வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காத்தல் மற்றும் குறைத்தல் மாதிரி ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (17.10.2024) தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையின் மூலம் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காத்தல் மற்றும் குறைத்தல் மாதிரி ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் துவக்கி வைத்தார்.அனைவரும் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம்மையும், மற்றவர்களையும் எப்படி எல்லாம் காத்துக்கொள்வது போன்ற வழிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது. இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் அழிவினைக் குறைக்க நம்மால் இயலும். இதற்கு பலதுறைகள் பலவிதமான யுத்திகளை உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றன. இதில் தலையாய கடமை வகிப்பது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் அதிகமான மழைபெய்யும் போது அதிகமாக தண்ணீர் செல்லும் ஓடைகளையோ, நதிகளையோ பாதுகாப்பாக கடக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தண்ணீர் அதிகமாக செல்லும் போது ஓடை மற்றும் நதிகளை கடந்து செல்லக்கூடாது. மழைகாலங்களில் காற்றினால் மின்கம்பிகள் அருந்து விழுந்திருந்தால் அதன் அருகில் செல்லக்கூடாது. உடனடியாக இது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மழைகாலங்களில் மின்கம்பங்கள் அருகே நிற்க கூடாது. மின்கம்பங்கள் மீது சாய்ந்தோ அல்லது அதனை தொட்டுப்பார்க்கவோ கூடாது. மழைகாலங்களில் மிகவும் பழைமையான கட்டிடங்களில் மழைக்காக ஒதுங்கக்கூடாது. அவ்வாறு ஒதுங்கும் போது எந்த நேரத்திலும் கட்டிடங்கள் சரிந்து விழக்கூடும் எனவும் இதன் காரணமாக ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பேரிடர் காலங்கள் மற்றும் விபத்துக்களில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களைக் கொண்டு எவ்வாறு பணிபுரிந்து வருகின்றோம் என்றும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும், மீட்கப்பட்ட அவர்களை எவ்வாறு தூக்கி சென்று ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், தீ விபத்தின் வகைகள் குறித்தும், அதனை ஆரம்ப நிலையில் தடுக்கும் முறைகள் குறித்தும், பெரும் தீ விபத்துக்கள் மற்றும் ஆயில் தீ விபத்துக்களை எவ்வாறு தீயணைப்பு ஊர்திகளை கொண்டு எளிதில் அணைக்கலாம் எனவும் விளக்க உரை மற்றும் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும், அவசர கால மீட்பு ஊர்தியில் உள்ள மீட்பு கருவிகளான மகிட்டா ஷா (அ) பவர் ஷா கட்டர் ரூ ஸ்பிரிட்டர், அயன் கட்டர், கான்கிரீட் கட்டர், ஹைட்ராலிக் கட்டர் அன்டு ஸ்பிரட்டர், மேனுவல் கட்டர், ஹைட்ராலிக் ஜாக்கி, ஏர் லிப்டிங் பேக், டெலஸ்கோபி லேடார், அஸ்காலைட், டோர் ஓப்பனர், மூச்சுக்கருவி, பி.பி. சூட், மிதவை படகு(இரப்பர் படகு), தீயணைப்பான்கள் போன்ற செயல்படும் விதங்கள் பற்றியும்,விபத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்க பயன்படுத்தும் இரண்டு கை முறை, மூன்று கை முறை, நான்கு கை முறை, உப்பு மூட்டை முறை, முதுகுக்குப் பின் முதுகு வைத்து தூக்குதல், குழந்தை தூக்குதல் முறை, உட்காரும் சேர் மூலம் மீட்டல், போர்வை மூலம் மீட்டல், தீயணைப்பாளர் தூக்கி போன்ற மீட்பு முறைகள் பற்றியும் செய்து காண்பிக்கப்பட்டது. இது போன்ற செயல்முறை பயிற்சிகளில் நாம் பங்குபெற்றதன் மூலம் ஆபத்து காலங்களில் நாமும் மீட்ப்புப்பணித்துறையினருடன் இணைந்து செயல்பட உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர், தீயணைப்பு பயிற்சியாளர்கள், பணியாளர்கள் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
0
Leave a Reply