விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பயிர்சேதாரம் கணக்கீட்டின் உண்மைத்தன்மை மற்றும் பேச்சில்லா கிராமப்புறப் பகுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (17.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, புயலினால் ஏற்பட்டுள்ள பயிர்சேதம் மற்றும் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து கிராமப்புற மக்களிடம் கலந்துரையாடினார்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செட்டிப்பட்டி மற்றும் பாட்சாகுளத்தில் உள்ள பேச்சில்லா கிராமத்தினை ஆய்வு செய்து, அங்கு பொதுமக்களிடம் குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், இனாம் ரெட்டியாபட்டி கிராமத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையில் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கான பயிர் சேதாரம் கணக்கீட்டை வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதின் உண்மைத்தன்மை குறித்து விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, சங்கரலிங்காபுரம் ஊராட்சியில் தன்னர்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட மருத்துவ முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், சிவகாசி வட்டம், செவலூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு பசுமை திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், வட்டாட்சியர், வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்;பட பலர் இருந்தனர்.
பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறும் அனைத்து மாணவ மாணவிகளும் தகுதியான சிறப்பு வாய்ந்த அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நான் முதல்வன், கல்லூரி கனவு, தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்டம் உட்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அதிகளவு அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்த்து வருகிறது. மாணவர்களும் தனது மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஒன்றுக்கு மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் விண்ணப்பித்து சேர்ந்து வருகின்றனர்.இந்நிகழ்வில் சில கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவிகளை தங்கள் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அவர்களை அணுகி மாணவர்களின் உடைய மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று வைத்துக் கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட மாணவனோ மாணவியோ அரசு உயர் கல்வி நிறுவனங்களில் மற்றும் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கும் பொழுது தனியார் கல்லூரிகள் மாணவனின் அசல் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு தர மறுப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் கல்வி உதவி மைய கட்டுப்பாட்டறைக்கு புகார்கள் வருகின்றன.எனவே அவ்வாறு மாணவனின் அசல் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் மாணவனுக்கு சான்றிதழ்களை தர மறுத்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மாணவ மாணவிகள் இப்புகார்கள் சார்ந்து தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கல்வி உதவி மைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில், (16.05.2025) மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி வட்டாரங்களில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்க்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விகடன் குறித்த தகவல்களும் எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பள்ளிக்கல்வித்துறையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப உயர்கல்வியில் உள்ள சிறந்த வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து பயிலவேண்டும்.தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்தவர்கள் தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் எந்த தொழிற்கல்விக்கு சென்றாலும் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது.மேலும், மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று,தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு, பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம்.எனவே, எல்லோருக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் நாம் அந்த வாய்ப்புகளை தேடுவதில்லை. நாம் நமது வாழ்க்கையில் அகலமாகவும், ஆழமாகவும், தேடுவதினால் தான் நமக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். அந்த சிறந்த வாய்ப்புக்களை எதிர்காலத்தில் வெற்றிக்கான வாய்ப்புகளாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் அனைவரும் முன்னேற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி - திருத்தங்கல் கருப்பசாமி கோவில் எதிரே உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் வழியில், கழிவு நீர் இல்லா மாநகர் - இலக்கு நோக்கிய பயணம்…- என்ற கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் (16.05.2025) நடைபெற்றது.திருத்தங்கல் நகரத்திற்குள் உற்பத்தியாகும் அனைத்து கழிவு நீரும், வாறுகால் வழியாக, பார்ப்பான்குளம் கண்மாயில் கலந்து, அதனுடைய உபரி நீரும், உறிஞ்சிகுளம் கண்மாயில் கலப்பதோடு, ராஜா K.S.P. கணேசன் டிரஸ்டின் நிதி உதவியுடனும், சிவகாசி பசுமை மன்றம் மூலம் தற்போது, தூர்வாரப்பட்டு தூய்மையாக காட்சியளிக்கும் செங்குளம் கண்மாய் உபரி நீரும் உறிஞ்சிகுளம் கண்மாயில் கலக்கிறது. நீர்நிலைகள் அனைத்தும் கழிவு நீரால் சிதலமடைந்து வருவதோடு நிலத்தடி நீரும் தரம் மாறி வருகிறது.வருங்கால சந்ததியினருக்கு நீர்நிலைகளை மீட்டெடுத்து, சுத்தமான நீர் மற்றும் நிலத்தை வழங்க வேண்டிய, இத்தருணத்தில் மூன்று கண்மாய்களில் கலக்கும் கழிவுநீரை மறு சுழற்சி செய்திட சிவகாசி சுக்கிரவார்பட்டியில் அமைந்துள்ள திருப்பதி பேப்பர் மில்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியோடு செயல்படுத்திட கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு,அதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர், பசுமை மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) இரண்டாம் நாளான (16.05.2025) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.மேலும், பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, 7 பயனாளிகளுக்கு பட்டாக்களையும், 5 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த பசலி ஆண்டிற்கான 1434-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 15.05.2025 முதல் 28.05.2025 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.அதன்படி, சிவகாசி வட்டத்தில், 15.05.2025, 16.05.2025 20.05.2025, 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய 5 தினங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும், விருதுநகர் வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய 7 தினங்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும், இராஜபாளையம் வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்கள் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், சாத்தூர் வட்டத்தில் 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 தினங்கள் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,அருப்புக்கோட்டை வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய 7 தினங்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும், காரியாபட்டி வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 ஆகிய 6 தினங்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள் தலைமையிலும்,வெம்பக்கோட்டை வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 22.05.2025 ஆகிய 5 நாட்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையிலும், திருச்சுழி வட்டத்தில், 15.05.2025, 16.05.2025, 20.05.2025 முதல் 23.05.2025 மற்றும் 27.05.2025 முதல் 28.05.2025 ஆகிய 8 தினங்கள் உதவி ஆணையர்(கலால்) அவர்கள் தலைமையிலும்,திருவில்லிபுத்தூர் வட்டத்தில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்கள் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், வத்திராயிருப்பு வட்டத்தில், 15.05.2025, 16.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய 3 தினங்கள் தாட்கோ மாவட்ட மேலாளர் அவர்கள் தலைமையிலும் நடைபெற்று வருகிறது.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் /கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் (16.05.2025) மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்ப்பதற்கும், 100 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வழிகாட்டி என்கிற வீதத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.மேலும், தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்தவர்கள் தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் எந்த தொழிற்கல்விக்கு சென்றாலும் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப உயர்கல்வியில் உள்ள சிறந்த வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து பயிலவேண்டும். மேலும், உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் இருக்கக்கூடிய பாரா மெடிக்கல், துணை மருத்துவ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மட்டுமே படிக்க வேண்டும்.குறிப்பாக உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு தமிழக அரசின் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து, எடுத்துக்கூறி அத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.நீங்கள் அனைவரும் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூற வேண்டும்.மேலும், நமது மாவட்டத்தில் விருதுநகர் கல்வி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையின் மூலம் எந்த உதவியும் கிடைக்க முடியாத வறுமை நிலையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறோம். இது போல நிறைய தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், உதவி மையங்கள் மாணவர்களின் கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இயங்குகின்றனர்.மாணவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. நமது மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி 100 சதவிகிதம் நிச்சயமாக அனைவரும் கல்லூரியில் சேர வேண்டும். நமது மாவட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட கல்வி உதவி மையம் செயல்பட்டு வருகிறது.உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை அதிகப்படுத்தியதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதைபோல் உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் சரியான வாய்ப்புகளை அடைவதற்கும் ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பன்முக திறமை கொண்டவர்களுக்கு 2026-ஆம் ஆண்டு ஜனவரி -26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் ‘பத்ம விருது” வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண்/பெண்) விண்ணப்பிக்கலாம், சமூக சேவை, கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், வர்த்தகம் மற்றும் தொழில், அறிவியல் மற்றும் பொறியியல், விவசாயம், தொல்லியல், கட்டிடக்கலை, விளையாட்டு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்குவராக இருத்தல் வேண்டும்.பத்ம விருது குறித்த விவரங்கள் அனைத்தும்; இணையதளத்தில் (https://awards.gov.in) 15.03.2025 முதல் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.07.2025. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 3 நகல்கள் 09.06.2025-ற்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர். 04562- 252701 என்ற முகவரியில் நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுயவேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்புறங்களில் ரூ.3,00,000- க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமஃநகர்புறங்களில் ரூ.8,00,000-வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்) திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000- ம் திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத பெண்களுக்க 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்க 5 சதவீத பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000- கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000- ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீத, பெண்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000- கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுநிலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000- வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும் திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீத மாணவியர்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள்/ கருவிகள்/ இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் / மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கடன் விண்ணப்பங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிய ஆவணங்கள் தனிநபர் கடன் திடடம், சுய உதவி குழுக் கடன், விராசத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்)சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை, வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள் கல்விக்கடன் பெறுவதற்கு சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்/ சாதிச்சான்றிதழ் / வருமான சான்றிதழ் நகல்/இருப்பிட சான்றிதழ் நகல், குடும்ப அட்டை / வாழ்விட சான்று Smart Card), ஆதார் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) அசல் கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல் (Original) மதிப்பெண் சான்றிதழ்கள், வங்கி கோரும் இதர ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (16.05.2025) கொரோனா நோய் தொற்றின் காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த 9 குழந்தைகளுடன் "சிறப்பு காபி வித் கலெக்டர்" என்ற 178- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் , I A S, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், விடத்தகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.1 கோடி மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.கிராமபுரத்தில் அமையக்கூடிய இத்தகைய கல்லூரிகளில், என்னென்ன வசதிகள் மேம்பாட்டுக்கு செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. அது எந்த வகையில் நம்முடைய உயர்க்கல்வி தரத்தை உயர்த்துவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்பது குறித்தும், இந்த கல்லூரி அமையப்பெற்று 2022-ஆம் ஆண்டு தொடங்கினாலும், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கு தொடர்ந்து நாம் அக்கறையினை மேற்கொண்டு வருகிறோம். அதனுடைய ஒரு பகுதியாக இன்றைக்கு நம்முடைய கலையரங்கம் ஒன்று இங்கு அமைப்பதற்கு அரசினுடைய நிதி உதவி பெற்று அதற்கான பணிகளை இன்று துவக்கி வைத்துள்ளோம். கலையரங்கம் என்று சொன்னால் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒரு இடம் மட்டும் கிடையாது. அதன் வாயிலாக பல அறிஞர் பெருமக்கள் உங்களுடன் கலந்துரையாடலாம். பல பாட சம்பந்தமாகவும், பாடத்திற்கு வெளியே இருக்கக்கூடிய முக்கியமான நிகழ்வுகள் குறித்தும், நீங்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையிலும், பல வகையிலும் பல்வேறு வாய்ப்புகளை நீங்கள் பெற்று பயன்பெறக் கூடிய வகையில் பல்நோக்கு மையமாக உருவாக இருக்கிறது.நமது பகுதி ஒரு கிராமப்புற பகுதியாக இருந்தது. 2011-ஆம் ஆண்டுகளில் நான் கல்வித்துறை அமைச்சராக இருக்கின்ற பொழுது நம்முடைய தொகுதியில் அதிகமான பள்ளிக்கூடங்களை உருவாக்கினோம். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் பெண் குழந்தைகளுக்காக தான் இங்கே ஒரு கல்லூரி அமைய வேண்டும் என்பதற்காக நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 2021 - ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட முதல் கல்லூரி நமது திருச்சுழி கல்லூரி தான். நீங்கள் எல்லோரும் இந்த கல்லூரியில் படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். நீங்கள் அனைவரும் மேன்மேலும் உயர்ந்து சிறக்க வேண்டும் என்பதற்காக தான் முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் மூலம் உங்களுக்கு மாதம் ரூ.1000-/- வழங்கப்பட்டு அனைவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக தான்.கல்லூரி படிப்பு என்பது இந்த கல்லூரியோடு நின்று விடாமல் மேன்மேலும் படித்து ஆராய்ச்சி மாணவர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரியாக நீங்கள் அனைவரும் உருவாக வேண்டும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சி என்பது ஏதோ ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கு கலையரங்கம் கட்டப்படக்கூடிய ஒரு சாதாரண நிகழ்ச்சி என்று மட்டும் நாம் நிச்சயம் எண்ணிவிடக்கூடாது. ஏனென்றால் இன்று உயர்கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் மாணவர்கள் உயர்கல்வியில் படித்து பட்டம் பெறுவது என்பது அவர்கள் கல்வி சார்ந்த ஒரு முன்னேற்றம் மட்டுமல்ல. அவர்கள் ஒருங்கிணைந்த ஆளுமை மிக்கவர்களாக உருவாவதற்கு, அவர்களுக்கு கலை, இலக்கியம் ஒரு சிறந்த பங்களிப்பை வழங்குகிறது. ஒரு முழுமையான கல்வி வளர்ச்சி என்பது மிக முக்கியமாக வகுப்பறைகளுக்கு வெளியே தான் நிகழ்கிறது.இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் திரு.பொன்னுத்தம்பி(திருச்சுழி) திருமதி காளீஸ்வரி சமயவேலு (நரிக்குடி), முக்கிய பிரமுகர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.