விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் (CMCHIS) கீழ் டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician) பணியிடத்திற்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் 20.05.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 5.45 மணிக்குள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதிச் சான்று நகல்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும், டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician) காலிப் பணியிடம் ஒன்று உள்ளது. அதற்கான கல்வித்தகுதி - Diploma in Dialysis Technician பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத ஒப்பந்த ஊதியம் ரூ.12,000- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே, விண்ணப்பங்களை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகர் என்ற முகவரிக்கு 20.05.2025 அன்று மாலை 05.45.மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கௌரவ நிதி திட்டத்தின் கீழ், தகுதியுடைய அனைத்து விவசாயிகள் விடுபாடின்றி பயன்பெற சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் 02.05.2025 முதல் நடைபெற்று வருகிறது.இத்திட்டத்தில் 20 வது தவணை வரும் சூன் 2025 மாதத்தில் வழங்க உள்ளதால், இந்த முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடர்பான விபரங்கள், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பது e-kyc போன்ற அனைத்து முழுமையற்ற விபரங்களை சரி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இத்திட்டத்தில் சேர விடுபட்ட விவசாயிகள் பி.எம்.கிஸான் வலைதளத்தில் நில உடமைகளை பதிவேற்றம் செய்த அடையாள எண்ணுடன் பதிவு செய்து பயன்பெறலாம்.மேலும், நமது மாவட்டத்தில் ஏற்கனவே பி.எம்.கிஸான் 19-வது தவணைத்தொகை பெற்று வந்த விவசாயிகளில் 16493 விவசாயிகள் நில உடமை பதிவுகளை மேற்கொள்ளவில்லை. 20-வது தவணை தடையின்றி பெற நில உடைமை பதிவுகளை பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.இறந்த பயனாளிகளின் இறப்பு சான்றினை சமர்ப்பித்து, அவர் பெற்று வரும் நிதியை நிறுத்தவும் மற்றும் வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தேவையான நிலஆவணங்களை பி.எம்.கிஸான் திட்ட முகாமில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
விருதுநகர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் விருதுநகர் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் பிரிவு இளங்கலை பட்டப் படிப்பிற்காக https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.25 வரை விண்ணப்பிக்கலாம்.விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.அரசு கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- கல்வித் தொகை கிடைக்கும்.விருதுநகர் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து படித்து பட்டம் பெறுவதற்கு முன் வரவேண்டும். பெற்றோர்களும், உறவினர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.எனவே, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.25 வரை விண்ணப்பித்து உயர்கல்வி சேர்க்கை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இன்படி பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும்.மே-2025 மாதத்திற்கான குறைதீர் முகாம் வருகின்ற 10.05.2025 சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடும்ப அட்டை தொடர்பான குறைகளுக்கு மனு செய்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என்பது தெரிவிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (07.05.2025) இராஜபாளையம், காசா டி மிர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 35-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 174- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, 174-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த சந்திப்பில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்களின் தலைமையில் 05.05.2025 அன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.அதன்படி, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-ன்கீழ் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல்வன் கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ)-ன் கீழ் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வழக்குகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரணத்தண்டனை வரை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. கடந்த ஆண்டு 271 வழக்குகள் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கெதிராக பாலியல்வன் கொடுமை நடைபெற்றதாக அறியும் நிலையில் அனைவரும் உடனடியாக குழந்தைகள் உதவிமைய எண் 1098 மற்றும் பெண்களுக்கான உதவிமைய எண் 181 என்ற எண்ணிற்கும் புகார் அளிக்கலாம்.புகார் அளிப்பவர்களின் பற்றிய விபரங்கள் ரகசியம் காக்கப்படும். பாலியல் குற்றவழக்குகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளை அனைத்து காவல்துறையினரும் பின்பற்ற வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான எந்த விபரங்களையும் பொது வெளியில் வெளியிடக் கூடாது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு மருத்துவப் பரிசோதனை மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, அக்குழந்தைகளை குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டு மறுவாழ்வு நடவடிக்கைகள் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ- மாணவியருக்கும், கல்லூரி மாணவியருக்கும், பொதுமக்கள் ஆகியோருக்கு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ) குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. கோடை விடுமுறை நாட்களில் பெற்றோர் அனைவரும் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்தும், குழந்தைகளுக்கு கெதிராக பாலியல் குற்றங்கள் நடைபெற்ற விபரங்கள் அறிந்தால் உடனடியாக புகார் அளிக்கும் பட்சத்தில் குற்றம் புரிவோர் மீதுகடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் போக்சோசட்டத்தின் கீழ்பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் போக்சோ சிறப்பு நீதி மன்றத்தின் மூலம் 188 நபர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25 கீழ் சூரிய ஒளியில் இயங்கும் மின்வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விவசாய நிலங்களில் வன விலங்குகளால் பயிர் சேதம் அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி மகசூல் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு அதிக அளவு இழப்பு ஏற்பட்டு பொருளாதாரம் பாதிப்பு அடைகிறது.விவசாய நிலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தினை தடுப்பதற்கு வேளாண்மை பொறியியல் துறையின் கீழ், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் சூரிய ஒளியில் இயங்கும் மின் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சூரியசக்தியால் இயங்கும் சுற்றுவட்டப் பாதுகாப்பு மின்வேலி அமைப்பதன் மூலம், விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். ஒரு விலங்கு வேலியைத் தொட நேரிட்டால் அதற்கு லேசான அதிர்வு ஏற்படும். ஆனால் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு மின்சாரம் தாக்காது இதன் காரணமாக விலங்குக்கு வேலியிடப்பட்டுள்ள இடத்திற்கு மீண்டும் வருவதைத் தவிர்க்கும் மனநிலை உருவாகும், இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதே இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.இத்திட்டத்தில், மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு சூரிய மின்வேலி 50 சதவிகித மானியத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.அதன்படி 2021-2022 - ஆம் ஆண்டில் 5 விவசாயிகள் ரூ.5,21,000/- மானியத்திலும்,2022-2023 - ஆம் ஆண்டில் 15 விவசாயிகள் ரூ.14,72,000/- மானியத்திலும்,2024-2025 - ஆம் ஆண்டில் 22 விவசாயிகள் ரூ.26,54,000/- மானியத்திலும் பயன்பெற்றுள்ளனர்.அதன்படி, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, ரூ.1,12,160/- மானியம் பெற்று, சூரிய ஒளியில் இயங்கும் மின்வேலி அமைத்து பயன்பெற்று வரும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் அ.புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள திரு.வைரமுத்து என்பவரின் நிலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, இத்திட்டத்தின் பயன்கள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்தார்.இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மின்வேலி மூலம் எங்களது பயிறுகள் வனவிலங்குகள் சேதப்படுத்துவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது எனவும், இதனால் பொருளாதார இழப்பு இல்லாமல், நல்ல முறையில் மகசூல் கிடைக்கிறது எனவும், சூரிய மின்வேலி என்பதால் மின்சார செலவும் மிச்சமாகிறது எனவும், இதை அமைப்பதற்கு அரசு மானியம் வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனவும் பயனாளி தெரிவித்தார்.இந்த நிகழ்வில், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திருமதி இந்திரா, உதவி செயற்பொறியாளர் திரு.ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 16.05.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சாத்தூரில் உள்ள S.H.N எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BAVAN, WAY 2 NEWS, RK MOTORS, ANAAMALAIS TOYOTA, IOB RESTI போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I. டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 16.05.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 05.05.2025 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபலமாக உள்ள விளையாட்டுகளில் இருந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கும் ஸ்டார் அகாடமியின் பயன்பாட்டை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டார் மாவட்ட குத்துச்சண்டை பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ,I A S, அவர்கள் பார்வையிட்டு, பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
விருதுநகர் மிளகாய்வத்தல் மண்டபத்தில் (06.05.2025) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்தும் புவிசார் குறியீடு பெற்ற விருதுநகர் சம்பா மிளகாய் - உலகளாவிய சந்தைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நமது விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு நூற்றாண்டாக பல்வேறு தொழில் வளர்ச்சிகள் மேம்பட்டு இருக்கிறது. 1922 ஆம் ஆண்டு இந்த பகுதி முதன் முதலாக பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், அதற்கடுத்து அச்சுத் தொழிலும், அதை ஒட்டி விருதுநகர் உடைய வணிக வளமாக மாறி, சற்று ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் பல்வேறு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து கொண்டு வருகிறது.இன்று தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில்; விருதுநகர் மாவட்டம் முதல் 5 இடங்களில் வர்த்தகம் செய்கிறது என்றால் இந்த பகுதியில் நடைபெற்ற தொழில் வளர்ச்சியும், அதுக்கு தகுந்தாற்போல் இந்த பகுதியில் உள்ளவர்களின் உழைப்பும் தான் அடிப்படையான காரணம்.தற்பொழுது சமீபத்தில் சம்பா மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இது மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு. ஏனென்றால், நமது பகுதியில் விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதிகளில் எல்லாம் உள்ளடக்கி சற்று ஏறக்குறைய 15 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு இந்த மிளகாய் வத்தல் சாகுபடி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.இன்று உலக அளவில் இருக்கக்கூடிய மாறி வரக்கூடிய உணவு முறைகளினால் பழைய உணவு முறைகள், பாரம்பரிய உணவு முறைகளுக்கு எல்லாம் மிகப்பெரிய ஒரு சந்தை வாய்ப்புகள் தற்பொழுது கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு துரித உணவுகள் என்று சொல்லக்கூடிய பாஸ்ட் புட்டில் கூட மிளகாய் வத்தல் இருக்கக்கூடிய சில பொருட்களை எடுத்து அதற்கான உப பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்.எனவே இதற்கான உலக அளவில் சந்தை வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் நமக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த 15,000; ஹெக்டேர் அளவிலான சாகுபடி பரப்பை 40,000;, 50,000; அளவிற்கு நாம் உயர்த்துவோம் என்றால் நிச்சயமாக இந்த பகுதி உலக அளவில் அந்த மிளகாய் வத்தல் ஏற்றுமதியில் ஒரு நல்ல இடத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.நமது பகுதிக்கென்று விளையக்கூடிய இந்த மிளகாய் வத்தல் சுற்றுச்சூழலுக்கு எப்படி உகந்ததாக இருக்கிறது. இதை நாம் செய்யக்கூடிய நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அதனுடைய இயற்கை சார்ந்த வேளாண்மையில் இதனுடைய தாக்கம் என்ன என்பதெல்லாம் இன்னும் தெரிந்து கொண்டால் நிச்சியமாக அதற்கு மிகபெரிய உலக அளவிலான சந்தை வாய்ப்புகள்; ஏற்படும்.தற்பொழுது நமது பகுதியில் இந்த மிளகாய் வத்தல் ஏற்றுமதி மற்றும் விவசாயிகளெல்லாம் ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நமது மாவட்டத்தில் இரண்டு மிக முக்கியமான ஆராய்ச்சி நிலையங்கள் மூலமாக விவசாய குடிமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதில் ஒன்று அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் திருவில்லிபுத்தூரில் இருக்கக்கூடிய பருத்தி ஆராய்ச்சி நிலையம் மூலமாக பல்வேறு விவசாய தொழில் தொழில்நுட்பங்களை நமது விவசாய பெருங்குடி மக்களுக்கு எடுத்து சொல்லி வருகிறீர்கள்.தற்பொழுது புவிசார் குறியீடு கிடைத்ததற்கு பிறகு இன்னும் என்னென்ன விதமான வாய்ப்புகள் இருக்கிறது. அறுவடை செய்து அவற்றை பாதுகாத்து ,அதனை பதப்படுத்தி உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலமாக அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு என்னென்ன விதமான தொடர்ச்சியான பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டுமோ அவற்றை எல்லாம்; நமது வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக தொடர்ச்சியாக அவர்கள் செய்து கொண்டு வருகிறார்கள்.நமது விருதுநகர் மாவட்டத்தில் வத்தல் வியாபாரிகள் சங்கம் என்பது கடந்த பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக இந்த வணிகத்தை மிக சிறப்பாக கட்டமைத்து இருக்கிறார்கள். இந்த வணிகத்தையும் தாண்டி, நாம் உற்பத்தியில் மிகப்பெரிய அளவில் கவனத்தை செலுத்தி இன்னும் சிறப்பாக செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசினுடைய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செய்து கொண்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.