25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ஆன்மீகம்

Apr 24, 2026

சிவனை வழிபடும் காளை .

காளைமாடு பக்தியுடன் தினமும் சிவனை தரிசிக்கும் அதிசயம் கர்நாடக மாநிலம் மங்களூரு பாண்டேஸ்வரர் கோயிலில் நடக்கிறது.பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாட்டத்தில் ஈடுபட்டு சகுனியிடம் தோற்றார். இதனால் பாண்டவர்களின் மனைவியான திரவுபதியை, பலர் முன்னிலையில் துரியோதனன் அவமானப்படுத்தினான். இதற்கு பழி தீர்க்கும் வகையில், 'குருக்ஷேத்திர போரில் துரியோதனனின் தலை உருண்டால் தான் கூந்தலை முடிவேன்' என அவள் சபதம் செய்தாள். இதன் பிறகு பாண்டவர்கள் காட்டிற்குப் புறப்பட்டனர். ஓரிடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.பிற்காலத்தில் அங்கு சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. பாண்டவர்கள் வழிபட்டதால் சுவாமிக்கு 'பாண்டேஸ்வரர்' என பெயர் வந்தது.சிவபெருமானின் ஜடாமுடி விரிந்து கிடப்பதால் கருவறையைச் சுற்றும் வழக்கம் இக்கோயிலில் கிடையாது. கார்த்திகை திங்கள் அன்று ருத்ரயாகம் நடக்கிறது. அப்போது ருத்ராட்சம், வில்வ இலைகள், பஞ்சமிர்தத்தால் அபிஷேகம் செய்வர். இதை தரிசிப்பவர்களுக்கு எதிரி பயம் நீங்கும். முயற்சி வெற்றி பெறும்.இங்கு கோமடத்தில் உள்ள காளை மாடு தினமும் உச்சிக்கால பூஜை, இரவு நடக்கும் அர்த்தஜாமபூஜையில் பங்கேற்க சன்னதிக்கு வருகிறது. படியில் காளை ஏறியதும், சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.அப்போது காளை வெளி விடும் மூச்சுக்காற்று நம் உடம்பின் மீது பட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்.நந்தாதீபம் என்னும் பெரிய விளக்கு உள்ளது. இதில் எண்ணெய் விட்டால் கிரகபீடை விலகும். இரவு 8:00 மணிக்கு நடக்கும் ரங்காபூஜையில் சன்னதி முழுவதும் தீபமேற்றுகின்றனர். வெள்ளி அன்று ராகுகாலத்தில் (காலை 10:30-12:00 மணி) நாகதோஷத்தில் இருந்து விடுபட புற்றில் பால் ஊற்றுகின்றனர். மூலவருக்கு 108 துளைகள் உள்ள கலசத்தில் கங்கா தீர்த்தம் நிரப்பி அபிஷேகம் செய்கின்றனர். இதற்கு 'தாராபிஷேகம்' என்று பெயர். இதனால் திருமணத்தடை விலகும். தலவிருட்சமான அரசமரம் கோயிலுக்கு எதிரில் உள்ளது. எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கிடைக்க பவுர்ணமியன்று சத்தியநாராயண பூஜையும், மாதப்பிறப்பு அன்று சதுர்தாபிஷேக பூஜையும் இங்கு நடத்துகின்றனர்.காவல் தெய்வங்களான பஞ்சுளி, முண்டித்தாயா, வைத்திய நாதர், வைஷ்ணவிதேவி, லட்சுமிநாராயணர், அனுமன் சன்னதிகள் இங்குள்ளன.கோயில் முகப்பில் பிரம்மாண்ட சிவன், நந்தி சிலைகள் உள்ளன.

Apr 17, 2026

பணம் சேர வரகூர் லட்சுமிநாராயணர் கோயில்.

தஞ்சாவூர் அருகே வரகூர் லட்சுமிநாராயணர் கோயில்.நாராயணதீர்த்தர் என்னும் மகான் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். பல தலங்களையும் வழிபட்ட அவர் நடுக்காவேரி என்னும் இடத்தில் உள்ள விநாயகர் கோயிலில் தங்கினார். "நாளை காலையில் எழுந்ததும் யாரைக் காண்கிறாயோ அவரை பின் தொடர்ந்தால் உன் நோய் குணமாகும்" என கனவில் சுவாமி தெரிவித்தார். கண் விழித்ததும் ஒரு வெள்ளை பன்றி (வராகம்) கண்ணில் படவே அதை பின்தொடர்ந்தார். அது பூபதிராஜபுரம் லட்சுமி நாராயணர் கோயிலுக்குள் சென்றது. அவரும் அந்த பெருமாளை வழிபட்டு குணம் அடைந்தார். பன்றி வடிவில் பெருமாள் வந்த தலம் என்பதால் 'வரகூர்' எனப் பெயர் பெற்றது. முதலாம் பராந்தகச் சோழனால் இக்கோயில் கட்டப்பட்டது.நாராயண தீர்த்தர் வரகூரில் தங்கியிருந்த காலத்தில் நேரில் கிருஷ்ணரை தரிசித்தார். அவருடன் பாமாவும், ருக்மணியும் வந்திருந்தனர். அப்போது,"நாராயண தீர்த்தரே... கிருஷ்ணாவதாரத்தில் கோபியருடன் நடத்திய திருவிளையாடலை பாடுங்கள்" என பாமா வேண்டுகோள் விடுத்தார். அவரும் 'ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற பாடலைப் பாடினார்.இங்கு மூலவரை லட்சுமிநாராயணர் என்றும், உற்ஸவரை வெங்கடேசப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர். துளசி,ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் கலந்த பொடி சுவாமிக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக தருகின்றனர். இதை சாப்பிட்டால் நோய் வராது. இங்கு 'கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடல்களை கிருஷ்ண ஜெயந்தியன்று பாடுவர். குழந்தை வரம் பெற அங்கப்பிரதட்சணம் செய்வர்.பண பலம் பெருக பெருமாளின் கையிலுள்ள வெள்ளிக்குடத்தில் வெண்ணெய் நிரப்புகின்றனர்.

Apr 10, 2026

 பாண்டவர்களின் தாய் குந்திதேவி வழிபட்ட குந்தேஸ்வர் மகாதேவ் கோயில்

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ளது குந்தேஸ்வர் மகாதேவ் கோயில். பாண்டவர்களின் தாய் குந்திதேவி வழிபட்ட இத்தலத்திற்கு வந்தால் வெற்றி நிச்சயம்.பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே போர் நடப்பது உறுதியானது. உடனே பாண்டவர்களின் தாய் குந்திதேவி சிவபூஜை செய்தாள். ஒருநாள் அவளது கனவில் தோன்றிய சிவன், "தங்க மலர்களால் என்னை பூஜை செய். வெற்றி நிச்சயம்'' என்றார். உடனே தன் மகன் அர்ஜூனனிடம், 'தங்க மலர்கள் பூக்கும் மரத்தை கொண்டு வா" என கட்டளையிட்டாள். அவனும் கிருஷ்ணரிடம் சொல்லவே, "தங்க மலர் என்பது பாரிஜாத மலரைக் குறிக்கும்.பாற்கடலில் இருந்து தோன்றிய இந்த மரம், தற்போது இந்திரலோகத்தில் உள்ளது. அவரை வேண்டினால் மரம் கிடைக்கும். அதை சிவலிங்கத்திற்கு அருகிலேயே நட்டு விடு" என ஆலோசனை கூறினார். அர்ஜூனனும் தவம் செய்து அந்த தெய்வீக மரத்தை பெற்றான். அம்மரத்தின் சிறப்பே அதன் மலர்கள்தான். மரத்தில் இருக்கும் வரை வெள்ளை நிறமாக இருக்கும். பறித்தவுடன் தங்க நிறத்திற்கு மாறி விடும். அந்த மரத்தை மண்ணில் நட்டவுடன் உடனே வளர்ந்து பூ பூத்தது. மகிழ்ந்த குந்திதேவியும் அன்று முதல் சிவபூஜை செய்தாள். பாண்டவர்களும் போரில் வெற்றி பெற்றனர். குந்திதேவி வழிபட்டதால் சுவாமி 'குந்தேஸ்வரர்' என பெயர் பெற்றார்.தற்போதும் இந்த பாரிஜாத மரம்கோயிலுக்கு வெளியே உள்ளது. இங்குள்ள பாரிஜாத மரத்தின் வயது 5000 ஆண்டுகள். குந்தி தேவி இறந்த போது அவரை எரித்த சாம்பல் இம்மரத்தைச் சுற்றியே ாவியதால் தான் மரம் செழித்து வளர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். கோயிலுக்கு சற்று முன்பு அலங்கார வளைவு நம்மை வரவேற்கிறது. அதை தாண்டிச் சென்றால் வீடு மாதிரி முகப்பும், அகலமான துாண்களையும் காணலாம். அதுவே கோயிலின் முன்தோற்றம்.கருவறையில் சிவன் செவ்வக வடிவில் காட்சி தருகிறார். இரண்டு அடி உயரத்தில் தலையில் குல்லா அணிந்தது போல நடுவில் லிங்க வடிவம் வித்தியாசமாக உள்ளது.கருவறை மீது வடஇந்திய பாணியில் கோபுரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் துர்கா தனி சன்னதியில் அருள்புரிகிறாள். கணேஷ் சன்னதியும் உள்ளது.

Apr 03, 2026

மாடுகள் நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும்,குராயூர் வேணுகோபால சுவாமிக்கு நேர்ந்து கொள்ளுங்கள்..

நீங்கள் மாடு வளர்ப்பவரா... அதற்கு அடிக்கடி நோய் வருகிறதா கவலை வேண்டாம். மதுரை மாவட்டம் கள்ளிக்குடிக்கு அருகிலுள்ள குராயூர் வேணுகோபால சுவாமிக்கு நேர்ந்து கொள்ளுங்கள்.14ம் நுாற்றாண்டில் தென்காசியை ஆட்சி செய்த மன்னர் 'வென்று மாலையிட்ட வீரபாண்டியன்' கட்டிய கோயில் இது. பின்னர் பராக்கிரம பாண்டியனால் கோயில் விரிவுபடுத்தப்பட்டது. பாமா, ருக்மணியுடன் புல்லாங்குழல் இசைக்கும் கிருஷ்ணர் இங்கு இருக்கிறார்.நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி (ஆதிநாதபெருமாள்) கோயிலில் நம்மாழ்வார் அமர்ந்திருந்த புளியமரம் உள்ளது.இது பூப்பதும், காய்ப்பதும் இல்லை. இங்குள்ள நந்தவன புளியமரமும் அதைப் போல பூப்பதும், காய்ப்பதும் இல்லை பொதுவாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் ஆற்றின் கரையில் உள்ள ஊர்கள் புனிதமானது அதைப் போல இங்கு ஓடும் கமண்டல ஆறு தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது. நாலாயிரதிவ்ய பிரபந்த பாடல்களில் இடம் பெற்றுள்ள 'குரா' மலர்கள் அதிகம் விளைவதால் இதற்கு 'குராயூர்' எனப் பெயர்.மாடுகள் நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் விளைபொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். சனிக்கிழமை காலையில்திருமஞ்சனமும், மாலையில் சிறப்பு பூஜையும் நடக்கிறது. திருமணம், குழந்தை பாக்கியம், உடல்நலம் பெற சுவாமிக்கு துளசிமாலை சாத்துகின்றனர். கல்வியில் சிறந்து விளங்க மாவிளக்கு ஏற்றுகின்றனர்.நுழைவு வாயில், மகா மண்டபம், ஆழ்வார்கள் மேடை, அர்த்த மண்டபம், கருவறை என ஐந்து பிரிவாக கோயில் உள்ளது. கருவறையின எதிரில் கருடாழ்வாரும், கல்துாணில் ஆஞ்சநேயரும் உள்ளனர்.

Mar 27, 2026

புரா மகாதேவ் கோவில் பாவம் போக்கும் சிவன்.

உத்திர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ளது புரா மகாதேவ் கோவில். இதை பரசுராமேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கிறார்கள். இவரை தரிசித்தால் பாவம் போகும். மனபலம் அதிகரிக்கும்.முற்காலத்தில் இப் பகுதி கஜரிவனம் என அழைக்கப்பட்டது.இங்கு ஜமதக்னி முனிவர் தன் மனைவி ரேணுகா, ஐந்து மகன்களுடன் வாழ்ந்தார். மேலும் முனிவரிடம் சுசீலா என்ற தெய்வீக பசுவும் இருந்தது. இதன் மீது ஆசை கொண்டார் இப்பகுதி மன்னர் சகஸ்தரஜுனன். ஒருநாள் இப்பசுவை திருடினார் மன்னர். இதனால் இருவர் இடையே பிரச்னை ஏற்பட்டது.இந்த தகராறில் முனிவரின் மனைவி ரேணுகாவை கடத்திச் சென்று, அவளிடம் தவறாக நடந்தார் மன்னர்.கடவுள் அருளால் அவரிடம் இருந்து தப்பினாள் ரேணுகா. ஆனால் முனிவரோ அவளது கற்பின் மீது சந்தேகம் கொண்டார். ஒரு கட்டத்தில் தன் மகன்களிடம் தாயை வெட்டச் சொன்னார். நான்கு மகன்கள் மறுக்கவே, ஐந்தாவது மகன் பரசுராமர் அதை நிறைவேற்றினார். பின் தாயின் மரணத்திற்கு காரணமான சகஸ்திரர்ஜுனனையும் கொன்றார். தான் செய்த பாவத்தில் இருந்து விடுபட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் பரசுராமர். பின்னாளில் சிவலிங்கத்தின் மீது மண் மூடி மறைந்தது.ஒருநாள் ராணி லண்டவ்ரா தன் பட்டத்து யானை மீது பரிவாரங்களுடன் நகர்வலம் வந்தாள். ஓரிடத்தில் யானை எவ்வளவு முயற்சித்தும் நகரவில்லை. பண்டிதர்களுடன் ஆலோசனை செய்து அந்த இடத்தை தோண்டவே, பரசுராமர் வழிபட்ட சிவலிங்கம் கிடைத்தது. அதை அங்கேயே பிரதிஷ்டை செய்து கோயிலையும் கட்டினார். இதுவே இங்குள்ள கோயிலாகும்.முன்னால் நான்கு பிரம்மாண்ட துாண்களை தாங்கும் முன் மண்டபம் அதன் வழியாக சில படிகள் ஏறி முதல் மாடிக்கு சென்றால் சன்னதியை அடையலாம். நுழையும் இடத்திற்கு மேலே சிறு கோபுரத்தை பார்க்கலாம். கருவறைக்கு மேலே மற்றொரு கோபுரம் உள்ளது. இதன் புதுமையான கட்டடக் கலையை ரசித்தபடியே கருவறையை அடையலாம். அங்கு இரண்டடி உயர பளிங்கு கல் சிவலிங்கத்தை தரிசிக்கலாம்.பக்தர்கள் ஹரித் வாரிலிருந்து கங்கை நீரை எடுத்து வந்து அபிஷேகம் செய்கின்றனர். வெளியே துர்கா, கணேஷ் சன்னதிகள் உள்ளன. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை கோயிலுக்கு செல்ல ஏற்ற காலமாகும்.

Mar 20, 2026

கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் பாதாள சிவன்

கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியில் விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கு பாதாள சிவனாக மூலவர் இருப்பதால் 'குண்டுக்குள் கோயில்' என்கின்றனர். 'குண்டு' என்றால் 'பள்ளம்'.15ம் நுாற்றாண்டில் கல்பாத்தி புழைக்கரையில் லட்சுமியம்மாள் என்ற மூதாட்டி வாழ்ந்தார். இவரது குடும்பத்தினர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள். மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில் போல கல்பாத்தியில் கோயில் கட்ட மூதாட்டி விரும்பினார். அதற்காக காசியாத்திரை சென்று பாணலிங்கம் கொண்டு வந்தார். கோயில் கட்டுவதற்காக தன் சொத்துக்களை அரசுடைமையாக்கினார்.மூதாட்டியின் கோரிக்கையை ஏற்ற மன்னர் இக் கோயில் கட்ட அனுமதித்தார். சுவாமிக்கு காசி விஸ்வநாதர் என்றும், அம்மனுக்கு விசாலாட்சி என்றும் பெயரிடப்பட்டது. அம்மன் தெற்கு நோக்கி இருப்பதால் எமபயம் போக்குகிறாள்.தரைதளத்தில் இருந்து தாழ்வாக கட்டப்பட்ட கருங்கல் கோயில் இது. தெற்கு, கிழக்கு திசைகளில் 18 படிகள் கீழிறங்கிச் செல்லும் வகையில் உள்ளன. கோயிலுக்குள் இருந்தே ஆற்றுக்குச் செல்ல படித்துறைகள் உள்ளன.மயிலாடுதுறையைப் போல இங்கும் ஐப்பசி தேர் திருவிழா நடக்கிறது. திருவிழாவில் விஸ்வநாதர் தேருடன் கல்பாத்தி லட்சுமி நாராயணர், சாத்தப்புரம் பிரசன்ன கணபதியும் தனித்தனி தேர்களில் எழுந்தருள்வர்.கேரளக் கோயில்களில் இங்கு மட்டுமே நடராஜரின் கனகசபை உள்ளது. நவக்கிரகங்கள் தம்பதியராக காட்சி தருகின்றனர். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்கின்றனர். ஆயுள் விருத்திக்காக ருத்ராபிஷேகம், மிருத்யுஞ்ஜய ஜபம் செய்கின்றனர். முன்னோர் நினைவாக கல்பாத்தி நதிக்கரையில் தர்ப்பணம், சிராத்தம் செய்வது விசேஷம். இத்தலம் 'கேரள மயிலாடுதுறை' எனப்படுகிறது.

Mar 13, 2026

பகலாமுகி அம்மன்  கோயில்.

பீதாம்பர பீடம் மத்தியபிரதேசம் தாதியா நகரில் உள்ளது பகலாமுகி கோயில். சக்தி பீடமான இதில் தான் அம்மன் இருக்கிறாள் என்கின்றனர். முன்பு இப்பகுதியில் புயல் ஒன்று உருவாக இருந்தது. இதை அறிந்த துறவிகள் அம்மனிடம் முறையிட்டனர். அதை ஏற்று ஆஸ்ரமத்திற்கு முன்புள்ள சரோவர் ஏரியில், அம்மன் எழுந்தருளி புயல் வராமல் தடுத்தாள். பின் ஒருநாள் மதன் என்ற அரக்கன் இப்பகுதி மக்களை துன்புறுத்தினான். உடனே அம்மன் அவனது நாக்கை பிடித்து இழுத்தாள். கதறிய அவன், "தாயே... மன்னியுங்கள். உங்களின் பாதத்திற்கு கீழே நிரந்தரமாக இருந்து காவல் புரிகிறேன்'' எனக் கெஞ்சினான்.மனம் இரங்கிய அம்மனும் 'பகலாமுகி' என்னும் பெயரில் இங்கு குடிகொண்டாள். பகலாமுகி என்றால் தங்கம் அல்லது மஞ்சள் நிறம் கொண்டவள் என பொருள். பகலாமுகியின் அருளால் ஈர்க்கப்பட்ட பிரம்யலீன் பூஜ்யபாத் என்ற துறவி கோயிலைக் கட்டினார். அம்மன் எழுந்த ஏரியின் நடுவில் தற்போது யந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.பக்தர்களை வரவேற்கும் விதத்தில் முகப்பில் அலங்கார வளைவு உள்ளது. ராஜபுத்திர, மராட்டிய கட்டட பாணியில் அமைந்த இக்கோயிலில்அழகானசிற்பங்கள், சுவர் ஓவியங்கள் உள்ளன.கருவறையில் வெள்ளை பளிங்கால் ஆன பகலாமுகி அம்மனுக்கு நான்கு கைகள் உள்ளன. வலது கையில் உள்ள தடி அசுரனை அடித்த நிலையிலும், இடது கை அசுரனின் நாக்கை இழுத்த நிலையிலும் உள்ளது. உடம்பு முழுவதும் நகைகள் ஜொலிக்கிறது. அம்மனுக்கு உகந்த மஞ்சள் நிறத்தில் பூக்கள், ஆடைகள், இனிப்பு பண்டங்களைசமர்ப்பிக்கின்றனர். இதனால் எதிரி பயம் விலகும் என்பதுபக்தர்களின்அசைக்கமுடியாதநம்பிக்கை. அனுமன், பைரவர், பூஜ்யநாத், துாமாவதிசன்னதிகள்உள்ளன.நுாலகம், தியான மண்டபம், தோட்டம் ஆஸ்ரமத்தில் உள்ளன.

Mar 06, 2026

வரம் தருபவர் புதுடில்லி அருகிலுள்ள நொய்டா வரசித்தி விநாயகர்.

தடைகளை தகர்த்து வரம் தர காத்திருக்கிறார் புதுடில்லி அருகிலுள்ள நொய்டா வரசித்தி விநாயகர். செக்டர் 22 ஜி பிளாக்கில் உள்ள இக்கோயிலை வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வகிக்கிறது.காமம், கவலை, கோபத்தால் மனித மனம் அலை பாய்கிறது. 'அது எப்படியாகுமோ? இது எப்படியாகுமோ?" என்ற வருத்தம் அடிக்கடி வருகிறது. குழந்தைப் பருவம் முடிந்து வளர வளர இந்த குணம் அதிகரிக்கிறது. ஆனால் குழந்தையிடம் சோர்வோ,மனச்சுமையோ ஏதுமில்லை. அடம் பிடித்தாலும் சற்று நேரத்தில் மறந்து விட்டு மற்ற குழந்தைகளுடன் விளையாடுகிறது. இந்த சிறுகுழந்தைகள் வழிபடும் குழந்தை சுவாமியாக விநாயகர் இருக்கிறார்.கனமான யானை வடிவில் இருந்தாலும், மூஞ்சூறு சுமக்கும் விதத்தில் பரம லேசான மூர்த்தியாகவும் இருக்கிறார். அவரது யானை முகத்தை பார்த்தாலே பரவசம் உண்டாகும். அந்த விநாயகராக இங்கு மூலவராக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். தடைகள் விலக சங்கடஹர சதுர்த்தியன்று சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.இதற்கான புராண காரணம் இதோ.. ஒருமுறை சிவனிடம், "உங்கள் தலையை எனக்குப் பலி கொடுங்கள்" எனக் கேட்டார் விநாயகர். இதற்காக மூன்று கண்கள் கொண்டதேங்காயை உண்டாக்கி சிதறுகாயாக அர்ப்பணித்தார் சிவன். ஆணவம் என்னும் ஓட்டை உடைத்தால் அருள் என்னும் இளநீர் வெளிப்படும் என்பதே இதன் தத்துவம்.எனவே விநாயகருக்கு சிதறு தேங்காய்உடைத்தால் பிரச்னை தவிடு பொடியாகி விடும்.இக்கோயிலின் கும்பாபிஷேகம் ஆக. 29, 2022ல் நடந்தது. துர்கை, நவக்கிரக சன்னதியும் இங்குள்ளன.

Feb 27, 2026

காத்திருக்கும் கன்னியர்- வெற்றி வேலாயுத சுவாமி.

திருப்பூர் மாவட்டம்ஊத்துக்குளிகதித்தமலையில்வெற்றிவேலாயுதசுவாமிஎன்னும் பெயரில்முருகன்இருக்க, தெய்வானையும், வள்ளியும் கன்னியராக உள்ளனர்.முருகனின் திருத்தலங்களை தரிசிக்க அகத்தியர் யாத்திரை புறப்பட்டார். அவருடன் நாரதர் உள்ளிட்ட தேவர்களும் வந்தனர். ஒருநாள் பூஜை செய்வதற்கு எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை. நடந்த களைப்பில் அகத்தியருக்கும் தாகம் எடுத்தது. அவருக்கு காட்சியளித்த முருகன் வேலினைத் தரையில் துளைக்க நீரூற்று பீறிட்டது. அதில் தீர்த்தம் எடுத்து பூஜை நடத்தியதோடு, தண்ணீர் குடித்து தாகம் நீங்கினார் அகத்தியர்.ஊற்றுஎன்பதால் 'ஊற்றுக்குழி' எனப்பட்டது. நாளடைவில் 'ஊத்துக்குளி' என மருவியது. அற்புதம் நிகழ்த்திய முருகனுக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. வெற்றி வேலாயுதசுவாமி என அழைக்கப்படுகிறார். தெய்வானை, வள்ளிக்கு தனி சன்னதி உள்ளது.திருச்செந்துாரில் சூரபத்மனை வதம் செய்த பின் முருகன் இங்கு தங்கினார். அப்போது மகாவிஷ்ணுவின் மகள்களான அமுதவள்ளி, சுந்தரவள்ளி தங்களை ஏற்கும்படி வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்து வேண்டினர்.அதற்காக இந்திரனின் மகளாக தெய்வானை என்ற பெயரிலும், வேடுவர்தலைவன் நம்பிராஜனின் மகளாக வள்ளி என்னும் பெயரிலும் அப்பெண்களை பூமியில் அவதரிக்கச் செய்தார். இவர்களே கன்னியராக இங்குள்ளனர்.வெற்றி வேலாயுத சுவாமியை வழிபட்டால் திருமண தடை நீங்கும். பிரிந்த தம்பதியர் சேர்வர்.

Feb 20, 2026

இழந்ததை மீட்க...உஜ்ஜயினி கால பைரவர்.

மத்தியபிரதேசம் உஜ்ஜயினி நகரில் கால பைரவர் கோயில் உள்ளது. ஷிப்ரா நதிக்கரையில் உள்ள இக்கோயிலில் சுவாமியின் தலை மட்டும் பெரியளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவரை தரிசித்தால் இழந்ததை மீட்கலாம்.அந்தகன் என்னும் அசுரன் தீயின் நடுவே நின்று, தவம் செய்து சிவனிடம் வரங்களை பெற்றான். அதனால் ஆணவம் கொண்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்தான். சிவனிடம் முறையிட்டனர் தேவர்கள். அசுரனை அழிக்க அவர் முடிவெடுத்தார். காலபைரவரை உருவாக்கி அவனைக் கொன்றார். மகிழ்ச்சியடைந்த தேவர்கள் கால பைரவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த வரலாற்றின் அடிப்படையில் இப்பகுதியை சேர்ந்த மன்னர் பத்ராசென் என்பவர் காலபைரவர் கோயிலை கட்டினார்.மால்வா கட்டடக்கலை பாணியில் கோட்டை அமைப்பில் கோயில் உள்ளது. கருவறையில் சுவாமியின் உருண்டை வடிவத் தலையில் கண்கள், மூக்கு, வாய் மட்டுமே உள்ளன. காபாலிகா, அகோரி வழிபாட்டு முறைப்படி தாந்திரீக பூஜை நடக்கிறது. பூஜையில் பூமாலை, கருப்புக்கயிறு, ஊதுபத்தி, சூடம், மதுபானம் இடம் பெறுகிறது. விநாயகர், மகாவிஷ்ணு, தேவியின் சிற்பங்கள் பாறையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளன.பைரவர் சன்னதியின் அருகிலுள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கமும், எதிரில் நந்தியும் உள்ளன. கருவறைக்கு வலது புறத்தில் பாதாள பைரவி சன்னதி உள்ளது. தரை மட்டத்திற்குக் கீழே இரண்டடி சதுர வடிவ நுழைவு வாயிலில் தவழ்ந்து சென்றே அம்மனை தரிசிக்க வேண்டும்.கருவறையின் எதிரில் கூம்பு வடிவத்தில் தீபத்துாண் உள்ளது. நீண்ட ஜடாமுடியும், உடல் எங்கும் திருநீறு பூசிய சாதுக்கள் கோயிலுக்கு வெளியே தங்கியுள்ளனர். இங்கு தலவிருட்சம் ஆலமரம். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் எதிரி தொல்லை மறையும். நீண்ட கால நோயும் விலகும்.இழந்தவை மீண்டும் கிடைக்கும். வாகனப் பயணம் சுகமாக அமைய முந்திரி மாலை அணிவிக்கின்றனர். காலபைரவரின் வாகனமான நாய் சிலை வாசலில் உள்ளது. விருப்பம் நிறைவேற சனிக்கிழமைகளில் இங்குள்ள நாய்களுக்கு பிஸ்கட் அளிக்கின்றனர். ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவர் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 20 21

AD's



More News