விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆனந்தா கார்டன் திருமண மண்டபத்தில் இன்று (13.05.2025) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், 161 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000/- வீதம் மொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அவர்களது வாழ்வில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை, ரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுய தொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவிலான விருதுகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.அதனடிப்படையில், இன்று 161 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000- வீதம் மொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.நமது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பணிகளுக்கு செல்கிறார்கள். அவர்கள் பணிகளுக்கு செல்வதற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்கள் மிகவும் முக்கியான ஒன்றாக உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (13.05.2025) சிவகாசி, செண்பக விநாயகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 32-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 177- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 177-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த சந்திப்பில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https//eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில் அருங்காட்சியங்கள் துறை சார்பில் புதிய அருங்காட்சியகம் ரூ.6.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (12.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு, பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.அருங்காட்சியகத்தின் பயனை தொலைவில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் பெற வேண்டும் என்கின்ற தமிழக அரசின் உயரிய நோக்கத்துடன் 23 மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு மாவட்டத்தின் நிலவியல், தொல்லியல், வரலாறு, கலை, பண்பாடு, கனிம வளங்கள், இயற்கை அமைப்புகள், தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் இவற்றை ஒரே இடத்தில் அறிந்து கொள்கின்ற நல்வாய்ப்பினை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்குகின்ற இடமாக மாவட்ட அருங்காட்சியகங்கள் திகழ்கின்றது.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அருங்காட்சியம் அமைத்தல் என்ற அரசின் சீரிய நோக்கத்தினை செயல்படுத்தும் விதத்தில் அருங்காட்சியகங்கள் துறை செயல்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில், அரசு அருங்காட்சியகம் 10.03.2001 அன்று தோற்றுவிக்கப்பட்டது. தற்சமயம் விருதுநகரில் அரசு அருங்காட்சியகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இங்கு தொல்லியல், வரலாறு, புவியியல், இயற்கை வரலாறு, மானுடவியல், உயிரியல் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் புகைப்படங்கள் எனப் பல்வகை பிரிவுகளைச் சார்ந்த சுமார் 1200 அரும்பொருட்கள் காட்சிக் கூடங்களிலும் (Showcases) அருங்காட்சியக இருப்பிலும் (Reserve Collection) உள்ளன.வாடகைக் கட்டிடத்தில் இயங்கிவரும் அருங்காட்சியகத்தை சொந்தக் கட்டிடத்தில் மாற்றியமைக்கவும், இருப்பில் உள்ள அனைத்து அரும்பொருட்களையும் காட்சிப்படுத்திடவும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என அனைவரும் எளிதில் வந்து செல்லக்கூடிய முக்கியமான இடத்தில் அமைக்க வேண்டிய கோரிக்கையின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில் அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கு சுமார் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.6.8 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த புதிய அருங்காட்சியக கட்டடத்தில் தரை தளத்தில் 6 காட்சி கூடங்கள், முகவுரை காட்சி கூடம், அரசியல் தொடர்பான காட்சி கூடம், முந்தைய வரலாற்று காட்சி கூடம், நாணயவியல் காட்சி கூடம், ஆய்தவியல் காட்சி கூடம், இசை மற்றும் கலை தொடர்பான காட்சி கூடம் மற்றும் 2 கல்வெட்டு காட்சி கூடங்களும், முதல் தளத்தில் சிறப்பு கண்காட்சி பகுதி, நிர்வாக அறை, குழு அறை, கண்காணிப்பாளர் அறையும், இரண்டாம் தளத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் வைப்பு அறையும் மொத்தம் 17,409 சதுரடி பரப்பளவில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியக கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று(12.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், தற்போது விருதுநகரில் செயல்பட்டு வரும் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், அரும்பொருட்கள், அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 13.05.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில்(10.05.2025) வேளாண்மைத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு இயக்கம் - சத்துமிகு தானியங்கள் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறுதானியத் திருவிழாவினை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம் என்பது சிறுதானியங்களுக்கு புகழ்வாய்ந்த மாவட்டம் ஆகும். ஏறத்தாழ ஒரு லட்சத்து இருபதாயிரம் ஹெக்டர் பரப்பளவில் 52854 ஹெக்டர் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சோளம் 11,040 ஹெக்டர், கம்பு 1765 ஹெக்டர், வரகு 265 ஹெக்டர், குதிரைவாலி 1514 ஹெக்டர், மக்காச்சோளம் 38,257 ஹெக்டேர் பயிரிடப்பட்டு வருகிறது. சிறுதானியங்களின் முக்கியத்துவத்தினை அனைவரும் அறிந்திடும் நோக்கில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சத்துமிகு தானியங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு தானியங்களின் முக்கியத்துவத்தினை உணர்த்திடும் வகையில் மாவட்ட அளவில் சிறுதானியங்கள் திருவிழா ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் சிறுதானிய திருவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறுதானியங்கள் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விருதுநகர், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.க.விஜயா அவர்கள் வரவேற்புரையாற்றினார். விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி.ஆ.நாச்சியார் அம்மாள் அவர்கள் திட்டம் தொடர்பான விவரங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.விவசாயிகளுக்கு சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் ஊட்டச்சத்தினால் ஏற்படும் நன்மைகள், சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை எளிதாக அறிந்திடும் நோக்கத்தில் அனைத்து தொழில்நுட்பங்களும் எடுத்துரைக்கப்பட்டது.மேலும், வேளாண் அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானிகள் முனைவர் செல்வி இரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், கோவிலாங்குளம், முனைவர் ஆ.ஷீபா அவர்கள், இணைப்பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல்),வேளாண்மை அறிவியல் நிலையம், கோவிலாங்குளம், முனைவர் ஜட்டாகவிதா, இணைப்பேராசிரியர் (பூச்சியியல் துறை) வேளாண்மை அறிவியல் நிலையம், கோவிலாங்குளம் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் பற்றிய தொழில் நுட்ப கருத்துக்களை மிக தெளிவாக எடுத்துரைத்தனர். விருதுநகர், வேளாண்மை துணை இயக்குநர் (மத்தியதிட்டம்) திருமதி.மு.சுமதி அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) திருமதி.ல.முத்துலட்சுமி அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சிநிலையம்) திருமதி.ஆர்.லதா அவர்கள், விதை ஆய்வு துணை இயக்குநர் திருமதி.த.வளர்மதி அவர்கள் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) திருமதி.எம்.செல்வி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தொழில் நுட்ப உரையாற்றினர்.சிறுதானியங்கள் உற்பத்தியில் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் குழு நிறுவனப் பிரதிநிகள் தங்களது வேளாண் சம்மந்தப்பட்ட அனுபவங்களை எடுத்துரைத்தனர்.சிறுதானிய மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.சிறுதானியங்கள் திருவிழாவில் அமைக்கப்பட்ட கருத்துக் காட்சி மற்றும் தமிழ்நாடு அரசின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சிகளை விவசாயிகள் பார்வையிட்டு விவசாயிகள் தங்களது சந்தேகத்தினை கேட்டு தெளிவு பெற்றனர்.இறுதியாக அருப்புக்கோட்டை, வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.ப.சுந்தரவள்ளிஅவர்கள் நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் வேளாண்மைத்துறையிலுள்ள அனைத்து தொழில்நுட்ப அலுவலர்கள், மாவட்டத்திலுள்ள 11 வட்டாரங்களிலிருந்து சுமார் 1000 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (09.05.2025) அரசுப் பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பள்ளி மாணவர்களுடனான 175 ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லூரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விகடன் குறித்த தகவல்களும் எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.மேலும், மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்தவர்கள் தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் எந்த தொழிற்கல்விக்கு சென்றாலும் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது.எனவே, மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று,தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு, பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம்.நீங்கள் அனைவரும் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (09.05.2025) அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பள்ளி மாணவர்களுடனான 176 ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லூரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.மேலும், மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.எனவே, மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று,தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு, பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம்.நீங்கள் அனைவரும் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், மாணவர்கள் அனைவரும் தங்களுடைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு, நல்ல கல்லூரியை தேர்ந்தெடுத்து, நன்கு படித்து முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் (CMCHIS) கீழ் டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician) பணியிடத்திற்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் 20.05.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 5.45 மணிக்குள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதிச் சான்று நகல்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும், டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician) காலிப் பணியிடம் ஒன்று உள்ளது. அதற்கான கல்வித்தகுதி - Diploma in Dialysis Technician பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத ஒப்பந்த ஊதியம் ரூ.12,000- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே, விண்ணப்பங்களை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகர் என்ற முகவரிக்கு 20.05.2025 அன்று மாலை 05.45.மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கௌரவ நிதி திட்டத்தின் கீழ், தகுதியுடைய அனைத்து விவசாயிகள் விடுபாடின்றி பயன்பெற சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் 02.05.2025 முதல் நடைபெற்று வருகிறது.இத்திட்டத்தில் 20 வது தவணை வரும் சூன் 2025 மாதத்தில் வழங்க உள்ளதால், இந்த முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடர்பான விபரங்கள், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பது e-kyc போன்ற அனைத்து முழுமையற்ற விபரங்களை சரி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இத்திட்டத்தில் சேர விடுபட்ட விவசாயிகள் பி.எம்.கிஸான் வலைதளத்தில் நில உடமைகளை பதிவேற்றம் செய்த அடையாள எண்ணுடன் பதிவு செய்து பயன்பெறலாம்.மேலும், நமது மாவட்டத்தில் ஏற்கனவே பி.எம்.கிஸான் 19-வது தவணைத்தொகை பெற்று வந்த விவசாயிகளில் 16493 விவசாயிகள் நில உடமை பதிவுகளை மேற்கொள்ளவில்லை. 20-வது தவணை தடையின்றி பெற நில உடைமை பதிவுகளை பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.இறந்த பயனாளிகளின் இறப்பு சான்றினை சமர்ப்பித்து, அவர் பெற்று வரும் நிதியை நிறுத்தவும் மற்றும் வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தேவையான நிலஆவணங்களை பி.எம்.கிஸான் திட்ட முகாமில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.