வடகிழக்கு பருவமழை - 2024 வானிலை முன்னெச்சரிக்கைகளை பொதுமக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் ‘TN Alert” என்ற கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இச்செயலியின் மூலம் பொதுமக்கள் அனைவரும் வெப்பநிலை, மழை போன்ற வானிலை அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் நான்கு நாட்களுக்கு முன்பான வானிலை அறிக்கைகள், தினசரி மழை அளவுகள், நீர்த்தேக்க நிலை மற்றும் வெள்ள அபாயம் போன்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்.மேலும், பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் தங்கள் புகார்களை இச்செயலியில் பதிவு செய்து உரிய தீர்வு காணவும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் மேற்காணும் செயலினை Google Play Store- லிருந்து பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பிற்கிணங்க 23.10.2024அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டி விருதுநகர் ஹாஜி பி.செய்யது முகமது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 24.10.2024அன்று அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டி விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பெறவுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் இப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும் .தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு 1. தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், 2. தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், 3. வைக்கம் வீரர், கல்லூரி மாணவர்களுக்கு 1. தெற்காசியாவின் சாக்ரடீஸ், 2. தன்மானப்பேரொளி, 3. தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு 1.காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, 2.வெள்ளையனே வெளியேறு இயக்கம் 3.வட்ட மேசை மாநாட்டில் காந்தியடிகள். கல்லூரி மாணவர்களுக்கு 1. காந்தி கண்ட இந்தியா, 2. வேற்றுமையில் ஒற்றுமை, 3. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும். பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- , இரண்டாம்பரிசு ரூ.3000/- , மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ.2000/- என்ற வீதத்திலும் வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (08.10.2024) சாத்தூர் CEOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 107- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, 107-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், சோழபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான இராஜபாளையம் தொழிற்பேட்டையில் காலியாக உள்ள 14 தொழில் மனைகள் ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளன.புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகளை வாங்க விரும்புவோர் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், தமிழ்நாட்டில் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலிமனைகள் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாகவே தெரிந்து கொண்டு தேவையானவற்றை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட காலி தொழில்மனைகளை பார்வையிட கீழ்க்கண்ட கிளை மேலாளரின் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். கிளை மேலாளர் பெயர் : து. ஆனந்த் அலுவலக முகவரி : சிட்கோ அரசு தொழிற்பேட்டை, விருதுநகர்கைபேசி எண் : 9445006577மின்னஞ்சல் : www.bmvnr@tansidco.org
ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுக்குள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் உட்கட்டமைப்பு வசதிகள்(சாலை வசதி, சுற்றுச்சுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெருவிளக்கு அமைத்தல், கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம், மின்சார வசதி தொலைதொடர்பு வசதி போன்றவைகள்), பொது வசதிகள்(ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம் குழந்தைகள் காப்பகம் உணவகம் மற்றும் இதர இனங்கள்) மற்றும் தொழிற்சாலைக்கான கட்டிடங்களுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.மேற்படி திட்டம் குறித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் மதுரை மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகம், 34-விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, விஸ்வநாதபுரம், மதுரை-625 014, தொலைபேசி எண் 0452- 2530020 மற்றும் 96595 32005 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் காரியாபட்டி ஆகிய 4 வட்டாரங்களைச் சார்ந்த 184 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விருதுநகர் மற்றும் காரியாபட்டி வட்டாரங்களை ஒன்றிணைத்து விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் முதன்மைச் செயல் அலுவலர்-1 மற்றும் கொள்முதல் விற்பனை மேலாளர்-1 பணியிடம் நிரப்பபடாமல் உள்ளது. முதன்மைச் செயல் அலுவலர் அவர்களின் தகுதிகளாக B.Sc Agri, / D.Agri / MBA முடித்திருக்க வேண்டும். வயது 25 முதல் 40 வரை ஊதியம் ரூ.15000/- மற்றும் கொள்முதல் விற்பனை மேலாளர் அவர்களின் தகுதிகளாக ஏதேனும் ஒரு பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 25 முதல் 45 வரை ஊதியம் ரூ.10000/- மேற்குறிப்பிட்ட பணிகளில் அனுபவமுள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மேற்படி விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களுடைய சுய விபரபடிவம் (Resume) மின்னஞ்சல் மூலமாக, தபாலிலோஅல்லது நேரிலோ vnr.tnrtp@yahoo.com வருகிற 13.10.2024-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற 31.10.2024 அன்று கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில், இந்திய வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் சட்ட விதிகள்-2008 இன் படி, தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள் விதி எண் 84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி, விண்ணப்பங்களை மாவட்டத்திலுள்ள, அனைத்து அரசு பொது இ-சேவை மையம் மூலம், இணைய வழி வாயிலாக(Online applications) (https://www.tnesevai.tn.gov.in) என்ற முகவரியில் வரும் 19.10.2024-ஆம் தேதிக்குள், கீழ்காணும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.1. விண்ணப்ப படிவம்.2. கட்டிட வரைபடங்கள் (Site & Approved Construction plan )(A4 size)3. நிலத்தின் உரிமைக்கான ஆவணம் ( பட்டா அல்லது பத்திர நகல்)4. வாடகை ஒப்பந்தப் பத்திரம் - அசல்5. உரிமக் கட்டணம் அரசுக் கணக்கில் செலுத்திய செலுத்துச் சீட்டு .6. அடையாள அட்டை (பான்கார்டு, ஆதார் கார்டு, குடும்ப அட்டை )7. ஊராட்சி / நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள். 8. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2.இந்திய வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் சட்ட விதிகள் 2008 இன் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, விண்ணப்பங்கள் பரீசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுதாரர்களுக்கு 30 நாட்கள் மட்டும் செல்லத்தக்க தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (07.10.2024) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினம்-2024 முன்னிட்டு, இந்திய சைகை மொழி மற்றும் சர்வதேச காது கேளாதோர் சைகை மொழி விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.காது கேளாத மாற்றத்திறனாளிகள் பேருந்து நிலையம், அரசு அலுவலகம், மருத்துவமனை போன்ற இடங்களுக்கு வரும் பொழுது, அவர்களுடன் உரையாடுவதற்காக அனைவருக்கும் ஒரு அடிப்படையான ஒரு புரிதல் இருக்க வேண்டும்.அனைத்து அரசு அலுவலகங்களிலும், மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில், முறையான சாய்வு தள பாதை, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ப்ரெய்லி எழுத்துக்களால் ஆன விளம்பர பலகைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், காதுகேளாத மாற்றுத்திறனாளிகளையும், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறன.நாகரீகம் அடைந்த சமுதாயத்தில் எல்லோரையும் ஒருங்கிணைத்து யாரையும் தனித்துவமாக விட்டு விடாமல், அனைவரும் ஒன்றாக ஒரே சூழலில் வரும் பொழுது இந்த சைகை மொழி தேவைப்படுபவர்கள் மிகக் குறைவாக இருந்தாலும், அவர்களுக்கான சம உரிமை இந்த சமுதாயத்தில் இருக்க வேண்டும்.அதை உறுதிப்படுத்துவதற்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. குறிப்பாக அரசு அலுவலர்கள் இந்த சைகை மொழிகளை தெரிந்து கொள்வதன் அவசியம் என்னவென்றால், அரசு அலுவலகங்களில் அணுக வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதில் அளிக்கவும், குறைந்தபட்சம் அவர்களுக்கான அடிப்படையான சைகை மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சி என தெரிவித்தார்.இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில், காது கேளாதவர்களுடன் உரையாடுவதற்கு சைகை மொழி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் பல்வேறு இந்திய சைகைகள் குறித்தும் ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் வழங்கப்பட உள்ள விருதுக்கு தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத் தொகையாக முதல் பரிசு ரூ.1,00,000/- ( ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) இரண்டாம் பரிசு ரூ.60,000/- (ரூபாய் அறுபதாயிரம் மட்டும்) மற்றும் மூன்றாம் பரிசு ரூ.40,000/- (ரூபாய் நாற்பதாயிரம் மட்டும்) வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்படிவம் தோட்டக்கலைத்துறை இணையதளம் www.tnhorticulture.tn.gov.in -இல் பதிவேற்றம் செய்து, உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அவர்களின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில்; 11, 860 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது.மேலும் கீழ்க்காணும் அட்டவணைப்படி அக்டோபர் 8-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.முகாம் நடைபெறும் நாட்கள் விபரம்:விருதுநகர் யூனியனில், 8ம் தேதி காசி ரெட்டியாபட்டி, 9ம் தேதி வி.முத்துலிங்கபுரம்,10ம் தேதி செங்குன்றாபுரம், 13ம் தேதி கே.புதூரிலும்,அருப்புக்கோட்டை யூனியனில், 8ம் தேதி புலியூரான், 9ம் தேதி கோவிலாங்குளம், 10ம் தேதி ஆதிபட்டி, 13ம் தேதி செட்டிகுறிச்சியிலும்,சிவகாசி யூனியனில், 8ம் தேதி ஈஞ்சார், 9ம் தேதி ஈஞ்சார்,10ம் தேதி நடையனேரி, 13ம் தேதி மேலஆமத்தூரிலும்,காரியாபட்டி யூனியனில், 8ம் தேதி மந்திரி ஓடை, 9ம் தேதி புளியம்பட்டி, 10ம் தேதி முடுக்கன்குளம், 13ம் தேதி எஸ்.கல்லுப்பட்டியிலும்,நரிக்குடி யூனியனில், 8ம் தேதி செம்பொன்னாங்குறிச்சி, 9ம் தேதி இருஞ்சிறை, 10ம் தேதி இலுப்பையூர், 13ம் தேதி நல்லுக்குறிச்சியிலும், ராஜபாளையம் யூனியனில், 8ம் தேதி சொக்கநாதன்புதூர், 9ம் தேதி சொக்கநாதன்புதூர், தெற்கு தேவதானம், 10ம் தேதி சுந்தர நாச்சியார்புரம், 13ம் தேதி சம்சிகாபுரத்திலும்,சாத்தூர் யூனியனில், 8ம் தேதி கத்தாளம்பட்டியிலும், 9ம் தேதி மணீப்பாறை பட்டி, 10ம் தேதி மேலமடை, 13ம் தேதி D.மேட்டுப்பட்டியிலும்,திருவில்லிபுத்தூர் யூனியனில், 8ம் தேதி இடையன்குளத்திலும், 9ம் தேதி முள்ளிக்குளத்திலும், 10ம் தேதி அயன்நாச்சியார் கோவில், 13ம் தேதி பிள்ளையார்நத்ததிலும்,திருச்சுழி யூனியனில், 8ம் தேதி தமிழ்பாடியிலும், 9ம் தேதி குலேசேகர நல்லூரிலும்,10ம் தேதி வேலாயுதபுரத்திலும், 13ம் தேதி தும்முசின்னம்பட்டியிலும்,வெம்பக்கோட்டை யூனியனில், 8ம் தேதி செவல்பட்டியிலும், 9ம் தேதி விஜயரங்காபுரம்,10ம் தேதி ஆலங்குளத்திலும்,13ம் தேதி அப்பையநாயக்கன்பட்டியிலும்,வத்றாப் யூனியனில், 8ம் தேதி மகாராஜபுரத்திலும், 9ம் தேதி மகாராஜபுரத்திலும், 10ம் தேதி ரெங்கப்பநாயக்கன்பட்டியிலும், 13ம் தேதி ரெங்கப்பநாயக்கன்பட்டியிலும் முகாம்கள் நடைபெறுகிறது மேலும் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் 8ம் தேதி முறையே S .V .அண்ணாமலையம்மாள் மகப்பேறு இல்லம் 9, 10-ம் தேதி சிவன் கோவில் அங்காடி, 13-ம் தேதி பாத்திமா நகர் சத்துணவு மையம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.எனவே பொது மக்கள் தங்கள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகாமில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுலவர் விவரம்:மாவட்ட திட்ட அலுவலர்,முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்,விருதுநகர்.கைப்பேசி எண். 73730 04974 - என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.