25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 12, 2024

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில்  இம்மாதம் 17.09.2024 அன்று மிலாடி நபி அரசு விடுமுறை நாளாக இருப்பதால், 24.09.2024 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.     மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.             

Sep 11, 2024

2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (10.09.2024) துவக்கி வைத்தார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ ஃமாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள்  மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்; செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு மொத்தம் 16,585 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, முதல் நாளான இன்று  பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இன்று நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் கைப்பந்து(ஆண்கள் பிரிவு) மற்றும் (பெண்கள் பிரிவு), ஹாக்கி (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு), சதுரங்கம் (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு), நீச்சல் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய போட்டிகளில் சுமார் 1100 பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.மாவட்ட அளவில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவார்கள். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதல் முறையாக நான்காம் இடம் பெற்றவர்களுக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக பரிசுகள் வழங்கிட உள்ளது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமார மணிமாறன், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 11, 2024

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்    முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (10.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கீழக்கண்டமங்கலம்  ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.10.00 இலட்சம் மதிப்பில், புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும்,புலிக்குறிச்சி ஊராட்சியில்,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.14.60 இலட்சம் மதிப்பில், புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும்,கீழக்கண்டமங்கலம் ஊராட்சியில், கோணப்பந்நேந்தல் கிராமத்தில், கலைஞரின் கனவு இல்லம்  திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,தமிழ்பாடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பில், செவல் கண்மாய்க்கு அருகில் புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும்,உடையானம்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.5 இலட்சம் மதிப்பில் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்ட வரும் பணிகளையும்   மாவட்ட  ஆட்சித்தலைவர்   அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 11, 2024

‘Coffee With Collector” என்ற 104-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (10.09.2024) சிறுவத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 30 பள்ளி மாணவர்களுடனான ‘Coffee With Collector”  என்ற 104- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 104-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Sep 11, 2024

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்வு பெறாத மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ப்பதற்கான மற்றும் கல்விக்கடன் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற  மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ப்பதற்கான மற்றும் கல்விக்கடன் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில்  (10.09.2024) நடைபெற்றது.தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 10-ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2023-2024 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 97 சதவீத மாணவர்கள், உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மற்றும்  தேர்ச்சி பெறாத பெறாத மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில்  சேர்க்கும் விதமாக இன்று நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், 10 வகுப்பில் 12 மாணவர்களும், 12-ஆம் வகுப்பில் 25 மாணவர்களும் என மொத்தம் 37 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இம்மாணவர்களிடம் தனித்தனியாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதற்கான காரணத்தை     மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டியின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களில் 7 மாணவர்கள் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 8  மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் என மொத்தம் 15 மாணவர்கள் உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான கல்வி கட்டணம் விருதுநகர் கல்வி அறக்கட்டளையின் மூலம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள மாணவர்களையும், உயர்கல்வியில் சேர்க்கை பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 11, 2024

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திருமதி ச.திவ்யதர்ஷினி,I A S,அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் ஆகியோர் (09.09.2024) அன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் இனாம்ரெட்டியாபட்டிஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம், குழுவின் செயல்பாடுகள், அரசின் திட்டங்களை பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்துதல் உள்ளிட்டவை குறித்து  கலந்துரையாடினார்கள்.பின்னர், பட்டம்புதூர் கிராமத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் உருவாக்கப்பட்ட களப்பகுதி அளவிலான தையல் தொழில் குழு, விருட்சம் மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் தையல் தொழில் செய்து வருவதை பார்வையிட்டு, ஆய்வு செய்து உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதல், விரிவுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.அதனைதொடர்ந்து, பெரிய பேராலி கிராமத்தில் விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் விவசாயப் பயிர்களை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்து வருவதை பார்வையிட்டு, தயாரிக்கும் முறைகள், உற்பத்தியின் தரம் உள்ளிட்டைவை குறித்து ஆய்வுசெய்து, உற்பத்தியினை விரிவுபடுத்துதல், அரசின் மானிய திட்டங்கள், கடனுதவிகள், சந்தைப்படுத்துதல்  குறித்து  அறிவுரை மற்றும் ஆலோசனைகளை  வழங்கினார்கள்.பின்னர், மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதா இயக்கம் மற்றும் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்பாடுகள், பணிகளின் முன்னேற்றம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை திறம்பட மேம்படுத்துதல் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திருமதி ச.திவ்யதர்ஷினி, I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Sep 11, 2024

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 13.09.2024 அன்று பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது

தமிழ் வளர்ச்சித் துறையின்  2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வறிவிப்பிற்கிணங்க 13.09.2024 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டி விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி  நகராட்சி  பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பெறவுள்ளது.  பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் இப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.  அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும்  அனுப்பப்படும்.பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு   1. அண்ணாவின் சமுதாய மறுமலர்ச்சித் திட்டங்கள் 2. அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள் 3. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு,  கல்லூரி மாணவர்களுக்கு 1. அண்ணாவின் மொழிப்புலமை 2. ஏழையின் சிரிப்பில் 3. பெரியார் வழியில் அண்ணா ஆகிய தலைப்புகளில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன.பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-,  மூன்றாம் பரிசு ரூ.2000/-  என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ.2000/- என்ற வீதத்திலும்  வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 11, 2024

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம்

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ/மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 13.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கல்வி கடன் விண்ணப்ப நகல், மாணவ/மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட bonafide  சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், பத்து பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டபடிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல்பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கல்லூரி சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.இம்முகாமில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து 15 தினங்களுக்குள் தகுதியான அனைவருக்கும் கடன் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 11, 2024

முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன

முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலை வாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள்  வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  மேலும் பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் 35 நபர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அப்பயிற்சியானது அந்த மாவட்டத்திலேயே நடத்தப்படும்.இப்பயிற்சியில் சேர்ந்து பயனடைய விரும்பும் முன்னாள் படைவீரர்கள் திருவில்லிபுத்தூரிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 11, 2024

இமானுவேல் சேகரன் நினைவு தினமான இன்றுடாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு

விருதுநகர் மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு இமானுவேல் சேகரன் நினைவு தினமான 11.09.2024 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த செல்லும் வாகனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 உரிமஸ்தலங்கள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்கள் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது.2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules 1981-ன்படி 11.09.2024 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக  மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (F.L-1), F.L-2  மற்றும் F.L-3  மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 69 70

AD's



More News