25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 08, 2025

விருதுநகர் மாவட்டம் 11-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், (07.08.2025) கைத்தறித் துறை சார்பில், 11-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட “சுதேசி இயக்கத்தினை” நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாகவும், இந்தியாவின் கைத்தறித் தொழிலை முன்னிலைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் தனித்தன்மை, நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் கைத்தறித் துறையின் பங்களிப்பு, கைத்தறி தொழிலினை ஊக்குவித்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி “11-வது தேசிய கைத்தறி தினத்தைக்” கொண்டாடும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் 07.08.2025 இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், கைத்தறி துறை சார்பில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சம் மதிப்பிலான முதிர்வுத்தொகைக்கான காசோலைகளையும், நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவிகளையும், நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1200/- ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் என மொத்தம் 35 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.14.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் சுந்தரபாண்டியத்தில் விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறையுடன் இணைந்து, “வருமுன் காப்போம்” திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமில் நெசவாளர்களுக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் நவீன இ.சி.ஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் சுமார் 850 நெசவாளர்கள்  பயனடைந்தனர்.மேலும் கல்லூரி மாணவியர்களிடையே கைத்தறி இரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைத்தறி இரகங்களைப் பிரபலப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி விருதுநகர் வே.வ.வன்னியப் பெருமாள் மகளிர் கலைக் கல்லூரியில்”  நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர்(கைத்தறி) திரு.வெங்கடேசலு உட்பட அரசு விற்பனையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 08, 2025

”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 09.08.2025 அன்று அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர்சந்தை ஸ்ரீவீரப்பா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை கடந்த 02.08.2025 அன்று தொடங்கி வைத்தார்.அதன்படி, இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 02.08.2025 அன்று சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முதல் முகாமில் சுமார் 1200 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.தற்போது, இரண்டாம் கட்டமாக 09.08.2025 அன்று அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர்சந்தை ஸ்ரீவீரப்பா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவு நோய் கண்டறிதல், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளன.    மேலும், இம்முகாமில் மேலே குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்றுதிறனாளிகளுக்கானஅரசுஅடையாளஅட்டைவழங்குதல்,அமைப்புசாராதொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சன்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு இச்சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 08, 2025

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் சோளம், பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, பருத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் (வாழை மற்றும் வெங்காயம் ) ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து பயன்பெறலாம் .

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)   2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில்  இந்த ஆண்டு (2025-2026) முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.காரீப் பருவத்தில் பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் (Common Service Centres (CSC)) மூலமாகவோ பயிர்களை காப்பீடு  செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு  மக்காச்சோளம்  பயிருக்கு ரூ. 425/- எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 182/- எனவும், பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு ரூ.336/- எனவும், பருத்தி பயிருக்கு ரூ.386/- எனவும் மற்றும் நிலக்கடலை பயிருக்கு ரூ.419/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்  கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு வெங்காயம் பயிருக்கு ரூ.1573/- எனவும் மற்றும் வாழை பயிருக்கு ரூ.4426/- எனவும் தெரிவிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ம் ஆண்டின் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் நிலக்கடலை பயிருக்கு 30.08.2025 எனவும், உளுந்து, பாசிப்பயறு, சோளம் மற்றும் பருத்தி வகைகளுக்கு 16.09.2025 எனவும் மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு 30.09.2025 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் வெங்காயம் பயிருக்கு 01.09.2025 எனவும், மற்றும் வாழை பயிர்களுக்கு 16.09.2025 எனவும் தெரிவிக்கப்படுகிறது.விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book)  முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card)  நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (Crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ  உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 08, 2025

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்" திட்டத்தின் கீழ் மானிய விலையில் காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடிகள் தொகுப்பு பெற விண்ணப்பிக்கலாம்.

 விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டிற்கு 'ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்"  திட்டத்தின் கீழ்   ரூ.51.11/- இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதன்படி ஊட்டச்சத்து மிக்க நஞ்சற்ற காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்திடவும், மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத்தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 100 சதவீத மானியத்தில் ரூ.60/- வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது.நகர்ப்புரங்களிலும் கிராமப்புரங்களிலும் வசிக்கும் மக்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரைவில் பலனளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய பழச்செடித் தொகுப்பு 100 சதவீத மானியத்தில் ரூ.100/- வீதம் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது.இலந்தைப்பயிர் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் எக்டருக்கு மானியமாக  ரூ.18,000/- வீதம் 2 எக்டருக்கு ரூ.36,000/-  மதிப்பிற்கு நடவுப்பொருள்கள் வழங்கப்பட உள்ளது.   இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள பயனாளிகள்  https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ  அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 08, 2025

தோட்டக்கலைப்பயிர் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் அரசு மானியமாக பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதற்கு இடுபொருள்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

விருதுநகர் மாவட்டத்திற்கு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை மூலம் 2025-26 ஆம் ஆண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.77.175/- இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலைப்பயிர் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் அரசு மானியமாக பாரம்பரிய காய்கறிகள் சாகுபடிக்கு அரசு மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.24000/- வீதம் 45 எக்டருக்கு ரூ.10.80/- இலட்சம், மிளகாய்ப்பயிருக்கு ஒரு எக்டருக்கு அரசு மானியமாக ரூ.12000/- வீதம் 100 எக்டருக்கு ரூ.12.00/- இலட்சம், தென்னைப்பயிருக்கு ஒரு எக்டருக்கு அரசு மானியமாக ரூ.12000/- வீதம் 100 எக்டருக்கு ரூ.12.00/- இலட்சம் மற்றும் உதிரி மலர்கள் சாகுபடிக்கு  பயிர்களுக்கு அரசு மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.12,000/- வீதம் 75 எக்டருக்கு ரூ.9.00/- இலட்சம்  ஆகமொத்தம் தோட்டக்கலைப்பயிர்கள் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் ரூ.43.80/- இலட்சம் மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.        வீட்டுத்தோட்டம் அமைப்பதை ஊக்குவித்தல் என்ற இனத்தில் மாடித்தோட்டத்தளைகள் விநியோகம் செய்திட 50 சதவீத மானியத்தில் 300 எண்களுக்கு ரூ.1.35/- இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ.900/- அதில் 50 சதவீத மானியம் ரூ.450/- மற்றும் பயனாளியின் பங்குத் தொகை ரூ.450/- ஆகும் .தோட்டக்கலைப் பயிர்களில் தேவை அடிப்படையிலான திட்ட இனங்கள் என்ற இனத்தின் கீழ் வேலிக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்திட 50 சதவீத மானியத்தில் ஒரு எக்டருக்கு ரூ.5000/- வீதம் 100 எக்டருக்கு ரூ.5.00/- இலட்சம் மற்றும்  தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துவதற்கு  50 சதவீத  மானியத்தில் ஒரு எக்டருக்கு ரூ.1775/- வீதம் 1500 எக்டருக்கு ரூ.26.625 இலட்சத்திற்கு இடுபொருள்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.    மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற ஆர்வமுள்ள பயனாளிகள்  https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ, உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள தெரிவித்துள்ளார்.

Aug 08, 2025

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நில விவசாயிகள் மற்றும் தோந்தெடுக்கப்பட்ட கிராம விவாசயிகள் மானியம் பெற உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.

 விருதுநகர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட 83 கிராம பஞ்சாயத்துகளில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு எக்டர்  ஒன்றிற்கு 75 சதவீத மானியத்தில் ரூ.7500/- மதிப்பிற்கு வீரியஒட்டு காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் 107 எக்டர் பரப்பிற்கும், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த ரூ.200/- மதிப்பில் மாஃசப்போட்டா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை மற்றும் சீத்தா போன்ற  5 வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 16,683 எண்கள்,75 சதவீத மானியத்தில் ரூ.150/-க்கும் மீதி ரூ.50/- பயனாளிகளின்; பங்கு தொகையுடன் விநியோகம் செய்யப்பட உள்ளது.  நெட்டை ரக தென்னங்கன்று 100 சதவீத மானியத்தில் ரூ.65/- வீதம் 24900 எண்கள் வழங்கப்பட உள்ளது.தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தரிசுநில தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும் எக்டர் ஒன்றிற்கு ரூ.18,000/- மானியத்தில் பல்லாண்டு தோட்டக்கலைப்பயிர்களின் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் வீரிய ஒட்டு மா, கொய்யா, எலுமிச்சை, கொடுக்காப்புளி, சப்போட்டா, தென்னை போன்ற செடிகளுடன் இடுபொருட்களும் 107 எக்டர் பரப்பிற்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள பயனாளிகள்   https://tnhorticulture.tn.gov.in  என்ற இணையதளத்திலோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து  பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Aug 08, 2025

அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு 31.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  அரசு /தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 31.08.2025 வரை சேர்க்கை நடைபெறுகிறது. எனவே ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ/மாணவிகள், அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.     விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு கீழ்க்கண்ட அரசு சலுகைகள் வழங்கப்படுகிறது. 1. மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- வழங்கப்படும்.2. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும்.3. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும்.  4. 2 செட் சீருடை தையற்கூலியுடன் வழங்கப்படும்.5. பாடநூல்கள் மற்றும் வரைபடக்கருவிகள் வழங்கப்படும்.6. விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும்.7. மூடு காலணி வழங்கப்படும்.8. கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.9. அடையாள அட்டை வழங்கப்படும்.10. தேர்வு கட்டண விலக்கு வழங்கப்படும்.மேலும்,பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில், வளாக நேர்முகத்தேர்வு நடத்தி (கேம்பஸ் இன்டர்வியூ) மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். ஊதியம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை தொழிற்நிறுவனங்களின் தகுதிநிலைக்கேற்ப வழங்கப்படும்.இந்த அரியவாய்ப்பினை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 07, 2025

விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கான சிறு தானியங்கள் ஏற்றுமதி பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிக இணைப்புக்கூட்டம் - 2025

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஸ்ரீ அம்பாள் கிராண்ட்  மண்டபத்தில் (06.08.2025) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கான சிறு தானியங்கள் ஏற்றுமதி குறித்த பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிக இணைப்புக்கூட்டம் - 2025 வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் (சென்னை) திரு.த.ஆபிரகாம்,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள்ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.சிறுதானியங்கள், காலநிலை மாற்றத்திற்கேற்ற பயிராக உலகளவில் அங்கீகரிப்பட்டுள்ளது. இச்சிறுதானியங்கள் இரசாயன உரங்கள் இன்றி, இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் ஏற்றுமதிக்கு உகந்த பயராகவும் உள்ளது.இந்தியாவிலிருந்து சிறுதானியங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிக ஊட்டச்சத்து  காரணமாக, சந்தைகளில் இவற்றின் தேவை பெரிதும் அதிகரித்து வருகின்றது. சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதலில் முன்னோடி மாவட்டமாக  விருதுநகர் மாவட்டம் திகழ்கிறது.மேலும், தமிழ்நாட்டில் அதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக உள்நாட்டு மற்றும் சர்தேச சந்தைகளை ஆய்வு செய்வது அவசியமாகின்றது.மேலும்,  உற்பத்தியாளர்களுக்கு அதிக விளை கிடைத்திடவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டும், விநியோகச் சங்கிலியின் செயல்திறனை அதிகரிக்கவும்,  விவசாயிகளுக்கு இது போன்ற பயிற்சிகள் மற்றும் உற்பத்தியாளர் வர்த்தகர்கள் இணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு  வருகின்றன.தென் மாவட்டங்களில் சிறுதானியங்கள், சிறுதானிய உணவு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதற்கான தேவை இருக்கிறது.எனவே, விவசாயிகள், வணிகர்கள்  வணிகம் செய்வது, மதிப்பிக்கூட்டல், வங்கி கடனுதவிகள், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவைகளை நன்கு அறிந்து கொண்டு பயன் பெற  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் அவர்கள் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசு, இந்திய அளவிலே முதல் முறையாக வேளாண்மைக்காக 5 முறை தனியாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து,   வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கும், வேளாண்மை பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தி, வேளாண் பெருமக்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தான் இந்த உற்பத்தியாளர் மற்றும் வணிகர்களுக்கான இணைப்பு கூட்டம் இன்றைக்கு நடைபெறுகிறது. இது போல் இணைப்பு கூட்டங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மண்டலங்களில் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியினுடைய நோக்கம் என்னவென்றால், வேளாண் பெருமக்களுக்கு அவர்களின் விளை பொருட்களுக்கு, சரியான விலை நிர்ணயித்து வாங்குபவரை கண்டறிந்து, அவர்களுடைய பொருளை சரியான விலைக்கு விற்று உரிய விலையை பெற வேண்டும் என்பதும், தொழில்நுட்ப உரைகள் மற்றும் தொழில்நுட்ப கருத்தாய்வுகளில் விவசாயிகள் தங்களது அறிவை மேம்படுத்தி, விவசாயத்தில் மதிப்புக் கூட்டுதல் போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு வேளாண் பெருமக்கள் செல்வதை ஊக்கப்படுத்துவதற்காகவும், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க 2023-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. மேலும், இந்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக சிறுதானியங்களை சேர்த்துள்ளது.அதன்படி, தமிழ்நாடு அரசு இந்த சிறுதானிய இயக்கத்தின் கீழ், மதிப்பு கூட்டல் நிறுவனங்களுக்கு  இயந்திரங்களை வாங்குவதற்காக 75 சதவீதம் மானியத்துடன் கூடிய நிதி உதவியை வழங்கி வருகிறது.அந்த வகையில் இதுவரை 31 பயனாளிகள் ரூ.3.05 கோடி மதிப்பிலான மானியங்களை பெற்று தொழில்களை தொடங்கி இருக்கிறார்கள். மேலும், தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில், வேளாண் விளைப்பொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் இத்திட்டத்தின் மூலம் 10 கோடி வரையிலான திட்டங்களுக்கு 25 சதவீதம் மானியமும்,பெண்கள், தொழில் முன்னேற்றத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவிகிதம் மானியமாக அதிகப்பட்சம் ரூ.1.50 கோடி வழங்கப்படுகிறது.இந்த புவிசார் குறியீடு உரிமம் பெறுவதன் மூலமாக ஏற்றுமதிகளை நாம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து, மிகப்பெரிய அந்நிய செலவாணியை ஈட்ட முடியும். இதுபோன்று, தமிழ்நாடு அரசானது வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இது போன்ற கூட்டங்களை விவசாய பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி மு.சுமதி அவர்கள் சிறுதானிய பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் மத்திய மாநில திட்டங்கள் என்ற தலைப்பிலும்,வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல தலைவர் திருமதி சோபனா அவர்கள் சிறு தானியப் பயிர்களின் ஏற்றுமதி வாய்ப்புகள், சந்தை தேவைகள் மற்றும் APEDA நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,வேளாண் ஏற்றுமதி தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் முத்த மேலாளர் திரு.பரத்குமார் அவர்கள் சிறுதானியப் பயிர்கள் ஏற்றுமதியில் TNAPEX  நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிலையம் (ஹைதராபாத்) முனைவர் ஏ.சீனிவாஸ் அவர்கள் சிறுதானியங்கள் மதிப்புச் சங்கிலி மேம்பாடு மற்றும் சந்தை வாய்ப்புகள் என்ற தலைப்பிலும்,உணவு அறிவியல் துறை, சமுதாய அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியர் (மதுரை)   முனைவர் A.கலைச்செல்வன் அவர்கள் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு ஏற்ற நவீன சிறுதானிய மதிப்பு கூட்டு தொழில்நுட்பங்கள்  என்ற தலைப்பிலும்,தாவர சுகாதார மையத்தின் அலுவலர் முனைவர் ஸ்ரீ ஹர்சா அவர்கள் சிறுதானியப் பயிர்களின் ஏற்றுமதி தரத்தை அடைவதற்கான பியர் சுகாதார நடவடிக்கைகள் என்ற தலைப்பிலும்,குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் உதவி இயக்குநர் திரு. Gசிமியோன் அவர்கள் சிறுதானியப்பயிர்களின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் மதிப்புக் கூட்டுகலுக்கான திட்டங்கள் என்ற தலைப்பிலும்இளம் தொழில்முறை நிபுணர், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ((DGFT), கோவை     திருமதி B.ஹரிப்பிரியா அவர்கள் சிறுதானியப்பயிர்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் DGFT  நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,துணை இயக்குநர், இந்திய சிப்பம் கட்டும் நிறுவனம் (சென்னை) அவர்கள் ஏற்றுமதிக்கேற்ற தளத்தில் சிறுதானிய பயிர்களை சிப்பமிடும் முறைகள் என்ற தலைப்பிலும்,இந்திய ஏற்றுமதி கடன் உத்திரவாத நிறுவனம்(ECGC)), மதுரையின் கிளை மேலாளர் திரு.சுபாஷ் குமார் ஜா அவர்கள் சிறுதானியப் பயிர்கள் ஏற்றுமதியில் இந்திய கடன் உத்தரவாத ஏற்றுமதி நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம், மதுரை, முதன்மை செயல் அலுவலர் திரு.K.கணேசமூர்த்தி அவர்கள் சிறுதானியப்பயிர்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் MABIF  நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,UCORP Exim, திருச்சி திரு.உதயகுமார் அவர்கள் வேளாண் ஏற்றுமதி: உலக வர்த்தகத்தில் உங்களின் நுழைவாயில் என்ற தலைப்பிலும்,அங்கக வேளாண்மை ஆலோசர் திரு.மகேந்திரா எம் மணிவாசன் அவர்கள் அங்கக உணவுப்பொருட்கள் ஏற்றுமதிக்கான நடைமுறைகளும், சான்றிதழ்களும் என்ற தலைப்பிலும்,இணை பேராசிரியர் NIFTEM தஞ்சாவூர் முனைவர் அகல்யா அவர்கள் சிறுதானிய பயிர்களின் ஏற்றுமதில் மதிப்புக்கூட்டுதலின் இன்றியமையாமை என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினார்கள்.

Aug 07, 2025

வடக்கு தேவதானம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வடக்கு தேவதானம் ஊராட்சியில் (06.08.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Aug 07, 2025

பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் பனை சார்ந்த சிறு தொழில் முனைவோர்கள் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டின் மாநில மரமும் தமிழர்களின் வாழ்வோடும் மொழியோடும் இயைந்துள்ளதுமான பனை மரம், நிலத்தடி நீரை அதிகரித்தும், மண் அரிப்பினை தடுத்தும், மண்ணை  உறுதிப்படுத்தி வளப்படுத்தியும் மண்ணிற்குகந்த மரமாக விளங்குவதோடு, அடி முதல் நுனி வரை பயனளித்து மக்கள் பலரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-26 ஆம் நிதி ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கத்திட்டத்தில் ரூ.6.30/-இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பனை மரத்தின் பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகள் தங்கள் வயலின் வரப்புகளிலும், வயல் ஓரங்களிலும் நடவு செய்து பயன்பெறும் வகையில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை மூலம் 40,000 பனை விதைகள் விநியோகம் செய்ய ரூ.1.20/-இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பயனாளி அதிகபட்சமாக 50 விதைகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள்/ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 விதைகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.மேலும் 600 பனங்கன்றுகள் விநியோகம் செய்ய ரூ.60,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பயனாளி அதிகபட்சமாக 15 பனங்கன்றுகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள்/ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 30 பனங்கன்றுகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.பனை சாகுபடி அல்லது பனை சார்ந்த தொழில் செய்யும் விவசாயிகளில் தொடக்க பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளை பனை சாந்த சிறு தொழில் முனைவோர்களாக ஊக்குவிக்கும் பொருட்டு 160 சதுர அடியில் நிரந்தர மதிப்புக் கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்காக 50 சதவீதம் மானியத்தில் ஒரு அலகிற்கு அதிகபட்சமாக ரூ.50,000/- வீதம் 9 அலகிற்கு ரூ.4.50/- இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் பனை சார்ந்த சிறு தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் பயன்பெற https://tnhorticulture.tn.gov.in  என்ற இணையதளத்திலோ, உழவன் செயலியில் பதிவு செய்தோ  அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.     

1 2 ... 98 99 100 101 102 103 104 ... 152 153

AD's



More News