25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Apr 13, 2024

கோடைகாலங்களில் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடைகாலங்களில் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம் துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ப.தேவராஜ்.இ.வ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியானது 2021 ஆம் ஆண்டு இந்திய அரசால் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் குறிப்பாக மார்ச் மாதம் முதல் ஜீன் மாதம் வரை ஏற்படும் வறட்சி காரணமாக காட்டுத் தீ ஏற்படுகிறது.2023-ஆம் ஆண்டு 26 முறையும், 2024-ஆம் ஆண்டு தற்போது வரை 7 முறையும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்படாமல் தடுப்பதற்கு அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.வனப் பகுதியில் கால்நடை மேய்ச்சல், மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் சிறு வன பொருட்கள் சேகரம் செய்தல், சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் அத்துமீறி நுழைதல், வனப் பகுதியில் உள்ள கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள், தனியார் ஏலத் தோட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள் போன்ற காரணிகளால் காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதை தடுப்பதற்காக தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டும், வனத்துறையில் உள்ள வனச்சரகங்களிலும் தலா 3 தீ தடுப்பு காவலர்கள் நியமிக்கபட்டும் உள்ளனர்.மேலும், காட்டுத் தீ தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் வனப்பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், காட்டுத் தீ ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்த விழிப்புணர்வு பலகைகளை வைக்க வேண்டும்.மேய்ச்சல் செல்வோர் மற்றும் தனியார் தோட்டங்களில் பணிபுரிவோர் ஆகியோரிடம் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறி வனப்பகுதியில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, இந்து சமய அறநிலையத்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட துறைகள் காட்டுத் தீ ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Apr 11, 2024

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 4066 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (Ballot Unit) வாக்குச் சீட்டு (Ballot Paper) ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (10.04.2024) மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியினை  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். மக்களவை பொதுத்தேர்தல் 2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு 27 இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளுக்கு மொத்தம் 4066 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit)  அனுப்பி வைக்கப்பட்டது.அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (Ballot Unit) வேட்பாளர் பெயர், சின்னம் மற்றும் புகைப்படம் பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணி அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.அதன்படி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 204- சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 692 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு 666 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு 616 வாக்குப்பதிவு இயந்திரங்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 616 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,195- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு 730 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 196- திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு 746 வாக்குப்பதிவு இயந்திரங்களும் என மொத்தம் 4066 வாக்குப்பதிவு இயந்திரங்களில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வேட்பாளர் பெயர், சின்னம், பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 5 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்களில் தலா 1000 வாக்குகள் வீதம் செலுத்தப்பட்டு மாதிரி வாக்குப்பதிவுகள் நடத்தப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Apr 11, 2024

Coffee With Collector” என்ற 68-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 100 க்கும் மேற்பட்ட முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடன் நடைபெற்ற சிறப்பு “Coffee With Collector” என்ற 68-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதன் அவசியம்  தொடர்பாக கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது.தற்போது, மக்களவைத் தேர்தல் 2024 எதிர் வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 100 -க்கும் மேற்பட்ட முதல்முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  68-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.வெளிப்படையான, நியாயமான முறையில் பொதுமக்களுடைய பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் தெரிவுமுறைக்கு பெயர்தான் தேர்தல். இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்கள், இந்திய தேர்தலின் வரலாறு குறித்தும், தேர்தலில்  ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவம் குறித்தும், ஜனநாயக கடமையை எல்லோரும் ஆற்ற வேண்டும் என்பதின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.இந்திய ஜனநாயக தேர்தலில் பணம் பரிசுப் பொருள்கள் பெற்று வாக்குகளை பெறுவது, வன்முறை சூழல்களை ஏற்படுத்தி மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, தவறான தகவல்களை பரப்புவது போன்ற மூன்று சவால்களை இந்திய தேர்தல் ஆணையம் எதிர்கொள்கிறது. அதனை தடுப்பதற்கான பல்வேறு கண்காணிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சவால்கள் குறித்து இளைஞர்கள், மாணவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் நடைமுறை. நம்மை ஆளக்கூடியவர்கள் பற்றியும், தேர்தல் நடைமுறைகள் என்ன என்பதை குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.ஜனநாயகத்தின் உடைய மிக முக்கியமான வாய்ப்பு நமக்கு வாக்குரிமை தான். குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்கள் முழுமையாக தங்களது வாக்கு உரிமையை நிறைவேற்ற வேண்டும். நமக்கான ஒரே வாய்ப்பு ஜனநாயக பொறுப்பு என்பது வாக்கை செலுத்துவதுதான். இளம் தலைமுறை வாக்காளர்கள் இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் பற்றிய வரலாற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும்.வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும்  இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க செய்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Apr 11, 2024

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையம்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரிபள்ளியில் நடைபெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுக்கு நீட் தேர்வில் படித்து வெற்றி பெறுவதற்கான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

Apr 09, 2024

சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி,

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில்  (08.04.2024) மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தற்போது வாக்களிப்பதற்கு 18 வயது பூர்த்தி அடைந்தால் போதும் என்ற தகுதி மட்டுமே உள்ளது. ஆனால் நூறு வருடத்திற்கு முன் நடந்த தேர்தலில் எல்லோருக்குமான வாக்குரிமை இல்லை. வருமான வரி செலுத்துவோர் போன்ற குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே இருந்தது. பெண்களுக்கான ஓட்டுரிமையும் பிற்காலத்தில் தான் கிடைக்கப்பெற்றது.வளர்ச்சி அடையக்கூடிய ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. அந்த உரிமை இன்று எல்லாருக்கும் கிடைத்திருக்கிறது. அதை நாம் கவனத்தோடும் முழுமையாகவும் பதிவு செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்கூறும் நோக்கத்துடன் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் இந்தியா முழுவதும் பெற்ற வாக்கு சதவீதம் 68 விழுக்காடு. தமிழ்நாட்டில் கடந்த சில தேர்தல்களில் சுமார் 71 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. நான்கில் ஒரு நபர் வாக்கு அளிப்பதில்லை. நன்கு மெத்த படித்தவர்கள் உள்ள நகர்ப்புற பகுதிகளில் தான் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது. ஜனநாயகம் வழங்கி இருக்கக் கூடிய மிகப்பெரிய வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்திய ஜனநாயக தேர்தலில் பணம் பரிசுப் பொருள்கள் பெற்று வாக்குகளை பெறுவது, வன்முறை சூழல்களை ஏற்படுத்தி மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, தவறான தகவல்களை பரப்புவது போன்ற மூன்று சவால்களை இந்திய தேர்தல் ஆணையம் எதிர்கொள்கிறது.இந்த சவால்கள் குறித்து இளைஞர்கள், மாணவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் நடைமுறை. நம்மை ஆளக்கூடியவர்கள் பற்றியும், தேர்தல் நடைமுறைகள் என்ன என்பதை குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.இன்று நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. அதில் எது சரி எது தவறு என்பதை புரிந்து கொள்வது இந்த தலைமுறைக்கான மிகப்பெரிய பிரச்சினையாக கூறப்படுகிறது. அவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து செயலாற்ற வேண்டும்.ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிக முக்கியமானது. ஜனநாயக நாட்டில் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஜனநாயக வழியில் தான் ஏற்படுத்த முடியும்.வேட்பாளர்களுடைய விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கலின் போது படிவம் 26 தாக்கல் செய்து விடுவார்கள். அவருடைய கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை இணையதளம்; மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோமோ அவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.இன்றைய சூழ்நிலையில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களில் எது சரி என்பதை நாம் சற்று தேர்ந்த பார்வையோடு பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் தெளிவான பார்வையுடன் சற்று முயற்சி செய்தால் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.மாணவர்கள் முதலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும்.வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும்  இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க தூண்டுகோலாக இருந்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கலந்து கொண்ட முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Apr 09, 2024

வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் மத்தியில் கிராமிய கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

விருதுநகர் நகராட்சி மாரியம்மன் கோவில் அருகில், மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு,  கலைக்குழுவினரின் தேர்தல் விழிப்புணர்வு  நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (08.04.2024) துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மூலம் 18 வயது நிரம்பிய முதல் மற்றும் இளம் தலைமுறை, மாற்றுத்திறனளிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நடைபெறவுள்ள 100 சதவீதம் வாக்குப்பதிவினை எய்திடும் வகையிலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தியும், பொதுமக்களிடையே நேரடியாக விளக்க கூட்டம் நடத்துதல், விழிப்புணர்வு பேரணி, துண்டுப்பிரசுரம் வழங்குதல், கையெழுத்து இயக்கம் நடத்துதல், உறுதி மொழி எடுத்தல் போன்ற நிகழ்வுகள் மூலமாகவும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டி, வீடு வீடாகச் சென்று வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம் வழங்குதல், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்துகள், வங்கிகள், வங்கி ஏ.டி.எம் மையங்கள், தபால் நிலையம், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் (ளுவiஉமநசள) ஒட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்துதல், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் திரையிடுதல், தொலைகாட்சிகள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் சாத்தூர் வட்டத்தில் சாத்தூர் பேருந்து நிலையத்திலும், வெம்பக்கோட்டை வட்டத்தில் ஆலங்குளம் பேருந்து நிலையத்திலும், விருதுநகர் வட்டத்தில் மாரியம்மன் கோவில் அருகிலும், இராஜபாளையம் வட்டத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகிலும், வத்திராயிருப்பு வட்டத்தில் முத்தாலம்மன் கோயில் திடலிலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் ஆண்டாள் திருக்கோயில் வளாகத்திலும், சிவகாசி வட்டத்தில் சிவன் கோயில் வளாகத்திலும், காரியாபட்டி வட்டத்தில் காரியாபட்டி பேருந்து நிலையத்திலும், அருப்புக்கோட்டை வட்டத்தில் சிவன் கோயில் அருகிலும், திருச்சுழி வட்டத்தில் பேருந்து நிறுத்தத்திலும் தேர்தல் விழிப்புணர்வு பொதுமக்களை எளிதாக சென்றடையும் வகையில், கலைக்குழுவின் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை எய்திடும் வகையிலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தியும், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் போன்ற கிராமிய கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதன்படி,  விருதுநகர் மாரியம்மன் கோவில் அருகில் கிராமிய கலைக்குழுவினரின்  தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

1 2 ... 66 67 68 69 70 71 72 73 74 75

AD's



More News