25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 14, 2024

புதிய பழங்குடியினருக்கான குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமத்திற்குட்பட்ட செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.21 இலட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 7 புதிய பழங்குடியினருக்கான குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்  I A S.அவர்கள்  (13.09.2024) திறந்து வைத்தார்.அதன்படி திருவில்லிபுத்தூர் வட்டம், செண்;பகத்தோப்பு பகுதியில் வாழும் பழங்குடியினர் மக்களின் 7 பழுதடைந்த வீடுகளை தலா 3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.21 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்ட 01.12.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது வீடு கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ் வட்டாட்சியர், உட்பட அரசு அலுவலர்கள், பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 14, 2024

தேசிய தேனீ மற்றும் தேன் இயக்கத்தின் கீழ் தோட்டக்கலைதுறை மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பற்றிய கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், தாயில்பட்டியில் தேசிய தேனீ மற்றும் தேன் இயக்கத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கினை, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,.I A S., அவர்கள் (13.09.2024) துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.2 இலட்சம் மானியத்தில் சிப்பம் கட்டும் அறை அமைப்பதற்கான பணி ஆணைகளையும், 1 பயனாளிக்கு ரூ.15,000/- மானியத்தில் நடமாடும் காய்கனி  விற்பனை வண்டியினையும், பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- மானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கான பணி ஆணைகளையும், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.7500/- மானியத்தில் வெண்டை விதைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.நமது மாவட்டத்தில் தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகள் இருந்தாலும், விவசாயம் அதிகம் செய்யக்கூடிய பகுதியாக உள்ளது.குறிப்பாக மானாவாரி பயிர்கள் அதிகமாக விளைவிக்கக் கூடியதும், மக்காச்சோளம் பருத்தி போன்ற பயிர்கள் அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது சற்று குறைவாகவோ விளைவிப்பது காலம் காலமாக இருந்து வருகிறது. வேளாண்மை என்பது அது சார்ந்த உப தொழில்களையும் கொண்டது. அதில் கால்நடை வளர்ப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.தமிழ்நாட்டில் கால்நடைகள் அதிகமாக இருக்கக்கூடிய மாவட்டங்களில் ஒரு மாவட்டம் விருதுநகர். அதற்காகத்தான் சமீபத்தில் தமிழ்நாடு அரசு கால்நடைகளுக்காக 9 புதிய நடமாடும் மருத்துவமனை ஊர்தியை வழங்கியுள்ளது.கால்நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமாக விவசாயி பெருங்குடி மக்களுடைய வாழ்வாதாரத்தை, அவர்களுடைய வருமானத்தை உயர்த்த முடியும். இந்த பகுதியில் சிப்பி காளான் வளர்ப்பினை நிறைய மகளிர் சுய உதவி குழு பெண்கள் செய்து வருகிறார்கள்.வேளாண்மை சார்ந்த உப தொழில்களை செய்வது என்பது தான் வேளாண்மையுடைய வளர்ச்சிக்கு ஒரு அடிப்படையாக அமைகிறது.விவசாயினுடைய வருமானத்தை பெருக்குவது என்பது பயிர்களில் இருந்து வரக்கூடிய சாகுபடி, தவிர மற்ற உபதொழில்களையும் சேர்த்து செய்கின்ற பொழுது தான் லாபகரமாக செயல்படுத்த முடியும். அதனால் தான் நிறைய வேளாண் சார்ந்த உப தொழில்களான கால்நடை, நாட்டுக்கோழி, தேனீ வளர்ப்பு ஆகியவற்றை அரசு ஊக்குவித்து வருகிறது.தேனின் மருத்துவத்தை சித்தா போன்ற அனைத்து மருத்துவமும் வெளிப்படுத்துகிறது. தேனுக்கான தேவை என்பது மிக அதிகமாக இருக்கிறது. தேனீ வளர்ப்பை முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்யும் பட்சத்தில் விவசாயிகள் கூடுதல் வருமானத்தை பெற முடியும்.மாவட்டத்தில் பல்வேறு விவசாயிகள் தேனீ வளர்ப்பு முறையை சிறப்பாக செய்து வருகின்றனர். அதை சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தை படுத்த வேண்டும்;. தரமான தேன்களுக்கு தேவைகள் அதிகமாக உள்ளது.இந்த தேனீ வளர்ப்பு என்பது ஒவ்வொரு விவசாயிக்கும் கூடுதல் வருமானத்தை தரக்கூடியது. எனவே, விவசாயிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் தேனீவளர்ப்பில் ஆர்வம் உள்ள தனிநபர்கள் தேனீ வளர்ப்புக்கு இருக்கக்கூடிய புதிய திட்டங்கள் மற்றும் மானியங்களை அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கருத்தரங்கில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துறையினரின் தேனீ மகத்துவ மையம் மற்றும் மதுரை மாவட்ட தேனீ வளர்ப்பின் முன்னோடி விவசாயி ஆன திருமதி.ஜோஸ்பின் அவர்களால் தேனீ மற்றும் தேன் சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.இக்கருத்தரங்கின் முதல் நாளில் தேனீக்களின் உயிரியியல் மற்றும் குணாதிசயங்களை பற்றி பூச்சியியல் துறை முனைவர் கே.சுரேஷ் அவர்கள் விளக்கினார். தோட்டக்கலை பயிர்களில் தேனீக்கள் மூலம் மகசூல் அதிகரிப்பதற்கான வழிமுறைகளை தோட்டக்கலைத்துறை முனைவர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் மற்றும் கலசலிங்கம் தோட்டக்கலை கல்லூரி உதவி பேராசிரியர் திரு.பாண்டியராஜ் அவர்கள் ஆகியோர் விளக்கி கூறினார்கள்.தேன் சம்பந்தப்பட்ட உற்பத்திப்பொருட்களின் வர்த்தக முக்கியத்துவத்தை பற்றி VIBIS Honey  நிறுவனர் மற்றும் தேனீ வளர்ப்பின் முன்னோடி விவசாயிமான திருமதி ஜோஸ்பின் அவர்கள் எடுத்துரைத்தார். வேளாண் அறிவியல் நிலைய முனைவர் திருமதி.ஜடா கவிதா அவர்கள் தேன் சம்பந்தப்பட்ட விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பை பற்றி விளக்கமளித்தார்.மேலும், தேனீ வளர்ப்பு குறித்த தொழில் நுட்ப கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ், விருதுநகர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்(வெம்பக்கோட்டை வட்டாரம்) திருமதி குணசெல்வி மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள்;, விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Sep 14, 2024

மம்சாபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மம்சாபுரம் ஊராட்சியில்  (13.09.2024) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர் .

Sep 14, 2024

வேளாண்மை விரிவாக்க மையங்களில் - மின்னணு பண பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் விநியோகம் செய்யலாம்

விருதுநகர் மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பருவ காலம் தொடங்கியுள்ளதால் வட்டாரங்களில் ஆங்காங்கே மழை பொழிந்து வருகிறது.சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், நுண்ணூட்ட கலவைகள், உயிர் உரங்கள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை ஏ.டி.எம் கார்டு, கூகுள் பே, போன்பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் கொண்ட பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் அரசு கணக்கில் செலுத்தி பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் பணமில்லா மின்னணு பரிவர்த்தனை செய்யும் கருவி வழங்கப்பட்டுள்ளது.       எனவே வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் இடுபொருட்களை வாங்க வரும் விவசாயிகள் இடுபொருட்களுக்கான முழுத்தொகை அல்லது பங்களிப்புத்தொகையை ஏ.டி.எம் கார்டு, கூகுள் பே, போன்பே மூலமாக செலுத்தி வேளாண் இடுபொருட்களை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 14, 2024

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் குறள்பரிசு வழங்கும் பொருட்டு மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின் மனதில் பதியச் செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் குறள் பரிசாக ரூ.15000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் 2024-25ஆம் ஆண்டிற்கான குறள்பரிசு வழங்கும் பொருட்டு தகுதியான மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ/www.tamilvalarchithurai.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்களை 25.10.2024 க்குள் “தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்” என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ/ tamilvalar.vnr@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு என மாவட்ட ஆட்;சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 14, 2024

திட்டமில்லா பகுதியில் அமையும் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன் முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

விருதுநகர்  மாவட்டத்தில் உள்ள திட்டமில்லா பகுதியில் அமையும் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன் முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை ஆறு மாத காலம் காலநீட்டிப்பு செய்து அரசாணை எண்.76, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ(3), துறை நாள்.14.06.2018-ல் மாற்றமின்றி அரசு கடிதம் (நிலை) எண்.122/நவ4(1)/2024  நாள்.25.06.2024-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து இசைவுபெற துணை இயக்குநர், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், விருதுநகர் அவர்களை அணுகுமாறும், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (www.tcp.org.in) என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்து, இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 14, 2024

மாவட்டத்தில் குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர் மீது குழந்தை திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு  18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.• குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் 1098 அல்லது 181 மூலம் பெறப்பட்ட உடன் நடவடிக்கையாக குழந்தையின் விபரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும்.• குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்படும்.• குழந்தை திருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையினை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.• இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்படின் காரணமான நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும்வழங்கப்படும் தண்டனைகள்• 18 வயது நிரம்பாத பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் ஆணுக்கு அதிக பட்சமாக 2 வருட கடும் சிறைத்தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.• குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 வருடம் கடும் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.• இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும்.• 18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டின் காரணமான நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்    கடந்த 01.08.2024 முதல் 31.08.2024 வரை பதினைந்து குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மூன்று நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Sep 14, 2024

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களில் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 14.09.2024 இரண்டாவது சனிக்கிழமை அன்று, அந்தந்த வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடத்தப்படவுள்ளது. எனவே இக்குறைதீர்வு முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணபங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 14, 2024

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “இரத்த சோகை இல்லாத கிராமம்” குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற உள்ளது

  “கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.2024-25-ம் நிதி ஆண்டிற்கு “இரத்த சோகை இல்லாத கிராமம்” குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவாக விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு செப்டம்பர் - 2024, 13 முதல் 17 வரை ஊராட்சி அளவிலும் மற்றும் செப்டம்பர் - 2024, 18 முதல் 23 வரை வட்டார அளவிலும், பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களைக் கொண்டு வட்டாரம்/மாவட்ட அளவில் சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளது.            எனவே இப்போட்டிகளில் சுய உதவிக்குழுவினர் பங்கேற்கலாம்.  வட்டார அளவிலான போட்டியில் முதல் பரிசு பெறும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 13, 2024

அரசு/அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு “இளம் பசுமை ஆர்வலர்“ என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, வனத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகளான ROAR மற்றும் ATREE இணைந்து மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு “இளம் பசுமை ஆர்வலர்“ என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.அதன்படி, சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்ற இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் 41 மாணவர்களும், விருதுநகர் செந்திகுமார நாடார் கலைக்கல்லூரியில் 23 மாணவர்களும், சாத்தூர் இராமசாமி நாயுடு கலைக்கல்லூரியில் 37 மாணவர்களும், அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் 37 மாணவர்களும் கலந்து கொண்டனர்.இந்த சிறப்பு பயிற்சி முகாமில் இயற்கை சூழல் பாதுகாப்பு, மரம் வளர்த்தல், அரிய வகை பூச்சி இனங்களின் நன்மைகள், நீர்வளப் பாதுகாப்பு, வனவிலங்குகள் மற்றும் காடுகளின் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும், பாதுகாப்பு பற்றியும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.இதன் தொடர்சியாக இரண்டாம் பயிற்சி 14.09.2024 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. எனவே, ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி சார்ந்த முன்பதிவிற்கு 79042-67235 என்ற கைபேசியை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 69 70

AD's



More News