25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 11, 2025

வெடி விபத்தில் காயமடைந்து,விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை  அமைச்சர்  அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆறுதல்  கூறினார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் வெடி பொருட்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து, விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை ( 11.06.2025)  நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  திரு.தங்கம் தென்னரசு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆறுதல்  கூறினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ .ப. ஜெயசீலன் , I A S, அவர்கள் மற்றும் விருதுநகர்  சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள்  ஆகியோர் உள்ளனர்.

Jun 11, 2025

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 14.06.2025 அன்று நடைபெறவுள்ளது

பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 14.06.2025-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டுவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.எனவே, இக்குறைதீர்வு முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் பெயர், முகவரி திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம்.மேலும், வாடகை வீட்டில் வசித்து வரும் புதிய குடும்ப அட்டை கோரும் விண்ணப்பதாரர்கள்  வாடகை ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம், தனி மின்சார கட்டண அட்டை, தனி எரிவாயு இணைப்பு அல்லது தனி சொத்து வரி ரசீது ஆகியவற்றில் ஏதேனும் இரண்டு ஆவணங்களை இணைத்து  இணையவழியில்  விண்ணப்பம் செய்துகொள்ளலாம்.AAY மற்றும் PHH மின்னணு குடும்ப அட்டைதாரர்களில் (குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்) கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மின்னணு குடும்ப அட்டையில் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதிமாதம் இரண்டாவது சனிக்கிழமை தோறும் இம்முகாம் நடைபெறும் அதனை பயன்படுத்தி கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 10, 2025

"Coffee With Collector” என்ற 203-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (10.06.2025) விருதுநகர் சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 30 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 203-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு,  203-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.12-ஆம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

Jun 10, 2025

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அந்ததந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 11.06.2025 அன்று நடைபெறும் .

 கடந்த ஆண்டைப்போல விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 12 முகாம்கள் வீதம் மொத்தம் 132 சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி  விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் காளப்பெருமாள்பட்டி கிராமத்தில் 11.06.2025 அன்று  காலை 8.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் முகாம் துவக்கி வைக்கப்படவுள்ளது.    இந்த முகாம் நடைபெறும் இடம், தேதி, கலந்துகொள்ளும் மருத்துவக்குழுவினர் ஆகிய விவரங்கள் முன்கூட்டியே அந்த ஊராட்சி பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.  நிகழ்வு தொடர்பாக துண்டுபிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நாளில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் முகாம்கள் நடைபெறும்.             அப்பொழுது கால்நடை மருந்தகத்தில் செய்யப்படும் சேவைகளான சிகிச்சை, குடற்புழுநீக்கம், ஆண்மைநீக்கம், மலடுநீக்க சிகிச்சை, தடுப்பூசிப்பணி, KCC விண்ணப்பங்கள் பெறுதல் ஆகிய பணிகள் அந்தந்த ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும். அனைத்து பணிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.  கலந்துகொள்ளும் கால்நடைகளுக்கு இலவசமாக தாது உப்பு கலவை ஒரு கிலோ எடையுள்ள சத்து பவுடர் ஒவ்வோர் முகாம்களிலும் வழங்கப்படும். கால்நடை வளர்ப்போருக்குத் தேவையான தீவனபுல் விதைகள் மற்றும் நாற்றுகளை விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.             எனவே முகாம்கள் நடைபெறும்பொழுது அப்பகுதி கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் கலந்துகொண்டு தங்கள் கால்நடைகளை அழைத்துவந்து பயன்பெற்றுச் செல்லுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 10, 2025

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் நடைபெறும் இளைஞர்களுக்கான திறன் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலை வாய்ப்பு  (Multiple  Skill  Training  and  Placement  Program)  பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது.   இதன் தொடர்ச்சியாக, தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் வருமானவரி தொழில் நுட்பபயிற்சி (Advanced GST and Income Tax Professional)  தொழில் உற்பத்தி பயிற்சி (Certified Manufacturing Professional with Specialization in Industry 4.0),   டிஜிட்டல் திறன்களில்  ITES    மற்றும்  BPO   பயிற்சி (Certified ITES & BPO Professional with Specialization in Digital Skills), UI/UX    இணைய தொழில் நுட்ப பயிற்சி (Certified Web Technologies with Specialization in UI/UX),  டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Certified Digital Marketing Professional)  ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களாகவும், 21  முதல் 30 வயது வரை உள்ளவர்களாகவும்,  2021 ஆம் ஆண்டு முதல் 2024  ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு வழிவகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 55 நாட்கள் ஆகும்.  மேலும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 09, 2025

தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேட்டமலை ஊராட்சியில்  (09.06.2025) மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்கவழக்கத்தை மாற்றும் முயற்சியாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி, அதுவும் குறிப்பாக பொது சுகாதாரத்தில், மக்கள் நோய்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவும், அவ்வாறு நோய்கள் வந்துவிட்டால் அவற்றை தீர்ப்பதற்காகவும், உரிய மருத்துவ வசதிகளை மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், முதியவர்களுக்கு இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.அனைத்து கிராமங்களிலும் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என்று மூன்று நிலைகளில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இவையெல்லாம் நோய்கள் வந்ததற்கு பிறகு நாம் செய்யக்கூடிய நடைமுறைகள், அதற்கான வழிமுறைகள் ஆகும். ஆனால் நோய்கள் வருவதற்கு முன்பாகவே அதனை  சரி செய்ய முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்.அதாவது, ஒரு வருடத்தில் 365 நாட்களில் நம்முடைய சுகாதார குறைபாடுகள் காரணமாகவும், சுற்றுச்சூழலின் காரணமாகவும், காற்றின் மூலமாகவும், தண்ணீரின் மூலமாகவும் பரவக்கூடிய நோய்களால் ஒரு சாதாரண தொற்று , காய்ச்சல் ஏற்பட்டு சளி மற்றும் நோய்களின் மூலமாக வருடத்திற்கு சராசரியாக ஒரு குடும்பத்தில் 20-ல் இருந்து 25 நாட்கள் யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் செல்கிறது.இதனையெல்லாம்  தடுக்க முடியுமா என்றால்,  சுகாதாரத்தை முழுமையாக பேணுவதன் மூலமாகவும், தன் சுத்தத்தை முழுமையாக பேணுவதன் மூலமாகவும், கழிவறைகளை சரியாக பராமரிப்பதன் மூலமாகவும், தொற்றுநோய்களை எல்லாம் குறைத்து, நம்முடைய நோய்வாய் படக்கூடிய நாட்களை எல்லாம் குறைக்க முடியும். ஆரோக்கியமான நாட்களை அதிகரிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.எனவே, நம்முடைய கிராமத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால், மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்கவழக்கத்தை மாற்றுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். பல கிராமங்களில் இது சிறப்பாக செய்திருக்கிறார்கள்.மேலும், பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால், காற்றில் இருக்கக்கூடிய மாசின் காரணமாக நுரையீரல் பாதிப்பில் ஏற்படுகிறது. அதனால் நாம் எப்பொழுதும் குப்பைகளை எரிக்கக்கூடாது. அதற்கு ஒரே ஒரு தீர்வு நாம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு வகையாக பிரித்து கொடுக்க வேண்டும்.மனிதருக்கு  தூய காற்று, தூய தண்ணீர் இந்த இரண்டும் தான் மிக மிக அடிப்படை ஆகும். எனவே, நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.முன்னதாக, கிராமப் பொதுமக்களுக்கு தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத்தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 09, 2025

Coffee With Collector” என்ற 202-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (09.06.2025) விருதுநகர் வட்டாரத்தைச் சேர்ந்த சௌடாம்பிகா மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 25 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 202-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 202-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எந்த படிப்பு சேரவேண்டும் என்பதை முடிவு செய்து விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். மருத்துவ படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் நுழைவு தேர்வை மனதில் வைத்து படிக்க வேண்டும். மேலும் நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மதிப்பெண்களை வழங்குகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண் கழிக்கப்படுகிறது. இதனை  மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.12-ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

Jun 06, 2025

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியின் 200-ஆவது அமர்வு சிறப்பு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (06.06.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், இளநிலை மற்றும் முதுகலை வணிக மேலாண்மைத்துறை பயிலும் 100 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு காபி வித் கலெக்டர் - 200- ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஹட்சன் அக்ரோ நிறுவனத்தலைவர்/மேலாண்மை இயக்குநர் பத்மஸ்ரீ ஆர்.ஜி.சந்திரமோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் "காபி வித் கலெக்டர்" நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.மாணவர்களுக்கு பல்வேறு  தனித்திறமைகள் இருந்தாலும்,  அத்திறமைக்கேற்ற வாய்ப்புகளை அறிந்து,  அதனை அடைவதற்கான பல்வேறு வழிகள் என்னென்ன என்பது குறித்து, தற்போதைய மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல ஒரு பொருளாதார மற்றும் சமூக  நிலையை அடைய வழிகாட்டும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.மேலும் இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, தங்களின் துறை மற்றும் பணிகள் சார்ந்த வாய்ப்புகள், படிப்புகள் மற்றும் அதற்கான திறமைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தி, அவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி மூலம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கான எதிர்கால திட்டங்கள், அவர்களுடைய கனவுகள், அவர்களுடைய சிந்தனைகள் அடுத்து வரக்கூடிய ஒரு 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வாழக்கூடிய இந்த சமுதாயத்தில் எந்த விதமான மாற்றங்களை விரும்புகிறார்கள். அந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவர்கள் தங்களை எப்படி தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புதிய புதிய வாய்ப்புகள் இந்த உலகில் எங்கெல்லாம் இருக்கின்றன. தங்களுடைய இந்த பதின் பருவத்தில் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களெல்லாம் தங்களுடைய இந்த பள்ளிப் பருவ காலத்தில் இருந்து எந்தெந்த கனவுகளை எல்லாம் அவர்கள் காண முடியும். காணக்கூடிய கனவுகளை நிறைவேற்றுவதற்கான உத்வேகமும், வாய்ப்புகளும், வழிமுறைகளும் எங்கெல்லாம் கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்வதற்கும், அவர்கள் தங்களுடைய ஆசைகளை, கனவுகளை உருவாக்கிக் கொள்வதற்கும், வகுப்பறைகளுக்கு வெளியே இது போன்ற ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக அவர்களால் நிச்சயமாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதற்காக இப்படி ஒரு திட்டத்தை வடிவமைத்து, நமது மாவட்டத்தில்  இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறை ஏறக்குறைய 90 நிமிடங்கள் சராசரியாக ஒவ்வொரு பள்ளிக்கும் அல்லது குழுவாக வரக்கூடிய அந்த மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக அவர்களுடன் நேரத்தை செலவிட்டு, அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு வழிகாட்டுதலும், அவர்களுடைய கருத்துக்களை அறிந்து கொள்வதிலும், கருத்துக்களை எப்படி செயல்படுத்துவது, இலட்சியங்களுக்கு, ஆசைகளுக்கு, கனவுகளுக்கு எப்படி செயல் வடிவம் தருவது. அவர்கள் எதையெல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதலான தகவல்களை தருவது என இந்த காபி கலெக்டர் நிகழ்ச்சி  மாவட்டத்தில் சிறப்பாக வெற்றிகரமாக  நடந்து கொண்டிருக்கின்றன.பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் படிப்பு மட்டும் போதாது. வாழ்க்கையில் மாறி வரும் தொழில்நுட்பம், சூழ்நிலைக்கு ஏற்ப தொடர்ச்சியாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். தடை என்பது வெற்றிக்கான படிக்கல்தான். உங்களுடைய உயரம் என்ன என்பதை உங்களுடைய எண்ணம் தான் தீர்மானிக்கிறது என தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு,  இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும்,  எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் தெளிவான விடை கொடுத்ததாகவும்,  இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Jun 06, 2025

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.80 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அமர்வு கூடத்தினை அமைச்சர் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (06.06.2025) நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசின் 50 சதவிகித நிதியுடன் சிவகாசி லவ்லி ஆப்செட் மற்றும் அரசன் அலுமினியம் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி பங்களிப்புடன்  ரூ.80 இலட்சம் மதிப்பில்  கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பார்வையாளர் அமர்வு கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  அதன்படி, இந்த புதிய உள் விளையாட்டரங்குடன் கூடிய பார்வையாளர் அமர்வுக்கூடம்  அரசின் 50 சதவிகித பங்களிப்பு ரூ.40 இலட்சம் நிதியுடன், சிவகாசி லவ்லி ஆப்செட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி ரூ.30 இலட்சம் மற்றும் சிவகாசி அரசன் அலுமினியம் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி ரூ.10 இலட்சம் என மொத்தம் ரூ.80 இலட்சம் மதிப்பில் சுமார் 8700 சதுரடி பரப்பளவில் சுமார் 750 பார்வையாளர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.இந்த புதிய கட்டடங்கள் மூலம் கல்லூரியில் பயிலும் சுமார் 2500 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்த அமர்வுகூடம் அமைத்து கொடுத்தமைக்கு,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்கள் அவர்களுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும், லவ்லி ஆப்செட் நிறுவனத்திற்கும், சிவகாசி அரசன் அலுமினியம் நிறுவனத்திற்கும், கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு.சரவணன், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா, சிவகாசி முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 06, 2025

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (06.06.2025) சிவகாசி வட்டம், நெடுங்குளம்  தனியார் பட்டாசு ஆலையில் 26.04.2025 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.அதன்படி, இந்த வெடி விபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் சொக்கம்பட்டியைச் சேர்ந்த திருமதி மாரியம்மாள் என்பவரது வாரிசுதாரரான திரு.முனிச்செல்வம் என்பவருக்கும், வத்திராயிருப்பு வட்டம் கூமாப்பட்டியைச் சேர்ந்த திருமதி திருவாய்மொழி என்பவரது வாரிசுதாரரான திரு.ராமர் என்பவருக்கும், சிவகாசி வட்டம் மங்கலத்தைச் சேர்ந்த திருமதி கலைச்செல்வி என்பவரது வாரிசுதாரரான திரு.முத்துச்சாமி என்பவருக்கும், சிவகாசி வட்டம் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த திருமதி பாக்கியலட்சுமி என்பவரது வாரிசுதாரரான திரு.துரைராஜ் என்பவருக்கும் தலா ரூ.4 இலட்சம் வீதமும்,வெடி விபத்தில் பலத்த காயமடைந்த கோபாலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ராமசுப்பு மற்றும் ரெங்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி லட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.1 இலட்சம் வீதமும்,லேசான காயமடைந்த கோபாலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி முனியம்மாள், கூமாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி, திருமதி பாத்திமுத்து மற்றும் திருமதி ராபீயா பீவி ஆகியோருக்கு தலா ரூ.50,000/- வீதமும் என வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பில்  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.

1 2 ... 96 97 98 99 100 101 102 ... 138 139

AD's



More News