மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு இ-பட்டாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு இ-பட்டாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S, அவர்கள் (07.09.2026) வழங்கினார்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அருப்புக்கோட்டை வட்டம், பெரியபுளியம்பட்டி கிராமத்தைச் சார்ந்த 22 பயனாளிகளுக்கு கணினி வழி இ-பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சாத்தூர் வட்டம், சின்னகொல்லப்பட்டி கிராமத்தைச் சார்ந்த 19 பயனாளிகளுக்கும், விருதுநகர் வட்டம், கூரைக்குண்டு கிராமத்தைச் சார்ந்த 18 பயனாளிகளுக்கும் கணினி வழி இ-பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 566 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.சையது முகமது, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் திருமதி சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஜான்சன் தேவசகாயம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்ம நாயகம், பொது மேலாளர் (தாட்கோ) திருமதி இந்திராகாந்தி, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply