25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 15, 2025

அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு 31.07.2025 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

.  2025-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  அரசு/ தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 31.07.2025  நடைபெறுகிறது.எனவே ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ/மாணவிகள்,அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.                  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு கீழ்க்கண்ட அரசு சலுகைகள் வழங்கப்படுகிறது.  1. மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- வழங்கப்படும்.2. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும்.3. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும்.  4. 2 செட் சீருடை தையற்கூலியுடன் வழங்கப்படும்.5. பாடநூல்கள் மற்றும் வரைபடக்கருவிகள் வழங்கப்படும்.6. விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும்.7. மூடு காலணி வழங்கப்படும்.8. கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.9. அடையாள அட்டை வழங்கப்படும்.10. தேர்வு கட்டண விலக்கு வழங்கப்படும்         மேலும்,பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில், வளாக நேர்முகத்தேர்வு நடத்தி (கேம்பஸ் இன்டர்வியூ) மூலம் முன்னணி நிறுவனங்களில்  வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். ஊதியம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை தொழிற்நிறுவனங்களின் தகுதிநிலைக்கேற்ப வழங்கப்படும்.        இந்த அரியவாய்ப்பினை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.                        

Jul 15, 2025

பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில்அன்னாரது 123-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்நாடு அரசு செய்தித்துறையின் சார்பில், தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்துகின்ற வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று அரசின் சார்பில் ஆண்டுதோறும்  மாலை அணிவித்து, மரியாதை  செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினமான ஜுலை 15-ஆம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.அதன்படி, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது  திருவுருவச் சிலைக்கு இன்று  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்,  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்; அவர்கள் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலைக்கும், நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரது சிலைக்கும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், உதவி இயக்குநர்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (மு.கூ.பொ) திரு.ச.தங்கவேல், செயற்பொறியாளர் (கட்டடம்) திரு.செந்தூர், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், விருதுநகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.யோகேஷ் குமார், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், விருதுநகர் வட்டாட்சியர் திரு.ராஜகுமார், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 14, 2025

திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (12.07.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகள், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து  ஆய்வு செய்தார்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மேலக் குருணைக்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துக்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும்  பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, திருச்சுழி செந்நிலைக்குடி ஊராட்சியில் ரூ.6.20 கோடி மதிப்பில் புதிய 100 சமுதாய வீடுகள், சமுதாயக் கூடம், நூலகம், குழந்தை நல மையம், விளையாட்டு மைதானம், பூங்கா, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்ட வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், திருச்சுழியில்  ஒட்டுமொத்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூ.5.60 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.தொடர்ந்து, நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சேகரிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு,  சிமெண்ட் மூட்டைகளின் இருப்பு குறித்தும் பயன்பெற்றவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும்  ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 14, 2025

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்சுழி கல்லூரணி எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்  குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (12.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முன்னதாக, விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், கண்காணிப்பு அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு தேர்வு குறித்த உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப்-4-ல் பல்வேறு காலியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் 176 தேர்வு மையங்களில் 42,231 விண்ணப்பதாரர்கள் தேர்;வு எழுதினர்.  தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 34 தேர்வு நடமாடும் குழுக்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படை அலுவலர்களும், 176 தேர்வு மையங்களுக்கு 184 வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.அதன்படி, விருதுநகர் வட்டத்தில் 27 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 7573 நபர்களில் 6,429 நபர்களும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 25 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 6,892 நபர்களில் 5,909 நபர்களும், காரியாபட்டி வட்டத்தில் 12 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 2,755 நபர்களில் 2,419 நபர்களும், இராஜபாளையம் வட்டத்தில்  28 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 8,903 நபர்களில் 7,535 நபர்களும், சாத்தூர் வட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 4,238 நபர்களில் 3,640 நபர்களும் தேர்வு எழுதினர்.சிவகாசி வட்டத்தில்  27 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 8,255 நபர்களில் 6,998 நபர்களும், திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் 20 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 5,830 நபர்களில் 5,021 நபர்களும், திருச்சுழி வட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 1,416 நபர்களில் 1,236 நபர்களும், வெம்பக்கோட்டை வட்டத்தில்  4 தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 1,016 நபர்களில் 847 நபர்களும், வத்திராயிருப்பு வட்டத்தில் 10 தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 2,576 நபர்களில் 2,197 நபர்களும்,என ஆக மொத்தம் மாவட்டத்தில் 176 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 49,454 நபர்களில் 42,231 நபர்கள் தேர்வு எழுதினர். 7,223 நபர்கள் தேர்வுக்கு வரவில்லை..

Jul 14, 2025

பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 2800-க்கும் மேற்பட்டுள்ள  அரசியல் கட்சிகள் உள்ளன.  அதில் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக  ஒரு  தேர்தலிலாவது போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய  நிபந்தனையை நிறைவேற்ற தவறியுள்ள மற்றும் இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகள்  என்பதன் காரணமாக  பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) முதற்கட்டமாக  பட்டியல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.                             2019-ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாததும் அவற்றின் அலுவலகங்கள் எந்த இடத்திலும் அடையாளம் காணப்படாததும் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த  345 (RUPPs)  இந்திய தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதில் விருதுநகர் மாவட்டம்  மற்றும்  வட்டம்  மீசலூர் கிராமம் வீரசெல்லையாபுரம்  காலணி கதவு எண்.3/172 என்ற முகவரியில் இயங்குவதாக குறிப்பிடப்பட்ட  தேச  மக்கள்  முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சி இப்பட்டியலில் உள்ளது. எந்த கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்காக சம்மந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த கட்சிகளுக்கு  காரணம்  கேட்டு  நோட்டீஸ் அனுப்புமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.               அதன்பின் தலைமை தேர்தல் அதிகாரியால் நடத்தப்பெறும் விசாரணை வாயிலாக அக்கட்சிகளுக்கு தங்களது விளக்கத்தை; அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக  இறுதி  முடிவை  இந்திய  தேர்தல் ஆணையம் எடுக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 12, 2025

உலக மக்கள் தொகை தினம்-2025 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  (11.07.2025) மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மற்றும் விருதுநகர் குடும்ப நலச் செயலகம் சார்பில், உலக மக்கள்தொகை தினம்-2025 முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.உலக மக்கள்தொகை தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். உலக மக்கள்தொகை வளர்ச்சியைச் சுற்றியுள்ள முக்கிய பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி, உலக மக்கள் தொகை தினம்-2025 முன்னிட்டு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  செவிலியர் மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்த பேரணியில் கலந்து கொண்ட பயிற்சி செவிலியர்கள் தங்கள் கைகளில், “ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம் “, “உடலும் மனமும் பக்குவமடைந்து உறுதியாகும் வயது 21, அதுவே பெண்ணுக்கும், திருமணத்திற்கும், தாய்மையடைவதற்கும் உகந்த வயது” என்ற கருப்பொருளுடன், பெண்கள் நாட்டின் கண்கள், ஏற்போம், ஏற்போம் வாழ்க்கை வளம் பெற குடும்ப நலம் ஏற்போம் உள்ளிட்ட  விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த பேரணியானது அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள மகப்பேறு கட்டிடத்தில் தொடங்கி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது.பின்னர், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, கருத்தரங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது.  பேச்சு, கட்டுரை, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில்  வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், துணை இயக்குநர்கள் மரு.விமலா (குடும்ப நலம்), மரு.மாரியப்பன் (காசநோய்), மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.அரவிந்த்பாபு, அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 12, 2025

மல்லாங்கிணறு பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள்  (11.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு, உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் குறித்தும், 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி பாடங்கள் குறித்த கேள்விகளை கேட்டறிந்தும் ஆய்வு செய்தார்.

Jul 12, 2025

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் வருகின்ற 23.07.2025 அன்று ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது

 தமிழ்நாடு முதலமைச்சர் /  துணை முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மற்றும்  சிறுபான்மையினர் அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச அவர்கள் ஆய்வு கூட்டம் நடத்த வருகின்ற 23.07.2025 (புதன்கிழமை) அன்று விருதுநகர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளனர்.சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் 23.07.2025(புதன்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் மற்றும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.   அவ்வமயம் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரிதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரிதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 12, 2025

மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களின் மீன்பாசி குத்தகைக்கு மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

 விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள தாமரைக்குளம், இராஜபாளையம் வட்டத்திலுள்ள மருங்கூர் மற்றும் குறவன்குளம் ஆகிய 3-கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமையினை மூன்று ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in  என்ற இணையதள முகவரியில் காணலாம்.              தெளிவுரைகள் மற்றும் விவரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 114 B 27/1, வேல்ச்சாமி நகர், பி.ஆர்.சி.டிப்போ பின்புறம், விருதுநகர் 626 001 என்ற முகவரியில் இயங்கிவரும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.மேலும், 04562 - 244 707  என்ற தொலைபேசி எண்ணிலும், adfisheriesvnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 11, 2025

இராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில்   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,  I A S., அவர்கள் (09.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகள், சேவைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு, அப்பணிகள் முறையாகவும், அரசு விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, இராஜபாளையம் அய்யனார் கோவில் மலை அடிவாரத்தில்  வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சந்தித்து கலந்துரையாடி, அரசின் அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கிறதா என்பது குறித்தும்,  அவர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும்,  குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த மலைவாழ் குடும்பங்களுக்கு  மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.அதனைத்தொடர்ந்து,இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள்,சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள்,  மற்றும்பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர்,  குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்த திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளை  வழங்கினார்.பின்னர், இராஜபாளையத்தில் உள்ள  ஜெயந்த்  மலை வாழ் பழங்குடியினர் மாணவ, மாணவியர்  விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  பார்வையிட்டு, குடிநீர், சுகாதாரம், வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

1 2 ... 94 95 96 97 98 99 100 ... 140 141

AD's



More News