விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (03.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நூலக அலுவலகத்தினை பார்வையிட்டு, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையம், ஆதார் மையம் மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றின் பல்வேறு சேவைகளை பெற வருகை தந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்தி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி, அலுவலகத்தின் செயல்பாடுகள், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டி கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.பின்னர், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனையூர் ஊராட்சி, சாட்சியாபுரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை (இரயில்வே திட்டப்பணிகள்) சார்பில், ரூ.61.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய இரயில்வே மேம்பாலம் பணிகளின் முன்னேற்றம் குறித்து, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், வடப்பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (03.07.2025) பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஒ.சுகபுத்ராI A S,.அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சமீபகாலங்களில் நடைபெறும் அன்னதானத்தில் உணவருந்தும் மக்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுதல் மற்றும் உணவு மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்பரவுதல் ஆகியவை பரவலாகக் காணப்படுவதாக ஊடகங்கள் வழியாக அறியப்படுகின்றது. உணவு ஒவ்வாமை தவிர்த்து, உணவு மூலம் பரவக்கூடிய தொற்று நோயானது பெரும்பாலும் உணவு சமைக்கப் பயன்படும் தண்ணீர் மற்றும் நுகர்வோர்களுக்கு வழங்கப்பயன்படும் தண்ணீர் ஆகியவற்றால் தான் ஏற்படுகின்றது.எனவே, அன்ன தானங்களின் மூலம் உணவு மூலம் பரவக்கூடிய தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதவழிப்பாட்டுத்தளங்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் நடத்தப்படும் அன்னதானத்திற்கு உணவு பாதுகாப்புத் துறையிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.கடந்த 07.06.2025 மற்றும் 09.06.2025 அன்று நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கல்விமடை என்ற கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தில் சாப்பிட்டவர்களில் சுமார் 150 பக்தர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இவ்விவகாரத்தை ஆய்வுசெய்து விசாரித்த உணவு பாதுகாப்புத் துறையினர், அன்னதானம் நடத்த உணவுபாதுகாப்புத் துறையின் முன்னனுமதி பெறவில்லை என்பதும், ஆழ்துளைகிணறு மூலம் பெறப்பட்ட சுத்திகரிக்கப்படாத மற்றும் குளோரின் கலக்காத தண்ணீரை சமையலுக்கும், நுகர்வோர்கள் அருந்துவதற்கும் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது.எனவே, பிரச்சினைக்குரிய ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டதில், அந்தத் தண்ணீரில் வயிற்றுப போக்கினை ஏற்படுத்தும் கிருமி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறு வதைதடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பின்பற்றிட வேண்டும் எனஅறிவிக்கப்படுகின்றது.1. அன்னதானங்களை ஏற்பாடு செய்பவர்கள், அன்னதானம் நடப்பதற்கு குறைந்தபட்சம் 10 தினங்களுக்கு முன்னரே https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவுபாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெறவேண்டும்.2. அதுபோல், அன்னதானத்தில் சமைப்பவர்கள்/ கேட்டரிங்க் ஏஜென்ஸி ஆகியோரும், மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/ உரிமம் பெற்றிருக்க வேண்டும்.அவ்வாறு, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/ உரிமம் பெற்ற கேட்டரிங்க் / சமையல் குழுவினருக்கு மட்டுமே அன்னதானத்தில் உணவு சமைக்க அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பணி உத்திரவு வழங்க வேண்டும்.3. இந்தப் பதிவுச் சான்றிதழ் போக, புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் முதல் தளத்தின் அறை எண்: 116 ரூ 118-ல் உள்ள நியமனஅலுவலர் அலுவலகத்தில், பின்வரும் விபரங்களுடன் அனுமதி கோரிகடிதம் ஒன்றினை, அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள்அன்னதானம் நடப்பதற்கு 7 தினங்களுக்குமுன்னர்சமர்ப்பிக்கவேண்டும்.அன்னதானம் ஏற்பாடுசெய்பவர்களின் தொடர் முகவரிமற்றும் அலைபேசி.அன்னதானம் நடைபெறும் இடத்தின் முழு முகவரி. அன்னதானத்தில் ஈடுபடவுள்ள சமைப்பவர் குழு / கேட்டரிங்க் குழுவின் விபரம். அன்னதானத்தில் உணவு சமைக்கவும், நுகர்வோர் அருந்தவும் பயன்படுத்தவுள்ள குடிநீரின் ஆதாரநிலை, பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீராக இருந்தால், விநியோகஸ்தர் / உற்பத்தியாளர் விபரம்.கிணறு அல்லது ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துசமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் அனுமதி மற்றும் தண்ணீர் பகுப்பாய்வறிக்கை ஊராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி போன்ற உள்ளாட்சியின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அது குறித்தான அன்னதானம் ஏற்பாடு செய்பவரின் உறுதி மொழி மட்டும் போதுமானது.சமைப்பவர் குழு / கேட்டரிங்க் குழுவினர் தொற்று நோய்த் தாக்கமற்றவர்கள் என்பதிற்கான மருத்துவச்சான்று.உணவுசமைக்கத் தேவைப்படும் பொட்டல மிடப்பட்ட மூல உணவுப் பொருட்களை முழுமையான லேபிள் விபரங்கள் உள்ளதாக கொள்முதல் செய்யவும், அனைத்து மூல உணவுப் பொருட்களையும் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் / உரிமம் பெற்ற வணிகரிடத்தில் மட்டும் கொள்முதல் செய்யவும் சுய உறுதிமொழிச் சான்று.உணவு தயாரித்த 2 ½ மணி நேரத்திற்குள் பரிமாறிவிட வேண்டும். மீதமான உணவைப் பரிமாறாமல் அப்புறப்படுத்திடல் வேண்டும். பால், மீன், இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதனை முறையான வெப்பநிலையில் பராமரித்திடல் வேண்டும்.அனைத்துவகையான சமைத்த உணவிலிருந்தும் சராசரியாக 250 கிராம் உணவுமாதிரி எடுத்து, தூய்மையான பாட்டிலில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் 48 மணிநேரத்திற்குப் பாதுகாத்திடல் வேண்டும்.மேற்கூறிய, நிபந்தனைகளைப் பின்பற்றாமல் அன்னதானம் நடைபெற்று, அதன் மூலம் உணவின் மூலம் பரவக்கூடிய தொற்று நோய்த்தாக்கம் ஏற்பட்டால், அதற்கு அன்னதானம் ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பாவார்கள் என்றும், அவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.எனவே, அனைத்து மத வழிபாட்டுத்தளங்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள், உணவு பாதுகாப்புபதிவுச் சான்றிதழ் பெற்றும், உணவு பாதுகாப்புத் துறையிடம் அன்னதானம் நடக்கும் நாளிற்கு 7 தினங்களுக்கு முன்னரேமுன் அனுமதி விண்ணப்பம் சமர்ப்பித்து, முன் அனுமதி பெற்றும், உணவுபாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றியும், பக்தர்களுக்குபாதுகாப்பானஉணவுவழங்கிடஒத்துழைப்புநல்கவேண்டும்மெனமாவட்டஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்(02.07.2025) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதனைதொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகாசி மாநகராட்சியில் 32 முகாம்களும், 5 நகராட்சிகளில் 70 முகாம்களும், கிராம ஊராட்சி பகுதிகளில் 229 முகாம்களும் ஆக மொத்தம் 349 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி, முகாம் வருகிற 15.07.2025 முதல் 07.11.2025 வரை நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் நகரப்பகுதிக்கு 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், கிராமப்பகுதியில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்விபரங்கள் குறித்தும் முகாம் ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தொடர்புடைய அலுவலர்ககளுடன் கலந்தாலோசித்து, தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (02.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி ஊராட்சியில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள சமுதாயக் கூட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் குளம் அமைக்கப்பட்டு, தூர்வாரப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் சிட்கோ வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ், தமிழ்நாடு சிறுதானிய இயக்க திட்டத்தில், ஒருங்கிணைந்த சிறுதானிய முதல் நிலை சுத்திகரிப்பு மற்றும் மதிப்புக்கூட்டுதல் நிலையமானது ரூ.16.54 இலட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் வேளாண் பட்டதாரி இளைஞர்களை தொழில்முனைவோராக்குதல் திட்டத்தில் மானியம் வழங்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது , வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) திருமதி செல்வி, விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் திரு.வேலுச்சாமி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், துலுக்கன்குறிச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் (02.07.2025) சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.துலுக்கன்குறிச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.12.19 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 232 புதிய குடியிருப்பு வீடுகளை வருகின்ற 07.07.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.அதனடிப்படையில் இன்று அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி மற்றும் முன்னேற்பாடு பணிகள், குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 100 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் என மொத்தம் ரூ.3.50 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (02.07.2025) வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பு ஏற்று இருக்கக்கூடிய இந்த நான்கு ஆண்டு காலத்தில் பல்வேறு திட்டங்களை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க இடமும், குடியிருக்க வீடு, வேண்டுமென்ற எண்ணத்தோடு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தினை செயல்டுத்தி வருகிறார்.தமிழ்நாட்டினுடைய பல பகுதிகளில் குடிசைகள் இருந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கனவு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு இருந்தது. அந்த வகையில் 1971 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவர்தான் சென்னை மாநகரம் முழுவதும் இருக்கக்கூடிய குடிசைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், குடிசை மாற்று வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி குடிசையில் குடியிருந்த அனைவரும் அடுக்குமாடிகளில் குடியேற வீடுகளை உருவாக்கி தந்தார்.அதன் தொடர்ச்சியாக, டாக்டர். கலைஞர் அவர்கள், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் குடிசை பகுதிகளை கண்டறிந்து அவற்றை எல்லாம் காங்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இருந்த திட்டத்தை செயல்படுத்தினார்.இத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 360 சதுர அடி பரப்பளவில் காங்கிரீட் வீடுகள் கட்டப்படுவதற்கு ஏறத்தாழ ரூ.3.50 இலட்சம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை,எளிய மக்களுக்கு எல்லாம் வீடுகள் வழங்கக்கூடிய திட்டத்தை நாம் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தி வருகிறார்கள்.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024 - 2025 -ஆம் ஆண்டில் 11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 2025-2026 - ஆம் ஆண்டில் 2237 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.அதனடிப்படையில், அருப்புக்கோட்டையில் 83 பயனாளிகளுக்கும், சாத்தூரில் 10 பயனாளிகளுக்கும், விருதுநகரில் 7 பயனாளிகளுக்கும் தலா ரூ.3.50 இலட்சம்; மதிப்பில் இன்று மொத்தம் 100 வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், மழைக்காலத்திற்கு முன்பாக வீடுகளை கட்ட வேண்டும் என்பதற்காக பயனாளிகளை எல்லாம் தேர்வு செய்து, இன்றைக்கு ஒரு பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படுகிறது.மேலும், தகுதியான பயனாளிகள் விடுபட்டிருந்தால், அவர்கள் அத்தனை பேருக்கும் நிச்சயமாக வீடு வழங்கும் திட்டத்தின் வீடுகள் வழங்கப்படும். இது ஒரு மகத்தான திட்டம். இதற்கான பணிகளை விரைவாக தொடங்கி, வீடுகளை கட்டி மனநிறைவோடு அந்த வீடுகளில் நீங்கள் வாழ வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், இன்று நமது மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.எனவே தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் உடைய பயன்களை பொதுமக்கள் பெற, ஏழை எளிய மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கக்கூடிய காங்கிரீட் வீடுகளை கட்டுவதற்கு அனைத்துத் துறை அலுவலர்கள் குறிப்பாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி ஊராட்சியில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து, வீடு கட்டுவதற்காக மனு அளித்த பயனாளியின் இல்லம் தேடி சென்று வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (02.07.2025) வழங்கினார்.கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து வருகிறது.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024 - 2025 -ஆம் ஆண்டில் 11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும், 2025-2026 - ஆம் ஆண்டில் 2237 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. ஓ.கோவில்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடு கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, ஓ. கோவில்பட்டி ஊராட்சியை சேர்ந்த, பெ.வள்ளியம்மாள் க/பெ. பெருமாள் என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வீடு கட்டுவதற்காக மனு அளித்தார். அதனை; பரிசீலனை செய்து அந்த பயனாளிக்கு இல்லம் தேடி சென்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற திருமதி வள்ளியம்மாள் என்ற பயனாளி, சொந்த வீடு கட்டுவற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், தனது சிரமத்தை அறிந்து சரியான நேரத்தில், எனக்கு வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கி உதவிய முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பாவாலி கிராமத்தில் (02.07.2025) கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கால்நடைகளுக்கான 7-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தொடங்கிவைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம் பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 02.07.2025 முதல் 22.07.2025 வரை 21 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. கோமாரி நோய் ஒருவைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும். இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் பகுதிகளில் புண்களும், காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமை ஆகிய அறிகுறிகளோடு சினையுற்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதோடு, சினையின் தன்மை குறைந்து காணப்படும். இந்நோய் கொடிய தொற்று நோயாகும். காற்று மூலம் பரவுவதோடு ஒரு பண்ணையில் ஒரு மாட்டிற்கு காணப்பட்டால் அனைத்து கால்நடைகளுக்கும் உடனடியாக பரவ நேரிடும். இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு உடனடி இறப்பு ஏற்படாவிட்டாலும் உற்பத்திதிறன் அதிக பாதிப்பு ஏற்படும். கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடைவளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு,கறவைமாடுகளில் சினைபிடிப்புதடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கிவரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடைவளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 51 குழுக்கள் அமைக்கப்பட்டு, 21 நாட்களுக்கு தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தடுப்பூசிப் பணி நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் நிறை மாத சினை இல்லாத மாடுகளுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடைவளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முன்அறிவிப்போடு நடைபெறும் கோமாரி நோய் முகாமில் தடுப்பூசியை தங்களது கால்நடைகளுக்கு போட்டுக்கொண்டு பயனடையுமாறு மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, 5 பயனாளிகளுக்கு தீவன புல்கரணைகளும், 5 பயனாளிகளுக்கு கால்நடைகளுக்கு உரித்தான தாது உப்பு கலவையையும் வழங்கப்பட்டது.மேலும், 237 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர், 160 கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது.இம்முகாமில், கால்நடை பாராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எட்வின் ஜேம்ஸ், துணை இயக்குநர் (கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபி விருத்தி) திருமதி கலையரசி, உதவி இயக்குநர் மரு.பழனிசாமி, விருதுநகர் கால்நடை மருத்துவர்கள் மரு.ரமேஷ் (விருதுநகர்), மரு.கார்த்திக் (திருத்தங்கல்) மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு நாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.தாய்த்தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 (18.07.1967) ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் ”தமிழ்நாடு நாளாகக்” கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பெற்றது.இவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 04.07.2025 ஆம் நாள் முற்பகல் 09.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட பழைய மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.கட்டுரை போட்டிக்கான தலைப்புகள் 1. ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம், 2.பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல்பணி என்ற தலைப்பிலும்,பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் 1. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, 2.அன்னைத் தமிழே ஆட்சிமொழி, 3.தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர், 4.அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு, 5. ஆட்சிமொழி விளக்கம், 6.தமிழ்நாடு எனப்பெயர் சூட்டிய நிகழ்வு, 7.ஆட்சிமொழி - சங்க காலம் தொட்டு, 8.இக்காலத்தில் ஆட்சிமொழி என்ற தலைப்பிலும்,மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10000-மும், இரண்டாம் பரிசு ரூ.7000-மும், மூன்றாம் பரிசு ரூ.5000-ம் என்ற வீதத்தில் வழங்கப்பெறவுள்ளன.மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மட்டும் 15.07.2025 அன்று நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.