25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Nov 28, 2025

மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் .

தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான  மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வறிவிப்பிற்கிணங்க, 04.12.2025 அன்று மகாத்மா காந்தி பிறந்தநாள் பேச்சுப்போட்டியும், 05.12.2025 அன்று ஜவகர்லால் நேரு   பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும்,  கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும்   நடத்தப்பெறவுள்ளன.   அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் /பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக்   கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும்  அனுப்பப்படும் . மகாத்மா காந்தி பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு 1. காந்தியடிகளின்  வாழ்க்கைச் சுவடிகள்  2. வாய்மையே  வெல்லும்   3. தீண்டாமையும்  காந்தியடிகளும் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1.வாழ்விக்க வந்த எம்மான் 2. அண்ணல் காந்தியடிகளின் அரசியல் வேள்வி 3. தில்லையாடி வள்ளியம்மையும்  காந்தியடிகளும் ஆகிய தலைப்புகளில் மகாத்மா காந்தி பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன. ஜவகர்லால்நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு  1.ஜவகர்லால் நேருவின் சாதனைகள் 2. அமைதிப்புறா  நேரு 3.  விடுதலைப் போரில்  நேருவின் பங்களிப்பு   என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. நவீன இந்தியாவின் சிற்பி 2.நேரு பதித்த சுவடுகள்  3. நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகளில் ஜவகர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன.மேலும், பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000- ,  இரண்டாம்பரிசு ரூ.3000-, மூன்றாம் பரிசு ரூ.2000- என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும்,  தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு  பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு  ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ.2000-  என்ற வீதத்திலும்  வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 27, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம். 

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கொங்கன்குளம் ஊராட்சியில்,  (26.11.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், மூன்று சக்கர பேட்டரி சைக்கிள் வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.1.5 இலட்சம்  மதிப்பிலான வண்டியினை வழங்கினார்.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமானது  02.08.2025 அன்று அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம்,     நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில்  குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த முகாமானது நமது விருதுநகர் மாவட்டத்தில் 15-வது முறையாக நடைபெற்று வருகிறது. அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு இரத்த பரிசோதனைகள், மற்றும் பிற பரிசோதனைகளை செய்து வருகின்றனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.அதன்படி, இன்று வெம்பக்கோட்டை வட்டம், கொங்கன்குளம் ஊராட்சியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினையும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 27, 2025

மக்களிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர் ஏற்படுத்தி, அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சின்னக்காமன்பட்டி ஊராட்சியில்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், இன்று (26.11.2025)சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் மக்களிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை வழங்கினார்.பின்னர், உலக கழிப்பறை தின உறுதிமொழியாக “நமது கழிப்பறை நமது எதிர்காலம் “ என்ற உறுதிமொழியினை அனைவரும்  எடுத்துக்கொண்டனர்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி, அதுவும் குறிப்பாக பொது சுகாதாரத்தில், மக்கள் நோய்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவும், அவ்வாறு நோய்கள் வந்துவிட்டால் அவற்றை தீர்ப்பதற்காகவும், உரிய மருத்துவ வசதிகளை மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், முதியவர்களுக்கு இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.அனைத்து கிராமங்களிலும் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என்று மூன்று நிலைகளில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இவையெல்லாம் நோய்கள் வந்ததற்கு பிறகு நாம் செய்யக்கூடிய நடைமுறைகள், அதற்கான வழிமுறைகள் ஆகும். ஆனால் நோய்கள் வருவதற்கு முன்பாகவே அதனை  சரி செய்ய முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்.அதாவது, ஒரு வருடத்தில் 365 நாட்களில் நம்முடைய சுகாதார குறைபாடுகள் காரணமாகவும், சுற்றுச்சூழலின் காரணமாகவும், காற்றின் மூலமாகவும், தண்ணீரின் மூலமாகவும் பரவக்கூடிய நோய்களால் ஒரு சாதாரண தொற்று , காய்ச்சல் ஏற்பட்டு சளி மற்றும் நோய்களின் மூலமாக வருடத்திற்கு சராசரியாக ஒரு குடும்பத்தில் 20-ல் இருந்து 25 நாட்கள் யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.இதனையெல்லாம்  தடுக்க முடியுமா என்றால்,  சுகாதாரத்தை முழுமையாக பேணுவதன் மூலமாகவும், தன் சுத்தத்தை முழுமையாக பேணுவதன் மூலமாகவும், கழிவறைகளை சரியாக பராமரிப்பதன் மூலமாகவும், தொற்றுநோய்களை எல்லாம் குறைத்து, நம்முடைய நோய்வாய் படக்கூடிய நாட்களை எல்லாம் குறைக்க முடியும். ஆரோக்கியமான நாட்களை அதிகரிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.எனவே, நம்முடைய கிராமத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால், மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்கவழக்கத்தை மாற்றுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். பல கிராமங்களில் இது சிறப்பாக செய்திருக்கிறார்கள்.மேலும், பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால், காற்றில் இருக்கக்கூடிய மாசின் காரணமாக நுரையீரல் பாதிப்பில் ஏற்படுகிறது. அதனால் நாம் எப்பொழுதும் குப்பைகளை எரிக்கக்கூடாது. அதற்கு ஒரே ஒரு தீர்வு நாம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு வகையாக பிரித்து கொடுக்க வேண்டும்.மனிதருக்கு  தூய காற்று, தூய தண்ணீர் இந்த இரண்டும் தான் மிக மிக அடிப்படை ஆகும். எனவே, நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.முன்னதாக, கிராமப் பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத்தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 27, 2025

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026  பணிகள் நடைபெறுவதையொட்டி, வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை பூர்த்தி செய்து 04.12.2025 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026  பணிகள் நடைபெறுவதையொட்டி, வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை பூர்த்தி செய்து 04.12.2025 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்  என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வேண்டுகோள்இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட  7 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான கணக்கெடுப்புப்  படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வழங்கும் பணியானது 4.11.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், இதுகுறித்து வானொலி, ஆட்டோக்கள், மின்கல வாகனங்கள், சமூக வலைதளங்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள்,  மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக வாக்களர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே நேரடியாக வருகை தந்து படிவத்தினை பூர்த்தி செய்ய உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கியும், படிவத்தினை மீளப்பெறும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இப்படிவத்தினை பூர்த்தி செய்யும் பொழுது வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் வழங்குவது கட்டாயமில்லை. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால்  நியமனம் செய்யப்பட்ட அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் கணக்கெடுப்புப்  படிவத்தின், மற்றொரு படிவத்தில் ஒப்புதல் பெற்று வழங்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களை வருகின்ற 04.12.2025க்குள் வாக்காளர்களிடமிருந்து பெற்று, அதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கான செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிக்கப்பட வேண்டியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07-சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 16,26,485 வாக்காளர்களில் 15,98,433 (98.28%)    வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, 9,78,296 (60.15%)  கணக்கெடுப்புப் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.எனவே, நிலுவையில் உள்ள கணக்கெடுப்பு படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு, வாக்காளர்கள் 04.12.2025 வரை காத்திராமல் தாங்கள் பெற்றுக்கொண்ட கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து, தங்களிடம் வருகை தரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம்  படிவத்தினை இரட்டைப் பிரதிகளில் வழங்கி, மற்றொரு படிவத்தில் உரிய ஒப்புதலைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Nov 26, 2025

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாரட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டு.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில்,  24.11.2025 அன்று  நடைபெற்ற புத்தகத்திருவிழா – 2025 ன் இறுதி நாளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பாரட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் வழங்கி பாராட்டினார்.  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, நவம்பர் 4ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், விருதுநகர் மாவட்ட வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்வதில் எழும் சந்தேகங்களுக்கு (சட்டமன்றத் தொகுதி, வரிசை எண், பாகம் எண்) அதனை உடனடியாக நிவர்த்தி செய்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றும் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் 19-11-2025 புதன் கிழமை மற்றும் 20.11.2025 வியாழக் கிழமை ஆகிய 2 தினங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, வாக்காளர்கள் பெருமளவில் இம்முகாம்களில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த படிவங்களைப் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கினர். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய இயலாத முதியோர் இல்லங்களில் வசிக்கும் வாக்காளர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கான சிறப்பு உதவிமையங்கள் 23.11.2025 அன்று ஏற்படுத்தப்பட்டு வாக்காளர் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன. இதுவரை, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 7-சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 16,26,485 வாக்காளர்களில் 15,95,165 (98.07%)    வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, இவ்வாக்காளர் படிவங்களில் 8,70,829 (53.54%)  கணக்கெடுப்புப் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1,901 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கியும்,பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.எனவே, வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கியும், வாக்காளர்களுக்கு எழும் சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றும் பணிகளில் ஈடுபட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பாரட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், இ.ஆ.ப., துணை இயக்குநர்( திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ. வ.ப., சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) திருமதி சசிகலா உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Nov 26, 2025

மாவட்ட காசநோய் மையத்தில், 11 மாதத்திற்கான ஒப்பந்த அடிப்படையிலான (இன சுழற்சி முறையில்) தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம், மாவட்ட காசநோய் மையத்தின் கீழ் செயல்படும் கீழ்க்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான (இன சுழற்சி முறையில்) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.காசநோய் சுகாதாரப் பார்வையாளர் (TB Health Visitor)-01, காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அடிப்படைத் தகுதிகளாக பட்டப்படிப்பு (அல்லது) மேல்நிலைக் கல்வி தேர்ச்சி மற்றும் பல்நோக்கு சுகாதாரம், (MPW) / மகளிர் சுகாதாரப் பார்வையாளர் (LHV / மகப்பேறு துணை செவிலியராக (ANM) பணியாற்றிய அனுபவம் /சுகாதார பணியில் பணியாற்றிய அனுபவம் / சுகாதார கல்வி / ஆலோசகர் படிப்பு (அல்லது) காசநோய் சுகாதாரப் பார்வையாளர், பயிற்சியில் தேர்ச்சி மற்றும்  கணிணி படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதனைத் தவிர, பல்நோக்கு சுகாதார பணியாளர் (MPHW)  .அங்கீகரிக்கப்பட்ட துப்புரவு ஆய்வாளர் பயிற்சி (SI) என கூடுதல் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். மேலும், இப்பதவிக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பொது பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.  காசநோய் ஆய்வக நுட்புனர் / நுண்ணோக்கி சளி பரிசோதகர் (TB Laboratary Technician) -01, காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அடிப்படைத் தகுதிகளாக மேல்நிலைக் கல்வி தேர்ச்சி மற்றும்  மருத்துவ ஆய்வக நுட்புனர்க்கான சான்றிதழ் அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும், இதனைத் தவிர, திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் / சளிபரிசோதனை கூடத்தில் ஒரு வருடம்  பணியாற்றிய அனுபவம் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், இப்பதவிக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.விண்ணப்பத்தாரர்கள், தங்கள் தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் இருசக்கரவாகன ஒட்டுநருக்கான நிரந்தர உரிமம் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல் (Attested Xeox Copy) மற்றும் ரூ.5-க்கானஅஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் இணைத்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  விண்ணப்பங்கள் அனுப்பப்படும் உறையின் மேல் பதவியின் பெயரைக் குறிப்பிட்டு“ ஒப்பந்த அடிப்படை பணியிடத்திற்கான விண்ணப்பம்” என்று குறிப்பிடப்பட வேண்டும்.மேலும், மாநில சுகாதாரச் சங்கம் – NTEP  ன் வழிகாட்டுதல்படி தொகுப்பூதியம் வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் தேர்வு / நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.விண்ணப்பங்களை 10.12.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் தேர்வுக் குழு, துணை இயக்குநர் மருத்துவபணிகள் (காசநோய்) சமுதாயகூடம், F.F.ரோடு, மணி நகரம், மாவட்ட காசநோய் மையம், விருதுநகர்  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு  மாவட்ட ஆட்சித்தவைர் மரு.என்.ஓ.சுகபுத்ராI A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 25, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,IAS,., அவர்கள் தலைமையில் (24.11.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்,  மாற்றுத்திறனாளி அட்டை வேண்டி விண்ணப்பித்தவருக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினையும், பின்பு, மாவட்ட வழங்கல் துறையின் சார்பில், மாவட்டத்தில் உள்ள 180 பகுதி நேர நியாய விலைக்கடைகளுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறையின் மூலம் நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு, இரண்டாம் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு விற்பனை முனைய கருவியில் கைரேகைப் பதிவு மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்ட புதிய மின்னணு விற்பனை முனைய கருவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்  பின்னர், வெண்மை புரட்சியின் தந்தை என போற்றப்படும் மருத்துவர் வர்கீஸ் குரியன் அவர்களது பிறந்த தினமான நவம்பர்-26 னை தேசிய பால் தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பாக துணைப்பதிவாளர் (பால்வளம்) கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வி.ஆர்.டி.1000 விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு அதிக பால் உற்பத்தி வழங்கிய மூன்று நபர்களுக்கும், சிறந்த மாடு பராமரிப்பிற்காக மூன்று நபர்களுக்கும், தரமான பால் உற்பத்தியை வழங்கியமைக்காக மூன்று நபர்களுக்கும்,  பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில்,  சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) திருமதி க.சசிகலா, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.செந்தில்வேல், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 24, 2025

விருதுநகர் முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2025 (Virudhunagar Investor Meet 2025)"

  விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் விருதுநகர் 4 ஆவது புத்தகத்திருவிழாவில் புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, விருதுநகர் மாவட்டத்தின் முன்னணி தொழில்முனைவோர்கள் மூலம் புதிய தொழில்முனைவோருக்கு வழிகாட்டி முதலீடு செய்யும் சூழலை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட "விருதுநகர் முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2025 (Virudhunagar Investor Meet 2025)"   சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்(General Partner, July Ventures) திரு.எம்.வி.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் (21.11.2025) தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ((StartupTN) என்பது அனைத்து புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்துவதற்கு, உலக சந்தைக்கு தேவையான புதிய தொழில் முயற்சிகளுக்கு தகுந்த வழிகாட்டுதல் வழங்குதல், நிதி திரட்டுவதற்கான வழிமுறையை உருவாக்கி கொடுத்தல், தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல்,  தொடக்க நிலையில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொள்ளும் வகையில் தொடங்கப்பட்டு, இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  விருதுநகர் மாவட்டத்தில் ஸ்டார்ட் அப்பின் முயற்சியை எடுக்கவும், நகர்ப்புறங்களில் மட்டும் இல்லாமல் அனைத்து சிறிய கிராமங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது மூலம் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையிலும், தற்போது செய்யக் கூடிய தொழில்களுடன் புதிய தொழில்களும் வரவேண்டும் என்ற நோக்கிலும் இந்த முதலீட்டாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்டத்தின் தொழில்வளர்ச்சிக்கான கலந்துரையாடல், விருதுநகரின் Startup நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல், புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வது எப்படி, அதன் மூலம் கிடைக்கப்பெறும் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, இளம் தொழில்முனைவோர்க்கு வழிகாட்டுதல் என விருதுநகரின் தொழில்முனைவு சூழலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது பற்றி அனைத்து தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. மேலும், புதிதாக தொழிலை தொடங்கக் கூடியவர்கள், ஏற்கனவே இருக்கக்கூடிய தொழிலை விரிவு செய்யக்கூடியவர்களுக்கு தொழில் சார்ந்த அரசின் மானியங்கள், விரைவான ஒற்றைச்சாளர அனுமதிகள் மற்றும் சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டை மனைகள் உள்ளிட்டவை குறைத்து எடுத்துரைக்கப்பட்டன.இந்த நிகழ்வில் சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் உள்ள முதலீடு சார்ந்த முன்னணி முதலீட்டாளர்களும் கலந்து கொண்டு, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இந்நிகழ்வில் 80 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், 60 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள், 40 புத்தாக்க சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு தங்களது புத்தாக்க தொழில்நுட்பங்களை முதலீட்டாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு காட்சிப்படுத்தினர். இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன்,சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், இ.ஆ.ப., அவர்கள், விருதுநகர் மாவட்டம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Nov 24, 2025

“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நடைபெற்ற 15-ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  (22.11.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்”  திட்டத்தின் கீழ்,  நடைபெற்ற 15-ஆவது  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,.  அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு மற்றொரு மருத்துவ சேவை சார்ந்த திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.மாநிலம் முழுவதும் 1,256 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் காப்பாற்றுவதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.பொதுவாகதனியார்மருத்துவமனையில்முழுஉடல்பரிசோதனைகள்செய்யரூ.15,000வரைசெலவாகிறது.ஆனால், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் மக்களை தேடிச் சென்று அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகளும், மருந்துகளும் கூட இலவசமாகவே வழங்கப்படுகின்றது.இதனால், கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வசதி இல்லாத ஏழை, எளிய மக்கள் பெரியளவில் பயனடைந்து வருகின்றனர். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாமின் போது பொதுமக்கள் எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில்  குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 14 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 15 ஆவது முறையாக அருப்புக்கோட்டை வட்டம், பந்தல்குடி ஊராட்சியில் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள்  துவக்கி வைத்து பார்வையிட்டார்.மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டைகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டைகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் உள்ளிடவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 22, 2025

விருதுநகர் மண்டலத்தில் 10 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 10 நகர்  பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்  (21.11.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திடவும், போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகளை ஒதுக்கீடு செய்யவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக தற்போது 9 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக தற்போது 10 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் - ஒண்டிப்புலி வழித்தடம், விருதுநகர் – பேரையூர் வழித்தடம், சாத்தூர் - நாருகாபுரம் வழித்தடம், சாத்தூர் - திருத்தங்கல் வழித்தடம், அருப்புக்கோட்டை - உடையநாதபுரம் வழித்தடம், அருப்புக்கோட்டை – பி.தொட்டியான்குளம்  வழித்தடம், திருவில்லிபுத்தூர் – இராஜபாளையம் - திருவில்லிபுத்தூர் - சிவகாசி வழித்தடம், இராஜபாளையம் – திருவில்லிபுத்தூர் – கான்சாபுரம்  வழித்தடம், இராஜபாளையம் – திருவேங்கடம் - இராஜபாளையம் – மாங்குடி வழித்தடம், காரியாபட்டி – திருவளநல்லூர் – காரியாபட்டி - அருப்புக்கோட்டை வழித்தடம் ஆகிய 10 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளின் சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.  இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மண்டல பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்) திரு.கோபாலகிருஷ்ணன், துணை இயக்குநர்(போக்குவரத்து கழகம்) திரு.தங்கவேலு, விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், உதவி மேலாளர்(வணிகம்) திரு.நாகராஜ், உதவி பொறியாளர் திரு.தமிழ்செல்வன், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துக்கழக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 70 71 72 73 74 75 76 ... 151 152

AD's



More News