தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் நமது மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறானாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது.கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் (CSPs) மூலம் முன்களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த கணக்கெடுப்புப் பணி ஜீன் 2-ஆம் தேதி துவங்கி வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுப்புப் பணி சிறப்பாக நடைபெற உதவுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (30.05.2025) விருதுநகர் மாவட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து சாரண, சாரணியர் இயக்க மாணவர்கள், கோவாவில் நடைபெற்ற பயிற்சிக்கு சென்று வந்த 65 மாணவர்களுடனான 195- ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லூரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாரண பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்தும், அவர்கள் கோவாவில் நடைபெற்ற பயிற்சி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விகடன் குறித்த தகவல்களும் எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.மேலும், மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்தவர்கள் தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் எந்த தொழிற்கல்விக்கு சென்றாலும் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது.எனவே, மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று, தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு, பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (30.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கீழகண்டமங்கலம் ஊராட்சி சித்தலக்குண்டு கிராமத்தில் ரூ.70 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும், அரசு உயர்நிலைப்பள்ளியின் கட்டுமான பணியினையும், வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் பழுது பார்த்தல் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டு வரும் பணியினையும்,அதனை தொடர்ந்து, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வீரசோழன் ஊராட்சியில் ரூ.3.4 கோடி மதிப்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட உள்ள 13 வகுப்பறை கட்டட கட்டுமான பணியினையும்,மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் கொட்டகாட்சியேந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.30 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வரும் பணியினையும்,பின்னர், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் இருஞ்சிறை கண்மாயில் ரூ.1.60 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் மூலம் 28.05.2025 நேற்று காலை 9 மணி முதல் 29.05.2025 இன்று காலை 9 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டனர்.அதன்படி இரண்டாம் நாளான இன்று வத்திராயிருப்பு வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும், அதனை தொடர்ந்து, வத்திராயிருப்பு பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து, அங்கு வரும் பேருந்துகளின் வருகை, நேரம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், வத்திராயிருப்பு நாடார் பஜாரில் தண்ணீர் குழாயில், தண்ணீரில் கலந்துள்ள குளோரின் மற்றும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் முறை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.இந்த நிகழ்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (29.05.2025) பட்டம்புதூர், அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11ஆம் வகுப்பு சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் சவுத் சைடு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 70 பள்ளி மாணவர்களுடனான ‘Coffee With Collector” என்ற 193 மற்றும் 194-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I AS ., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 193 மற்றும் 194-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (29.05.2025) வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்” -னை காணொளி காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் டி.மானகசேரி கிராமத்தில் நடைபெற்ற “உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்” முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கலந்து கொண்டார்.அனைத்து வட்டாரங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக் கிழமைகளில், நான்கு முகாம்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 17,116 கிராமங்களில் முகாம்கள் நடைபெறும் வகையில் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைகளை கண்டறிதல், திட்ட உதவிகள் வழங்குதல், தொழில்நுட்பங்கள் வழங்குதல், கால்நடை நலன் காத்தல், வேளாண் உற்பத்தியை பெருக்குதல், உழவர்களின் வருமானத்தை அதிகரித்தல் ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் முகாம்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாணமைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட துறைகள் இணைந்து கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து வயல் வழி பாதுகாப்பு, பரப்பு சாகுபடி, மகசூல் உள்ளிட்டவை குறித்து உரிய விளக்கம் அளிப்பார்கள்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் “உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்” முகாம்கள் நடைபெற்றது.திருவில்லிபுத்தூர் வட்டம் டி.மானகசேரி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொணடு, இம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு குதிரைவாலி செயல்விளக்கத்திடல் இடுபொருட்கள், சிறுதானிய நுண்ணுட்ட உரம், மழைதூவுவான், தென்னங்கன்று விநியோகம், உயிர் உரம் விநியோகம், கால்நடைக்கான தாதுஉப்புகள் உள்ளிட்டவைகளை வழங்கினார். இக்முகாமில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்கள், அரசு மானியத்திட்டங்கள், மானிய விலையில் இடுபொருட்கள் வழங்குதல், உயிர்ம வேளாண்மை சாகுபடி வழிகாட்டுதல், நவீன வேளாண் தொழில் நுட்பங்கள், இயந்திரங்கள், வேளாண் கருவிகள், மண்வள அட்டை, நுண்ணீர் பாசனத்திட்டம், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல், வீட்டுக்காய்கறி தோட்டம், கால்நடைகள் பராமரிப்பு, பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன்கள்; குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனைக்குழு மற்றும் சார்புத்துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை விவசாயிகள் பார்வையிட்டனர்.இந்த புதிய திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாம்கள்; மூலம் உழவர்களுக்கு வேளாண்மை விரிவாக்க சேவைகள் அவர்களின் கிராமங்களிலேயே வழங்குவதால், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இம்முகாம்கள் மூலம் பல்வேறு துறைகளின் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை பெற்று விவசாயம் செய்வதன் மூலம் வேளாண் உற்பத்தி பெருகுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, வேளாண்மைப் பொறியியல்துறை கண்காணிப்புப்பொறியாளர் திருமதி இந்திரா, விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் திரு.வேலுச்சாமி, வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி தனலட்சுமி, உதவி இயக்குநர்(கால்நடை பராமரிப்புத்துறை) மரு.முருகன், பேராசிரியர் (வேளாண் அறிவியல் நிலையம், கோவிலாங்குளம்) திரு.பாலசுப்பிரமணியம், உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில், புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை (29.05.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீ குமார் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கப்பாண்டியன் அவர்கள், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் திருமதி பவித்ரா ஷியாம் அவர்கள் மற்றும் சீர்மரபினர் வாரியத்துணைத் தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இராஜபாளையம் காந்திஜி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது.மேலும் இராஜபாளையத்தில் நிறைய நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றோம். நமது விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் நகராட்சி பெரிய நகராட்சி ஆகும். இராஜபாளையம் பகுதியில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், மருத்துவமனை கட்டடங்கள் மற்றும் நூலகம் உள்ளிட்ட அரசுத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.இராஜபாளையம் நகராட்சி பகுதியில் தென்காசி - மதுரை நெடுஞ்சாலையில் கடந்த 1969-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதியதாக பேருந்து நிலையம், கலைஞர் மேம்பாட்டு திட்டம் 2022-2023-ன் கீழ் ரூ.2.90கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு அரசாணை வழங்கப்பட்டது. அதனடிப்படையில் 1.41 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் பயனாளிகள் காத்திருப்பு அறை, 23 கடைகள், 2 உணவகங்கள், தாய்மார்கள் பாலுட்டும் அறை, பொருட்கள் வைப்பறை, நேர காப்பாளர் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி, பேருந்து நிறுத்த தளம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் 926 ச.மீ பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 28.05.2025 அன்று நள்ளிரவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, இரவுப்பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் வருகை குறித்தும், மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.பின்னர், அவசர சிகிச்சை, பச்சிளம் குழந்தை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள், நோயாளிகளை கவனிக்கும் விதம், சிகிச்சைக்கு பிறகான தற்போதைய நிலை, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், மருத்துவமனைக்கு வரும் புற மற்றும் உள் நோயாளிகளுக்கு அரசின் மருத்துவ சேவைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் ( 29/05/2025) நகர்ப்புற நல்வாழ்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குவரக்கூடிய வரக்கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவர்களின் வருகை,பணிபுரியும் செவிலியர்களின் வருகைப்பதிவேடு, வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெசீலன் , I A S, அவர்கள் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய்க்கான இயக்கம் என்ற திட்டத்தின்கீழ் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க மதிப்புக் கூட்டு தொகுப்பு மற்றும் செயல்விளக்கத்திடல் அமைத்திட இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டமானது நிலக்கடலை, சூரியகாந்தி போன்றபயிர்களுக்கானசெயல்படுத்தப்படவுள்ளது.இதில் நிலக்கடலையில் தொகுப்பு மற்றும் செயல்விளக்கத்திடல் காரியாபட்டி, ம.ரெட்டியபட்டி, நரிக்குடி, வத்திராயிருப்பு, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கடலை மதிப்புக்கூட்டு தொகுப்பின்கீழ் 500 எக்டேர் ஒரு தொகுப்பு வீதம் இரண்டு தொகுப்புகள் 1000 எக்டேர் பரப்பளவில் உருவாக்கி அதில் அடங்கியுள்ள விவசாயிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்குட்பட்ட புதிய நிலக்கடலை இரகங்கள் வழங்கப்படும்.உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிலக்கடலை விளைச்சல் அதிகரிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் நிலக்கடலைகளை வாங்கி மதிப்புக் கூடுதலாக எண்ணெய் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கடலை செயல்விளக்கத்திடலின் கீழ் 500 எக்டேர் (20 எக்டேர் ஒரு தொகுப்பு) தேர்வு செய்து அனைத்து தொழில்நுட்பங்களையும் உட்புகுத்தி நிலக்கடலை விளைச்சலை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதேபோன்று சூரியகாந்தி பயிரில் மதிப்புக்கூட்டு தொகுப்பு 200 எக்டேர் வீதம் இரண்டு தொகுப்புகள் (400 எக்டேர்) மற்றும் செயல்விளக்கத்திடல் 1200 எக்டேர் (20 எக்டேர் ஒரு தொகுப்பு) அருப்புக்கோட்டை, ம.ரெட்டியபட்டி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடைந்து எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.