25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ஆன்மீகம்

Feb 13, 2026

தமிழ்நாட்டில் உள்ள கோபுரங்கள் உயரம்.

ஸ்ரீரங்கம்=236 அடி திருவண்ணாமலை=217 மற்றும் தஞ்சாவூர்=216 அடி. ஆவுடையார் கோவில்=200 அடி. தென்காசி= 178 அடி. ஸ்ரீவில்லிபுத்தூர்= 164 அடி. மதுரை=170 அடி. மன்னார்குடி=154 அடி. குடந்தை சாரங்கபானி= 147 அடி. சிதம்பரம்=140 அடி. சுசீந்திரம்= 134. குடந்தை கும்பேஸ்வார்= 128 அடி. திருவனைகாவல்= 128 அடி. இராமேஸ்வரம்=126 அடி. திருச்செந்தூர்=127. சங்கான்கோவில்= 125 அடி. திருவாருர்= 118 அடி .

Feb 13, 2026

டோலேஷ்வர் மகாதேவர்

நேபாளத்தில் உள்ள பக்தபூர் நகரில், சூரிய விநாயக் பகுதியில் உள்ளது டோலேஷ்வர் மகாதேவ் கோயில். இயற்கை ஆர்வலர்கள் மலை, காடுகளை ரசித்தபடி இக்கோயிலுக்கு சென்று வரலாம்.அரனிகோ நெடுஞ்சாலையை விட்டு விலகி, அடர்ந்த மலையை நோக்கி வாகனம் செல்கிறது. பசுமையான தாவரங்கள், மலைகள், வளைவான சாலைகள் என பக்தபூர் நகரின் அழகான காட்சியை வழி நெடுக கண்டு களிக்கலாம். பிமலேஷ்வர், சிபரே மகாதேவ் கோயில் என்றும் இக்கோயிலை அழைக்கின்றனர். கோயிலுக்கு வெளியே பெரிய நந்தி சிலை, உயரமான திரிசூலம் பக்தர்களை வரவேற்கிறது.பகோடா பாணியில் கட்டப்பட்ட இக்கோயிலின் கருவறையில் மூலவர் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். பழமையான இந்த சிவலிங்கம் துவாபர யுகத்தின் முடிவில் தோன்றியது என்பது சிறப்பு.கேதார்நாத் கோயிலின் நடைமுறைகளை பின்பற்றி இங்கு காலை முதல் மாலை வரை ஆரத்தி சடங்குகள் நடக்கிறது.கேதார்நாத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்த காலத்தில் பசுவின் வடிவில் சிவபெருமானை வழிபட்டனர். அந்த பசுவின் தலைப்பகுதி,இந்தக் கோயிலிலும், மற்ற பாகங்கள் கேதார்நாத் கோயிலிலும் உள்ளன. அதனால் கேதார்நாத் கோயில் முறைப்படியே பூஜை நடக்கிறது .கேதார்நாத் கோயிலை தரிசித்த பின்னரே பக்தர்கள் இங்கு வருகின்றனர்.பசுவாக இருந்த சிவனின் உடல், தலைப்பகுதி இரண்டையும் வழிபட புண்ணியம் இருந்தால் மட்டுமே தரிசிக்க முடியும்.

Feb 06, 2026

திருக்கோவிலுார் உத்தமன் உலகளந்த பெருமாள் .

 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று ஆண்டாள் திருப்பாவையில் இவரை போற்றுகிறாள்.மகாபலி மன்னனை ஆட்கொள்ள வாமனராக வந்த மகாவிஷ்ணு விஸ்வரூபம் எடுத்தார். இந்த காட்சியை தரிசிக்க மிருகண்டு என்னும் முனிவர் விரும்பினார்.பிரம்மாவின் வழிகாட்டுதலுடன் பூலோகத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள திருக்கோவிலுாரில் தவம் புரிந்தார். முனிவரின் மனைவி மித்ராவதியும் உடனிருந்து அன்னதானம் செய்து வந்தார். முனிவரைச் சோதிக்க விரும்பிய மகாவிஷ்ணு, முதியவர் வடிவில் தோன்றி யாசகம் கேட்டார். மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம் அதை தெரிவித்தார். ஒரு நெல்மணி கூட இல்லாத நிலையில் மித்ராவதி, "நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால் இந்த பாத்திரத்தில் அன்னம் நிரம்பட்டும்" என்றாள்.மகாவிஷ்ணுவின் அருளால் அன்னம் நிரம்பியது. உடனே முதியவராக வந்த விஷ்ணு சுயவடிவில் காட்சியளித்தார். அவரே உலகளந்த பெருமாளாக இங்கு கோயில் கொண்டார்.விஷ்ணுவின் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு முனிவரின் உபசரிப்பால் தன்னை மறக்கவே வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்தி நிற்கிறார். உலகளந்த பெருமாள், ஆயனார், இடைக்கழி ஆயன் என்றும் இவருக்கு பெயருண்டு.மரத்தால் செய்யப்பட்ட இவரது திருமேனியே 108 திவ்யதேசங்களில் மிக உயரமானது.கருவறையில் மூலவர் வலது காலால் ஆகாயத்தை அளந்த படியும், இடது காலை பூமியில் ஊன்றியும் நிற்கிறார். தூக்கிய வலது திருவடிக்கு பிரம்மா தீர்த்தத்தால் அபிஷேகம் செய்கிறார். கீழே ஊன்றிய இடது திருவடியின் கீழ் மகாபலியின் மகன் நமச்சு மகாராஜா இருக்கிறார். பெருமாளுக்கு அருகில் மகாபலியின் தாத்தா பிரகலாதன், மகாலட்சுமி, மகாபலி, மிருகண்டு முனிவர், மித்ராவதி ஆகியோர் உள்ளனர். பூங்கோவல் நாச்சியார் என்னும் பெயரில் தாயார் தனி சன்னதியில் இருக்கிறார்.உற்ஸவரின் திருநாமம் கோபாலன்.5 ஏக்கர் பரப்பு கொண்ட கோயிலின் ராஜகோபுரம்192 அடி.11 நிலைகள் கொண்ட இக்கோபுரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம்(முதலாவது ஸ்ரீரங்கம், இரண்டாவது ஸ்ரீவில்லிபுத்துார்) பெருமாள் சன்னதிக்கு எதிரில்40 அடி உயர ஒரே கல்லால் ஆன கருடத்துாண் உள்ளது.மூலவரின் பின்புறம் உள்ள வாமனரை ஓணத்தன்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். கோயில் நுழைவு வாயிலின் வலப்புறம் சாளக்கிராம கிருஷ்ணர் இருக்கிறார்.வீர ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன.

Jan 30, 2026

பள்ளிகொண்ட நரசிம்மர்.

கடலுார் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள திருவதிகை சரநாராயணப்பெருமாள் கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரதோஷத்தன்று இவரை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்.அசுரர்களான தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலியிடம் பறக்கும் கோட்டைகள் இருந்தன. அவற்றில் பறந்து சென்று தேவர்களையும், முனிவர்களையும் தாக்கினர். சிவபெருமானிடம் முறையிடவே, அவர் அசுரர்களுடன் போர் புரிய தயாரானார். அதற்காக தேர் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் சூரியனும், சந்திரனும் சக்கரங்களாக மாறினர். பூமி தேரின் தட்டாக ஆக்கப்பட்டது. நான்கு வேதங்களும் குதிரைகளாக தேரில் பூட்டப்பட்டது.மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் ஆதிசேஷனை அதில் நாணாக பூட்டினார், பிரம்மா தேரின் சாரதியாக அமர்ந்தார், மகாவிஷ்ணுவே அம்பாக மாறி அசுரர்களின் அழிவுக்கு துணை நின்றார். அவரே 'சர நாராயணப் பெருமாள்' என்னும் பெயரில் இங்கு குடி கொண்டிருக்கிறார். சரம் என்ற சொல்லுக்கு அம்பு என பொருள். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள மகாவிஷ்ணுவின் சிலை சாளக்கிராம கற்களால் ஆனது. பாரதப்போர் முடிந்ததும் பிராயச்சித்தம் தேடிய அர்ஜுனன் இங்கு வழிபாடு செய்யபாவம் நீங்கப் பெற்றார். செங்கமலத்தாயார் தனி சன்னதியில்இருக்கிறார். மாதம் தோறும் உத்திர நட்சத்திரத்தன்று தாயாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. வழக்கமாக கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இங்கு மட்டும் கைகட்டி சேவை செய்யும் நிலையில் உள்ளார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளான ஸ்ரீதேவியை மகாவிஷ்ணு இங்கு மணம் செய்தார். இத்தலத்தை தரிசித்தால் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். மகாலட்சுமியின் அம்சமான வில்வம் தலவிருட்சமாக உள்ளது.இங்குள்ள நரசிம்மர் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அசுரனான வக்ரனை வதம் செய்த களைப்பு தீர நரசிம்மர் இங்கு தங்கியுள்ளார். பிரதோஷத்தன்று நரசிம்மரை வழிபட்டால் சுகபோக வாழ்வு கிடைக்கும்..

Jan 23, 2026

சோளிங்கரில் உள்ள கடிகாசலம் மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயர்காட்சி தருகிறார். 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள கடிகாசலம் மலையில் யோக ஆஞ்சநேயர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். இவரை அமாவாசையன்று தரிசித்தால் எதிரி தொல்லை, கடன் பிரச்னை, வீண்பயம் நீங்கும்.புராண காலத்தில் வாழ்ந்த வாமதேவர், வசிஷ்டர், கஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் என்னும் முனிவர்கள் மோட்சம் அடைய விரும்பினர். இதற்காக கடிகாசல மலையில் நரசிம்மரை நோக்கி தவமிருந்தனர். காலன், கேயன் என்னும் அசுரர்கள் அவர்களுக்கு இடையூறு செய்தனர்.இதில்இருந்துமுனிவர்களை விடுவிக்கஆஞ்சநேயரைஅனுப்பியநரசிம்மர், அவருக்குசங்கு, சக்கரத்தையும் கொடுத்தனுப்பினார். சக்கராயுதம் மூலம் அசுரர்களை வதம் செய்தார் ஆஞ்சநேயர். இதன் பின் முனிவர்களின் தவம் தடையின்றி நிறைவேறியது. இறுதியில் யோக நரசிம்மர் காட்சியளித்து முனிவர்களுக்கு மோட்சம் அளித்தார். அவரே இந்த மலைக்கோயிலில் யோக நரசிம்மராக அருள்புரிகிறார். 500 அடி உயரமுள்ள பெரிய மலையில் யோக நரசிம்மரின் சன்னதி உள்ளது.மலைக்குச் செல்ல 1305 படிகள் உள்ளன. மலையிலிருந்து 4 கி.மீ. துாரத்திலுள்ள சோளிங்கர் கோயிலில் உற்ஸவரான பக்தவத்சலர், சுதாவல்லித்தாயாருடன் இருக்கிறார். அமிர்தவல்லி தாயாருக்கும் சன்னதி உள்ளது.அமிர்த குளம், தக்கான் குளம் என்னும் தீர்த்தங்கள் உள்ளன. பெரிய மலைக்கு எதிரிலுள்ள சிறிய மலையில் ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருக்கிறார். அக்கோயிலை அடைய 406 படிகள் ஏற வேண்டும்.யோகநிலையில் உள்ள ஆஞ்சநேயரின் கைகளில் சங்கு, சக்கரம் உள்ளன. இவரது கண்கள் பெரிய மலையில் உள்ள நரசிம்மரின் பாதங்களை நோக்கியபடி இருப்பது சிறப்பு. மனநோயாளிகள் குணமடையவும், விரும்பிய மணவாழ்க்கை, குழந்தைப்பேறு உண்டாகவும், வியாபாரம் செழிக்கவும் அன்னதானம் செய்கின்றனர். வீடு கட்டும் பணி விரைவில் நிறைவேற மலைப்பாதையில் கற்களை அடுக்குகின்றனர். நினைத்தது நிறைவேற பவுர்ணமியன்று மலையைச் சுற்றுகின்றனர்.

Jan 16, 2026

முக்தி நாராயணர்.

நேபாளம் முஸ்தாங் மாவட்டம் முக்திநாத்தில் ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்ய தேசமான முக்தி நாராயணர் கோயில் உள்ளது. இமயமலைச் சாரலில் உயரமான இடத்தில் அமைந்த கோயில் இது. இப்பகுதியில் சாலமரங்கள் நிறைய இருந்ததால் 'சாளக்கிராம ஷேத்திரம்' எனப்பட்டது. இப்பகுதி மக்கள் 'முக்தி நாராயண ஷேத்திரம்' என்கின்றனர். இங்கு தாமோதர குண்ட் என்ற குளம் உள்ளது. நேபாள பாணியில் அமைந்த இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கியபடி சுவாமி இருக்கிறார். சுயம்பு மூர்த்தியான இவர் மீது திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் பாடியுள்ளனர். ஆனால் முன்பு நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி சுவாமி இருந்ததாக பழைய நுால்களில் கூறப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வார் தன் பாடலில் இதை உறுதிப்படுத்துகிறார். கால மாற்றத்தால் புதிய சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். சுவாமிக்கு அர்ச்சனை, அபிஷேகம் கிடையாது. செப்பு கிண்ணத்தில் சந்தனம்,குங்குமம், ஜவ்வாது இருக்கும். அதை துணியில் ஒற்றி சுவாமியை துடைப்பர். இதையே அபிஷேகமாக கருதுகின்றனர். விருப்பம் நிறைவேற சிறிய மணிகளை வாங்கி கோயிலில் கட்டுகின்றனர். இங்குள்ள யாகசாலையில் எப்போதும் நெருப்பு எரிகிறது. அதில் பக்தர்கள் அமர்ந்து மந்திரம் சொல்லி ஹோமம் நடத்துகின்றனர். லட்ச தீபம் ஏற்றும்  வழிபாடு இங்குண்டு. கருடன், சந்தோஷி மாதா, லலிதா, விநாயகர், பார்வதி, சிவன் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள நீர்த்தொட்டியில் தனித்தனி குழாய் வைத்து 108 தீர்த்தங்கள் செயற்கையாக  அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர பாவ, புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் நீராடுவோருக்கு நிம்மதியும், மோட்சமும் கிடைக்கும். நவம்பர் முதல் மார்ச் வரை குளிர் காலம் என்பதால் தீர்த்தத்தில் நீராடுவது  சிரமம். இங்கு கிடைக்கும் சாளக்கிராம கல்லை பூஜையறையில் வைத்து வழிபட தோஷம் எல்லாம் விலகும்.

Jan 09, 2026

கதிர்காமம் முருகன் கோயில்.

இலங்கையின் தென்கிழக்கும் கரையில் ஊவா மாகாணம் கதிர்காமம் கோயில் உள்ளது. இங்கு 'கப்புறாளைமார் என்னும் சிங்களர்கள் தங்களின் வாயைக் கட்டி கருவறையில் உள்ள திரைக்குப் பின்புறம் நின்று பூஜை செய்வர். இதை விட ஆச்சர்யம் என்ன என்றால் திரைக்குப் பின்புறம் முருகனின் சிலை இல்லை, கருவறையில் உள்ள பெட்டிக்கு பூஜை நடக்கிறது.சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த முருகன் இங்கு வள்ளியை காதல் மணம் புரிந்ததால் இத்தலம் 'கதிர்காமம்' எனப் பெயர் பெற்றது. இவரை கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி, கந்தக்கடவுள் என அழைக்கின்றனர். வள்ளியை மணம் புரிந்ததால் தனக்கு பிடித்த இடம் கதிர்காமம் என இங்கு கோயில் கொண்டார். இன்னொரு வரலாற்றின்படி சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகன் கதிர்காமத்திற்கு வந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதியின் அருகில் பாசறை அமைத்தார். சூரனுடன் போரிட்டு வெற்றி பெற்ற பின் நவகங்கைத் தீர்த்தத்தை உருவாக்கி தேவர்கள் வழிபடுவதற்காக இங்கு எழுந்தருளினார்.காவடி எடுத்தல், கற்பூரச் சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல் என நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கதிர்காம மலையில் இருந்து கிடைக்கும் வெண்ணிறக் கட்டியை திருநீறாக தருகின்றனர். இங்குள்ள பழங்குடியினர் முருகனைத் தங்களின் மாப்பிள்ளையாக கருதுகின்றனர். 'வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே' என அருணகிரிநாதர் பாடியுள்ளார். இங்கு பூஜை செய்யும் கப்புறாளைமார் என்ற சிங்களர்கள் தங்களை வள்ளியின் வழித்தோன்றல் என்கின்றனர்.எல்லாளன் என்ற தமிழ் மன்னரை வெற்றி பெற விரும்பிய துட்ட கெழுனு என்ற இங்கள மன்னன் கதிர்காமத்து முருகனிடம் வேண்டுதல் வைத்து விரதம் இருந்தான். அதன்படி வெற்றி பெற்றதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில் எழுப்பினான். விநாயகர், பெருமாள், தெய்வானை சன்னதிகள் உள்ளன. கதிர்காமர் (முருகன்) தெற்கு நோக்கியும், வள்ளி வடக்கு நோக்கியும் எதிரெதிரில் உள்ளனர்.இங்கு முருகனின் கருவறை வண்ணத் திரையால் மூடப்பட்டிருக்கும். அதில் வள்ளி, தெய்வானையுடன் முருகனின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். பக்தர்கள் தரும் அர்ச்சனைப் பொருட்களை திரைக்குள் சென்று கப்புறாளைமார் சுவாமிக்கு சமர்ப்பிப்பர்.காஷ்மீரைச் சேர்ந்தவர் துறவி கல்யாணகிரி. 12 ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்ட இவரது சமாதி இங்குள்ளது. முத்துலிங்க சுவாமிகள் எனப்படும் இவர் வழிபட்ட சரவணபவ யந்திரமே கருவறையில் இருப்பதாகச் சொல்வர்.

Jan 02, 2026

திருமணம் நடக்க...

விழுப்புரம் அருகிலுள்ள சிறுவந்தாடு கிராமத்தில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமையில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபட்டால் திருமணம் நடக்கும்.சோழ மன்னர் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். விஜயநகர மன்னர் அச்சுதராயர் இங்கு திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தற்போதுள்ள அமைப்பு 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. மண்டபம் முழுவதும் கருங்கல்லாலும், விமானம் மட்டும் சுதையாலும் ஆனதாகும். கருவறையில் மூலவர் சுகாசனத்தில் அமர்ந்து, மகாலட்சுமி தாயாரை மடியில் தாங்கியபடி இருக்கிறார். தாயாரின் வலதுகை பெருமாளை அணைத்த படியும், இடதுகை தாமரை ஏந்தியும் உள்ளது. அர்த்த மண்டபத்தில் கனகவல்லி தாயார் சன்னதி உள்ளது. எலுமிச்சை மரம் தலவிருட்சமாக உள்ளது.அர்த்த மண்டபத்தின் கூரையில் பல்லி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலிலுள்ள பல்லி போலவே இதன் உருவ அமைப்பு உள்ளது.இதை தொட்டு வணங்குவோருக்கு கிரகதோஷம், நோய், திருஷ்டி விலகும். கருவறையின் பின்புறம் நின்றால் மூலவர், தாயார், ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் விமானத்தை ஒருசேர தரிசிக்கலாம். திருமணத் தடை உள்ளவர்கள் லட்சுமி நாராயணர் முன்பு மட்டைத் தேங்காய் வைத்து வழிபடுகின்றனர். பிரசாதமான அதை வாங்கி வீட்டில் வைத்து தினமும் வழிபட்டால் திருமண யோகம் உண்டாகும்.பக்த ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையில் துளசிமாலை சாத்தி ,நெய்தீபம் ஏற்ற நினைத்தது நிறைவேறும்.

Dec 26, 2025

ஸ்ரீ ரங்கம் பெரிய பெருமாள் .

108 திவ்ய தேசங்களில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பெருமாளை 'பெரிய பெருமாள்' என அழைப்பர். இக்கோயில் ஏழு பிரகாரங்களுடன் 156 ஏக்கர் பரப்பு கொண்டது. கோயிலைச் சுற்றி ஊர் இருக்கும். ஆனால் இங்கு கோயிலுக்குள் ஊர் இருக்கிறது. உள் வீதிகளில் வாகனங்கள் கூட செல்கின்றன. இங்குள்ள ரங்கநாயகி தாயாரே எல்லா தேவியரிலும் உயர்ந்தவள். பிரசாத பாத்திரம், வாத்தியம், பலகாரம் என எல்லாமே இங்கு பெரியது.உற்ஸவரை மக்களில் பெரியவனான ராஜாவுக்கு ஒப்பிட்டு 'ரங்க ராஜர்' என்றும், நமக்கே உரித்தானவர் என்னும் பொருளில் 'நம்பெருமாள்' என்றும், பேரழகு மிக்கவர் என்பதால் 'அழகிய மணவாளர்' என்றும் அழைக்கின்றனர். நவக்கிரகங்களில் அனைவராலும் விரும்பப்படுபவர் சுக்கிரன். தேவைக்கும்அதிகமாகபணம் வைத்திருப்பவரை,"உனக்கென்னப்பா சுக்கிர திசை' என புகழ்வதுண்டு. வெள்ளிக்கிழமையில் ஸ்ரீரங்கம் கோயிலை தரிசித்தால் வளமான வாழ்வு அமையும்.

Dec 19, 2025

ஆட்கொண்டநாதர் கோயில்.

மயில் வாகனத்தில் முருகப்பெருமானை பார்த்திருப்பீர்கள். ஆனால் மயில் மீது அமர்ந்த வள்ளி, தெய்வானையை பார்த்திருக்கிறீர்களா! சிவகங்கை மாவட்டம் இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயிலுக்கு வாருங்கள்.நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அசுரனான இரண்யனை வதம் செய்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் தீர சிவனை வழிபட்ட போது 'ஆட்கொண்டநாதர்' என்னும் பெயரில் இங்கு எழுந்தருளினார்.நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் 'நரசிம்மேஸ்வரர்' என்றும் பெயருண்டு.இரணியனைக் கொன்ற பாவத்துக்கு விமோசனம் தந்த ஊர் என்பதால் இத்தலம் 'இரணியூர்' என பெயர் பெற்றது.ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார். கருவறை விமானத்தை சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் இங்குள்ளது. முன்மண்டபத்தில் இருந்து சுவாமி, விமானத்தை ஒரே நேரத்தில் தரிசிக்கலாம். அறுபது, எண்பது வயதில் நடத்தும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகத்தை இங்கு நடத்துகின்றனர். மாசிமகத்தன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.சிவபுரந்தேவியம்மன் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். நரசிம்மர் சிவனை வழிபட்ட போது உடனிருந்த அம்பிகை, இரண்ய வதத்தால் உக்கிரமாக இருந்த மகாவிஷ்ணுவின் தோற்றம் கண்டு கோபம் அடைந்தாள். அப்போது அவளிடம் இருந்து ஒன்பது சக்திகள் உருவாயின. அவர்கள் அம்மன் சன்னதி எதிரிலுள்ள துாண்களில் நவசக்திகள் என்ற பெயரில் உள்ளனர். இடது பக்கம் திரும்பிய நாய் வாகனத்துடன் பைரவர் இருக்கிறார்.இவருக்கு கார்த்திகை மாதம் 6 நாள் சம்பகசூர சஷ்டி நடக்கிறது.பிரகாரத்தில் வித்தக விநாயகரின் சன்னதி உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறக்க இவரை வழிபடுகின்றனர். சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். குபேரனும், வாயு பகவானும் குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி உள்ளனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 20 21

AD's



More News