2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (10.09.2024) துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ ஃமாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்; செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு மொத்தம் 16,585 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, முதல் நாளான இன்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இன்று நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் கைப்பந்து(ஆண்கள் பிரிவு) மற்றும் (பெண்கள் பிரிவு), ஹாக்கி (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு), சதுரங்கம் (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு), நீச்சல் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய போட்டிகளில் சுமார் 1100 பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவார்கள். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதல் முறையாக நான்காம் இடம் பெற்றவர்களுக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக பரிசுகள் வழங்கிட உள்ளது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமார மணிமாறன், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply