விருதுநகர் மாவட்டத்தில், மாவட்டம் நிர்வாகம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளுக்கு இலவசமாக கல்வி உதவி மைய கட்டுப்பாட்டு அறை வல்லுனர்கள் மூலம் விண்ணப்பித்து வழிகாட்டப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக தற்போது விருதுநகர் மாவட்ட அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு உதவுவதற்காக விருதுநகர் மாவட்ட கல்வி கட்டுப்பாட்டு அறையில் நாளை(18.06.2025) முதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி கட்டுப்பாட்டு அறையினை மாணவ, மாணவியர்கள் நேரிலோ அல்லது 9976903873 மற்றும் 9566389092 என்ற தொலைபேசி மூலமாக தகவல்களை கேட்டு பயன்பெறலாம்.இப்படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடங்கும் நாள் : 17.06.2025விண்ணப்பம் செய்ய இறுதி நாள் : 07.07.2025.எனவே, மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025-2026 - ஆம் நிதியாண்டிற்கான, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் பொழுது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000- மானிய தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.விண்ணப்பிக்க தேவையான சான்றுகள் :இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் கீழ்க்கண்ட சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்• தமிழ்நாட்டில் பூர்வமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிடச் சான்று)• வயது வரம்பு -25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும்• பிறந்த தேதிக்கான சான்று• திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்)• ஆண்டு வருமான வரம்பு (ரூ1,20,000- மிகாமல்) இருத்தல் வேண்டும் எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் தங்களது விண்ணப்பங்களை 23.06.2025 முதல் 14.07.2025 -ற்குள் புதிய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-4 க்கான தேர்வு 12.07.2025 அன்று நடக்கவிருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக மாநில அளவிலான இலவச முழுமாதிரித் தேர்வு 22.06.2025, 28.06.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் விருதுநகர், VHNSN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/XUKsuqtwiU7ckqgq9 என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் (17.06.2025) விருதுநகர் நகராட்சியில் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்ளும் பணிகளை நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் திரு.ப.மதுசூதன்ரெட்டி,I A S., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், நகர நிலவரித்திட்டத்;தின் கீழ் 100 பயனாளிகளுக்கு இணைய வழிப்பட்டாக்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு, ஒவ்வொரு துறையிலும் ஒரு புதிய முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு துறையை நவீன மயப்படுத்தவும், பொது மக்களுக்கு எளிதாக திட்டங்கள் மற்றும் சேவைகள் செல்லக்கூடிய பணிகளை தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.அதனுடைய ஒரு பகுதியாக தான் இந்த அளவீடு எடுப்பதற்கு, ட்ரோன் மூலமாக விருதுநகரை நில அளவு செய்து ஒவ்வொரு இடமும் எவ்வளவு இருக்கிறது என்பதை எல்லாம் துல்லியமாக கணக்கெடுத்து, வரைபடத்தோடு கொடுக்க வேண்டிய இந்த பணிகளை இன்றைக்கு நமது மாவட்டத்தில் தொடங்கி இருக்கிறோம்.ஒவ்வொரு வீடாக சென்று அதிகாரிகள் அளவீடு செய்து வரைபடத்தோடு இருக்கக்கூடிய திட்டத்தை செய்து முடிக்கவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 10 நகரங்களில் இந்தப் பணியை முதலில் எடுத்திருக்கின்றோம்.இது பொதுவாக பார்த்தோம் என்று சொன்னால், கிராமம் மற்றும் நகரங்களில் நம்முடைய இடத்திற்கு ஒரு துல்லியமான அளவீடு செய்வதில் முரண்பாடுகள் ஏற்படுகிறது. அப்படி இல்லாமல் ஒவ்வொருவருடைய இடத்தையும் அரசாங்கம் சட்டபூர்வமாக அளந்து கொடுக்கின்ற நேரத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வராத சூழ்நிலையை நாம் உருவாக்க இருக்கின்றோம்.அதே போல இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குகின்ற பணியை அரசு முனைப்போடு செய்கிறது. பட்டா வழங்குவது மட்டுமல்லாமல், நிலம் வாங்குதல், நிலத்தை மாறுதல், பாகப்பிரிவினை போன்ற பட்டா மாறுதல் செய்கின்ற பணிகளில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 1.67 கோடி நபர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.இப்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலமாக சராசரியாக இருக்கக்கூடிய மக்களுக்கு வேண்டிய பணிகளை செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு இருக்கிறார்கள். அந்த ஆணையின்படி நாங்களும் செயல்படுகிறோம். அரசு அதிகாரிகள் முனைப்போடு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்துறை என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நில ஆவணங்களையும் பாதுகாத்து, நில உடமைதாரர்களுக்கு அந்த நிலம் தொடர்பான பட்டா, அ-பதிவேடு, வரைபடங்கள், கிராம வரைபடம், தாலுகா வரைபடம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் வழங்கும் செயல்பாடுகளில் மிக முக்கியமானதாகும்.கடந்த காலங்களில் நிலம் தொடர்பான எந்த சேவையாக இருந்தாலும், தொடர்புடைய அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் அளித்து பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதனை மாற்றி நில அளவை துறையின் மூலமாக செயல்படுத்தக்கூடிய அனைத்து திட்டங்களையும் இணைய வழியாக அவர்கள் இருப்பிடத்திலிருந்தே விண்ணப்பித்துக் கொண்டு அதன் மூலமாக இத்துறையின் சேவைகளை பெறுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றது.ஒவ்வொரு மனுதாரரும் பட்டா மாற்றத்திற்கான விண்ணப்பம் கொடுத்த நாட்களில் இருந்தது 30 நாட்களுக்குள் 90 சதவீதம் விண்ணப்பங்களுக்கு உட்பிரிவு செய்து பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் மாதந்தோறும் சராசரியாக 3 இலட்சம் பட்டா மற்றும் ஆணைகள் வருவாய்த்துறையின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று பட்டாவுடன் புலப்படமும் பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகளை செய்யப்பட்டிருக்கின்றன.நில அளவையை மேம்படுத்தி தொழில்நுட்ப ரீதியாக துறையை மேம்படுத்துவதற்கான சில முக்கியமான முடிவுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். அதில் மிக முக்கியமானது அனைத்து மாவட்டங்களிலும் டி.ஜி.பி.எஸ் என்ற நவீன நில அளவைக் கருவிகளைக் கொண்டு, நில உரிமையாளரின் நிலத்தின் எல்லைகளை அவர்கள் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் காண்பிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களுக்கு உண்டான அளவுகளை Latitude - Longitude விபரங்களுடன் புலத்திலேயே துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது.இது போன்று நகரப் பகுதிகளில் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டம் முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம்(மறைமலை நகர்), காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டம்(காரைக்குடி), தூத்துக்குடி மாவட்டம்(கோவில்பட்டி), கோயம்புத்தூர் மாநகராட்சி(7 வார்டுகள்), விருதுநகர் ஆகிய 10 நகரங்களில் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதில் விருதுநகர் நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றைக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களால் இந்த திட்டம் துவக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு வார காலத்திற்குள் இந்த ட்ரோன் சர்வே முடிந்த பிறகு ஆறு மாதத்திற்குள் அளவு எடுத்து நில உரிமைக்கான சான்றுகள், வரைபடங்களின் தரவுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இப்படி பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்ச்சியாக கொண்டுவரப்படுகின்றன. இவை அனைத்தையும் பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (16.06.2025) தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய விரிவான மினி பஸ் திட்டம் - 2024-ன் படி பேருந்து வசதி கிடைக்கப்பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய மினி பஸ் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை சார்பில், புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (16.06.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.தமிழ்நாட்டில் போக்குவரத்து வசதி அனைத்துப் பகுதிகளுக்கும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் மினி பஸ்கள் எல்லா கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், கிராமப்புறங்களில் இருக்கும் பொதுமக்கள் கிராமங்களுக்கோ அல்லது நகர்புறங்களுக்கோ வேறு இடங்களுக்கோ சிரமமில்லாமல் செல்லும் வகையில் நமதுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தமிழகம் எங்கும் மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டத்தின் கீழ் மினி பஸ்களை துவக்கி வைத்துள்ளார்.பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள்/குக்கிராமங்கள் / குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 1997-ஆம் ஆண்டு பேருந்து வசதி பெறாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் பேருந்து வசதி பெறும் நோக்கில் மினிபஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மாவட்டத்திற்கு 250 மினிபஸ் அனுமதிச்சீட்டுகள் என்ற அடிப்படையில், பேருந்துகள் இயக்கப்படாத (Un-Served) வழித்தடத்தில் 16 கி.மீ. மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் (Served) 4 கி.மீ. என மொத்தம் 20 கி.மீ. என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து மினிபஸ் இயக்க அனுமதி பெற்றதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் 131 மினி பஸ்கள் அனுமதிச்சிட்டு வழங்கப்பட்டு தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.மேலும், தற்போதைய புதிய திட்டமான New Comprehensive Mini Bus Scheme- 2024-ல் 35 சதவிகிதம் பேருந்து வசதி உள்ள பகுதியும், 65 சதவிகிதம் பேருந்து போக்குவரத்து அல்லாத கிராமங்களுக்கும் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் இயக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தில் சிற்றுந்து வசதி ஏற்படுத்த 38 வழிதடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 6 சிற்றுந்துகளுக்கு புதிய அனுமதி சீட்டு 15.06.2025 அன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிற்றுந்து வழித்தடங்களில் அரசு வழிகாட்டுதலின்படி 11 சிற்றுந்துகள் வழிதடம் நீட்டிப்பு செய்து இயக்க (Migration) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களிடமிருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமூதாயத்தில் வாழவும் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் எளிதாக பெறுவதற்கு இந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட பயனாளிகள் இதில் பயன் பெறுவதற்கு tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முதலில் உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும். இதற்கான முதற்கட்ட முகாம்கள் கடந்த 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தேதிகளில் 450 பஞ்சாயத்துகளில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ‘கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னிகள், மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில், விடுப்பட்ட பெண் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு இரண்டாம் கட்டம் முகாம்” ஆனது அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற 19.06.2025 -அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.30 வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும் இம்முகாமிற்கு வருகை தரும்பொழுது கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.1. விதவைசான்று/ஆதரவற்றவிதவை சான்று கணவரால் கைவிடப்பட்டவர் சான்று2. தொலைபேசி எண்3. குடும்ப அட்டை நகல்4. ஆதார் நகல்5. வருமான சான்று6. சாதி சான்றிதழ்இம்முகாமினை விடுப்பட்ட பயனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நேரில் சென்று (14.06.2025) சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடிப்பதற்கும், பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி சேர்வதையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.தற்போது 1495 மாணவர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வராமல் இடைநிற்றல் மாணவர்கள் மாவட்டம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை கண்டறிந்து மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் இன்று முதற்கட்டமாக கள ஆய்வு மேற்கொண்டனர்.அதன்படி முதற்கட்டமாக அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 8 மாணவர்களும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 61 மாணவர்களும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 103 மாணவர்களும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 மாணவர்களும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 47 மாணவர்களும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 22 மாணவர்களும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 97 மாணவர்களும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 105 மாணவர்களும், என மொத்தம் 453 இடைநிற்றல் மாணவர்களை மாவட்ட அளவிலான அலுவலர்கள் நேரில் சந்தித்து நான் பள்ளிக்கு வராத காரணங்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.இந்த குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), கூடுதல் காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி இயக்குநர் ஊராட்சிகள், துணை ஆட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட 80 அரசு அலுவலர்கள் ஒவ்வொரும் தனித்தனியாக இடைநின்ற மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான கள ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில்; இடைநிற்றல் ஆன 5 மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார். இந்த கள ஆய்வின் போது, 5 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பள்ளிக்கு செல்லாத காரணங்களை கேட்டறிந்தார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்கின்ற காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல், ஆர்வமின்மையை போக்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல், புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய வழிகாட்டுதல், கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மெட்டுக்குண்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (13.06.2025) முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
விருதுநகர் மாவட்டத்தில் திருநங்கைகளின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி தொடர்பான கட்டணங்களையும் ‘தமிழ்நாடு அரசே” ஏற்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. திருநங்கைகள் எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும், உயர்கல்வி பயிலும் போது, அவர்களும் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் பயனடைய ஏதுவாக இத்திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை முற்றிலும் தளர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து பயன்பெறலாம். விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் வருகிற 24.06.2025 அன்று பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்று தங்களது விவரத்தை பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (11.06.2025) நடைபெற்றது.இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 12 பயனாளிகளுக்கு நத்தம் இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.6,21,608/- மதிப்பிலும், 1 பயனாளிக்கு நத்தம் வீட்டு மனைப்பட்டா ரூ.13,500/- மதிப்பிலும், 38 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் இ-பட்டா ரூ.24,62,400/- மதிப்பிலும், உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில், 41 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், கால்நடைத் துறையின் சார்பில், 5 பயனாளிகளுக்கு தாது உப்புக் கலவையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 2 பயனாளிகளுக்கு விதைப்பைகளையும் என மொத்தம் 99 பயனாளிகளுக்கு ரூ.30.98 இலட்சம் மதிப்பிலானஅரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு அரசுத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.விவசாயத்தில் இருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் எல்லாம் பார்த்து விவசாயம் செய்தால் லாபகரமானதாக இருக்கும்.கால்நடைத்துறையில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மற்ற குழுக்களைச் சார்ந்த பெண்கள் 20 நபர்கள் இருக்கக்கூடிய குழுவிற்கு அதிகப்பட்சமாக 50சதவிகித மானியத்துடன் கால்நடைகள் வளர்ப்பதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் தமிழ்நாட்டிலேயே கடந்த ஆண்டு அதிகமாக வழங்கக்கூடிய மாவட்டம் விருதுநகர் மாவட்டம் தான். கடந்த ஆண்டு ஏறத்தாழ சுமார் 40,000 த்திற்கும் அதிகமான வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கியுள்ளோம்.அரசினுடைய பல்வேறு திட்டங்களில் செயல்படக்கூடியனவற்றை எல்லாம் நீங்கள் பெற்று கொள்ள வேண்டும். இதன் மூலமாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேன்மையடைய வேண்டும். குறிப்பாக உங்களுடைய பொருளாதார வாழ்க்கை மேன்மையடைய வேண்டும் என்பதற்காக தான் அரசு இத்தகைய திட்டங்களை எல்லாம் தீட்டி, நேரடியாக உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.மேலும், ஏழை எளிய நடுத்தர மக்கள் பல்வேறு சேவைகளை அரசு மூலமாக பெறுவதற்கும், தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதற்கும் புதிய தொழில்களை செய்வதற்கும், அரசினுடைய திட்டங்களை பெறுவதற்கும், இருக்கக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.