25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 27, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதைமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், டி.கடமங்குளம் ஊராட்சிகளில் (25.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அதன்படி, காரியாபட்டி வட்டம், டி.கடமங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, இம்முகாமில் பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினையும், விவசாயிகளுக்கு விதைப்பைகளையும், உணவு மற்றும் ஊட்டசத்து இயக்கத்தின் கீழ் தார்பாய்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

Sep 27, 2025

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம்  இயக்கத்தின்   கீழ் சமுதாய  வளப் பயிற்றுநர்  பணியிடங்களுக்கு  தகுதியான சுய உதவிக்குழு  பெண்  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டம் 2025-26-ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம்  இயக்கத்தின்   கீழ்  செயல்படும்   சமுதாய மேலாண்மை  பயிற்சி  மையத்தில் (CMTC) காலியாகவுள்ள  சமுதாய  வளப் பயிற்றுநர்  பணியிடங்களுக்கு  பணியாளராக  பணி அமர்வு செய்திட தகுதியான சுய உதவிக்குழு  பெண்  விண்ணப்பதாரர்களிடமிருந்து   விண்ணப்பங்கள்   வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி  செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார  இயக்கம், ஊராட்சி  அளவிலான  கூட்டமைப்பு  மற்றும்  வட்டார  அளவிலான  கூட்டமைப்பில்  29.09.2025  அன்று  மாலை  05.45  மணிக்குள்  வந்து  சேரும்படி  அனுப்பி  வைக்க வேண்டும். சமுதாய வளப் பயிற்றுநர்களுக்கான கீழ்கண்ட தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்: குறைந்தபட்சம்  21 வயது  பூர்த்தியடைந்தது  இருத்தல் வேண்டும்.  அதிகபட்ச  வயது  வரம்பு இல்லை, பயிற்சி  நடத்துவதற்கு தேவையான  உடற்தகுதி  மற்றும்  திறன்  இருந்தால்  மட்டும் போதுமானது. சுய  உதவிக் குழுவில்  குறைந்தபட்சம்  ஐந்து  ஆண்டுகள்  உறுப்பினராக  இருந்திருக்க வேண்டும்.மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளிலாவது  கலந்து  கொண்டிருக்க வேண்டும்.  கைபேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும். சமுதாய  வளப்  பயிற்றுநராக  விண்ணப்பிக்கும்   போது  சுய  உதவிக் குழு  சார்ந்த  வாராக்கடன்  நிலை  இல்லாது  இருக்க வேண்டும்.சமுதாய வளப் பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பு இருத்தல் வேண்டும். அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவராகவும், தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ (அ) பகுதி நேரமாகவோ  பணிபுரிபராகவோ  இருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வளப்பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி, அத்தீர்மான நகலை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.  சமுதாய வளப் பயிற்றுநர் மாதிரி விண்ணப்படிவம் தொடர்புடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.மேலும்,  பயிற்சி  நடைபெறும் போது மட்டும் பயிற்சி நடத்தியதற்கான மதிப்பூதியம் வழங்கப்படும். மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படாது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட  தேதிக்கு  பின்னர்  வரும்  விண்ணப்பங்கள்  ஏற்கப்பட  மாட்டாது. ஒப்பந்த  பணியாளராக  பணியமர்வு  செய்வதால்  பணி நிரந்தரம்  குறித்து  உரிமை கோர முடியாது. மேலும் தொடர்புக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக தொலைபேசி எண் 04562-252036, உதவித் திட்ட அலுவலர் (CB), அலைபேசி எண் : 8778130177 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 27, 2025

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT-ஆல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.

2026 - ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT- ஆல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) தேர்வு 04.11.2025 அன்றும் மற்றும் செய்முறை (Practical) தேர்வு 05.11.2025 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  தனித்தேர்வராக தேர்வு எழுத 22.09.2025 முதல் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 08.10.2025. அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 27, 2025

விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு 2025ம் ஆண்டுக்கானது டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.          இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், இத்துறையில் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்கள் மற்றும் தேசிய புனரமைப்பு திட்டத்தின்கீழ் இத்துறையில் நடத்தப்பட்ட மின்சாரப்பணியாளர்கள் மற்றும்  கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.                        இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மின் வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், அதற்கான சான்றிதழ், பணியாற்றிய உரிய நிறுவனத்திடம் அல்லது மின் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் இருந்து முன் அனுபவச் சான்று பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை.                        இத்தேர்விற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்புகள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய இணைப்புகளுடன் ரூ.200/--க்கான தேர்வுக்கட்டணம் செலுத்திய அசல் செலானுடன் உரிய தேர்வு மையத்தினை தேர்வு செய்து அத்தேர்வு மையத்திற்கு 17.10.2025 அன்றைய தேதிக்குள் கிடைக்கும் வகையில் சமர்ப்பிக்கவும்.                        மேலும், விபரங்களுக்கு அலுவலக வேலைநாட்களில் பின்வரும் தொலைபேசி எண்களில் 04562-252655/294382. தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 27, 2025

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில், அறிஞர் அண்ணா விளையாட்டுப் போட்டிகள் – 2025 நடைபெற உள்ளதை முன்னிட்டு, பங்குபெற விரும்பும் மாணவ/மாணவியர்கள் தங்களின் பெயரை மாவட்ட விளையாட்டரங்கில் பதிவு செய்யலாம்.

 தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றன. பொது மக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தினை புகுத்திடும் வண்ணம் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் – 2025, விருதுநகர் மாவட்டத்தில் வரும் 27.09.2025 அன்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 4 கி.மீ தொலைவில்  உள்ள மொட்டைப்பத்தான் கண்மாய் இறக்கம் என்ற இடத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டிற்கான அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் 13 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 15 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 10 கி.மீ என்ற பிரிவிலும், 15 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 20 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 15 கி.மீ என்ற பிரிவிலும், 17 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 20 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 15 கி.மீ என்ற பிரிவிலும் நடத்தப்படவுள்ளன. அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பெறுவோர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பின்வரும் விவரப்படி வழங்கப்படவுள்ளன. முதல் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.5,000/, இரண்டாம் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.3,000/-  மூன்றாம் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.2,000/- மற்றும் 4 முதல் 10வது இடங்களை வருபவர்களில் ஒரு நபருக்கு ரூ.250/- என பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்க தகுதியுள்ள பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் கார்டு மற்றும் வயதுச் சான்றிதழில் தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று 27.09.2025 அன்று காலை 06.00 மணிக்கு சமர்ப்பித்திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள். வெற்றி மாணவ, மாணவிகள் தங்களது வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் கார்டு நகலினை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையானது வங்கிப் பரிவர்த்தனை வழியாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எனவே, மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள்-2025 ல் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டரங்கில் 26.09.2025 அன்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்குள் பதிவு செய்திடுமாறும், மேலும், தொடர்புக்கு 04562 225947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 26, 2025

குல்லூர் சந்தை ஊராட்சியில்  தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்  கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குல்லூர் சந்தை ஊராட்சியில்  (25.09.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்  கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Sep 25, 2025

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 விருதுநகர் மாவட்டம், விருதுநகர் எஸ்.எப்.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளியில்  (24.09.2025) பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை சார்பில், விருதுநகர் சமூக வனக்கோட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும் பணிகளை துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள்  மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் தற்பொழுதுள்ள காடுகள் மற்றும் மரங்களின் புவியியல் பரப்பை 23.8%   லிருந்து  33% -ஆக அதிகரிக்கும் பொருட்டு,  தமிழ்நாடு பசுமை இயக்கம் என்ற மாபெரும் திட்டத்தினை, 24.09.2022 அன்று தொடங்கி வைத்தார். அதனடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்-24 ஆம் தேதியினை பசுமை இயக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.          பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல், வன உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தல், விவசாய  நிலங்களில் மரங்கள் வளர்ப்தை ஊக்குவித்தல், கல்வி நிறுவனங்கள், கோவில்கள், மைதானங்கள், புனித ஸ்தலங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், கண்மாய் பகுதிகள் மற்றும் உள்ளுர் சமூகங்களை மேம்படுத்தும் பொருட்டு வேலை வாய்ப்புகள் வழங்குதல் போன்றவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் விவசாயிகளின் வருவாயினை அதிகரிக்கவும் வழிவகைகள் செய்து வருகிறது.          அதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு, இந்தாண்டிற்கான கருப்பொருளாக “நாவல் மரத்தை கொண்டாடுவோம்” என்ற தலைப்பின் கீழ்  நாவல் மரங்கள் (சிசிஜியம் குமினி) தேர்வு செய்யப்பட்டு சுமார் 50 நாவல் மரக்கன்றுகள் விருதுநகர் எஸ்.எப்.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளியில் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில்  சுமார் 1000 வகையான மரக்கன்றுகள் இன்று நடப்பட்டுள்ளன.இந்தாண்டில் வேளாண்துறை, வனத்துறை,  தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட துறைகளின் சார்பில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 இலட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.          எனவே இந்த நிகழ்ச்சி என்பது ஒரு அடையாளமான நிகழ்ச்சி. இதுபோன்று நிறைய பெருமளவு மரக்கன்றுகள் நடுவற்கு அனைவரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.மேலும், பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு “நாவல் மரத்தை கொண்டாடுவோம்” என்ற தலைப்பின் கீழ் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அ.அம்சவேணி, வட்டாட்சியர், விருதுநகர் சமூக வனக் கோட்ட அலுவலர்கள், ஆலமரம் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 25, 2025

வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் ஏற்படுத்தப்படவுள்ள உழவர் நல சேவை மையத்தில், வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

உழவர் நல சேவை மையங்கள் :    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடப்பு 2025-2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது  மாண்புமிகு வேளாண்மை துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4000 வேளாண் பட்டதாரிகளும் 600க்கும் மேற்பட்ட வேளாண் பட்டையதாரர்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர். இவர்களின் படிப்பறிவும் தொழில்நுட்ப திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழிக்கும் வகையில் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவில் 1000  உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.  இதற்காக 30% மானியமாக 3 லட்சம்  முதல் 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் உழவர் நல சேவை மையங்களுக்காக ரூபாய் 42 கோடி மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உழவர் நல சேவை மையத்தின் பணிகள் : இத்திட்டத்தில் இணைய விரும்பும் பயனாளிகள் தங்கள் பகுதி விவசாயிகளின் தேவைக்கேற்ப உழவர் நல சேவைகளை வழங்கலாம்.இந்த சேவை மையங்கள் ரூ. 10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைத்திட வேண்டும். இத்திட்டத்தில் இணையும் பயனாளிகள் வேளாண்மை தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதோடு வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வேளாண் சார்ந்த சேவை மையங்கள், பண்ணை இயந்திர வாடகை மையம் மற்றும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டுதல் போன்ற சேவைகள் வழங்கும் விதத்தில் அமைத்திட வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் ஒரு மையமும் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மையமும் அமைத்திட  வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் பெற விண்ணப்பிக்கலாம் :                        தமிழ்நாடு அரசு சார்பில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை உயர்த்தும் வகையில் முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இணையும் பயனாளிகள் உழவர் நல சேவை மையங்களை சிறப்பாக நடத்தும் போது வேளாண்மை உழவர் நல துறையில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையப் பயனாளிகளுக்கும் வழங்கப்படும்.                        எனவே, இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதிற்கு உட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற பின்பு மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/kaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தங்களது பகுதிக்குட்பட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 25, 2025

இந்திய தேர்தல் ஆணையத்திடம் கணக்குகளைத் தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அரசியல் கட்சிகள், கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை மீறியுள்ள நிலையில் அக்கட்சிகளின் பெயர்களை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிபந்தனையின்படி, ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியும் தனது வரவு செலவுக் கணக்குளைத் தணிக்கை செய்து பெற்று, ஒவ்வொரு நிதியாண்டிற்கான தணிக்கை அறிக்கையை அடுத்த நிதியாண்டின் நவம்பர் மாதத்திற்குள்ளாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சட்டமன்றத் தேர்தல் எனில் தேர்தல் முடிவடைந்த 75 நாட்களுக்குள்ளும், நாடாளுமன்றத் தேர்தல் எனில் தேர்தல் முடிவடைந்த 90 தினங்களுக்குள்ளாகவும் தங்கள் கட்சியின் தேர்தல் செலவின விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கணக்குகளைத் தாக்கல் செய்யாத 39 அரசியல் கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரச்செல்லையாபுரம் கிராமத்தில் இயங்குவதாகப் பதிவு செய்துள்ள ‘தேச மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற அரசியல் கட்சியானது, இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும், எனவே இக்கட்சியை ஏன் பதிவுநீக்கம் செய்யக் கூடாது என சென்னை, தலைமைத் தேர்தல் அலுவலர் விசாரணை அறிவிப்பு அனுப்பியுள்ளார். இக்கட்சியானது, தமது தரப்பிலான விளக்கத்தை அளிக்க 08.10.2025 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 25, 2025

ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் மூவரை வென்றான் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த  41 குடும்பங்கள் கடந்த 24 வருடங்களுக்கு முன் ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள்  இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக  இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்  என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின்  கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது.  மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.அதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு வட்டம் மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 41 குடும்பங்கள் கடந்த 24 வருடங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இந்த இடங்களுக்கான இணைய வழிபட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டாக்களை வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து   41 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் அவர்கள் நேரில் சென்று வழங்கினார்.எங்களுக்கு இந்த இடத்திற்கான ஒப்படை ஆணைகள் 24 வருடங்களுக்கு முன்பாக வழங்கப்பட்டிருந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இணைய வழியிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே எங்களைத் தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் எங்களுக்கு இந்த இடத்திற்கான அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளதால், நாங்கள் எந்த வித தயக்கமின்றி எங்களுக்கான இடங்களில் வீடுகள் கட்டி குடியேற முடியும். எங்களுடைய பலவருட பயத்தையும், பதட்டத்தையும் எங்களுக்கு இந்த பட்டாக்கள் வழங்கியதன் மூலம் தமிழ்நாடு அரசு மகிழ்ச்சியாக மாற்றியிருக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பாலாஜி, வட்டாட்சியர் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 71 72 73 74 75 76 77 ... 140 141

AD's



More News