விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப்பலன்களைப் பெறுவதற்கு தங்களது நிலஉடைமை விவரங்கள், பயிர்சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம் (AgriStack) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், கைபேசி எண், நிலஉடைமை விவரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் (CSCs) சென்று அங்கும் நிலஉடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னர் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும். 2025-26 ஆம் நிதி ஆண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் (PMKISAN), பயிர்க்காப்பீடுத் திட்டம் (PMFBY) போன்றஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசிஎண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 31.03.2025-ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PM NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM)) 10.03.2025 அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.00 மணிவரையில் நடைபெறவுள்ளது. இந்த தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில், அரசு / பிரபல முன்னணி தனியார் தொழிற்நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும் ஐ.டி.ஐ- ல் உள்ள தொழிற்பிரிவுகான Fitter, Machinist, MMV, R&AC> ELECTRICIAN, Turner, Welder, Wireman, Surveyor, COPA மற்றும் இதர பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இதுநாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள் மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இத்தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிகாலத்தில் தொழிற்நிறுவனங்களின் நிலைக்கேற்ப மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7700/- முதல் ரூ.13500/- வரை வழங்கப்படும். மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate- NAC) மற்றும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் (Placement) வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவ, மாணவியர் விடுதியில், (04.03.2025) ராம்கோ குரூப் மற்றும் பி.ஏ.சி.ஆர்.சேதுராமம்மாள் அறக்கட்டளை இணைந்து நடத்தும், மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் குழந்தைகள் கொண்டாடும் 21-ம் ஆண்டுவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில், மலைவாழ் குடும்பங்களுக்கு புதிய ஆடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.சமுதாயத்தில் மிகவும் ஒரு விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய பழங்குடியினருக்கு அவர்களுடைய கல்வி, வாழ்க்கை தரம் இரண்டையும் உயர்த்த வேண்டும் என்பதற்காக ராம்கோ நிறுவனத்தினுடைய சேதுராமம்மாள் அறக்கட்டளையின் சார்பில் நிறைய பணிகளை செய்து கொண்டு வருகிறது.நமது விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாக இராஜபாளையம், வத்திராயிருப்பு வட்டங்களில் நான்கு இடங்களில் பழங்குடியினர் மக்கள் வசித்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கக்கூடிய புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தால், அவர்களுடைய கல்வித்தரம் எவ்வாறு இருந்தது, அவர்கள் எந்த அளவிற்கு பள்ளிக்கல்வியையும், உயர்கல்வியையும் பெற்றிருந்தார்கள் என்று பார்த்தால் அது மிக குறைவான அளவில் தான் இருந்தது. இன்று அனைத்து மாணவ மாணவிகளும் பள்ளி படிப்பிற்கு வருகிறார்கள். பள்ளி படிப்பு முடித்து உயர்கல்விக்கு கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.மேலும், இந்த விடுதியில் இருந்து படித்து செவிலியர் பட்டம் பெற்று இன்று செவிலியராக பணிபுரியக் கூடிய ஒரு பெண்ணும், பொறியியல் படிக்கக்கூடிய மாணவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். மேலும், மலைவாழ் பழங்குடியின மாணவர்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அவர்களுக்கு அதனை பற்றி எடுத்து சொல்ல வேண்டும். குறிப்பாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கும், ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த தொழில் நிறுவனங்களிலும் பயில்வதற்கு பழங்குடியினர் பிரிவிலிருந்து நமது தமிழ்நாட்டில் இருந்து செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்கு மட்டுமல்லாமல், அரசு வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் இட ஒதுக்கீடு இருக்கிறது. அதனை எல்லாம் மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். நாம் செய்கின்ற உதவிகளில் மிகவும் முக்கியமான உதவி என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.அதனை ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவ, மாணவியர் விடுதி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். மொழித்திறனாக இருந்தாலும், மதிப்பெண்களாக இருந்தாலும், விடுதியில் அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய புதிய திறன்களாக இருந்தாலும், அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கின்ற பொழுது அவர்கள் சிறந்த மனித வளமாக மாறுகிறார்கள்.எனவே காலம் காலமாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மலைகளில் இருந்து நிறைய வாய்ப்புகளை பெறாமல் விட்டவர்கள், மறுக்கப்பட்டவர்கள் இது போன்ற வாய்ப்புகளை பெற்று புதிய உயிரோட்டத்திற்கு வருகின்ற பொழுது இன்னும் நாம் அவர்களை நன்கு ஊக்கவிக்க வேண்டும்.மேலும், இப்பகுதி மலைவாழ் மக்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், ராம்கோ நிறுவன சேர்மன் திருமதி நிர்மலா ராஜா, மலைவாழ் பழங்குடியின மக்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வடமலையாபுரம் சோதனைச் சாவடி அருகில் இன்று (03.03.2025) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், ரூ.120 கோடி மதிப்பில், திருவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையை சிவகாசி - விருதுநகர் சாலை உடன் இணைக்கும் சிவகாசி நகரத்திற்கு வெளிவட்ட புறவழிசாலை அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., அவர்கள், ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், சிவகாசி நகரத்திற்கு வெளிவட்ட சாலை அமைப்பதற்கான ஒரு கட்டமாக இன்று ரூ.120 கோடி மதிப்பில் திருவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையை சிவகாசி - விருதுநகர் சாலை உடன் இணைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சியில் பட்டாசு தொழிற்சாலை மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சிவகாசி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, சிவகாசி நகருக்கு வெளிப்புற சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.தற்போது சிவகாசி நகருக்கு வெளிப்புற சுற்றுச்சாலை அமைக்கும் பணி 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிவகாசி வெளிப்புற சுற்றுச்சாலை அமையவுள்ள சாலையின் மொத்த நீளம் 33.520 கி.மீ ஆகும். இதனால் திருவில்லிபுத்தூர் - சிவகாசி சாலை விருதுநகர் சிவகாசி -சாலை, சாத்தூர் சிவகாசி கழுகுமலை சாலை சிவகாசி ஆலங்குளம் சாலை, சிவகாசி எரிச்சநத்தம் சாலை, சிவகாசி - கன்னிசேரி சாலை மற்றும் விஸ்வநத்தம் வெங்கடாசலபுரம் - சாலை உள்ளிட்டவை சுற்றாக இணைக்கப்படும்.இதில் கீழத்திருத்தங்கல், ஆனையூர் என இரு பகுதிகளில் இரயில் தண்டவாளங்கள் செல்வதால், அந்த இடங்களில் இரயில்வே மேம்பாலம் அமைக்க இரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.தற்போது வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி, கீழத்திருத்தங்கல், அனுப்பன்குளம், நாரணாபுரம், கொங்கலாபுரம் ஆகிய 7 வருவாய் கிராமங்களுக்கு நில ஒப்படைப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் பாலம் வரை 9.92 கி.மீ. சாலை அமைக்க ரூ.120 கோடி மதிப்பீட்டில் வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியானது திருவில்லிபுத்தூர்- சிவகாசி சாலை முதல் சிவகாசி எரிச்சநத்தம் சாலை மற்றும் சிவகாசி - எரிச்சநத்தம் சாலை முதல் சிவகாசி விருதுநகர் சாலையை இணைக்கிறது என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அமலா திருமண மண்டபத்தில் (03.03.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான, தமிழ்நாடு அரசின் சார்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்றைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.நம்முடைய பாரம்பரியத்தின்படி, கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் நாளைய சமுதாய குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.ஒரு அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை வடிவமைத்து தருகிறது. பல்வேறு கட்டமைப்புகள் தேவையாக இருந்தாலும் அடிப்படையில் ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணிகளாக இருப்பது, அந்த நாட்டிலே இருக்கக்கூடிய சமுதாயம் எப்படி வாழ்கிறது என்பது தான்.ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், அந்த நாட்டில் வலுவான தலைமுறையினரை நாம் உருவாக்க வேண்டும். ஒரு சமுதாயம் எழுச்சிமிக்க சமுதாயமாக, தலை நிமிர்ந்த சமுதாயமாக இருக்க வேண்டும். நமக்கு பின்னால் வரக்கூடிய தலைமுறைகள் நிறைந்த அறிவாற்றல் பெற்றவர்களாக இருந்தால்தான், இனி வரக்கூடிய காலங்களிலே நம்முடைய வலிமையை உலகத்தில் நிரூபிக்கும்.அப்படிப்பட்ட ஒரு அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கக்கூடிய குழந்தைகளை எதிர் காலத்தில் நாம் உருவாக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு கல்வி முக்கியம். அந்த கல்வியை உங்களுக்கு கொடுக்கக்கூடிய ஒரு நல்லாட்சியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அமைந்திருக்கிறது. கல்விக்கு அடுத்து நாம் எதிர்கால தலைமுறைகளாக இருக்கக்கூடிய குழந்தைகள் நல்ல உடல் நலத்தோடும், ஆரோக்கியமாக இருந்தால் தான் கல்வி கற்றல் மூலம் கிடைக்கக்கூடிய பயன்களை பெற முடியும்.எனவே தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு கல்வி மற்றும் பொது சுகாதாரத்துக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. ஒரு அருமையான சமுதாயத்தை, எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய கடமையையும், பொறுப்பையும் கர்ப்பிணி தாய்மார்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.இந்த பொறுப்பை நீங்கள் சுமந்து கொண்டிருக்கிற போது, உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும், உங்களின் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயலாற்றி வருகிறது.தமிழ்நாடு அரசு பெண்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர்க்கான பேருந்து பயணம் திட்டம், புதுமைப்பெண், மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பணிதாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) திருமதி பத்மாவதி, பேரூராட்சி தலைவர்கள் திரு.செந்தில்(காரியாபட்டி), திரு.துளசிதாஸ்(மல்லாங்கிணறு), முக்கிய பிரமுகர்கள் திரு.கண்ணன், திரு.செல்லம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கர்ப்பிணி தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் (28.02.2025) விருதுநகர் மண்டலத்தில் உள்ள அனைத்து புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கான புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்த விருதுநகர் மாவட்ட நிர்வாகம, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) மற்றும் காமராஜ் பொறியில் கல்லூரி நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்த ஒருநாள் புத்தொழில் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ((StartupTN) என்பது அனைத்து புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்துவதற்கு, உலக சந்தைக்கு தேவையான புதிய தொழில் முயற்சிகளுக்கு தகுந்த வழிகாட்டுதல் வழங்குதல், நிதி திரட்டுவதற்கான வழிமுறையை உருவாக்கி கொடுத்தல், தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல், தொடக்க நிலையில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொள்ளும் வகையில் தொடங்கப்பட்டு, இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இன்று உலகம் முழுவதும் இருக்க கூடிய மாறி வரும் பொருளாதரார சூழலில் ஸ்டார்ட் அப் என்று சொல்லக்கூடிய புதிய தொழில் நிறுவனங்கள் உருவாவது என்பது முன்னெப்போதையும் விட பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. மனித நாகரிக வளர்ச்சி குறித்தும், நெருப்பு சக்கரம் மின்சாரம் இணையம் இந்த நான்கு கண்டுபிடிப்புகள் தான் மனித குல வரலாற்றில் நாகரிகத்தின் போக்கை மாற்றியது.மனிதன் என்பவன் இந்த உலகத்தில் மிகச்சிறிய உயிரினம் தான். மனிதனை விட மிக வலிமையான உயிரினங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன. இந்த உலகத்தில் உள்ள வளத்தில் மனிதன் மற்ற உயிரினங்களை விட ஏன் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறான் என்றால் அவன் கண்டுபிடித்த தொழில் நுட்பங்கள் மற்றும் மனிதனுக்கு இருக்கக்கூடிய பகுத்தறிவு சிந்தனைகள் தான். உலகத்தில் நீங்கள் எடுத்துக் கொண்டால் ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு மொத்த மனிதனுடைய தேவை என்பது ஒரு மாதிரி இருக்கும். அடுத்து வரக்கூடிய நூறு ஆண்டுகளில் மனிதனுடைய தேவை வேறு மாதிரி இருக்கும்.வருகிற காலக்கட்டத்தில், பெரிய தொழில்நுட்பங்கள், பகுத்தறிவு சிந்தனைகள் அவ்வப்போது மாறி கொண்டே இருக்கிறது.எனவே உலகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும், அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுவத்தற்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.இந்த மாற்றுத்திற்கு ஏற்ப தொழில்களும், வேலைவாய்ப்புகளும் மாறி கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இளம் தொழிலாளர்கள் இன்றைக்கு புதிதாக ஒரு தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. புதிதாக தொழில் தொடங்குவதில் உள்ள பிரச்சனைகளுக்கான தீர்வு, நிதி வாய்ப்புகள், பயிற்சி இவற்றை ஏற்படுத்தி தருவதற்கு தான் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ((StartupTN)இன்று உலகத்தில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியதுதான் இந்த ஸ்டார்ட் அப். இன்று உலகத்தில் மக்கள் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை என்ன அதனால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நேர இழப்பு, ஆற்றல் இழப்பு, பொருளாதார இழப்பு மற்றும் உழைப்பு விரயம் என்ன என்பதை ஆராய்ந்து இந்த மூன்றையும் சேமிக்கக்கூடிய திறன் பெற்ற ஒரு தொழில் முனைவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.விருதுநகர் மாவட்டம் என்பது தொழில் தொடங்குவதற்கான ஒரு முன்னோடியான மாவட்டமாக இருந்து வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 100 வருடங்களுக்கு முன்னால் 1920 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தான் தொழில்கள் தொடங்கப்பட்டன. மூன்று தொழில்கள் பிரதானமாக இங்கு தொடங்கப்பட்டன. அவை இங்கு இருக்கக்கூடிய பட்டாசு, வர்த்தகம், மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதைத்தொடர்ந்து ஸ்பின்னிங் இண்டஸ்ட்ரீஸ், பேனாவின் உடைய நிப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் அச்சுத் தொழிற்சாலைகள் இதுபோன்ற தொழில்கள் ஒரு நூறு வருடத்திற்கு முன்னால் தான் தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் இது போன்ற தொழில்கள் எந்த மாதிரியான தொலைநோக்கு பார்வையுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு தொழில் நீடித்து நிலையாக வளர்வதற்கு என்னென்ன காரணிகள் உள்ளது என்பதை விருதுநகர் மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மையையும், தொகுப்புகளையும் நீங்கள் படித்தீர்களேயானால் உங்களுக்கு ஆச்சரியமான தகவல்கள் நிறைய கிடைக்கும்.இந்த நிகழ்வில், பல்வேறு தொழில்துறை மற்றும் Startup முன்னோடிகள் இணைந்து மல்டி-செக்டர் தொழில்முனைவு வளர்ச்சி, தொழில்முனைவோருக்கு வழிகாட்டினர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.சரவண கணேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளர்( StartupTN) திரு.சக்திவேல், சோனி பயர் ஒர்க்ஸ் முனைவர் விக்னேஷ் , முன்னணி தொழில்முனைவோர்கள், காமராஜ் கல்லூரி நிர்வாகிகள் , கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து வாகனங்களுக்கும் வாகன விபரங்களுடன் வாகன உரிமையாளர்களின் கைபேசி எண்ணை வாகனப் பதிவுச் சான்றுடன் இணைப்பது போக்குவரத்துத் துறையில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. எனவே, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன விபரத்துடன் தங்களது கைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதா என்ற விபரத்தினை போக்குவரத்துத்துறை இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளவும், தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்டுள்ள கைபேசி எண்ணை தங்களது பெயரில் உள்ள வாகனங்களுடன் இணைக்கவும் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களை அணுகி, வாகன உரிமையாளர்கள் தங்களது ஆதார் நகலுடன் ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண் விபரத்தினை கொடுத்து வாகன எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களால் 80வது தேசிய மாதிரி ஆய்வு (ஜனவரி 2025 முதல் ஜூன் 2026) முடிய, முழுமையான சுகாதார ஆய்வு (ஜனவரி 2025 முதல் டிசம்பர் 2025 வரை), உள்நாட்டுச் சுற்றுலா செலவு கணக்கெடுப்பு (ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரை) மற்றும் தேசிய அளவில் குடும்பப் பயண ஆய்வு (ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரை) ஆகிய தலைப்புகளில் சமூக பொருளாதார ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாய்வு சுகாதாரத் துறை குறித்த அடிப்படை அளவு தகவல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளபட உள்ளது.பல்வேறு வயதினரிடையே ஏற்படும் நோய்களுக்காக மருத்துவமனையில் (உள்நோயாளி, வெளிநோயாளி) மேற்கொள்ளும் சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆகியவற்றில் கீழ் மேற்கொள்ளும் செலவினங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளது. மேலும், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை பிறப்பு விகிதம் ஆகியவை இந்த கணக்கெடுப்பு தரவுகளிலிருந்து பெறப்பட உள்ளது. ‘பாக்கெட்டில் இருந்து செலவழிக்கப்படும்” மற்றும் அரசு நிதியளிக்கும் சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை அணுகுவதில் மக்களின் விழிப்புணர்வு பற்றியும் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குறிப்பாக சிறுகுளம், வடகரை, திருச்சுழி, செட்டிகுறிச்சி, திப்பம்பட்டி, விஜயகரிசல்குளம், கல்லுமடம், சிங்கநாதபுரம், சூரங்குடி மற்றும் பச்சகுளம் ஆகிய 10 கிராமப்புற மாதிரிகளிலும்;, இராஜபாளைம்(2), பள்ளபட்டி, திருத்தங்கல், கூரைக்குண்டு, பாளையம்பட்டி, அருப்புக்கோட்டை(2), சத்திரபட்டி, சேத்தூர், விருதுநகர் மற்றும் தளவாய்புரம் ஆகிய 12 நகர்ப்புற மாதிரிகளிலும் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.மேற்படி, ஆய்வுக்காக பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்ந்த அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் விவரங்களை சேகரிப்பதற்காக வரும் பொழுது பொதுமக்கள் உண்மையான புள்ளி விவரம் அளித்து, நாட்டின் வளர்ச்சிக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மக்களால் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் கே.வி.எஸ் ஆங்கில பள்ளியில் (28.02.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் LMES அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பரிசோதனைகள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அறிவியல் தின சிறப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்து, உரையாற்றினார்.அறிவியல் என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை. நாம் எந்த ஒன்றையும்; அறிவியல் பார்வையோடும், மனப்பாங்கோடும் பார்க்க வேண்டும். இதனை திருவள்ளுவர்எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று குறிப்பிடுகிறார்.இதில் மெய்ப்பொருள் என்பதற்கு பதிலாக அறிவியலின் படி காண்பது தான் அறிவு என்று அன்றே திருவள்ளுவர் அறிவியல் பற்றி குறிப்பிட்டுள்ளார்.நாம் அனைவரும் அறிவியல் மனப்பாங்கோடு இருப்பது தான் உண்மையான அறிவு. எனவே, மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் அறிவியல் அறிவையும், அறிவியல் மனப்பாங்கையும் ஒருங்கிணைத்து பெற வேண்டும்.எனவே, ஆசிரியர்கள் அனைவரும் இது போன்ற அறிவியல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், பெர்னொல்லியின் துப்பாக்கி, மிதக்கும் பந்து, கிரேக்க உபசாரத் தட்டு, தர்பூசணி வெடிப்பு, துளி நைட்ரஜன் தெளிப்பு, பியூட்டேன் மற்றும் அசிட்டோன் வாயு ராக்கெட், காற்று பெரிய துப்பாக்கி, யானை பேஸ்ட் பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பரிசோதனைகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத்தில் இருந்தும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவ, மாணவியர்கள், 120 அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்வோர், நிலமற்ற ஏழை விவசாயிகள் பயனடையும் வகையில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் ஏழை விவசாயிகளின் குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் மேம்பாடு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் உள்ளது. பிற திட்டங்களின் மூலமாக கல்வி உதவித்தொகை பெற்றாலும், கூடுதலாக இத்திட்டத்தின் மூலமாகவும் கல்வி உதவித்தொகை பெறலாம்.இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஏழை விவசாயிகளின் குடும்பங்களில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமணம், மற்றும் பதிவு பெற்ற விவசாயிகளின் இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் காசநோய், புற்றுநோய், எய்ட்ஸ், டையாலிஸிஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்காக தகுதியான கூடுதல் பயனாளிகளை தேர்வு செய்யும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி மாவட்டத்தின் அனைத்து வருவாய் வட்டங்களிலும் வரும் 04.03.2025 -ஆம் தேதி நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.