விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் (06.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், நடையனேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பயன்பாட்டு மையத்தினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டப்பட்டு வருவதையும்,புதுக்கோட்டை ஊராட்சி பர்மா காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.03 இலட்சம் மதிப்பில் ஊரணி துர்வார்தல் மற்றும் குளியல் தொட்டி கட்டப்பட்டு வருவதையும்,செவலூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.35 இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும்,எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார மைய கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் எம்.புதுப்பட்டி கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், தேவர்குளம் ஊராட்சியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.32.80 இலட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளையும்,ஆனையூர் ஊராட்சியில் லட்சுமியாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இப்பணிகளை விரைவாகவும் தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் வி பி எம் எம் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட சிறப்பு உண்டு உறைவிட ஆங்கிலம் பேசும் திறன் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ. ப. ஜெயசீலன் I A S ( 06.05 2024) அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார் .
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (04.05.2024) கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரு.இரா.ஆனந்தகுமார்,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் உச்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. அடுத்து வரும் சில நாள்களிலும் இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்கண்ட தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் பொது சுகாதாரத் துறையின் கையிருப்பில் போதிய அளவில் உள்ளது.கோடை காலத்தில் சரும பாதிப்புகள், உடல் சோா்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும். அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பொது மக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்படவுள்ளது.இதற்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் அவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று ஓஆா்எஸ் கரைசலை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூகநல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், தொற்றுநோய் மருத்துவமனைகள் ஆகியவை வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், ஓ.ஆர்.எஸ். கரைசல் பொடிகளும் கையிருப்பில் உள்ளன. இதைத் தவிர, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் அவற்றை மக்களுக்கு நேரடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஊரக மற்றும் நகர பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாகவும், ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையங்கள் மூலமாகவும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும் போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடை இன்றி கிடைப்பதை மின்சார வாரிய அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.வனத்துறையினர் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்எனஇக்கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது.அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் இந்த கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், செவல்பட்டி பி.எஸ்.ஆர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பயிலும் தமிழார்வம் மிக்க மற்றும் முன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்புக் கோடைகால குறள் மாணவர்கள் பயிற்சி முகாம் 2024உண்டு உறைவிட பயிற்சி முகாமினைகோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரு.இரா.ஆனந்தகுமார், I A S., அவர்கள் மற்றும்மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,., அவர்கள் I A S, (04.05.2024) தொடங்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆகியோர் தெரிவித்ததாவது:விருதுநகர் மாவட்டத்தில், மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் வகையில் 02.05.2024 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு கோடைகால உண்டு, உறைவிடப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறதுஅதன்படி திருவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம் பொறியியல் கல்லூரியில் 02.05.2024 முதல் 11.05.2024 வரை 100 மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாமும், 100 மாணவர்களுக்கு ஓவியக்கலை பயிற்சி முகாமும்,விருதுநகர் எஸ்.எப்.எஸ். மெட்ரிக் பள்ளியில் 02.05.2024முதல்11.05.2024வரை50மாணவர்களுக்குஇசை,பாடல்பயிற்சிமுகாமும்,சிவகாசிகாளீஸ்வரிகல்லூரியில்02.05.2024முதல்11.05.2024வரை50மாணவர்களுக்குதலைமைப்பண்புபயிற்சிமுகாமும்,இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 03.05.2024 முதல் 07.05.2024 வரை 100 மாணவர்களுக்கு இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.இப்பயிற்சி வகுப்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பயிலும் தமிழார்வம் மிக்க மற்றும் முன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்புக் கோடைகால குறள் மாணவர்கள் பயிற்சி முகாம் 2024 துவக்கி வைக்கப்பட்டுள்ளது.சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவுஎன்ற குறளில் மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என திருவள்ளுவர் கூறுவதைப் போல, மாணவர்களின் கோடைகால விடுமுறை நாட்களை பயனுள்ளதாக ஆக்கும் வகையில், இது போன்ற சிறப்பு கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லா காலகட்டத்தில் நமக்கு திருக்குறள் உதவி செய்து கொண்டு இருக்கிறது. நீங்கள் எவ்வளவு பெரிய ஒரு சிக்கலில் இருந்தாலும் அந்த சிக்கலுக்கான தீர்வு திருக்குறளில் உள்ளது.உங்களுக்கு அறிவுரைகள் வழங்கவும், உதவிகள் செய்யவும் ஒரு நல்ல நண்பனாக அல்லது ஆசிரியனாக அல்லது நல்ல பெற்றோராக நிறைய நபர்கள் இருக்கிறார்கள்.அதை மொத்தமாக இந்த திருக்குறள் செய்யும். நம் வாழ்க்கையில் நமக்கான சந்தேகங்கள் அனைத்திற்கும் சரியான விளக்கத்தை திருவள்ளுவர் அளித்துள்ளார். எனவே, இந்த வகுப்பினை பயன்படுத்தி சிறப்புமிக்க திருக்குறளை மாணவ, மாணவிகளை கற்றுக் கொண்டு, வாழ்க்கையில் அறநெறியுடன், நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்கள் உருவாகிட வேண்டும் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் அரசு பள்ளிகளில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்புக் கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகாம்- 2024உண்டுஉறைவிடபயிற்சிமுகாமினைமாவட்டஆட்சித்தலைவர்முனைவர்வீ.ப.ஜெயசீலன்,IAS.,அவர்கள்(05.05.2024)பார்வையிட்டுமாணவர்களிடையேஉரையாற்றினார்.விருதுநகர் மாவட்டத்தில், மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் வகையில் 02.05.2024 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு கோடைகால உண்டு, உறைவிடப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி திருவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம் பொறியியல் கல்லூரியில் 02.05.2024 முதல் 11.05.2024 வரை 100 மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாமும், 100 மாணவர்களுக்கு ஓவியக்கலை பயிற்சி முகாமும்,விருதுநகர் எஸ்.எப்.எஸ். மெட்ரிக் பள்ளியில் 02.05.2024 முதல் 11.05.2024 வரை 50 மாணவர்களுக்கு இசை, பாடல் பயிற்சி முகாமும்,சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 02.05.2024 முதல் 11.05.2024 வரை 50 மாணவர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி முகாமும், செவல்பட்டி பி.எஸ்.ஆர் கல்லூரியில் 04.05.2024 முதல் 13.05.2024 வரை சிறப்புக் கோடைகால குறள் மாணவர்கள் பயிற்சி முகாமும் நடைபெற்று வருகிறது.இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 03.05.2024 முதல் 07.05.2024 வரை நடைபெற்று வரும் முகாமில் 100 மாணவர்களுக்கு இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.இப்பயிற்சி வகுப்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.உலகம் முழுவதும் ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் வேண்டும் என்றால் அதற்கு காடுகளில் 33 சதவிகிதம் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அந்த காடுகளில் பூச்சிகள், ஊர்வன, பறப்பன, விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும் சமநிலையில் இருந்தால் தான் உணவு சங்கிலி சமநிலையாக இருக்கும். இந்த சுற்றுச்சூழலில் ஓர் உயிரை அழிக்கும் போது, இன்னொரு உயிரின் பெருக்கம் அதிகமாகி, அதனால் இயற்கை பாதிப்பு ஏற்படுகிறது.நம்முடைய உணவு, காய்கறி தேவைகளுக்கு பூச்சிகள் மிகவும் அவசியம். இயற்கையை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை.இயற்கையை பாதுகாப்பது குறித்த சிந்தனை உள்ள மாணவர்களாக நீங்கள் திகழ வேண்டும் என்பதற்கான இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.எனவே, மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த ஒரு துறையில் பணியில் இருந்தாலும் இயற்கை குறித்த புரிதலோடு, மற்றவர்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இப்பயிற்சியில் மாணவர்களுக்கு கருத்தாளர்களாக பணியாற்றிய ROAR மற்றும் ATREE தன்னார்வ அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.து.தங்கமாரியப்பன், கல்லூரி முதல்வர், பயிற்சி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கோடைகால உண்டு உறைவிட பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் தொடங்கி வைத்தார்.விருதுநகர் எஸ்.எப்.எஸ் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கோடைகால உண்டு உறைவிட இசை பயிற்சி முகாமினையும்,சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 50 மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் (02.05.2024) தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:விருதுநகர் மாவட்டத்தில், மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் வகையில் 02.05.2024 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு கோடைகால உண்டு, உறைவிடப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற அவ்வையாரின் பாடலுக்கு ஏற்ப தனக்கு விருப்பமான ஒரு செயலை தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் அந்த செயலில் திறமை வாய்ந்தவராக உருவாக முடிகிறது.தூக்கணாங்குருவி கூடு, தேன்கூடு, கரையான் புற்று உள்ளிட்ட சிறிய உயிரினத்தின் கூடுகள் தனிச்சிறப்பானவை. ஒவ்வொரு சிறிய உயிரினங்கள் முதல் பெரிய உயிரினங்கள் வரை அனைத்து உயிரினங்களுக்கும் தனிப்பண்புகள் உள்ளன. அது போல் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு தனித்திறமைகள் உள்ளன. அதனடிப்படையில், மாணவர்களுக்குள் இருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொணர்கின்ற வகையில், இந்த கோடைகால பயிற்சி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இப்பயிற்சி வகுப்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.மாணவ, மாணவிகள், தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்எனமாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2024க்கு தகுதியானவர்கள் இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.அதன்படி,2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும்15.08.2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையுறுக்கப்பட்டுள்ளன.1. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/ பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த (01.04.2024) 2024 ஏப்ரல் 1ந் தேதி அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது (31.03.2024) மார்;ச் 31-ந் தேதி 2024 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.2. கடந்த நிதியாண்டில் (2023-24) அதாவது 01.04.2023 முதல் 31.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்;தில் கொள்ளப்;படும்.3. விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் ( சான்று இணைக்கப்பட வேண்டும்).4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும் அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.5. மத்திய , மாநில அரசுகள், பொது துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள்/ பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.6. விண்ணப்பதாரருக்கு உள்ளுர் சமுதாய மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.7. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 10.05.2024 அன்று மாலை 4.00 மணி ஆகும்.8. விண்ணப்பதாரர்கள் தங்கள் மாவட்ட காவல் நிலையத்தில் இருந்து அன்னார்களுக்கு உள்ள நன்னடத்தை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமானwww.sdat.tn.gov.in உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இவ்விருதிற்கு15.05.2024 மாலை4.00 மணிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்தும், 12 ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும்100 சதவிகிதம் உயர்கல்வி சேர்க்கை பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்;ளி தலைமையாசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I.A.S.,அவர்கள் தலைமையில்(30.04.2024)நடைபெற்றது.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கிலும், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும்புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ளபயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.குறிப்பாக உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்தும், அரசு பள்ளி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில்7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்தும், அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகைகள் குறித்தும் திட்டம் குறித்து, எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.உயர்கல்விக்கு செல்லாததற்கு மாணவர்களிடையே ஆர்வமின்மையும் ஒரு காரணமாக உள்ளது. இது குறித்து மாணவர்களிடையே எடுத்துக்கூறி அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இந்தியாவிலேயே அதிகமாக கடந்த கல்வியாண்டு விருதுநகர் மாவட்டத்தில்97 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை பெறுள்ளனர்.உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை நடப்புக் கல்வியாண்டில் அதிகப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்தெரிவித்தார்.இக்கூட்டத்தில், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த67 தலைமையாசிரியர்கள்;, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (30.04.2024 ) சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I,A,S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்I.A.S, அவர்கள் (29.04.2024) அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் கரிசல்குளம் ஊராட்சி தச்சனேந்தல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருவதையும்,உலுத்திமடை ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5.57 கோடி மதிப்பில் கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தினையும், அழகாபுரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் புரணமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,அழகாபுரி ஊராட்சி சிறுவனூர் கிராமத்தில் அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதையும், புல்வாய்கரை ஊராட்சியில் கனிமவள நிதியிலிருந்து ரூ.13.37 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், நாலூர் கிராமத்தில் 15 வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.39.68 இலட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்., கட்டனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளிகள், மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் புற நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.