25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 17, 2024

பிளவுக்கல் பாசன திட்டம் - தண்ணீர் திறப்பு விவரம்

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைகளை ஏற்று பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து  இரண்டாம் போக பாசனத்திற்கு 16.05.2024 முதல் தண்ணீர் திறந்து விட அரசாணை (அரசாணை எண். (வாலாயம்) 254 நாள். 15.05.2024) வெளியிடப்பட்டுள்ளது.பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் முறையே 13.90 சதுர மைல் 9.57 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டவை. 192.00 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் தற்பொழுது 62.27 மில்லியன் கனஅடி நீரும், 133 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணையில் தற்பொழுது 81.96 மில்லியன் கனஅடி நீரும் இருப்பில் உள்ளது.  மேலும், பெரியாறு அணைக்கு வினாடிக்கு 8.53 கனஅடி நீரும், கோவிலாறு அணைக்கு 4.13 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. பிளவுக்கல் பாசன திட்டத்தின் பயன்பெறும் பாசன பரப்பு மொத்தம் 8531.17 ஏக்கர் (3452.515 ஹெக்டேர்) ஆகும்.தற்பொழுது  இரண்டாம் போக பாசனத்திற்காக பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து 16.05.2024 முதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இத்தண்ணீர் திறப்பினால் பிளவுக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 5 கண்மாய்களின் 926 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையவுள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், வத்திராயிருப்பு, கூமாபட்டி ஆகிய 4 வருவாய் கிராமங்கள் பயனடையவுள்ளது.விவசாயிகள் அனைவரும் அதிக மகசூலைப் பெறும் நோக்கத்துடன் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

May 15, 2024

2023-24 ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக விருது தேர்வுக்குழு கூட்டம்

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அளப்பறிய பங்களிப்பினை மேற்கொண்ட தனிநபர்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றோருக்கு ஆண்டுதோறும் 100 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதினை வழங்க கடந்த 26.10.2021 அன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டது.                இவ்விருதில், விருதுநகர் மாவட்டத்திற்கு 3 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.  விருதுநகர் மாவட்டத்தில், 2023-24 ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதிற்கு விண்ணப்பிக்க வேண்டி கடந்த 29.12.2023 அன்று நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டு,இது தொடர்பாகதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.                விருதுநகர் மாவட்டத்தில், இவ்விருதினைப் பெற 10 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இவைகளிலிருந்து,பசுமை முதன்மையாளர் விருதிற்கு 3 நபர்கள் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட விருது தேர்வுக்குழு கூட்டம் 13.05.2024 அன்று நடைபெற்று, 3 நபர்களை தேர்வு செய்துதமிழக அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

May 15, 2024

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், IAS., அவர்கள் (14.05.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, ரோசல்பட்டி முத்தால் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அரசு பள்ளிகளின் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்தமாக தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ. 8.65 இலட்சம் மதிப்பில் பள்ளி கட்டடம் புணரமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,அதனை தொடர்ந்து; ரோசல்பட்டி ஊராட்சி முத்தால் நகரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பில் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்

May 15, 2024

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் 95.06 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் நான்காவது மாவட்டமாக நமது மாவட்டம் இடம் பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் /ஏப்ரல் 2024 -ல் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 223 பள்ளிகளைச் சேர்ந்த 98 தேர்வு மையங்களில் 10,441 மமாணவர்களும், 11,887 மாணவியர்களுமாக மொத்தம் 22,328 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.  இதில் 9656 மாணவர்களும், 11,568 மாணவியர்களும் என மொத்தம் 21,224 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விழுக்காடு 95.06 சதவீதம் பெற்று தேர்ச்சி சதவீதத்தில் தமிழ்நாட்டில் 4-ஆவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.மேலும், அரசுப் பள்ளிகள் 7, சமூக நலப்பள்ளிகள் 1, உதவி பெறும் பள்ளிகள் 16, பதின்மப் பள்ளிகள் 37 என  மொத்தமாக 61 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாவட்ட அளவில் எம்.லோகேஷ் என்ற மாணவர் 596/600 மதிப்பெண்களும் அதனைத் தொடர்ந்து ஆர்.மணீஷ் என்ற மாணவர் 593/600 மதிப்பெண்களும் அதனை தொடர்ந்து வி.ஸ்ரீசக்திகோமதி, கே.அபர்ணா, எம்.சஷ்சித்ராம், கே.லக~னா ஆகிய மாணவர்கள் 592/600 மதிப்பெண்களும் பெற்று இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.இயற்பியல் பாடத்தில் 24 மாணவர்கள், வேதியியல் பாடத்தில் 7 மாணவர்கள், கணித பாடத்தில் 14 மாணவர்கள், கணினி அறிவியல் பாடத்தில் 121 மாணவர்கள், உயிரியல் பாடத்தில் 1 மாணவர்,வரலாறு பாடத்தில் 2 மாணவர்கள், பொருளியல் பாடத்தில் 16 மாணவர்கள், வணிகவியல் பாடத்தில் 10 மாணவர்கள், கணக்குப் பதிவியல் பாடத்தில் 9 மாணவர்கள், வணிக கணிதம் பாடத்தில் 7 மாணவர்கள், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 12 மாணவர்கள், அடிப்படை மின் பொறியியல் பாடத்தில் 7 மாணவர்கள், அடிப்படை இயந்திரவியல் பாடத்தில் 35 மாணவர்கள், செவிலியல் பாடத்தில் 63 மாணவர்கள்,  ஆடை வடிவமைப்பு பாடத்தில் 58 மாணவர்கள், வேலைவாய்ப்புத் திறன்கள் பாடத்தில் 6 மாணவர்கள், தட்டச்சு பாடத்தில் 42 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள்.

May 14, 2024

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (13.05.2024) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.வான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் – யாம் பெரிதும்வல்லோமே என்று வலிமை சொல் வேண்டாங்காண்எல்லார்க்கும் ஒவ்வான்று எளிது.என்ற பாடலில் தூக்கணாங்குருவி கூடு, தேன்கூடு, கரையான் புற்று உள்ளிட்ட சிறிய உயிரினத்தின் கூடுகள் தனிச்சிறப்பானவை என ஒவ்வையார் குறிப்பிடுகிறார்.ஒரு உயிரி செய்யக்கூடிய செயலை, மற்றொரு உயிரி செய்ய முடியாது என்பதுதான் இயற்கையோடு படைப்பு. ஒவ்வொரு சிறிய உயிரினங்கள் முதல் பெரிய உயிரினங்கள் வரை அனைத்து உயிரினங்களுக்கும் தனிப்பண்புகள் உள்ளன. அது போல் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு தனித்திறமைகள் உள்ளன.யாரோ ஒருவர் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டார்கள் என்பதற்காக பெரிதாகவும், தேர்ச்சி பெற முடியாதவர்களை சிறியதாகவும் எண்ண வேண்டாம்.  ஏனென்றால் ஒவ்வொரு உயிரிக்கும், ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமான பண்புகள் இருக்கின்றன.ஆனால், உங்களுக்கு என்ன திறமை இருந்தாலும் அந்த திறமையை இந்த உலகத்திற்கு வெளிக்காட்டவும், அந்த திறமையின் மூலமாக பணம் சம்பாதித்து, உங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்தவும், அந்த திறமையின் மூலமாக புகழ் அடைய வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை கல்வியறிவு மிக மிக அவசியம்.நடிகர், நடிகை, கிரிக்கெட் வீரர் என நமக்கு பிடித்த புகழின் உயரத்தில் இருக்கக்கூடிய யாராக இருந்தாலும், அவர்கள் பின்புலத்தை பார்த்தோம் என்றால், அந்த வெற்றிக்காக அவர்கள் பல தோல்விகளை கண்டிருப்பார்கள்.உங்களால் தற்போது பெற்றுள்ள மதிப்பெண் பட்டியலை மாற்ற முடியாது. அதை மறந்து விட வேண்டும். அதற்கு அடுத்ததாக வேறு என்ன செய்ய வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக நடத்தப்படும் தனித்தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த நடப்பு கல்வி ஆண்டிலேயே 11 ஆம் வகுப்பில் சேரலாம். வருகின்ற மாதங்களில் கொஞ்சம் முயற்சி செய்தால், நீங்கள் தேர்ச்சி பெற முடியும். பெற்றோர்களும்; குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.எனவே 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இது வாழ்க்கையின் தொடக்கமே என்பதை மனதில் கொண்டு தற்போதை விட எதிர்வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

May 14, 2024

விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதியுதவி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதியுதவியாக இராஜபாளையம் சமூக ஆர்வலர் திரு.புஷ்பராஜ் அவர்கள் சார்பில் ரூ.25,000/-க்கான காசோலையினை அவரது உதவியாளர் திரு.முகமது மீரான் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்களிடம் (13.05.2024) வழங்கினார்.விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை என்ற ஒரு சமூக அமைப்பு மாவட்ட நிர்வாகம், தொழில் முனைவோர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இதனுடைய நோக்கம் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்/மாணவிகளுக்கு நல்ல திறமை மற்றும் கல்வியில் ஆர்வம் இருந்தும் பொருளாதார அடிப்படையில் வசதி குறைவு மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக தங்களுடைய கல்வியினை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் கல்வியினை தொடர உதவி செய்வதே இதன் நோக்கமாகும்.இந்த விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்க விரும்புவோர் 04562-252525, 9445043157 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.மேலும் கல்வி அறக்கட்டளைக்கு வங்கி வரைவோலை மூலம் நிதியுதவி வழங்க விரும்புவோர் CHAIRMAN/DISTRICT COLLECTOR, VIRUDHUNAGAR  என்ற பெயரிலும், வங்கிக் கணக்கில் வழங்க விரும்புவோர் CHAIRMAN/DISTRICT COLLECTOR VIRUDHUNAGAR KALVI ARAKATALAI, The Virudhunagar District Central Co-operative Bank Ltd, A/c No: 717770590, IFSC code: TNSC0011800, MICR Code: 626800007 என்ற வங்கிக்கணக்கிலும் நிதியுதவி அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 14, 2024

வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஏப்ரல் -2024 மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (13.05.2024) வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஏப்ரல் -2024 மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் திரு.கு.லோகநாதன் அவர்களுக்கு முதல் பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S, அவர்கள் வழங்கினார்.  

May 13, 2024

“நான் முதல்வன்”; திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் (11.05.2024) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை தெரிந்து கொள்வதற்காக, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழிகாட்டக்கூடிய பொறுப்பாசிரியர்கள் அனைவரும் உலக அளவில் இருக்கக்கூடிய சிறந்த உயர் கல்வி வாய்ப்புகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரிகள் சேர்ந்து உயர்கல்விகள் பெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்திலும் கல்லூரி கனவு என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.இந்திய அளவில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்வோரின்  எண்ணிக்கை சுமார் 32 விழுக்காடு ஆக இருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் ஏறத்தாழ 52 சதவீதமாக உள்ளது. நமது விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு சுமார் 96 விழுக்காடு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றுள்ளனர். மாநிலம் முழுவதும் அதிகமான உயர்கல்வியை உறுதி செய்திட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிகளை தமிழக அரசு மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.இன்று உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர் கல்வியை பெறுவதற்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல. சரியான வாய்ப்புகளை நாம் தேடாமல் அல்லது சரியான வாய்ப்புகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பதும், ஒரு கல்லூரியில் சேர்ந்த பிறகு கூட இருக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தாமல் இருப்பதும் தான் பிரச்சனையாக இருக்கிறது.யாரெல்லாம் தேடுகிறார்களோ, யாரெல்லாம் தன்னுடைய வாய்ப்புகளை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் மிகச்சிறந்த நிலையை அடைகிறார்கள். சாதாரண கிராமத்தில் தமிழ் வழிக்கல்வியில் பின்தங்கிய சூழ்நிலையில் படித்து சராசரி மதிப்பெண் எடுத்தவர்கள் கூட அடுத்தடுத்த வாய்ப்புகளை எப்படி எல்லாம் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. அவர்கள் அடைந்த உயரங்கள் மட்டும் தான் தெரிகிறது. இந்த உயரங்களுக்கு பின்னால் தூங்காத இரவுகளும், கடினமான உழைப்பின் வேர்வைகளும் ஒரு போதும் தெரிவதில்லை.20 சதவிகித வேலைகளில் 80 சதவீத பலனை பெறுவது உலகம் முழுவதும் எல்லா துறைகளிலும் இருக்கக்கூடிய தத்துவம். இதை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.உயர்கல்வி வாய்ப்புகளை ஆசிரியர்களும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இன்றைய கல்விச் சூழலை எப்படி எதிர்கொள்வது, இந்த கல்விச்சூழல் நமக்கு தரக்கூடிய வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு மாணவர்களை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.இங்கு இருக்கக்கூடிய மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எனது அனுபவத்திலிருந்து சொல்லக் கூடியது வாழ்வில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு வாய்ப்புகள் இருந்தாலும், மிக மிக எளிய வாய்ப்பு கல்வியும் கடின உழைப்பும் தான். இந்த இரண்டு வழிகளை தவிர எளிய குறுக்கு வழிகள் வேற எதுவும் இல்லை.எனவே சிறந்த வாய்ப்புகளை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அடைய வேண்டிய உயரம் இமயமலை போன்றது. அந்த உயரங்களை அடையக்கூடிய மாணவர்களாக விருதுநகர் மாவட்ட மாணவர்கள் இருக்க வேண்டும். அதனை அவர்களுக்கு மிகுந்த சிரத்தையோடும், கடமையோடும் வழிகாட்டக்கூடியவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உலகளாவிய வாய்ப்புகள், படிப்புகள், கல்லூரிகள், வேலை வாய்ப்புகள் குறித்து கல்வியாளர் திரு.நெடுஞ்செழியன் அவர்கள் விரிவாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார்.மேலும், சவுதி அரேபியா மஜ்மா பல்கலைக்கழக பேராசிரியர்(வெளிநாடு வாழ் இந்தியர்) திரு.முகமது யாசிக் அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக மாணவர்களிடையே உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி வளர்மதி, பல்வேறு அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

May 11, 2024

பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துக்கள் தொடர்பாக மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துக்கள் தொடர்பாக மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S,அவர்கள் தலைமையில்  (10.5.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெரொஸ்கான் அப்துல்லா அவர்கள் உள்ளார்.

May 11, 2024

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (10.05.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளதையும், வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையத்திற்கு வண்ணம் அடிக்கப்பட்டு வருவதையும், வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் 15-வது மானிய நிதி குழு திட்டத்தின்  கீழ், ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்தை பழுதுபார்த்து, வண்ண பூச்சு அடிக்கப்பட்டு வருவதையும்,காடனேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் மற்றும் காடனேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.7.20 இலட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் தளம் கட்டப்பட்டுள்ளதையும்,கோட்டையூர் ஊராட்சியில், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில், அங்கன்வாடி மையத்தில் பூச்சு வேலை நடைபெற்று வருவதையும்,தம்பிப்பட்டி ஊராட்சியில், அரசு பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்தமாக தூய்மைபடுத்துதல் திட்டத்தின் கீழ், ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் தம்பிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் கிழக்கு பக்கம் உள்ள வடக்கு பார்த்த பள்ளி கட்டடத்தில் பூச்சு நடைபெற்று வருவதையும்,பின்னர், மகாராஜபுரம் ஊராட்சியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுவதையும்,இராமசாமிபுரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9.45 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும்,ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31.46 இலட்சம் மதிப்பீட்டில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் பூச்சு நடைபெற்று வருவதையும்,குன்னூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9.77 இலட்சம் மதிப்பீட்டில், நியாயவிலை கட்டடத்திற்கு வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டு வருவதையும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

1 2 ... 66 67 68 69 70 71 72 73 74 75

AD's



More News