25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 28, 2025

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 25 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், (28.03.2025) மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 25 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மதுரைக்கு   கல்வி சுற்றுலா செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,IA S., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு  சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக  (28.03.2025) மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரை சுற்றுச்சூழல் பூங்கா, திருமலை நாயக்கர் மஹால், இராஜாஜி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு அறிவியல் களப்பயணம் செல்வதற்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுற்றுலா பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இப்பயணத்தில், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள 3.5 இலட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள், குழந்தைகள் நூல், சிறுவர் திரையரங்கம், கலையரங்கம், மாதிரி வானூர்தி, எண்ணிம திரைகள், தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் , போட்டித் தேர்வுகளுக்கான நூலகப்பகுதி, பார்வையற்றவர்களுக்கான நூல்கள் மின்னூல்,ஒலி நூல், மேற்கோள் நூல்கள் குறித்தும், மதுரை சுற்றுச்சூழல் பூங்காவில் திருமலை நாயக்கர் மஹால், இராஜாஜி பூங்கா உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டு, அவற்றையெல்லாம் மாணவர்கள் அறிந்து கொண்டு, அவர்களுக்கு ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும் இந்த அறிவியல் களப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.இந்நிகழ்வின் போது, ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 28, 2025

திடக்கழிவுகளை பொது இடங்களில் தீயிட்டு எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்

விருதுநகர் மாவட்டத்தில் சமீப காலங்களில் சாலையோரங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் குப்பைகள் மற்றும் இதர திடக்கழிவுகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு திடக்கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழலையும், மனித நலனையும்பாதிக்கக் கூடும்.“தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, அத்தியாயம் VIII பிரிவு 153, 156, 157, 158, 160 மற்றும் 161-ன் படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவுகளை அகற்ற போதிய ஏற்பாடுகள் செய்யவும், திடக்கழிவு சேவையில் ஈடுபட்டு பொது சுகாதாரம் பேணி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செலவினத்தை அதன் பொறுப்பாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து செயல்படுத்தவும் நச்சுத் தன்மை உடைய கழிவுகளையோ, அழுகிய கழிவுகளையோ, மலக்கழிவுகளையோ, மருத்துவக்கழிவுகளையோ மாற்றம் செய்தல், சாலைகளில் போடுதல் மற்றும் கழிவு நீர்க் கால்வாய்களில் கொட்டுதல் ஆகியவை தடைசெய்யப்படுகிறது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது”.  எனவே, விருதுநகர் மாவட்டத்தில் திடக்கழிவுகளை பொது இடங்களில் தீயிட்டு எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம்தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்1920-ன்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 27, 2025

மகப்பேறு மற்றும் சிசு இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியாக சிறப்பு பயிற்சி வழங்கப்பட்ட செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (27.03.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், தாய் சேய் நலம் காப்போம் - 2025 திட்டத்தின் கீழ், மகப்பேறு மற்றும் சிசு இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியாக சிறப்பு பயிற்சி வழங்கப்பட்ட செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், IAS அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.

Mar 27, 2025

சித்திரை திருநாளை முன்னிட்டு இளைஞர்களுக்கான கபடி மற்றும் வாலிபால் போட்டிகள் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சித்திரை திருநாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர்களுக்கான மாபெரும் கபடி மற்றும் கையுந்து போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு  29.03.2025 முதல் 04.04.2025 வரை நடைபெற உள்ளது. அதன்படி, ஆண்களுக்கு வட்டார அளவிலும், பெண்களுக்கு மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.அதன்படி, ஆண்களுக்கான வட்டார அளவிலான போட்டிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அருப்புக்கோட்டை செட்டிகுறிச்சி, ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9345036559, 94435-44350 என்ற எண்ணிலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில்; 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9842909574, 9442418663 என்ற எண்ணிலும்,விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்;ட விளையாட்டு அரங்கத்தில் 29.03.2025 அன்று கையுந்து மற்றும் 31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9791634373, 7639525633 என்ற எண்ணிலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தூர் எட்வர்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 03.04.2025 அன்று கபடி மற்றும்  04.04.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9486497010, 8695966669 என்ற எண்ணிலும்,நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 29.03.2025 அன்று கையுந்து  மற்றும்  31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9791229305, 7010156632 என்ற எண்ணிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் கல்லூரணி எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளியில் 03.04.2025 அன்று கபடி மற்றும் 04.04.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9445383316, 9080092027 என்ற எண்ணிலும்,சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில்  03.04.2025 அன்று கபடி மற்றும் 04.04.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9994846801, 9865071770 என்ற எண்ணிலும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 6369804545, 8667403340 என்ற எண்ணிலும்,திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மங்காபுரம் மேல்நிலைப்பள்ளியில் 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 7305574443, 8428272694 என்ற எண்ணிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் செவல்பட்டி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் 03.04.2025 அன்று கையுந்து மற்றும்  31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9629648653, 9486427621 என்ற எண்ணிலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில்; 29.03.2025 அன்று கையுந்து மற்றும்  31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலரை 8925491170 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.பெண்களுக்காக 09.04.2025 மற்றும் 10.04.2025 ஆகிய தினங்கள் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள் பொறுப்பு அலுவலர்களை 9488151214, 9994511966 மற்றும் 9865071770 ஆகிய  எண்ணிலும், கையுந்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள் பொறுப்பு அலுவலர்களை 9994160149 மற்றும் 9894693210 ஆகிய  எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.வட்டார அளவில் நடத்தப்படும் ஆண்களுக்கான போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.10,000ஃ- மும், இரண்டாம் பரிசு ரூ.5,000ஃ-மும் வழங்கப்படும். வட்டார அளவில் வெற்றி பெறும் தலா ஒரு அணிகள் 12.04.2025 அன்று மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர்.மேலும், மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.1.20 இலட்சம் மற்றும் இரண்டாம் பரிசு ரூ.90 ஆயிரம் வழங்கப்படும்.இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகள் வயது சான்று அல்லது ஆதார் கார்டு நகலுடன் படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.எனவே, மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Mar 27, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தாட்கோ மூலம் அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான (JEE Mains) பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)  மற்றும்  சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  (CPCL)  நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர்  மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains)  தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதம் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றியிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.4 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியானது  மாணவர்களுக்கு  மட்டும் வழங்கப்படவுள்ளது.  சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்க சென்னை மாவட்டத்தில் உள்ள  மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவும், உணவு மற்றும் தங்கும் இடத்திற்குக்கான கட்டணத் தொகையும் 11  மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.இந்த பயிற்சியின் மூலம்  கடந்த  ஆண்டில் 30 மாணவர்கள் தங்கி பயின்று  அதில்  26  மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தகுதி பெற்று உள்ளார்கள்.எனவே, இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com  என்ற முகவரியில் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 26, 2025

குறையறவாசித்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், குறையறவாசித்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  (26.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் மதிய உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், குறையறவாசித்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  (26.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடி, மாணவர்களின் கல்வித்தரம், வாசிப்புத்திறன், எழுத்துத்திறன், பள்ளிகளுக்கு அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்டவை முறையாக சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

Mar 26, 2025

மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள விருமதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள்  (26.03.2025) திறந்து வைத்தார்.பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், 12 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13 இலட்சம் சமூக முதலீட்டு நிதிக்கான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 26, 2025

மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 20 பெண்களுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் 200 ஆடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நல்லுக்குறிச்சி கிராமத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், ஆடு வளர்ப்பு தொகுப்பு 2024-2025 கீழ், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த தீவனம் உற்பத்தி செய்வதற்கான நிலமுள்ள 20 பெண்களுக்கு தலா 10 ஆடுகள் வீதம் என மொத்தம் ரூ.14 இலட்சம் மதிப்பில் 200 ஆடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அமுத சுரபி நிதியின் கீழ், ரூ.36.40 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசினுடைய மகளிர் மேம்பாட்டு திட்;டத்தில் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பெண்கள் ஏதேனும் ஒரு வகையில் ஒரு தன்னார்வலர்களாக, ஒரு சுய தொழிலை செய்ய வேண்டும். அதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அதுவும் குறிப்பாக நமது மாவட்டத்தில் ஏறத்தாழ ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் மகளிர்; சுய உதவி குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்களும் பல்வேறு தொழில்களை செய்வதற்கு, தங்களுடைய தேவைகளுக்கென்று சுயதொழில், கூட்டமைப்புகள், வங்கிகள் மூலமாக நமது மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக ஒரு ஆண்டிற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாயினை வங்கிக் கடன்களாக பெறுகிறார்கள்.ஆனால், அவர்கள் வாங்கிய கடனை சரியாக முதலீடு செய்து கொண்டிருக்கிறார்களா என்று பார்த்தால், அவர்கள் பணத்தை  அடிப்படைத் தேவைகளுக்கு அதாவது சமுதாயத்தில், பொருளாதாரத்தில், எதிர்பாராத குடும்ப செலவுகளுக்கென்று தான் செலவிடுகிறார்கள். ஆனால், இதனுடைய முக்கியமான நோக்கம் என்னவென்றால், பெண்களுக்கான உண்மையான வலிமை என்ன, பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் என்ன, பெண்களுக்கான உண்மையான விடுதலை என்ன என்று பார்த்தால், பெண்களுக்கான உண்மையான வலிமையும், விடுதலையும் அவர்களுடைய  பொருளாதார வலிமை தான். அதாவது பெண்களின்  கையில் பணம் இருக்க வேண்டும். அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்பது தான்.பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றார்கள் என்றால், குடும்பத்தில், சமுதாயத்தில் அவர்களினுடைய பங்கு என்பது முழுமையாக அங்கீகரிக்கப்படுகிறது. அதனால் தான் பெண்கள்  தொழில் தொடங்குபவர்களாக, தொழில் முனைவோர்களாக வர வேண்டும்.மேலும், இன்றைக்கு சந்தையில் ஆடுகளுக்கான தேவை மிகப்பெரிய அளவில்  இருக்கிறது. நீங்கள் அனைவரும் இன்றைக்கு ஒரு 10 ஆடுகள் வாங்கி, அதில் நீங்கள் ஒரு வருடம் உங்களினுடைய முழுமையான உழைப்பினை செலுத்துகிறீர்கள் என்றால் நிச்சயாக ஒரு ஆண்டில் 10 ஆடுகள் 30 ஆடுகளாக பெருகக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், ஒரு ஆண்டுகள் பராமரித்தால் நீங்கள் அனைவரும் ஒரு ஆட்டுப்பண்ணையின் உடைய முதலாளியாக மாறக்கூடிய வாய்ப்புகள் கூட இருக்கிறது. எனவே, இதற்கு நீங்கள் ஒரு இரண்டு ஆண்டுக்காலம் ஆடுகளை சரியாக பராமரித்து உங்களினுடைய உழைப்பை செலுத்தினீர்கள் என்றால் இரண்டு ஆண்டு காலத்தில் உங்களின் உடைய குடும்பம் பொருளாதாரம் முன்னேறக்கூடிய அளவிற்கு வருமானத்தை தொடர்ச்சியாக பெற முடியும்.எனவே, எந்த ஒரு வெள்ளமும் சிறிய துளியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது, எந்த ஒரு பெரிய கடலும் மழையில் இருந்து விழக்கூடிய ஒரு துளியில் இருந்து தான் வருகிறது என்பது போல, இவற்றையெல்லாம் தொடர்ச்சியாக முழுமையாக முயற்சி செய்தால் நிச்சயமாக மிக பெரிய வாய்ப்பை பெற முடியும்.நமக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகள், உரிமைகள், நமக்காக அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள்  இவற்றையெல்லாம்  தெரிந்துக்கொண்டு, அவற்றின் உடைய பயன்களை பெறக்கூடியவர்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.எனவே, இது போன்ற விழிப்புணர்வுகளை பெற்று, கல்வி வாய்ப்புகளை பெற்று, பொருளாதார வாய்ப்புகளை பெற்று, வாழ்க்கையில் எவ்வளவு உரிமைகள் இருந்தாலும் பொருளாதார வலிமை தான் மிகவும் முக்கியம் எனவும், பெண்கள் அனைவரும் தொழில்களில் வெற்றி பெற்று பெரிய தொழில் முனைவோர்களாக முன்னேற வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரகஃநகர்ப்புற வாழ்வாதார இயக்கம்)திரு.ஜே.ஜார்ஜ் மைக்கேல், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 26, 2025

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நாலூர் கிராம ஊராட்சியில் “கிராம இயற்கை சந்தை”-யினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நாலூர் ஊராட்சியில் (26.03.2025) தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் “கிராம இயற்கை சந்தை”-யினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், நாலூர் ஊராட்சியில், இயங்காமல் இருந்த சந்தை மற்றும் கடைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இந்த பகுதியினுடைய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கள் மூலம் பல்வேறு கடைகளாக தொழிலை செய்யக்கூடிய இடங்களாகவும், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை விற்கக்கூடிய இடங்களாக மாற்றி இந்த சந்தை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் திறந்த வெளியில் சந்தை என்பது இல்லை. இந்த சந்தையினை பொருட்களை வாங்கக்கூடிய, பல்வேறு பொருட்கள் கிடைக்கக்கூடிய ஒரு இடமாக மாற்றினால் நிச்சயமாக லாபம் தரக்கூடிய இடமாக மாறும். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள்; குழுவாக சேர்ந்து, செயல்படுவதன் முக்கியத்துவம் என்னவென்றால் ஒரு செயலை தனியாக செயல்படுத்துவது கடினம். அதுவே ஒரு குழுவாக சேர்ந்த செயல்படும் பொழுதுதான் வலிமை பெறுகிறது.குறிப்பாக குழுவாக செயல்படுவதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கின்றன. பெண்களுக்கான முழுமையான விடுதலை, சுதந்திரம், வலிமை என்பது அவர்களுக்கான பொருளாதாரம் தான்.பெண்களுக்கான பொருளாதாரா வலிமை எப்போது நிறைவடைகிறது என்றால் கையில் பணம் இருக்கும் பொழுது, நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்கும் போது, நல்ல தொழிலை செய்து வியாபாரத்தில்  இலாபம் சம்பாதிக்கும் பொழுது, அவர்கள் சுய தொழில் மூலம் வருமானம் பெறும் பொழுதுதான் பொருளாதாரம் வலிமையாகும்.அந்த வகையில் பெண்களுக்கான பொருளாதார வலிமையை உருவாக்குவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பெற்று, பொறுமையுடனும் தொடர்ச்சியான செயல்பாடுகளுடனும் இருந்தால் நிச்சயமாக கிராமப்பகுதியில் இருக்கக்கூடிய பெண்கள்  மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் எல்லாம் மிகப்பெரிய பொருளாதார வலிமையை அடைய முடியும்.பெண்களுக்கான சுய உதவிக்குழுக்களுக்கு அரசால் மானியம் வழங்கப்படுகிறது. அதன் மூலம் பெண்கள் 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை சுய உதவி குழுக்கள் கடன்களை பெற்று சரியான முறையில் சுய தொழில்களை செய்து வருமானம் ஈட்டக்கூடிய தன்னம்பிக்கை மிக்கவர்களாக சமுதாயத்தில் உருவாகி வருகின்றனர்.எனவே இது போன்ற அரசினுடைய திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் கடனுதவிகளை பெற்று முறையாக செயல்படுத்தி பெண்கள் தங்களுக்கான பொருளாதார வலிமையை உயர்த்திக்கொள்ள வேண்டும்.இந்த பகுதியில் சந்தையை பயன்படுத்தி இன்னும் ஒரு ஆண்டுகாலத்திற்குள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பொருளாதாரத்தில் வலிமை பெற்றவர்களாக ஆக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜே.ஜார்ஜ் மைக்கேல், உதவித் திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 26, 2025

மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைசிறந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக பயிற்சி வகுப்புகள் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் (இருபாலருக்கும்) நடத்தப்பட உள்ளது.நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடிந்த உடன் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். ஆகையால் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொண்டு அடிப்படை நீச்சல் பழகி கொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பள்ளிஃகல்லூரி, மாணவ/மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவரும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம்.மேலும், பயிற்சி வகுப்பு நடைபெறும் நாட்கள் முதல் தொகுப்பு - 01.04.2025 முதல் 13.04.2025, இரண்டாம் தொகுப்பு- 15.04.2025 முதல் 27.04.2025, முன்றாம் தொகுப்பு- 29.04.2025 முதல் 11.05.2025, நான்காம் தொகுப்பு- 13.05.2025 முதல் 25.05.2025 மற்றும் ஐந்தாம் தொகுப்பு- 27.05.2025 முதல் 08.06.2025 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும். இது தொடர்பான விவரங்களை பெற -97513-93412 என்ற நீச்சல் பயிற்றுநர் அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 125 126 127 128 129 130 131 ... 141 142

AD's



More News