விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 2024ல் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில், விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 357 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 114 தேர்வு மையங்களில் 11,792 மாணவர்களும், 12,523 மாணவியர்களும் ஆக என மொத்தம் 24,315 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 10,988 மாணவர்களும், 12,146 மாணவியர்களும் என மொத்தம் 23,134 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விழுக்காடு (95.14 சதவீதம்) பெற்று தேர்ச்சி சதவீதத்தில் தமிழ்நாட்டில் 6-ஆவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.மேலும், அரசுப்பள்ளிகள்- 57, சமூக நலப்பள்ளிகள்-3 , உதவி பெறும் பள்ளிகள் - 28, பதின்மப் பள்ளிகள் -52 என மொத்தமாக 140 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாவட்ட அளவில் என்.கேசவப்பிரியா என்ற மாணவி 498/500 மதிப்பெண்களும் அதனைத் தொடர்ந்து வி.ஜன ஆனந்த் என்ற மாணவன் 497/500, எஸ்.சகானா பார்வதி என்ற மாணவி 497/500, எம்.யஷ்வந்த்தமன் என்ற மாணவன் 496/500 (சங்கரலிங்காபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி), ஜெயசூர்யா கார்த்திகேயன் என்ற மாணவன் 496/500, என்.திவாகரன் என்ற மாணவன் 496/500, எ.நந்தினி என்ற மாணவி 496/500, இ.செல்வராணி என்ற மாணவி 496/500, ஆர்.அக்ஷயா என்ற மாணவி 496/500, சி.வி.ரவீந்திரகுமார் என்ற மாணவன் 496/500, எம்.ஷாரு ப்ரீத்தி என்ற மாணவி 496/500 மதிப்பெண்கள் பெற்று இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.ஆங்கிலம் பாடத்தில் 6 மாணவர்கள், கணக்கு பாடத்தில் 687 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 101 மாணவர்கள், சமூக அறிவியல் பாடத்தில் 82 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள்.
18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடைசெய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.• குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் 1098 அல்லது 181 மூலம் பெறப்பட்ட உடன் நடவடிக்கையாக குழந்தையின் விபரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள், சைல்டுலைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்புபிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும்.• குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நலகுழுமத்தில் ஒப்படைக்கப்படும்.• குழந்தைதிருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையினை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.• இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்படின் காரணமான நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும்வழங்கப்படும் தண்டனைகள்• 18 வயது நிரம்பாத பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் ஆணுக்கு அதிகபட்சமாக 2 வருட கடும் சிறைத்தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.• குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 வருடம் கடும் சிறைத்தண்டனை மற்றும் ஒருலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.• இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும்.• 18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டின் காரணமான நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் கடந்த 01.04.2024 முதல் 30.04.2024 வரை பதின்மூன்று குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏழு நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் (09.05.2023) பள்ளி மாணவ, மாணவியர்கள் பயணம் செய்யும் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (கட்டுப்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல்) சிறப்பு விதிகள் 2012-ன் படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து வருகிறார்கள்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் இராஜபாளையம், அருப்புக் கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் பள்ளி வாகன அனுமதிச்சீட்டு பெற்றுள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களும் இன்று ஆய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், (விருதுநகர்-46, ஸ்ரீவில்லிபுத்தூர்-28, சிவகாசி-29, அருப்புக்கோட்டை-30, இராஜபாளையம்-48) மொத்தம்-181 பள்ளிகளில், விருதுநகர்-244, ஸ்ரீவில்லிபுத்தூர்-83, சிவகாசி-132, அருப்புக்கோட்டை-154, இராஜபாளையம்-166 என மொத்தம் 779 பள்ளி வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 779 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் 654 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி உடையவையாக உள்ளன. 62 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி இல்லாத காரணத்தினால் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் தகுதி பெறும் பொருட்டு பள்ளி நிர்வாகத்தால் வாகன பணிமனைகளில் நிறுத்தப்பட்டு பழுதுநீக்கம் செய்யப்பட்டு வருகின்றன.இந்த ஆய்வில், தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா, உரிய மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முதலுதவிப்பெட்டி பொருத்தப் பட்டுள்ளதா,அவசரகால வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, உரிய நடத்துநர் உரிமம் பெற்ற உதவியாளர் மாணவ, மாணவியர்கள் உரிய முறையில் வாகனத்தில் ஏறி இறங்கும் பொழுது உதவி புரியும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளாரா, மாணவ, மாணவியர் வாகனத்தில் எளிதாக ஏறும் வகையில் படிக்கட்டின் முதல் படி தரையில் இருந்து 25 செ.மீ இல் இருந்து 30 செ.மீ ற்குள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளதா, வாகன ஓட்டுநரின் இருக்கைப்பகுதி தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா, இருக்கைகள் முறையாக வாகனத்தின் தரைத்தளத்துடன் டீழடவள- மூலம் பொருத்தப்பட்டுள்ளதா, புத்தகப்பைகள் வைத்திட தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளதா, வாகனத்தின் தரைத்தளம் நல்ல தரத்துடன் பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்தின் பக்கவாட்டு ஜன்னல்கள் மாணவ, மாணவியர் கரம், சிரம் நீட்டாதவாறு, மூன்று நீளமாக கிடைமட்ட கம்பிகளால் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதா, போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விபத்தில்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக வாகனங்களில் அழைத்து சென்று வர வேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப.,அவர்கள் அறிவுறித்தினார்கள். பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மூலமாக வாகனத்தில் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய மீட்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பள்ளிகளில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு ஆபத்து காலங்களில் செய்யப்படும் முதல் உதவிப் பயிற்சி, விருதுநகர் மாவட்ட 108 அவசர ஊர்தி அலுவலர்களால் செயல்முறை விளக்கம் நடத்தி காண்பிக்கப்பட்டது. மேலும், இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து ஒட்டுநர்கள் மற்றும் உதவியாளர் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மருத்துவர்கள் இலவசமாக இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சக்கரையின் அளவு பார்க்கப்பட்டது.இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர்கள், விருதுநகர், சிவகாசி, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், இயக்கூர்தி ஆய்வாளர்கள், பள்ளிக்கல்வி துறையைச் சேர்ந்த அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலைபட்டி கிராமத்தில் இயங்கிய தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் (9.5.2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்இரங்கல் மற்றும் ஆறுதல் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் (9.5.2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.
2023-24 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வு- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை அலுவலகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் கேட்டுக் கொள்ளலாம்.இது தவிர, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், ஒவ்வொரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உயர்கல்வி சேர்க்கையில் சந்தேகங்கள், ஆலோசனை உதவிகள் ஆகிய விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.உயர்கல்வி சேர்க்கை ஆலோசனை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்.ஆலோசனை அலுவலக அறை கைப்பேசி எண்கள் :-1) 80729184672) 75985101143) 88389453434) 9597069842ஒன்றியம் வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் :-1) அருப்புக்கோட்டை - 87542710452) காரியாபட்டி - 97895600113) நரிக்குடி - 94885019384) இராஜபாளையம் - 97883969465) சாத்தூர் - 70107623086) சிவகாசி - 95002054147) திருவில்லிபுத்தூர் - 82208464448) திருச்சுழி - 99447624249) வெம்பக்கோட்டை - 944366946210) விருதுநகர் - 9488988222
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (07.05.2024) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் இந்த உலக வாழ்க்கையை முடிக்கின்ற வரை வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். நீங்கள் படிக்கின்ற போது, வேலைக்கு செல்லும் போது என வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெற்றி தோல்வி என்பது நீண்ட கால பயணத்தில் மாறி மாறி வரும். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வு.தோல்வி என்பது நேற்றோடு முடிந்துவிட்டது. அடுத்து வெற்றிக்கான தொடக்கம். இதை எப்படி வெற்றியாக மாற்றுவது என்று சிந்திக்க வேண்டும். மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.தேர்ச்சி பெறாத மாணாவர்களுக்காக நடத்தப்படும் தனித்தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த நடப்பு கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியில் சேரலாம். நான் முதல்வன் திட்டம் மூலம் கல்லூரிகளில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளலாம்.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழ்புதல்வன்; திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000- ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதோடு உங்களுக்கான கல்வி உதவித்தொகையும் கிடைக்கிறது.நமது மாவட்டத்தில் சுமார் 88 கல்லூரிகள் இருக்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் அனைவருக்கும் கல்லூரியில் இடம் உண்டு. வசதி வாய்ப்பு குறைவாக உள்ள மாணவர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் அரசினுடைய கல்வி உதவித்தொகை பெற வழிவகை உள்ளது.அரசு திட்டங்களில் தகுதி இல்லாதவர்களுக்கு கூட நன்கொடையாளர்கள் மூலமாக உதவிகள் செய்வதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.படிப்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கும். தேர்ச்சி பெறாத பாடங்களை மறுபடியும் தேர்வு எழுதுவது என்பதும் கடினமாகத் தான் இருக்கும். ஆனால் நீங்கள் தற்போது எடுக்கும் முயற்சிகள் உங்களின் நீண்ட காலத்திற்கு நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவிற்கான இன்பத்தையும் வெற்றிகளையும் தரும்.அதனால் நீங்கள் குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போனதற்கு வருத்தப்பட வேண்டாம். தோல்வி என்பது நேற்றோடு முடிந்து விட்டது. நீங்கள் அடுத்த வெற்றிக்கான முதற்படியில் இருக்கிறீர்கள். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த தோல்வியை நீங்கள் வெற்றியாக மாற்ற முடியும். இந்த ஆண்டே நீங்கள் மற்ற உங்களுடைய நண்பர்களை போல உயர்கல்விக்கு கல்லூரியில் சேர முடியும். அனைத்து வகையிலும் உதவி செய்வதற்கு அரசு நிர்வாகமும், அரசு அலுவலர்களும் எப்பொழுதும் உங்களோடு உறுதுணையாக இருப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.உங்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ளோம். அதில் கலந்து கொண்டு அடுத்து வரும் நாட்களுக்கு தினந்தோறும் வகுப்புகளுக்கு வந்து, ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி பாடங்களை கற்றுக் கொண்டால், நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று, இந்த ஆண்டே கல்லூரியில் சேர முடியும். எனவே 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இது வாழ்க்கையின் தொடக்கமே என்பதை மனதில் கொண்டு தற்போதை விட எதிர்வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
கால்நடைகளுக்கு உயர் வெப்பத்தால் ஏற்படும் அயற்சியே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகமாக உமிழ்நீர் வடிதல், அதிகமாக தண்ணீர் பருகுதல், பகலில் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல், நிழலில் தஞ்சம் புகுதல், வாயைத் திறந்த நிலையில் வேகமாக சுவாசித்தல் போன்றவை வெப்ப அயற்சியின் அறிகுறிகளாகும்.மேய்ச்சல் நேரத்தில் மாற்றம் :-வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளைக் காப்பாற்றுவதற்கு, கால்நடைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெயிலுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விட வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும்.கறவை மாடுகள் பராமரிப்பு:-கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறையாவது தண்ணீர் கொடுக்க வேண்டும். தண்ணீரின் மீது கலப்புத்தீவனத்தை சிறிதளவு தூவும் போது கால்நடைகள் அதிக தண்ணீர் குடிக்கும். தாது உப்புக்கலவை, வைட்டமின்கள் கொடுப்பதன் மூலம் வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் பால் உற்பத்தி குறையாமல் இருக்கும். நீர்த் தெளிப்பான்கள், மின் விசிறிகளை கொட்டகைகளில் பயன்படுத்துவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம். அதிகமாக பசுந்தீவனம் கொடுப்பதோடு உலர் தீவனத்தை பகலில் குறைவாகவும் இரவில் அதிகமாகவும் கொடுக்கலாம்.கோழிகள் பராமரிப்பு:-கோடை காலத்தில் கோழிகளுக்கு விடியற்காலைப் பொழுதிலும் இரவிலும் தீவனம் அளிக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் சுத்தமான குளிர்ந்த குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீரில் வைட்டமின்கள் பி-காம்ப்ளக்ஸ், குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம். அதிக இடவசதி உள்ள இடத்தில் உயரமான கூரை அமைத்து குறைவான எண்ணிக்கையில் கோழிகளை பராமரிக்க வேண்டும்.ஆடுகள் பராமரிப்பு:-ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 லிட்டர் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளை உரிய காலத்தில் போட வேண்டும். ஆடுகளுக்கு பட்டிகளில் தாது உப்புக்கட்டிகளை கட்டுவதன் மூலம் சோடியம், பொட்டாசியம் முதலிய சத்துக்கள் எளிதாக கிடைக்கும். புரதச்சத்து மிக்க வெல்வேல் மற்றும் கருவேல உலர் காய்களை ஆடுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.செல்லப்பிராணிகள் பராமரிப்பு:-செல்லப்பிராணிகளை காரில் உள்பகுதிகளில் அடைத்து வைப்பதையும் நேரடியாக வெயில்படுமாறு உலாவ விடுவதையும் தவிர்க்க வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனை, மருந்தகங்களில் கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள், தாது உப்புக்கலவைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருந்தகங்களில் சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்க உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தேவையான ஏற்பாடு செய்ய கால்நடை உதவி மருத்துவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமாயின் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸை 1962 என்ற எண்ணில் அழைத்து மருத்துவ உதவி பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிப்பதை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதும் 534 வாகன புகை பரிசோதனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால் காற்று மாசுபாடு ஏற்பட்டு அதனால் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் பொதுமக்களிடையே ஏற்படுகிறது.இதனை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதிலும் 534 வாகன புகை பரிசோதனை மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயங்கி வருகின்றன. புகை பரிசோதனை மையங்கள் தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, கடந்த மாதம் 13-ஆம் தேதி மாநிலம் முழுவதும் வாகனபுகை பரிசோதனை மையங்கள் திடீர் தணிக்கை செய்யப்பட்டன.வாகன புகை பரிசோதனை மையங்களின் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தவும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில் தொழில்நுட்பங்களைப் புகுத்தவும் போக்குவரத்துத் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டில் புதிய நடைமுறை 06.05.2024 முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது குறித்த செயல்முறை விளக்கத்தை மாநிலம் முழுவதிலுமுள்ள வாகன புகை பரிசோதனை மைய சோதனையாளர், உரிமையாளர் ஆகியோருக்கு அனைத்து வட்டாரப் அலுவலகங்களிலும் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வழங்குவார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகரில் 5 புகை பரிசோதனை மையங்களும், அருப்புக்கோட்டையில் 1, சிவகாசியில் 4, திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் பகுதியில் 4 ஆக மொத்தம் 14 வாகன புகை பரிசோதனை மையங்கள் உள்ளன.புதிய தொழில்நுட்பத்தின் படி அந்தந்த வாகன புகை பரிசோதனை மையத்திற்கென தனிப்பட்ட அலைபேசி உரிமதாரரால் பயன்படுத்தப்படும். அந்த அலைபேசியில் இந்த PUCC 2.0 Version App-ஐ நிறுவி இயக்க வேண்டும். இந்த புதிய Version GPS வசதியுடன் கூடியதாகும். இந்த செயலி நிறுவப்பட்ட அலைபேசி தொடர்புடைய வாகன புகை பரிசோதனை மையத்திலிருந்து 30 மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும். அதைப்போலவே சோதனை செய்யப்படும் வாகனங்கள் அந்த புகை பரிசோதனை மையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்யப்படுவதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு (GPS enabled Photo with Latitude, Longtitude) இருப்பதனால் சோதனை மையத்திற்கு வாகனங்களை கொண்டு வராமலேயே புகை பரிசோதனையை இனி செய்ய இயலாது. எனவே, மேற்கண்ட முக்கிய அம்சங்கள் உள்ளதால் இந்த புதிய தொழில்நுட்பத்தை (PUCC 2.0 version) 06.05.2024 முதல் அனைத்து வாகன புகைப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத்தவறும் வாகன புகை பரிசோதனை மையங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. தற்போது 2023-24 ஆம் ஆண்டிற்கான கீழ்காணும் பிரிவுகளில் சிறப்பாக தொழில் செய்து வரும் தொழில் முனைவோர்களை விருதுகளுக்காக விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. 1. மாநில அளவிலான சிறந்த வேளாண்-சார் உற்பத்தி தொழில் முனைவோருக்கான விருது2. மாநில அளவிலான சிறந்த மகளிர் தொழில் முனைவோருக்கான விருது3. சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினை சார்ந்த தொழில் முனைவோருக்கான மாநில அளவிலான விருது4. மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது5. மாவட்ட அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது6. மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தொழில் நிறுவனங்கள் 2023-24 நிதியாண்டிற்கு முன்னதாக தொடர்ந்து மூன்று ஆண்டுகள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும் உத்யம் பதிவுச்சான்றும் பெற்றிருக்க வேண்டும். கீழ்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 20.05.2024 ஆகும். விண்ணப்பப் படிவங்களை awards.fametn.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து உரிய இணைப்புகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் மற்றும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட தொழில் மையத்தை அணுகுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.