீர் விட்டு காயாமல் பார்த்தால், நம் கண்ணெதிரே மரம் கிடுகிடுவென்று வளர்ந்தால் ,அதுவே நம்முடைய மனம் சந்தோஷத்தால் புதுப்பிக்கப்படும்.
இல்லையென்றால் ஒரு குழந்தைக்கு நம்மால் இயன்ற அளவு சிலேட்டோ, புஸ்தகமோ, படிப்பறிவோ, சொல்லிக் கொடுத்து அந்தக் குழந்தை அழகாக படிக்கும் பொழுது உண்டாகும். ஆனந்தம் இருக்கிறதே, அது மிகப் பெரிய மனநிறைவுடன் ,மனம் ரீசார்ஜ் ஆகி, புதுப்பொலிவுடன் மிதக்கும். புது மாதிரி சமைத்து ஒட்டு மொத்த குடும்பமே சந்தோஷத்தால் Fresh ஆக ரீசார்ஜ் ஆகிவிடுவார்கள்.
பெயின்டிங், பரதம் போன்ற டான்ஸ் ஆடும் பயிற்சி,பாட்டு பாடுதல், பிடித்த வேலையாக கூடை பின்னுதல், பொம்மை செய்தல், புடவைகளில் ஜமிக்கி தைத்தல், எம்பிராய்டரி வேலை, கேரம்போர்டு, சீட்டு ஆடுதல், (காசு வைக்க வேண்டாம்) குறிப்பார்த்து சுடுவது, (அட்டையை சுடுங்கள்) குருவி, பறவை வேண்டவே வேண்டாம், நெடுந்தூரம் நடப்பது மலை ஏறுவது, நீச்சல் அடிப்பது என்று எத்தனையோ மாற்று வேலைகளை செய்தால் மனம் லேசாகி புத்துணர்ச்சியுடன். ரீசார்ஜ் ஆகி அன்றாட வேலைகளை சந்தோஷமாகச் செய்யலாம்.
இந்த மாதிரி எத்தனை எத்தனையோ மாற்றங்களை செய்து நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டே சந்தோஷமாக இருக்கலாம். 1957 ல் என்று நம்முடைய பழைய கஷ்டமான கதைகளை தூசு தட்டி எடுத்து வருத்தப்படுவதை விட்டு விட்டு 2023 நமக்கு நல்ல ஆண்டாக நல்ல மாற்றங்கள் மிகுந்த ஆண்டாக அமைய வேண்டும் என்று மனதை ரீசார்ஜ், பேட்டரி சார்ஜ் செய்து ரெடியாகிக் கொள்ளுங்கள். வருஷம் புதுசு, மனதும் புதுசு, தான், இப்ப ? அப்படித்தானே ?
0
Leave a Reply