விருதுநகர் மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் 12 ம் வகுப்பு தேர்வு எழுதி கொண்டியிருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை உதவி மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படவுள்ளது.மாணவர்கள் தங்களது ஆர்வம் மற்றும் திறமைகளை பொருத்து, ஏற்கனவே உள்ள வாய்ப்புகள் மற்றும் படிப்புகள் குறித்த முழுமையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.உயர்கல்வி சேர்க்கைக்கான இணையவழி மற்றும் நேர்முக விண்ணப்ப வழிமுறைகள் குறித்த விளக்கங்களும் பெற்று கொள்ளலாம்.தேர்வு முடிவுகள், அது தொடர்பான பயம், தேர்வு முடிந்த பின் தொடரும் மன அழுத்தம் தொடர்பான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். அரசுத்துறைகள் வழங்கும் கல்வி உதவித் திட்டங்கள், உதவித்தொகைகள் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கல்வி கடன் குறித்த விபரங்களும் பெறலாம்.இந்த சிறப்பு ஆலோசனை மையமானது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்த 26.03.2025 அன்று முதல் செயல்படும். இந்த ஆலோசனை மையத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல், உளவியல் சார்ந்த வழிகாட்டல் ஆகியவை பெற்று பயன் பெறலாம்.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கல்வி அறக்கட்டளை மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, உயர்கல்விக்கு தேவையான அனைத்து ஆலோசனைகள் மற்றும் உயர்கல்வி பயில்வதற்கான உதவிகளும் வழங்கப்படும். எனவே மாணவர்கள் சிறப்பு ஆலோசனை மையத்தின் மூலம் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-1 க்கான அறிவிப்பு 01.04.2025 அன்று வெளியிடவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவிருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் 11.03.2025 அன்று ஆரம்பிக்கவுள்ளது.இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும்.இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம். விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 தொலைபேசி எண் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம்.எனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (07.03.2025) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு ஃ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கு பொறுப்பு வகிக்கும் முதுகலை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கும், 100 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வழிகாட்டி என்கிற வீதத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு இருக்கும் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்தும், அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், பாடம் வாரியாக எடுக்க வேண்டிய மதிப்பெண்கள், உயர்கல்வியில் உள்ள துறைகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது முக்கியம். எடுத்த மதிப்பெண்களை வைத்து என்ன விதமான வாய்ப்புகளை பெறமுடியும் என்பது குறித்த தெளிவும், விழிப்புணர்வும் இருப்பது அதைவிட மிக முக்கியம். பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.குறிப்பாக உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு தமிழக அரசின் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து, எடுத்துக்கூறி அத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் இடைநிற்றல் உள்ள மாணவர்களை கண்டறிவதில் முறையான புள்ளி விவரங்கள், இணையதளத்தில் வருகை பதிவு செய்வதனால் கிடைக்கப்பெறுவதன் மூலம், அதற்கான காரணங்களையும் கண்டறிந்து பள்ளி இடைநிற்றல் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு வருகின்றன. அதைபோல், கல்லூரிகளிலும் மாணவர்களின் இடைநிற்றல் குறித்த புள்ளி விவரங்கள் மற்றும் அதற்கான காரணங்களை கண்டறிந்து, முறையான தீர்வுகள் மூலம் அவர்கள் உயர்கல்வி தொடர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை அதிகப்படுத்தியதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதைபோல் உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் சரியான வாய்ப்புகளை அடைவதற்கும் ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 167 பள்ளிகளைச் சேர்ந்த 182 முதுகலை ஆசிரியர்கள், 80 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளாகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பட்டம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக மாணவர்கள் தொலைநோக்கி மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, விண்வெளி குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், விண்வெளி குறித்த ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் நடத்தப்பட்ட நட்சத்திர பார்வை நிகழ்வினை (Stargazing event - Exploring on Night Sky) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S அவர்கள் (06.03.2025) துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.மேலும், மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்கா, பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல், கொடைக்கானலில் சேக்ரட் ஹாட் இயற்கை அறிவியில் அருங்காட்சியகம், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தொலைநோக்கி மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, விண்வெளி குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், விண்வெளி குறித்த ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் நடத்தப்பட்ட நட்சத்திர பார்வை நிகழ்வு (Stargazing event - Exploring on Night Sky) இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய முன்னெடுப்பு மூலம் நகரப்பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்து வரும் விண்வெளியை பார்வையிடும் இந்த வாய்ப்பு விருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிக்கு நேரடியாக சென்று பயன்பெறும் வகையில் அமைகிறது.ஒரு நட்சத்திரம் எப்படி அமைந்திருக்கிறது. நட்சத்திரத்தை பார்க்கிறபோது எந்த அமைப்பில் இருக்கிறது. நட்சத்திரத்தை வைத்து எந்த காலத்தில் இருக்கிறோம் என்பதையெல்லாம் கண்டுபிடிக்கலாம்.விண்வெளி என்பது ஒரு பெரிய துறை.பள்ளிக்கல்வி முடித்து கல்லூரிக்கு செல்கின்ற போது விண்வெளி தொடர்பான படிப்புகள், ஆராய்ச்சிகள் இருக்கின்றன. அது குறித்து மாணவர்களுக்கு ஆர்வத்தைவும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக தான் இந்த நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த நிகழ்வின் மூலம் பாடப்புத்தகத்தில் மட்டுமே படித்து வந்த விண்வெளி குறித்த தகவல்களை தொலைநோக்கின் மூலம் தெளிவாக காணமுடிந்தது. இதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் எங்களுடைய உயர் கல்வி மற்றும் வாழ்க்கைக்கான இலக்கை நிர்ணயிப்பதற்கான ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலையம்பட்டி குறுவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சியின் விரிவாக்கப்பகுதியினை பிரித்து பாலையம்பட்டி கிழக்கு மற்றும் பாலையம்பட்டி மேற்கு என புதிய வருவாய் கிராமம் ஏற்படுத்துவது தொடர்பாக அருப்புக்கோட்டை வட்டம், பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சி பொதுமக்களுடன் 11.03.2025 அன்று மாலை 4.00 மணியளவில் பாலையம்பட்டி கிராமம், விஜய் மஹாலில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கிராம பொதுமக்களுடன் ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.எனவே, இந்த புதிய வருவாய் கிராமம் ஏற்படுத்துவது தொடர்பாக பாலையம்பட்டி கிராம பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் ஒன்றை உருவாக்கியுள்ளது.இத்தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில், இதுவரை மாநில அளவில் 725 தனியார் துறை நிறுவனங்கள் 43 துறைகளில், 31,553 பணிக்காலியிடங்களை இதுவரையில் உள்ளீடு செய்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தினை பொறுத்தமட்டில் 146 தனியார் துறை நிறுவனங்கள், 19 துறைகளில், 2128 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள்; https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்து தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற இயலும்.மேலும் விவரங்களுக்கு விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 93601-71161 எண்ணை தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மார்ச்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சந்திரகிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், (03.05.2025) 2025 -26 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்து, புதிதாக சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார்.
பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/ நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறை தீர்வு முகாம் 08.03.2025- அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.எனவே, இக்குறைதீர்வு முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேட்டமலை ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (05.03.2025) மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கிய கழகம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இணைந்து, “ஒவ்வொருவருக்கும் இலக்கியம் ஏன் தேவை” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ஒவ்வொருவருக்கும் இலக்கியம் ஏன் தேவை என்ற பொருண்மையில் நிகழும் இந்த கருத்தரங்கில் பேசுவதற்கும், இலக்கிய வெளிச்சத்தில் உலகை காண்பது எப்படி என்ற ஒரு சில அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் இந்த கருத்தரங்கம் மிகச் சிறந்த வாய்ப்பை தந்திருக்கிறது.மனிதர்களினுடைய வாழ்க்கையிலிருந்து பெற்றதுதான் இலக்கியம். இலக்கியம் என்பது மனிதர்களுக்கு அப்பாற்பட்டது அல்ல.இலக்கியம் என்பது கற்று அறிந்தவர்களுக்கும், அந்த துறை சார்ந்த அறிவு பெற்றவர்களுக்கும் மட்டுமல்ல, இலக்கியம் என்பது எல்லா தரப்பு மனிதர்களுக்கும் காலம் காலமாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் மனிதர்களின் மிகப்பெரிய செல்வமாக கருதப்படுவது, கருத வேண்டியது கேள்விச் செல்வம் தான். இந்த பூமி பந்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் வாழ்ந்து முடிக்க வேண்டும்.அதுதான் அந்த உயிருக்கான விதிக்கப்பட்ட வாழ்க்கை முறை. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறது, வயதிருக்கிறது. மனிதர்களுக்கு இந்திய சராசரியின் படி 75 ஆண்டுகள் அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்து முடிக்க வேண்டும். அவர் வாழ்ந்து முடிப்பதற்கு மிகப்பெரிய துன்பங்களை எதிர்கொண்டு தான் தன்னுடைய வாழ்வை முடிக்கின்றான். அந்த துன்பத்தில் இருந்து இரண்டு செய்திகளை அவன் பெற்றுக்கொள்ள வேண்டும்.ஒன்று துன்பமில்லாமல் வாழ்வது எப்படி அல்லது துன்பம் வருகின்றபோது எதிர்கொள்வது எப்படி. இந்த இரண்டிற்கும் விடைகள் தான் ஒருவனுடைய வாழ்க்கை சக்கரம் நடந்து கொண்டே இருக்கிறது. இதை ஒட்டி நடக்கக்கூடிய வாழ்க்கையில் இலக்கியம் எந்த இடத்தை பெறுகிறது என்ற கருத்து கேள்வியை முன்வைத்து அதற்கான விடையை தேடினால் அதற்கு இலக்கியம் மிகப்பெரிய வெளிச்சத்தை தரும்.பூமியில் பிறக்கக்கூடிய எல்லா உயிரினங்களுக்கும் மிகப்பெரிய வலிமை இருக்கிறது, அதில் ஆறறிவு உள்ள மனித இனம் பகுத்தறிவு ஆற்றலை பெற்றிருக்கின்றது. அந்த பகுத்தறிவு ஆற்றலின் வளர்ச்சி தான் அறிவியல் தொழில்நுட்பங்களோடு மனிதன் வாழ பழக்கப்பட்டது. பிறகுதான் மற்ற எல்லா உயிரினங்களையும் அவன் அடக்கி வாழ்வதற்கு வலிமை பெற்றான்.பெரிய யானையைக் கூட மனிதனுடைய அறிவாற்றல், பகுத்தறிவு சிந்தனையால் அடக்கி ஆள்வதற்குரிய செல்வாக்கை மனிதன் பெறுகிறான். ஆனால் அப்படிப்பட்ட மனிதர்களுக்கு கூட இயற்கையின் வழியாக வரக்கூடிய மரபு சார்ந்த அறிவு, மற்ற உயிரினங்களை விட மனிதர்களுக்கு குறைவாக தான் இருக்கிறது.மற்ற உயிரினங்களுக்கு அது இயல்பாகவே மரபு வழியாகவே இது போன்ற உயிர் பண்புகள் கடத்தப்படுகிறது. ஆனால் மனிதனுக்கான வாழ்க்கைத் திறன்கள் பொதுவாக இது போன்று மரபு வழியாக கடத்தப்படுவது இல்லை. அதனால் தான் மனிதன் அனுபவங்களை பெறுவதன் மூலமாக மட்டுமே தனக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களை எதிர்கொள்வதற்குரிய ஆற்றலை பெறுகிறான். இதுதான் மனிதனுடைய பரிமாண வளர்ச்சி விதி.மனிதன் தான் வாழ்ந்து முடிக்க வேண்டிய வாழ்க்கையில் அவருக்கான துன்பங்களை எதிர்கொள்வதற்கு நிறைய அனுபவங்கள் தேவைப்படுகிறது. அந்த அனுபவங்களை இரண்டு வகைகளில் அவன் பெற்றுக் கொள்ள முடியும். ஒன்று எந்த ஒன்றையும் தானாக செய்து பார்த்து, நன்மையோ தீமையோ, வெற்றியோ தோல்வியோ என அறிந்து, அதன் மூலமாக வரக்கூடிய அளவுகோலை வைத்து அடுத்த சிறப்பாக செயல்படுவது.இன்னொன்று அடுத்தவர்களுடைய அனுபவங்களின் மூலமாக கற்றுக்கொள்வது. இந்த இரண்டாவது வாய்ப்பை இரண்டு வழிகளில் நாம் கற்றுக் கொள்ளலாம். ஒன்று பாடத்திட்டங்களில் கல்லூரிகளின் வழியாக நமக்கு சொல்லித் தரப்படுவது. மற்றொன்று மனிதர்களிடமிருந்து கற்றுக் கொள்ளக்கூடியவை. அந்த இரண்டாவது வகையில் இருக்கக்கூடிய மனிதர்களுடைய வாழ்க்கை அனுபவங்களை நமக்கு சொல்லித் தருவது தான் இலக்கியம்.நாம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரக்கணக்கான சொல்லப்படாத கதைகள் இருக்கின்றது. ஒவ்வொருவருக்குள் எழுதி முடிக்கப்படாத குறுங்கதைகள், காவியங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் எழுதுவதற்கும் அவற்றை எல்லாம் ஆவணப்படுத்துவதற்கும் நாம் பழகிக்கொண்டால் அடுத்த தலைமுறைக்கு அது ஒரு வழிகாட்டியாக இருக்கும் எனவும், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், புறனானூறு உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் நமக்கு எவ்வாறு வாழ்வில் துணை புரிகின்றன. அதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள் குறித்து உதாரணங்கள், பாடல்கள் மூலம் எடுத்துரைத்தார்.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.